“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்”

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உத்தேசமாக 1950 – 60 களில் ஆரம்பித்து 1983 களில்
வீரியமடைந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றிருந்தாலும் இன்னும் முடிவுறாத
உள்நாட்டுப் பிரச்சனையாக நீட்சி யுற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். முழு சுதந்திரத்தோடு
வாழ அனுமதிக்கப் படவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் சொந்த நாடு வந்து குடியேறி
வாழ்வதற்கான சூழல்களும் உருவாக்கப் படவில்லை. தமிழ் மக்கள் சிறுபான்மை இன மனஉணர்வோடும், அகதி, கைதிகளின் மன உணர்வோடும்தான் வாழ அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். நிதர்சனமாக சொல்வதானால் ஏராளமான நெருக்கடிகள் அவர்களை இன்னும் துரத்திக் கொண்டிருப்பதே உண்மை.

மேலும், தமிழின அழிப்புக்கு இன சுத்திகரிப்புக்கானப் போர் என்ற ஒரு அரசியல் முகம் இருந்தாலும், அதனைத் தாண்டி தமிழின விடுதலை இயக்கங்களின் உள்முரண்கள் சார்ந்தும்,
மதம், சாதி, அரசியல் சார்ந்தும் வேறுபட்ட பல முகங்களும் அவை சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளும் ஈழத்தில் நிகழ்ந்துள்ளமை மறுப்பதற்கில்லை. இந்த வேறுபட்டப் போக்கினை
புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகள் படைப்புகளின் வழியாக வெவ்வேறு கோணங்களில் பேசியுள்ளனர். அவற்றை விடுதலைப்புலிகள் ஆதரவு – எதிர்ப்பு, சிங்களவர்கள் மீதான ஆதரவு – எதிர்ப்பு, இந்திய அரசு, அமைதிப்படையின் மீதான எதிர்ப்பு – ஆதரவு, இஸ்லாமிய ஆதரவு – எதிர்ப்பு, உயர்சாதிய எதிர்ப்பு – ஆதரவு என நாம் புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக நான் வாசித்த வரையில் ஷோபாசக்தியின் – கொரில்லா, BOX தமிழ்நதியின்
– பார்த்தீனியம், தமிழ்க்கவியின் – ஊழிக்காலம், ஜீவகுமாரனின் – குதிரை வாகனம், குணாகவியழகனின் – விடமேறியகனவு, ஈழவாணியின் – கொச்சிக்கட, தீபச்செல்வனின் – நடுகல், அ.முத்துலிங்கத்தின் – உண்மை கலந்த நாட்குறிப்புகள் உள்ளிட்ட நாவல்களிலேயே இந்த வேறுபாட்டை உணரலாம். இந்த வகையில் தீபச்செல்வனுக்கும் தனித்த ஓர் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அதனை அவரது கவிதைகளிலும், தமிழர் பூமி, நான் எப்போது
அடிமையாய் இருந்தேன் (நேர்காணல்) உள்ளிட்ட நூல்களிலும் காணமுடியும். இதனை வைத்து பலரும் அவரது நிலைப்பாட்டை விடுதலைப்புலி ஆதரவு நிலை என்பார்கள். நான் இதனை அப்படி
பார்க்கவில்லை தமிழீழ விடுதலை ஆதரவாகவே பார்க்கிறேன். தமிழ் மக்களுக்கான உண்மையான நிரந்தரமானதொரு விடுதலைக்கான பயணிப்பை விடுதலைப்புலிகள் இயக்கம் முன்னெடுத்து இயங்குவதால் தீபசெல்வன் அதனை ஆதரிக்கிறார். ஆனால் நோக்கம் ஈழத்தமிழர் விடுதலை ஒன்றேயாகும்.

