உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல்

“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளில் (1845)”
மார்க்சியக் கோட்பாட்டின் முதல் வரைவு மிகச்
சுருக்கமாக வழங்கப்பட்டிருப்பதாக மார்க்சிய
ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஆய்வு முடிவுகளைச் சுருக்கமான
“முடிவுரை”யில் சில பக்கங்களில் எழுதித் தந்து
விட்டு, ஆய்வின் முழுவடிவை இனிதான் எழுத
வேண்டும் என்ற நிலையில் மார்க்ஸ் நின்று
கொண்டிருக்கிறார். மார்க்சியம் அவரது ஆயுள்
முழுவதும் நமக்காக விரிவாக எழுதப்படுகிறது.
ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளின் முதல்
ஆய்வுரையின் முதல் வாக்கியம் கீழ்க்கண்டவாறு
அமைகிறது.
“ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம்
உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும்
எல்லாப் பொருள்முதல்வாதத்துக்கும் உரிய
பிரதான குறைபாடு இதுதான்: பொருள் ,
எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருள்
அல்லது சிந்தனை என்னும் வடிவத்தில் மட்டுமே
கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது; ஆனால்
மனிதப் புலனுணர்வுள்ள நடவடிக்கை என்றும்
நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை,
அகநிலையாகக் கொள்ளப்படவில்லை.” (கா.
மார்க்ஸ் பி. எங்கெல்ஸ் வி. இ. லெனின்
இயக்கவியல் பொருள்முதல்வாதம், முன்னேற்றப்
பதிப்பகம் மற்றும் என்சிபிஎச், சென்னை, 1985).
இ ந்த “முதல் வாக்கியம்” மட்டுமே
மார்க்சியத்தின் எல்லாப் பரிமாணங்களையும்
ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது என்று
மார்க்சிய அறிஞர்கள் கூறுகின்றனர். மேற்குறித்த
34 சொற்களில், வரலாற்றுப் பொருள்முதல்வாதம்,
இயங்கியல், அரசியல் பொருளாதாரம், புரட்சி
பற்றிய கோட்பாடு, அறிவுத் தோற்றவியல்
போன்ற மார்க்சியத்தின் பல்வேறு பரப்புகளின்
தொடக்கங்கள் உள்ளடங்கியுள்ளன என்று
கூறலாம். அது எவ்வாறு? என்று கீழ்க்கண்ட
பகுதியில் காண முயல்வோம்.

இதுவரையிலான பொருள்முதல்வாதங்களின் குறைபாடு என்ன, என்பதை ஒற்றை வரியில்
சொல்லிவிட்டு, அதனை எவ்வாறு தாண்டிச்
செல்வது என்று, மார்க்ஸ் சொல்லுகிறார்.
ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதமும்
தாண்டிச் செல்லப்படுகிறது.
“பொருள் என்பது புறப்பொருள் என்னும்
வடிவத்தில் மட்டுமே கருத்தில்
கொள்ளப்பட்டிருக்கிறது; ஆனால் மனிதப்
புலனுணர்வுள்ள நடவடிக்கை என்றும்
நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை,
அகநிலையாகக் கொள்ளப்படவில்லை.”
பொருளை வெறுமனே “புறப்பொருள்” என்று
மட்டுமல்லாமல், “மனிதப் புலனுணர்வுள்ள
நடவடிக்கை என்றும் நடைமுறை என்றும்”
கொள்ளும்போது மார்க்சியம் பிறக்கிறது .
மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
பிறக்கிறது. மேலும் துல்லியப்படுத்தினால்,
நாம் “உழைப்பு” என்ற கருத்தாக்கத்திற்கு வந்து
சேருகிறோம்.
வெறுமனே ஒரு சடப்பொருள் என்ற
நிலையிலிருந்து உழைப்பு என்ற கருத்திற்கு வந்து
சேருகின்றோம்.
இயற்கை என்ற நிலையிலிருந்து உழைப்பு
என்ற செயலுக்கு நாம் வந்து சேருகிறோம்.
ஒரு கச்சாப் பொருள் என்ற நிலையிலிருந்து
உழைப்பு என்ற புனரமைக்கும் செயல்பாட்டுக்கு
வந்து சேருகிறோம்.
பொருள் என்றால் என்ன? என்ற கேள்வியை
இனிக் கேட்டால், அது உழைப்பு என்று பதில்
கூறுவோம்.
