நண்பரும் தோழருமான தொ. ப.

தொ. ப. அவர்களுடனான நட்பு ’அறியப்படாத தமிழக’த்துடன் தொடங்கியது. அவர் பெரியாரிஸ்ட் என்றுதான் நண்பர்கள்
அறிமுகம் செய்து வைத்தார்கள் . அவரும் அப்படித்தான் சொன்னார். வீட்டில் பெரியாருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுவரில் இருந்தது. ஆனால் அவருடைய சின்னச் சின்னக் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க அவையெல்லாம்
மார்க்சிய அணுகுமுறையுடன் எழுதப்பட்டிருப்பதைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடிந்தது. ( பெரியாருடைய அணுமுறையிலும்தான்
மார்க்சியப்பார்வை இல்லையா என்ன?)அந்த நிமிடத்தில் துளிர்த்த நட்புணர்வும் தோழமையும் அவர் இறக்கும்நாள் வரை நீடித்தது. தேசிய இனப்பிரச்னையில் இலங்கைத்தமிழர் பிரச்னையில்
சாதி-வர்க்க முன்னுரிமைகளில் என மூன்று புள்ளிகளில் வேறுபட்டு நின்றோம். அதற்காக என்னுடனான உறவை அவர் முறித்ததில்லை. முகம் சுளித்ததில்லை. அதைத்தாண்டிய எங்கள் நேசம்
நித்தம் நவமென நிலைத்திருந்தது.
வாசக ஈர்ப்புக்காக வைத்த தலைப்பு அல்ல ‘அறியப்படாத தமிழகம்’. உண்மையிலேயே நாம் அறிந்திராத தமிழகத்தின் பண்பாட்டு வேர்களை அவர் அடையாளம் காட்டினார். அடிக்குறிப்புகளும் ஆதாரங்களும் பட்டியலிட்டு ஆய்வு நூல்களாக்கிக் கல்விப்புலத்தில் பதிவாளர், துணைவேந்தர் என்கிற
இலக்குகள் நோக்கி நகராமல், எதிர்த்திசையில் மக்களையும் இயக்கங்களையும் நோக்கி நகர்ந்ததே அவரது மொத்த வாழ்க்கைப்பயணமும் அவரது அடையாளமும் ஆகும். அவருக்கு திராவிட மற்றும் பொதுவுடமை இயக்கங்களின் மீது விமர்சனம்
இருந்தது. அவ்விமர்சனங்களில் ஒன்று இது. . ஆன்மீகச்சனநாயகம் என்கிற கட்டுரையில் இவ்விதமாக அவர் எழுதினார்:’
”தொழிற் புரட்சிக்குப் பின்னர் உலகத்தின்கீழ்ப் பகுதியை வெற்றி கொண்ட ஐரோப்பியர்கள் அந்நாட்டு மக்களின் பண்பாடுகளைப் பற்றி எழுதத் தொடங்கினர். அவ்வாறு எழுதத் தொடங்கியவர்கள்
தம்முடைய பண்பாட்டோடு இசைவுடைய வற்றையும் ஆசிய நாடுகளில் தேடினர். அவர்களில் ஒருவரான மாக்ஸ் முல்லர், இந்தியாவின் எழுதப்படாத வட மொழி வேதங்களைக் கண்டறிந்து
இந்தியாவை ‘வேதங்களின் நாடு’ என அடையாளப் படுத்தினார். பின் வந்த ஐரோப்பிய ஆய்வாளர்களும், இந்திய ஆய்வாளர்களும் இந்த அடையாளத்திலேயே தங்களைக் கரைத்துக் கொண்டனர். இடதுசாரிகளும் இதில் தப்பவில்லை, இதன் விளைவாக இந்திய
மக்களின் மிகப் பெரும்பாலோரின் வேதமல்லா மரபு (Non Vedic Tradition) சார்ந்த பண்பாட்டு அசைவுகள் பகுத்தறிவாளர், இடதுசாரிகள் என இரண்டு சாரார் கண்களுக்கும் தப்பிவிட்டன. பெருந்திரளான இந்த மக்கள் பண்பாட்டின் ஆன்மீகம் இவர்களால்
பேசப்படவேயில்லை.
பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால், மாடனையும் வேடனையும் காடனையும் வழிபடுகின்ற இந்த வெகுமக்கள் திரளின் ஆன்மீக உணர்வுகள் உன்னதமானவை ; சுரண்டல் தன்மையற்றவை; (மற்றவற்றின் இருப்பைக் கண்ணியமாக ஏற்றுக்கொள்பவை) அதிகாரச் சார்பற்றவை; புரோகிதத்தால் தின்னப்படாதவை; சொத்துடைமை சாராதவை ; இத்தனைப்
பண்புகளையும் விரித்து விளக்குவதற்கு இங்கே இடமில்லை. நாட்டார் தெய்வம் ஒன்றையும்அதற்குரிய வழிபாட்டு நெறிகளையும் இழை இழையாய் விரித்து அவதானித்தால் இந்த உண்மை நன்கு விளங்கும்.
சமயச் சண்டை களும், சாதிச் சண்டைகளும் போல நாட்டார் தெய்வங்கள் தமக்குள் சண்டையிட்டதாகக் கதைகள் கூட கிடையாது. சண்டைகளின் விளைவாகப் பின்னர் தெய்வமாக்கப்பட்டவர்கள் இருதரப்பினராலும் வணங்கப்படுகிறார்கள்.
பெண்களின் ஆன்மீக உணர்வு நாட்டார் தெய்வ வழிபாடுகளில் மதிப்பிடம் பெறுவது போல சைவ, வைணவ, கிறித்துவ, இசுலாமியப் பெருஞ்சமய நெறிகளில் மதிப்பிடம் பெறுவதில்லை. வேறு வகையில் சொல்வதானால் நாட்டார் தெய்வங்களின் சனநாயக உணர்வு மானுடத்தின் சரிபாதியான பெண்களால் ஏந்திப்பிடிக்கப்படுகிறது.
பெருங்கோயில் சார்ந்த ஆன்மீகம் வெறுப்பிற்கும் மற்றதை நிராகரிப்பதற்கும் நம்மைக் கொண்டு சேர்க்கும். குத்துவிளக்கு ஏற்றும் பெண்களின் ஆன்மீகம் மற்றதை மதிக்கும் மனப்பாங்கினை நமக்குத் தருகின்றது. ஏனென்றால், அது புனித
நூல்களாலும், ஆகமங்களாலும் கட்டப்படவில்லை. இந்தப் பின்னணியில் நின்று யோசித்தால் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு இந்துத்துவவாதிகள் ஆகமப்பயிற்சி தருவது எவ்வளவு ஆபத்தானது
என்பது புரியும்.