நடுகல் நாவலை வாசிக்கின்றபோது விமர்சனங்கள் பிரச்சனைகளின் அடிப்படையில் அணுக வேண்டிய ஒன்று என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும். ஈழத்தமிழனின் வாழ்வியல் சூழல்களோ டு நடுகல்லை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாட்டுத் தமிழனுக்கு த்தகையதானவொரு அதி தீவிரத் தேவை எழவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்தியா என்ற ஒன்றியத்தின் பகுதியான தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒரு தமிழனுக்கு தமிழ்தேசியம், இந்தியதேசியம் எனும் இரு அடையாள நிலைகள் தேவைப் படுமாயினும் அடிப்படையாக அவன் தமிழ்தேசியத்தை கடந்தே இந்திய தேசியத்தை ஏற்கவேண்டிய அரசியல் தெளிவு தேவையாக உள்ளது. ஆனால் பலரிடையே இதில்மயக்கநிலை காணப்படுவது துரதிருஷ்டமானது.
ஆனால் ஈழத்தமிழர் ஒருவர் அங்கு நிலவும் மொழிசார் இனஎதிர்ப்பு சூழலில் அப்படி
இருந்து விட முடியாது. இதில் ஈழத்துப் படைப்பாளிகள் பலரிடமும் பல்வேறு காரணிகளின்
அடிப்படையில் மயக்கம் ஏற்படுவது வருத்தத்துக்குரியதே.

நடுகல் நாவலின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும் தீபச்செல்வன் 2010 – 12 கிளிநொ ச்சியின் நிகழ்
காலத்திலும் அதற்கு முந்தைய இருபத்தைந்து ஆண்டுகள் முன்னோக்கிய நினைவுகளின்
பின்னணியில் இரண்டு சிறுவர்கள் பற்றிய கதையும் அவர்களை சூழவிருந்த மாந்தர்களின் கதையும்தான் நடுகல். குழந்தைகளின் கதை மாத்திரமல்ல குழந்தைகள் மொழிந்ததுமே இந்நாவல் என்று பதிவு செய்திருக்கிறார். இது நீண்ட நெடிய ஈழப்போரில்
நாவல் இயங்கும் பகுதியினை / தளத்தினை வாசகன் ஒருவன் எளிதாக இனங்கண்டு பயணிக்க
பேருதவியாய் அமைகிறது.

அகத்தையும், புறத்தையும், அறத்தையும் , ஆற்றுப்படுத்துதலையும், இயற்கையையும் , இறைவழிபாட்டையும் எடுத்தியம்பியது நமது சங்க, சங்கமருவியகால இலக்கிய, இலக்கணங்கள். அதில் போர் சார்ந்த வாழ்வியலைப் பேசிய புற இலக்கியங்களில் முதன்மையானது புறநானூறு. அது போரில் வீரமரணமடைந்தவர்களின் நினைவாக நடுகல் நட்டு வழிபட்ட செய்தியினை பதிவு
செய்திருக்கிறது. இவ்வழிபாட்டு முறை தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்துள்ளதையும் தொல்காப்பியம் புறத்திணை வாயிலாக அறிய முடிகிறது.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை
வாழ்த்தலென்று
இரு மூன்று மரபிற்கல்” (தொல். புறத் – 5)

“இறந்தார்க்குக் கல்நட்டு வழிபடும் முறை கி.பி 11 ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது” (www.geotamil.com) என அறிஞர்கள் கண்டுள்ளனர் என பீ. பெரியசாமி புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு என்ற கட்டுரையில் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. ஆக சங்க காலத் தமிழர்களிடம்
வேரூன்றிக் கிடந்த பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான இந்த நடுகல் வழிபாடு, ஈழத்தமிழர்கள் தமது சமகால வாழ்விலும் கடைபிடித்து வருகின்ற ஒன்றாக இருக்கின்றது. சிங்கள வர்களின் தமிழின அழிப்புக்கு எதிராகப் போர் தொடுத்து வந்த தமிழீழ விடுதலைப்புலி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் போரிலே தம் அமைப்பினர் வீரச்சாவினைத் தழுவுகின்ற போது அவர்களை புதைத்த இடத்தில் நடுகல் நட்டு பாதுகாத்து வந்ததோடு மாவீரர் நாளாக அதனை அனுசரித்து வழிபட்டும் வருகின்றனர். இவ்வாறாகத் தமிழர்கள் வீரத்தை பறைசாற்றி உலகுக்கு எடுத்தியம்பியுள்ளதை மையப்படுத்தி தீபச்செல்வன் “நடுகல்” எனும் பெயரின் மூலம் ஈழப்போரினால் தமிழ் மக்கள் அடைந்துள்ள வாழ்வியல் துயரத்தை தமது நாவலில் முன்வைக்கின்றார்.

“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வருந்து தொடுத்த செம்புங் கண்ணியொடு
அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்….” (புறம் – 264 – 14)

எனும் பாடலை முன்வைத்து தீபச்செல்வன் நாவலுக்குள் நுழைவது தமிழின பண்பாட்டு
எச்சத்தின் நீட்சியாக வாசகனை உணரச் செய்கின்றது.