அது ஒரு செயல்பாடு என்று பதில் கூறுவோம்.
அது ஒரு நடவடிக்கை என்று பதில் கூறுவோம்.
அது ஒரு நடைமுறை என்று பதில் கூறுவோம்.
அது உழைப்பினைக் குறிக்கும் என்று
பதில்கூறுவோம்.
அது உற்பத்தியைக் குறிக்கும் என்று பதில் கூறுவோம்.
அது ஓர் உற்பத்தி முறையைக் குறிக்கும் என்று பதில்
சொல்லுவோம்.
பொருள், உழைப்பு, உற்பத்தி, செயல்பாடு, நடவடிக்கை,
நடைமுறை: இச்சொற்கள் அனைத்தும் அடிப்படையில் ஒரு
பொருள் குறித்தனவே.
இயற்கையைப் புனரமைக்கும் செயல் உழைப்பு எனப்படுகிறது.
அதுவே சமூகத்தை மாற்றி அமைக்கும் செயல்பாடாக
அமைந்தால் என்னவாகும்?
சமூகத்தை மாற்றி அமைக்கும் செயல்பாடு வர்க்கப்
போராட்டம் எனப்படுகிறது.
சமூகத்தை மாற்றி அமைக்கும் தீவிரச்செயல்பாடு, வெகுமக்கள்
செயல்பாடு புரட்சி எனப்படுகிறது.
உழைப்பின் நிகழ்வில் நாம் இயங்கியலைச் சந்திக்கிறோம்.
உழைப்பு என்பது இயற்கைக்கும் மனிதருக்கும் இடையில்
நிகழும் கொடுக்கல் வாங்கல் நடைமுறை.
உழைப்பு என்பது புற உலகுக்கும் மனிதருக்கும் இடையில்
நிகழும் இருவழிச் செயல்பாடு.
உழைப்பின் நிகழ்வு அகமும் புறமும் பொருந்தி முரண்பட்டுத்
தொழில்படும் இயக்கம்.
உழைப்புச் செயல்பாட்டில் அகம் புறமாகிறது, புறம்
அகமாகிறது என்று மார்க்ஸ் கூறுவார்.
உழைப்பு எனும் நிகழ்விலிருந்து முழு இயங்கியலையும் நீங்கள்
கற்றுக் கொள்ள முடியும்.
உழைப்பே பண்டங்களை உற்பத்தி செய்கிறது.
உழைப்பே பண்டங்களின் மதிப்பை உற்பத்தி செய்கிறது.
உழைப்பே பண்டங்களின் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது.
இங்கிருந்து அரசியல் பொருளாதாரம் தொடங்குகிறது.
உழைப்பு ஓர் எதார்த்தமாக (Reality) நிலவுகிறது.
உழைப்பு ஒரு சாத்தியமாகவும் (Possibility) நிலவுகிறது.
சாத்தியங்களைத் தேடிக் கண்டடையும் நிகழ்வே கற்பனை
எனப்படுகிறது. மானுட சாத்தியங்கள் தொடர்ந்து கண்டடையப்
படுகின்றன. உழைப்பு வளர்ச்சி அடைகிறது.
உழைப்பின் நடைமுறை அனுபவங்களை நினைவில் (Memory) கொண்டால் அவை அறிவாகச் சேகரமாகின்றன.
அறிவின் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் மிகப்பெரும்
கருவி நடைமுறை. அறிவு நடைமுறையினின்றும் தோன்றி
நடைமுறையால் சரிபார்க்கப் படுகிறது. இதுவே அறிவுத்
தோற்றவியல்.
“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரை”களில் மார்க்ஸ்
தத்துவத்தையும் நடைமுறையையும் சந்திக்கச் செய்திருக்கிறார்.
தத்துவத்தையும் தொழிலாளர் வர்க்கத்தையும் சந்திக்கச்
செய்திருக்கிறார்.
இனி, தத்துவம் நடைமுறையிலிருந்தே தனது வாழ்வைச்
சம்பாதித்துக் கொள்ளும்.
இனி, தத்துவத்தின் பிரச்சினைகளை நடைமுறையே
முன்மொழியும்.
தத்துவம் அதன் அந்நியமாதலிலிருந்து விடுதலை பெற்று
விட்டது.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!