இந்த ஒரு பக்கத்தில் அவர் எழுதியுள்ளவை இடதுசாரிகளாலும் பெரியாரிஸ்டுகளாலும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் .
ஆயிரமாயிரம் நாட்டார் தெய்வக்கோவில்களை இந்துக்கோவில்களாக மாற்ற சங்கிகள் எடுத்து வரும் பரவலான, வேகமான முயற்சிகளின் பின்னணியில் தொ. ப. அவர்களின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நாத்திகர்கள்-கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் கோவில் விசயங்களில் இவ்விரு
இயக்கத்தாரும் தலையிடுவதில்லை . களம் சங்கிகளுக்கு முற்றாகத் திறந்து விடப்பட்டுவிட்டது.
வேத மறுப்புக் கலாச்சாரத்தின் முக்கியக் கூறாக நாட்டார் தெய்வ வழிபாட்டை வைத்தார் தொ. ப. இன்று வெண்டி டோனிகர் தன்னுடைய “இந்துக்கள்- ஒரு மாற்று வரலாறு” நூலில் விரிவாக முன் வைக்கும் வாதங்களின் பல உட்கூறுகளை தொ . ப . தமிழ்ப்பண்பாட்டு மேடையில் நின்று பேசி வந்தார்.
சிலிர்ப்பை உண்டாக்கும் சிந்தனைத் தூறல்களாகபெருமழையாக அல்லாமல்- சின்னச் சின்னக் கட்டுரைகளாக அமைந்தவை அவருடைய படைப்புக்கள். அவரே கூறுவது போல ”
இக்கட்டுரைகள் ’தம்மளவில் முழுமையானவை’ என நான் கூற வரவில்லை. இவை சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கைகாட்டுகின்றன. ”
விரித்து எழுதியிருக்க வேண்டிய பல கட்டுரைகளை அவர் அந்த அளவிலேயே நிறுத்திக்கொண்டது நமக்கு இழப்புத்தான். ஆனாலும் அதுதான் அவரது வடிவம். தண்ணீர் ஊற்றி விளாவித் தன் சிந்தனைகளையும் முன் வைப்புகளையும் நீர்த்துப் போகச் செய்வதில்லை அவர்.