நாவலில் தீபச்செல்வன் பிரசன்னா (இயக்கப் பெயர் வெள்ளையன்) வெள்ளையனின் தம்பி –
வினோதன், தங்கை – ஆரணி, அம்மா – நாகப்பூசணி, அப்பா – நடராசன் எனும் ஒரு குடும்பத்தின்
ஊடாகவும் இன்னும் வெவ்வேறு பாத்திரங்களின் ஊடாகவும் பயணித்து ஈழப்போரை சிங்கள
இராணுவத்தின் தமிழின அழித்தொழிப்பு , குண்டுவீச்சு, படுகொலைகள் என்பவற்றோடு, தமிழ்
மக்களின் இடப்பெயர்வு, விடுதலைப் போரில் தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் அளப்பரிய
பங்களிப்பு, போராளிகள், முட்கம்பி வேலிகளில் அடைக்கப்பட்டு தமிழ் மக்கள் பட்ட பாடுகள்,
உடமை, உறவு, கல்வி, உணவு, உடை என தமிழ் மக்கள் யாவையும் இழந்து சொந்த மண்ணில்
அகதியாய் நின்றவை என பலவற்றையும் ஒரு சித்திரமாய் கண்முன் நிறுத்துகின்றார்.

வாழ்வில் மனிதர்களுக்குள்தான் எத்தனை பெரிய நம்பிக்கைகள், பிறர் மீதுகாட்டும் அதீத
அன்பு, ஈடுபாடுகள் என நிகழும் சிலவற்றையெல்லாம் ஒரு படைப்பின் வழி வாசித்தடைகிற போது பல நேரங்களில் மெய்சிலிர்த்துத்தான் போகிறோம். தன் நாட்டை, இனத்தை, மொழியை, தம் சொந்தங்களை காப்பாற்ற அந்நியனின் தாக்குதலுக்கு தன் மகனை பலிகொடுத்த ஒரு தாய் அதனை தாங்கிக் கொள்வதும், ஆனால் அவனின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல்லுக்கு மாவீரர் நாளொன்றில் ஏற்றப்பட்ட விளக்கு அணைந்து விடாதபடி பாதுகாக்க தன்
மகள் ஆரணியிடம் “காத்துக்கு விளக்கு நூரப்போகுது, சுளகை வடிவாய்ப் பிடி” (நடுகல், ப – 7) என உத்தரவு பிறப்பிப்பதை பற்றி நாம் என்ன சொல்லிவிட முடியும். இது தானே பகுத்தறிவினையும் தாண்டி பயணிக்கும் நம் வாழ்வு. அந்த மெல் உணர்வினை ஒரு படைப்பாளியாக காட்சிப்படுத்துவது தீபச்செல்வனின் படைப்பாளுமையன்றி வேறு என்னவாக இருக்க முடியும். மேலும் அந்த தாய் இருட்டுக்குள்ளாகவும் செம்பருத்திப் பூக்களை ஆய்ந்து மடியில் போட்டுக் கொண்டிருக்கிற போது மஞ்சளும் சிவப்புமான அந்த பூக்கள் மினுமினுப்பதும், தாயானவள் அந்த விளக்கை மகனாகக் காண்பதும், அ ந்த விளக்கு அணைதலை தன் மகனின் அணைதலாக கருதுவதும் மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நுண்ணிய நம்பிக்கைசார் உணர்வுகளைத்தானே எடுத்துரைக்கின்றது. இங்கு புதினம் பேசுகின்ற இருட்டு, மினுமினுத்தன போன்ற சொற்பயன்பாடு போர்சார் வாழ்வின் குறியீடுகளாகவும் நீட்சியடைவது கவனத்திற்குரியது.