பேராசிரியர் நா. வா. அவர்கள்தான் நாட்டார் வழக்காற்றியலையும் வேத மறுப்பு வரலாற்றையும் தமிழகத்தில் வலுவாக முன்னெடுத்த முன்னோடி. ”வேதமதமும் வேத மறுப்பு பௌத்தமும்” என்பது
அவரது ஆரம்பகால நூல்களில் ஒன்று. ஆ. சிவசுப்பிரமணியன், கோ. கேசவன், அரு. ராமநாதன், நா. ராமச்சந்திரன், தனஞ்செயன், டி. தருமராஜ் என நா. வாவைத்தொடர்ந்த வரிசையில் முன்னணியில்
நின்றவர் அய்யா தொ. ப. நா. வானமாமலை அவர்களை ‘தமிழகத்தின் கோசாம்பி’ என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அய்யா தொ. ப. சிறு தெய்வங்கள் என ஆதிக்க
மதப்பிரச்சாரகர்களால் பழிக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களை இந்துத்துவப் பாசிச எதிர்ப்புக் கூட்டணியில் வைத்துப்பார்த்தவர் தொ. ப. அதற்காக அவர் “பெரியாரிஸ்ட்டாக இருந்துகொண்டு
இப்படிச் செய்கிறார்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் இறந்த பிறகும் சிலரால் விமர்சிக்கப்படுகிறார் . ’விடுதலை’ நாளிதழ் அவரது மறைவை ஒட்டி ஞாயிறு மலரை தொ. ப. நினைவு
மலராக வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது. நாட்டார் சமயம் என்று கூறுவதை அவர் எதிர்த்தார்.