மேலும் மாவீரர் நாளை அந்த தாய் “இது எங்கடை பிள்ளையளின்டை நாள்” (நடுகல், ப – 9)
என ஓரிடத்தில் மொழிவதும், இன்னொரு இடத்தில் மாவீரர் தினத்தன்று இயக்கம்
வீரச்சாவடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாங்கன்று, தென்னங்கன்று போன்ற மரங்களைக்
கொடுப்பதும் அவர்கள் அதனை கல்லறைகளின் அருகில் நட்டு வைப்பதும் உயிர்களுக்கு ஈடாக
மரங்களை பார்ப்பதும் வளர்ப்பதும் வழக்கம் என்பதை பதிவு செய்யும் தீபச்செல்வன், ஒருமுறை
போர்ச்சூழலால் நீண்டநாட்களாக முள்வேலி கம்பிகளுக்குள் அடைபட்டு கிடந்த அந்த தாயானவள்
வீடு திரும்பியதும் ஓடிவந்து அந்த தென்னங்கன்றைத்தான் முதலில் பார்த்தாள் என்பதாக வெள்ளையனின் தம்பி வினோதன் மூலம் குறிப்பிடுகின்றார்.

இன்னொருபுறம் எதிர் பாசறையைச் சார்ந்த இராணுவத்தினர் தமிழரை அழித்தொழிப்பதோடு,
அவர்களின் பண்பாட்டை, அடையாளத்தை அழித்தொழிப் பதில் அதிக கவனம் செலுத்தியதையும்
தீபச்செல்வன் நாவலில் எடுத்துரைக்கின்றார். இராணுவத்தினர் நடுகல் வழிபாட்டை, நடுகல்
அருகே நட்டு வைத்த மரங்களை, அவர்களின் வீடுகளில் மாட்டிவைக்கப் பட்டிருக்கும் போராளிகளின் புகைப்படங்களை என அவர்கள் புனிமாக கருதும் யாவற்றையும் அழிப்பதில் கவனம் செலுத்துவதை பதிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு நாவலில் எதிர்வினையாற்றுகின்ற போது வீதியில் நகர்ந்து செல்லும் இராணுவத்தினரை பார்த்து நாகப்பூசணி “மரங்களைக் கும்பிட்டாலும் புலி உயிர்க்குமே” (ப – 10) எனச் சொல்ல வைக்கிறார்.

இன்னொரு இடத்தில் நாகபூசணி – ருக்குமணி உரையாடல் மூலமாக “எடி நாகபூசணி செத்துப்
போனவங்களுக்கும் உவங்கள் பயமே? எங்கடை பிள்ளையளுக்கு நிம்மதியாய் ஒரு விளக்கு வைக்க கூட விட மாட்டாங்களாமே” (நடுகல், ப – 11) என சொல்வதும் சிங்கள அரசு எந்திரத்தின் தமிழின அடையாள அழிப்பு அல்லது எதிர்ப்பு அரசியலை வெளிச்சப்படுத்துவதோடு அவர்களின் அச்சத்தையும் அது புலப்படுத்துவதாகவே விளங்குகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இன்னபிற விடுதலை இயக்கங்கள் குறித்த ஏராளமான அல்லது குறைந்த பட்ச விமர்சனங்களை யேனும் முன்வைக்கும் ஈழத்து படைப்பாளிகளிடையே
தீபச்செல்வன் நடுகல்லில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ் மக்கள் மேம்பாடு சார்ந்த
வேறுபட்ட பல நற்செயல்கள் குறித்த பதிவுகளை மட்டுமே செய்திருக்கிறார். மட்டுமல்லாது போரில் பங்கெடுத்த பிற இயக்கங்கள் குறித்த எந்த ஒரு பதிவும் புதினத்தில் செய்யாமல் விடுபட
செய்திருப்பதும் கூட அவரின் தமிழின நலன் சார்ந்த அரசியலாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் விடுதலைப்புலி இயக்கத்தினரை ஒரு பிள்ளை பிடிக்காரர்களைப் போல ஷோபாசக்தி
உள்ளிட்ட பல படைப்பாளிகள் விமர்சித்திருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக பள்ளிக்குப் போன மாணவர்களை மூளைச்சலவைசெய்து இயக்கத்திற்கு கடத்தி விடுவதைப் போன்ற பதிவுகளை நான் நிரம்பவே படித்திருக்கிறேன். நடுகல் அதற்கு மாற்றான கருத்தை முன்வைக்கிறது. நாவலின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான வெள்ளையன் பலமுறை பள்ளிப்பருவத்திலேயே இயக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டி இயக்க
முகாமுக்கே சென்று முயற்சித்தும் வெள்ளையனை இயக்கம் வயது உள்ளிட்ட காரணங்ளைக் கூறி
திருப்பி அனுப்பி விடுவதும், ஒருமுறை வெள்ளையனை இணைத்துக் கொள்ளும் நிலையில்
தாயார் நாகபூசணி சென்று தன் நிலையைக் கூறி பிள்ளையை விட்டுவிடச் சொன்னவுடன் விட்டு
விடுவதாகவும் பதிவு செய்திருக்கிறது.

“என்ரை பிள்ளையை விடுங்கோ! தகப்பனும் இல்லாமல் பெரிய கஸ்டபட்டு வளர்த்த நான்.
எனக்கு உதவிக்கும் யாரும் இல்லை. கதறி அழுதாள் அம்மா. பொறுப்பாள ர் எல்லாவற்றையும் நிதானமாக கேட்டுக் கொண்டிருந்தார். அம்மாவின் கைகளைப் பற்றி “அம்மா அழாதேங்கோ! எங்களுக்கு உங்கடை நிலமை தெரியும். நாங்கள் அவரைப் போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் தான் போகமாட்டன். எண்டு அடம் பிடிக்கிறார். நீங்களே
வந்து அவருட்டைக் கேளுங்கோ….

பாசறைப் பொறுப்பாளர் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார்.” (நடுகல்,ப–60)

இவைதொடர்பாக தொடர்ந்து போராளிகளுக்கும் வெள்ளையனின் தாய் மற்றும் தம்பி தங்கையுடன் நடைபெறும் உரையாடல்களும் அந்தக் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு வெள்ளையனை வீட்டுக்கு அனுப்புவதில் இயக்கம் முழுவீச்சாய் செயல்படுவதை உணரமுடிகின்றது.

போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் குடும்பங்களை தத்தெடுப்பதில் விடுதலைப்புலிகள்
இயக்கத் தலைமையும், அதன் போராளிகளும் அதிக கவனம் செலுத்துவதை நாவல் பதிவு செய்கிறது. குறிப்பாக போரினால் சொந்த நாட்டிற்குள்ளாகவே இடம்பெயர்ந்த மக்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட பாடசாலைகளை நிறுவிக் கொடுப்பதோடு புத்தகம், உடைகளை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடைகளையும் கிடைக்க ஏற்பாடு செய்கின்றது. அது போல போரினால் மனம் குழம்பிக் கிடக்கும் அந்த சிறுவர் சிறுமிகளை நெறிப்படுத்தி மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் கொண்டு சேர்ப்பதற்கான செயல்களில் ஈடுபட்டிருப்பதை மாணவர் அமைப்புப் போராளி கரிகாலன் பாத்திரம் உறுதிப்படுத்துகிறது. அதுபோல இடம்பெயரும் மக்களுக்குத் தோவையான புதிய குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தும் தமிழீழ புனர்வாழ்வுக்கழகம், விவசாயம் சார்ந்து விதை, உரம் உள்ளிட்டவைகளை வழங்கி
உதவிசெய்யும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம், தமிழீழ வன வளப்பாதுகாப்புப்
பிரிவு எனப் பல்வேறு துறைகளை உருவாக்கி அவைகளின் மூலம் தமிழ் மக்கள் மேம்பாட்டில்
கவனம் செலுத்துவதையும் நாவல் எடுத்துரைக்கின்றது.

தமிழகச் சூழலில் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் வருங்காலத்தில் நீ
என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டால் அவர்கள் பொறியியல் படிப்பில் சேரவேண்டும்.
மருத்துவ படிப்பில்சேரவேண்டும் எனத் தெரிவிப்பது போல, ஈழத்து போர்ச் சூழலில் ஆசிரியர்கள்
வருங்காலத்தில் நீ என்ன செய்யப் போகிறாய் என மாணவனைப் பார்த்து கேட்டால் அவர்களில்
பலரும் நான் தாயகத்தை காக்க இயக்கத்தில் இணைவேன் எனச் சொல்வது பெரும் வாடிக்கையாக இருப்பதை ஓரிடத்தில் பதிவு செய்கின்றார். ஆக தமிழீழத்தில் பிறந்த தமிழன் ஒருவனுக்கு கடந்தகால கட்டங்களில் விடுதலை இயக்கத்தில் இணைந்து போரிடுதல் வாழ்வியல் முறையாக வாழ்வியல் அறமாக இருந்துள்ளதை நாவல் புலப்படுத்துகின்ற
இடம் நமக்கு ஒரு புதிய தரிசனமாக அமைகிறது.

மட்டுமல்லாது சிறுவர்களின் விளையாட்டுகள், விளையாட்டுப் பொருட்கள் வாங்குதலிலும்,
கோவில்களில் நடைபெறும் நாடகங்களிலும் என யாவிலும் போரின் தாக்கம் நிறைந்திருந்ததை
அறியப்படுத்துகிறது நாவல். வைரவர் கோவில் திருவிழாவில் மணியண்ணையின் இயக்கத்தில்
நடைபெற்ற விடுதலை மூச்சு நாடகத்தில்,

“ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத் தா
உன் பாதணிகளை எனக்குத் தா
உன் ஆயுதங்களை எனக்குத் தா
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா
உன்கதை முடியவில்லையடா” ( நடுகல், ப – 66)

என பாடப்படும் பாடல் நாவலின் மைய க்கத்தை எடுத்துரைப்பதாகவும் வாழ்வு வற்றிப் போகாது ஒரு நம்பிக்கையை அளிப்பதாகவும் அமைகிறது. அது போலவே வெள்ளையனின்
இறப்பின் போது இயக்கம் “இந்த வீரனின் புனித வித்துடல் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்படவுள்ளது.” (நடுகல், ப – 114) என்பதும் போராட்ட வரலாற்றில் நம்பிக்கைகளைச் சுமக்கும் மாற்றுச் சொற்களாக நாவலில் பயணிக்கின்றன.
ஆயினும் ஓரு கட்டத்தில் வலம்புரி பத்திரிகையில் யாழ் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும்
தீபனும் கைகுலுக்கியபடி நிற்கின்ற காட்சியை குறிப்பிட்டு அதன் மூலமாக மக்கள் சமாதானம்
நிகழ்ந்துவிடும் என்பதாக எதிர் நோக்கும் இடம் நாவலின் முக்கியமான இடமாக இருக்கின்றது.

மேலும் பல்வேறு நிலையில் மனிதர்களுக்கு பிரிவுகளினால் ஏற்படும் வலி அடையாளப்படுத்தப்படுகிறது. வெள்ளையன் இயக்கத்திற்கு சென்ற போதும் சரி, அவன் ஒரு முறை இயக்க அனுமதியோடு சுமார் பத்து தினங்கள் வீட்டில் அம்மா தம்பி தங்கையோடு வந்து தங்கி வீட்டு பணிகளை கவனித்துவிட்டு திரும்ப இயக்கத்திற்கு செல்கிறபோதும் சரி, அவன் மரணித்த போதும் சரி தன் அண்ணனின் பிரிவினைத் தாங்க முடியாது பாடாய்படும் அவன் தம்பி வினோதனின் மனநிலை இரத்த பாசத்தின் சாட்சியங்களாய் நம்முன் நிறுத்தப்படுகிறது. ஏன் ஈழத்தமிழர்கள் வாழ்வில் மட்டும் வகைவகையாய் இத்தனை துயரங்கள் என்பது பிடிபடாமலேயேக் கிடப்பதோடு பெருத்த கழிவிரக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

வெள்ளையனின் தாய் தந்தையர்களான நாகபூசணி, நடராசன் திருமணம் காதல் திருமணமாக
அமைகின்றது, தந்தை நடராசன் ஒரு நாடக நடிகராக விளங்குவதோடு குடும்பப் பொறுப்பின்றி அடிக்கடி ம னைவி குழந்தைகளை விட்டு பிரிந்து போய்விடுபவராக உள்ளார். குறிப்பாக தன்
இரண்டாவது மகன் பிறந்தபோது வராமல் இருப்பதும் மகன், தன் தந்தையை தனது நண்பர்களான நேசராஜன், பிரியன், பூங்குன்றனின் மூலம் அவர்களின் தந்தையர்கள் குறித்த சித்திரப்படுத்தல்களின் மூலம் தேடுவதும், முதன் முதலாக புகைப்படமாகவே அப்பாவை அம்மா
ஆல்பத்தில் இருந்து எடுத்துக் காட்டி அறிமுகம் செய்வதும் அவர் வருவார் என நம்பிக்கை
ஊட்டுவதும், அப்பாவின் புகைப்படத்தை அம்மா எடுத்து முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும் என
உறவின் விழுமியங்கள் அன்பெனும் உணர்வலைகளாய் நாவலில் பரவிக்கிடக்கின்றன.

மேலும் நடராசன் அடிக்கடிக் காணாமல் போய்விட அவரை விவாகரத்து செய்வது மற்றும்
நாகபூசணிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பது குறித்த கேள்விகளும் சிக்கல்களும்
உருவாகிறபோது, அதனை அவள் முற்றிலும் மறுத்து விடுவதும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவே நாவலில் தீபச்செல்வன் சுட்டுகின்றார். அதுபோலவே வெள்ளையனின் இறப்பிற்கு வந்திருந்த பெரியமாமா வேலி ஓரமாக கள்ளு குடித்துக் கொண்டிருப்பவர் நிகழ்த்தும் குடிசார் பேச்சில் “நான் சண்டியன், உவன் போராளி… ஊருக்குள்ளை ஆரும் பிழையாய் நடந்தால் நான் மிதிப்பன். உவன் எங்கடை நாட்டோடை ஆரும் சோட்டைவிட்டால்
வெளுப்பான் … அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கள்ளைக் குடித்துக் கொண்டு
பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார் பெரியமாமா” (நடுகல், ப – 115) இங்கு கள் ஈழத் தமிழர் வாழ்விலும் இரண்டறக் கலந்திருப்பதை உணர்த்துவதோடு, சண்டியன், போராளி குறித்த ஒரு தெளிவையும் தீபச்செல்வன் முன்வைக்கின்றார். ஆனால் சண்டியரைப் பற்றி குறிப்பிடுகிறபோது ஊருக்குள்ளை ஆரும் பிழையாய் நடந்தால் நான் மிதிப்பன் என்பது தமிழகச் சூழலில் ஏற்புடையதல்ல எனக் கருதுகிறேன். ஏனெனில் தமிழகச் சூழலில் பிழைசெய்ய பிறப்பெடுத்தவராகவே சண்டியர் விளங்குகின்றார்.

ஒரு முறை தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியான கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்ற
பட்டபோது இலங்கை வானொலி கிளிநொச்சி பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக
செய்தி அறிவிக்கப்படுவதை நாவல் பதிவு செய்கிறது. இங்கு மொழி, இனவெறி பிடித்த சிங்கள அரசு எந்திரத்தால், தமிழ் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது உணர்த்தப்படுகிறது.

நாவலில் தேவைக்கேற்ப மண்ணின் மணம் கமழும் உவமைகள் , பழமொழிகளை
பயன்படுத்தியிருப்பதும் நாவலை வாசகனிடம் எளிதாக கொண்டு சேர்க்கின்ற பணியினை
செய்கிறதென்றால் மிகையல்ல. முட்கம்பிக்குள் சிறைவைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இராணுவம்
பாதுகாப்பு எனும் பெயரில் துயரினை அழித்து வருவதை “கரும்புத் தோட்டத்துக்கு காட்டானை
பாதுகாப்பாம்” (நடுக ல் , ப – 150) எனும் பழமொழியினைக் கொண்டு விவரிப்பதும் ,
இன்னோரிடத்தில் தேக்குமரக் காட்டினை காட்சிப்படுத்துவதற்கு “துப்பாக்கி ஏந்திய போராளிகளின் வலிய கரங்கள் போல வரவேற்றது தேக்குமரக்காடு” (நடுகல்,ப – 181) எனும் உவமையினை பயன்படுத்துவதையும் சான்றாகக் கொள்ளலாம்.

இன்னோரிடத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் உள்நாட் டுக்குள்ளேயே
இடம் பெயர்ந்து வாழும் மக்களில் பலரும் தம் சொந்த நிலங்களை, அதன் விளைச்சல்களை இழந்து வறுமையுற்றிருப்பதை நாவல் விவரிக்கையில் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து இருக்கின்ற ஒரு குடும்பமாக ருக்குமணியின் குடும்பம் காட்டப்படுகிறது. அவர்களின் நான்கு பிள்ளைகளும் பட்டினியால் துடிக்க இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்ற தம் சொந்த நிலத்திற்குள் பலரைப் போல ருக்குமணியின்
கணவன் ஆன்றனியும் மகன் பிரியதர்சனும் சென்று அங்கு விளைந்து கிடக்கின்ற தேங்காய் உள்ளிட்ட பொருட்களை யாருக்கும் தெரியாமல் பிடுங்கி வர முயற்சிக்கையில் அங்கு வரும் இராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார்கள். இராணுவம் அவர்களை
விடுதலைப்புலிகளாக சித்தரித்து கொடுமையாக தாக்குதல் நடத்துகின்றது. இறுதியாக இராணுவ
முகாமுக்கு அழைத்து வரப்பட்டு சிங்க பண்டாரவின் கெடிய சிந்தனையினால் ஆன்றனியின் தலையை மகனுக்குத் தெரியாமலே வெட்டி பொதிந்து மகனின் கையில் கொடுத்து அனுப்பிவிடப்படுவது. சிங்கள இராணுவத்தின் கொடிய செயலுக்கு சாட்சியாக அமைகிறது.

தமிழீழ விடுதலைப் போரில் இயக்கரீதியாக வேறுபடும் பாத்திரங்களை தீபச்செ ல்வன் நடுகல்லில் பதிவு செய்யவில்லையாயினும் தாயகத்தின் மீது பற்றில்லாது காட்டிக் கொடுக்கின்ற சுயநலவாதியாக கருணா போன்று பலர் இருப்பதை அடையாளப்படுத்தும் விதமாக நேசராஜ்
இனங்காட்டப்படுகின்றார். நேசராஜைப் பற்றி தீபச்செல்வன் பயன்படுத்தும் உவமை கூட
அருவருக்கத் தக்கது “மச்சான் எங்கடை நேசராஜ் இப்ப ஆமியோட ஈயும் பீயும் மாதிரி” (நடுகல்,ப –
151) எனக் குறிப்பிடுகின்றார். மேலும் நாவலின் இறுதிப்பகுதியில் வினோதனுக்கும் நேசராஜீக்கும்
இடையே நிகழ்த்தப்படும் உரையாடல்களும் முக்கிய மானதாக அமைகிறது. முள்வேலி
முகாம்களுக்கு வருபவர்களிடையே நேசராஜ் நல்லவன் போல் நடித்து “இயக்கம் செய்ததெல்லாம்
அநியாயம். இனியும் இனவாதம் பேச ஏலாது. சிங்கள மக்களோடை நல்லிணக்கம் ஆக வேணும்…
இலங்கை ஒரு பல்லின நாடு” (நடுகல்,ப – 155) எனப் பேசித்திரிவது சுட்டப்படுவதோடு, சிறு வயது
முதலே அவனின் அரசியல் தனம் சார்ந்த சுயநலம் மிக்க குணாதிசயங்கள் நாவலில் சித்தரிக்கப்படுகிறது. “இலட்சியங்களை விடவும் இவனுக்கு வசதிகள், வாய்ப்புகள், பாதுகாப்புகள் செல்வாக்குகளே தேவையாய் இருந்தன” (நடுகல். ப- 158) மேலும், இராணுவம் இவனை கிளிநொச்சி அமைப்பாளராக நியமித்ததைப் பற்றி வினோதனும் அன்பழகனும் பேசிக் கொள்கிறபோது “குருட்டுநாய்க்கு வறட்டு மலம் கிடைத்த மாதிரி தான் என்பதாகவும், அடையாளப்படுத்தப்படுகிறான்.

ஆக, புதினத்தில் தீபச்செல்வன் இன வெறியும், மொழி வெறியும் அதிகார வெறியும் பிடித்த சிங்கள
அரசினால் மகிழ்வாக வாழ்ந்திருக்க வேண்டிய ஈழத்தமிழினம் தன் சொந்த நாட்டிலேயே
சந்தித்திருக்கின்ற கொடுந்துயரினை வேறுபட்ட களங்களின் வாயிலாக எடுத்துரைக்கின்றார். ஒரு
மனிதனுக்குள் மனிதத்துக்கு விரோதமாக புகுந்து கொள்கின்ற “வெறி” எனும் அந்த சொல்லும், அதன் செயலும் கோடான கோடி மக்களின் வாழ்வை சிதைத்துப் போட்டுவிட்டு இன்று அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறது. காலத்தால் இதற்கு பதில் சொல்ல இயலவில்லை. தொப்புள் கொடி உறவுகளாலோ, அண்டை நாடுகளாலோ, ஐக்கிய நாட்டு சபையினர்களாலோ இந்த கொடுந்துயரை தடுத்துவிட இயலவில்லை. எங்கும் அரசியல், எதிலும் அரசியல் மானுடம் தோற்று க் கொண்டிருக்கிறது என்பதேயே நாவலை படிக்கிற போது மீண்டும் மீண்டும் உணரமுடிகிறது. நேசராஜ் களால் உலகம் இன்று கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!