அ தை சமயம் என்ற சொல்லால் குறிக்கக்கூடாது என்றார். பன்மைத்துவம் மிக்க வழிபாட்டு முறைகள்/ நெறிகள் என்றார் .
ஒ ற்றைத்துவம் நோக்கி பன்மிய இந்தியாவை நகர்த்துகிற கடப்பாரைகளின் முயற்சிகளுக்கு எதிரான கருத்தாயுதங்களாக அவரது ஒவ்வொரு கட்டுரையும் திகழ்வதைக் காண்கிறோம்.
பெரியார் வாழ்ந்த காலத்தில் நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் இவ்வளவு விரிவாக வந்திருக்கவில்லை. வந்திருந்தால் பெரியார் இக்கலாச்சாரத்தின் சாரத்தை உள்வாங்கியே பேசியிருப்பார் என்று ஒரு நேர்காணலில் தொ. ப. குறிப்பிடுவார். ’தமிழ் வைணவம்’ குறித்த சில நேர்மறையான உணர்வுகளைக் கொண்டிருந்தார்.
அவை எழுத்தாகாமல் நண்பர்களுடனான பேச்சிலேயே கரைந்து போனது இழப்பு . .அவருடனான நேர்ப்பேச்சுகள், கேட்போருக்குப்
பெரும் திறப்புகளாக அமைந்தவை. உரையாடலின் காதலன் அவர்.
தமிழகத்தின் தெருக்களில் நின்று, வயல் வெளிகளில் நின்று, மலைக்குகைகளில் நின்று தொ. ப. பேசிக்கொண்டிருக்கிறார். இதோ இந்தக் கற்சிலையையும் சங்க இலக்கியத்தையும் பக்தி
இலக்கியங்களையும் இந்துத்வ பாசிசத்தையும் உலகமயத்தையும் ஒரே வரிக்குள் கொண்டு வந்து நமக்கு விளக்கமளிக்கிறார். இந்த இணைப்புத்தான் தொ. ப. வின் மகத்தான பங்களிப்பு. பொருள்சார்
பண்பாட்டு அறிஞர் என்றுதான் அவரை அடையாளப்படுத்த வேண்டும். அப்படி நம்மைச் சுற்றியுள்ள பொருட்களோடும் நிகழ்வுகளோடும் நம்மையும் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த
தமிழ்க்கருத்துலகையும் இழுத்துப் பிடித்துக் கட்டிவைத்தவர் அவர்தான். பகுத்தறிவாளரும் பொதுவுடமைவாதிகளும் அவர் குரலைச் செவிமடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. அதனால் ஏமாற்றமும் இருந்தது. பல சுற்றுச்சூழல் அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகளோடு உயிர்ப்புள்ள
உறவுகொண்டிருந்தார். அவற்றில் சிலவற்றின் மீது எனக்கு விமர்சனம் இருந்தது. அதுபற்றியும் அவரோடு மனத்தடை இன்றி விவாதிக்க முடிந்தது.
”தமிழக வரலாற்றில் விசயநகரப் பேரரசை ஒரு திருப்புமுனையாகவும், தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பல சரிவுகளுக்குக் காரணமாகச் சுட்டக்கூடிய வகையிலும் பொருள் தரக் கூடிய குறிப்புகள் நூலில் விரவியிருக்கின்றன. இக்கருது கோளை வரலாற்றுப் பூர்வமாக நிறுவுவது எந்த அளவுக்கு இயலும் என்பது ஒரு புறமிருக்க , தமிழ்த்தேசியத்தைப் பாசிசப் போக்குக்கு இட்டுச்செல்லும் முயற்சிகளுக்குத் துணை போய்விடக்கூடாது என்றும் அஞ்சுகிறேன் ” என்று அறியப்படாத தமிழகம் நூலுக்கான முன்னுரையிலேயே தோழர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிற அளவுக்கு அவரிடம் நாம் உரிமையும் சுதந்திரமும் எடுத்துக்கொள்ள முடியும். அதுதான் தொ. ப, . அவருடைய நூல்கள் வாசிப்பதற்கு எளிய மொழியில் எழுதப்பட்டவை. ”வாசிக்கவும் , தோடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் ‘வலிமை’ இழந்துபோன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே” தான் எழுதுவதாக அவர்
குறிப்பிடுகிறார். அவர் விரும்பியது சமூகத்தில் மாற்றம். தன் முன்னேற்றம் அல்ல. பேரும் புகழும் பணமும் அவர் லட்சியத்தில் ஒன்றாக ஒருபோதும் இருந்ததில்லை.
அவரது நூல்களை வாசிப்பதும் பரவலாக எடுத்துச்செல்வதும் இடதுசாரிகள் , பெரியாரியவாதிகள், அம்பேத்காரியவாதிகள், சூழலியலாளர்கள் என இன்று இயங்கும் நம் அனைவரின் கடமை என்று கருதுகிறேன். அதுவே அவருக்கான உண்மையான அஞ்சலியாகும்.

You May Also Like

இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்)

சித்த மருத்துவத்தை உலகறியச் செய்ய ஏழு செயல் திட்டம்

கொரோனாவை ஒழிக்கும் கூட்டுச் சிகிச்சைமுறை!

இனப்படுகொலையா? போர்க்குற்றமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *