திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை
நகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்த
தொ. பரமசிவன் 2020 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர்
24 ஆம் நாள் தனது 70 ஆவது வயதில் மறைந்தார்.
இன்றைய தமிழகத்தின் தனித்துவம் மிக்கத் தமிழறிஞர்
என்று அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் தொ.
பரமசிவன் அவரது மாணவர்களாலும் நண்பர்களாலும்
“தொ.ப” என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.
இளையான்குடி சாகீர் உசேன் கல்லூரியிலும் மதுரை
தியாகராயர் கல்லூரியிலும், பின்னர் திருநெல்வேலி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும்
தமிழ்த் துறைகளில்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும்
பணிபுரிந்தவர் பேராசிரியர் தொ.ப.
“மாணவர்களுக்கான பேராசிரியர் ” என்று
வழங்கப்பட்டவர். கல்லூரிப் பணி முடிந்த பிறகும் மாலை
நேரங்களில், பின்னிரவு வரை மாணவர்களோடும்
நண்பர்களோடும் தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடு
குறித்து தொடர்ந்த உரையாடல்களை நடத்திச் சென்றவர்.
எழுத்து, பேச்சு இரண்டில்பேச்சைதனது விருப்பத்திற்குரிய
ஊடகமாக எடுத்துக் கொண்டவர். மேல்நிலைக் கல்வியும்
இலக்கிய வாசிப்பும் தேவையில்லாத வழக்காறுகளின்
மொழி பேராசிரியர் தொ.ப.வினுடையது. சாக்ரட்டீஸ்,
அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க மெய்யியலாளர்களை
ஒத்த வடிவில் சிந்தனையைத் தூண்டும் கட்டுப்பாடற்ற,
படைப்புத்தன்மை கொண்ட சொல்லாடல்களின்
வழியாகத் தமிழாய்வுகளை நகர்த்திச் சென்றவர்.
‘தமிழகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட்’ என அழைக்கப்படும்
பாளையங்கோட்டை நகரின் நவீன கல்விச் சூழலையும்
கிறித்தவச் சூழலையும் அந்நகரைச் சுற்றியமைந்த
கிராமங்களின் மரபுச் சூழலையும் தன்னில் சுவீகரித்துக்
கொண்டவர் அவர். இளமையில் பாளை நகரின் மாணவஆசிரியச் சூழலில் செழித்த திராவிட இயக்கச் சிந்தனையின்
கருத்தியல் மற்றும் செயல்பாட்டுத் தளங்களில் பயிற்சி
பெற்றவர். மூத்த சைவ சித்தாந்த அறிஞர், மெய்கண்ட
நினைவேந்தல் ந. முத்து மோகன் சாத்திரங்களுக்கு உரை கண்ட பெரியவ்ர் சி.சு. மணி அவர்களைத் தனது குருவாகக் கொண்டவர். பாளை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல்
துறையை நிறுவிய பேராசிரியர் எஸ்.டி. லூர்து அவர்களை
நண்பராகக் கொண்டவர். மார்க்சிய அறிஞர், தமிழக
நாட்டார் வழக்காற்றியலின் தந்தை பேராசிரியர் நா.
வானமாமலையுடன் “தமிழகத்தின் கோசாம்பி” என்று
விருப்புடன் தோழமை பாராட்டிய அறிஞர்.
அழகர் கோவில், சமயங்களின் அரசியல், அறியப்படாத
தமிழகம், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர்..,
உரைகல், மரபும் புதுமையும், இதுதான் சனநாயகம்
போன்ற பல அற்புதமான ஆய்வு நூல்களை உருவாக்கித்
தந்தவர். பெரியாரிய செல்வாக்கில் சமயங்கள் குறித்த
விமர்சனபூர்வமான ஆய்வுகளை முன்னெடுத்தவர். சமயம்
குறித்த ஒரு கோட்பாட்டு விவாதத்தை நண்பர்
சுந்தர்காளியுடன் முன்னெடுத்துச் சென்றவர். இந்தியச்
சூழல்களில் மதமும் சாதியமும் இணைந்தவை,
இரண்டுமே சமூக அதிகாரத்தின் காத்திரமான வடிவங்கள்,
எனவே (மார்க்ஸ் சொல்லியது போல) சமூக விமர்சனம்
என்பது இங்கு சமய விமர்சனத்திலிருந்து தான்
தொடங்கப்படும் என்று துல்லியமாகக் குறிப்பிட்டவர்.
தொ.ப. அவர்களின் குறிப்பிடத்தக்க முதல் ஆய்வு
“அழகர் கோயில்” பற்றியது. மதுரையிலிருந்து சிறிது
விலகிய தூரத்தில் மலையடிவாரத்தில் தனித்து
அமைந்துள்ள வைணவத்தலம் அழகர் கோயில்.
ராமானுஜர் இத்தலத்திற்கு வந்து சென்றார் என்று
கூறுவார்கள். மக்கள் நெருக்கம் இல்லாத பகுதியில்
அமைந்த அழகர்கோயில் எப்படி வெகுமக்கள்
தொகுப்புகளுடன் உறவு கொண்டது? என்பதை
தொ.ப.வின் முனைவர் பட்ட ஆய்வேடு ஆய்வு செய்கிறது.
அழகர் கோயில் தன்னைச் சுற்றிப் பல கிராமங்களில்
வாழ்ந்த நாயுடு, யாதவர், கள்ளர், வலையர், பள்ளர்,
பறையர் போன்ற இடைத்தள, அடித்தள மக்கள்
பகுதிகளுடன் சனநாயக உறவுகளை உருவாக்கிக் கொண்ட வரலாற்றையும் அதன் அரசியலையும் ஆய்வு
செய்ததே அந்நூல். கோயில் ஆய்வுகளில் மேட்டுக்குடி
எல்லைகளைத் தாண்டிய வெகுமக்கள் தொடர்புகளை
“அழகர்கோயில்” தேடி அறிந்தது. வைணவத்திற்கும்
அரசுக்கும் வெகுமக்கள் ஆதரவு தேவைப்பட்டது, அதன்
விளைவே அழகர்கோயில் வரலாறு என்று “நறுக்”கென
எழுதுகிறார். அழகரும் கள்ளரும் (பதினெட்டாம் படி
கருப்பசாமியும்) கலந்த நிலையில் காட்சிதரும் சிறப்பை
அழகர்கோ யிலில் காணமுடியும். திருவில்லி ப்
புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
இவரைத் தேடி வரும். இன்னும் கூடுதலாகச்
சொல்லுவதானால் துலுக்க நாச்சியாருடனும் இவருக்கு
நட்பு உண்டு. சூபியத்தில் தென்படும் “பாணர்”களைப்
பற்றி சிலாகித்து எழுதுவார். வைணவமும் சைவமும்
கலந்து உறவாடும் சங்கமத்தையும் அதனுள் பொதிந்திருந்த
முரணையும் மதுரை சித்திரைத் திருவிழா எடுத்துக்
காட்டுகிறது.
அழகர்கோயிலின் முறையியலைப் பேராசிரியர்
தொடர்ந்து வளர்த்தெடுத்தார். நாட்டுப் புற சமயங்களின்
கதாபாத்திரங்கள் மிக முக்கியமாக விளிம்புநிலை மக்களே
என்று நிறுவினார். கொலையுண்ட தெய்வங்கள்,
ஒடுக்கப்பட்ட மக்கள் என்றே அவர்களின் வரிசை
அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார். தாய்த்
தெய்வங்கள், காவல் தெய்வங்கள், பழையனூர் நீலி
போன்ற பழி வாங்கும் தெய்வங்கள், நீதி கோரும்
தெய்வங்கள், புறக்கணிக்கப்பட்டு தெய்வமான ஆண்டாள்,
மூதேவி அம்மன், பறையர்களை மணாளராக ஏறுக்கொண்ட
மாரியம்மன், சமணர் காலம் தொட்டு தமிழர்கள் வணங்கி
வந்த பேச்சி, இயக்கி போன்ற தெய்வங்களே தமிழ்ப்
பண்பாட்டின் வேர்கள் என்று பேராசிரியர் வாதிடுகிறார்.
இத்தெய்வங்கள் தனித் தனியானவர்கள், நிறுவனமாக
மறுத்தவர்கள், சுதந்திரமானவர்கள், கோபம் கொண்டவர்கள்,
ஆயுதமேந்தியவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்.
பேராசிரியர் நாவா தனது “ஸ்கந்த முருகன் இணைப்பு”
பற்றிய கட்டுரையில் வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட
ஸ்கந்தன் தென்னாட்டின் முருகனுடன் எவ்வாறு
இணைக்கப்பட்டான் என்பதை எடுத்துக் காட்டினார்.
எஞ்சியிருந்த கதையை பேராசிரியர் தொ.ப. சொல்லுகிறார்.
அது குறத்தி வள்ளியின் கதை. குறத்தி வள்ளி இந்திரனின்
மகள் தெய்வானையுடன் சேர்க்கப்பட்டாள். ஆனால் வள்ளி
சேர மறுத்துவிட்டாள். அவளது சுதந்திரத்தைத் தக்க
வைத்துக் கொண்டாள். மீனாட்சியின் கதையும்
இப்படிப்பட்டதுதான். அவளும் தன் சுதந்திரத்தை,
சுயாதீனத்தை இழக்க மறுத்து விட்டாள். மதுரையில்
மீனாட்சி, சொக்கநாதரையும் விஞ்சி நிற்பாள். வங்காளத்தில்
சக்தியைப் பிரிந்த “சிவம்” வெறும் “சவம்” எனப்படுகிறார்.
சிறுமைப்படுத்தப்பட்டாலும் மூதேவி அடிமைத்தனத்தை
ஏற்காத தன்னிச்சையான பெண் தெய்வம். சக்தியின்
வடிவங்கள் பெரும்பாலும் மேட்டுக்குடித்தனத்திற்கு
அடிமையாகாத சிவனை மீறிய தாய்த் தெய்வங்கள்.
ஆக்ரோஷமான தெய்வங்கள்.
பெரியாரின் திராவிட இயக்க வரலாற்றை மூன்று
அடுக்குகளாகப் பிரித்துக் காட்டலாம். முதலாவது, தந்தை
பெரியாரின் நாத்திகம், பகுத்தறிவு, சுயமரியாதை, பார்ப்பன
எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது. இரண்டாவது
அடுக்கு, அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் என
வளர்ந்தது. அது தமிழ்மொழி, இலக்கியம் என்ற திசையைத்
தேர்வு செய்தது. காதல், வீரம் என்ற ஜனரஞ்சக
வடிவங்களைக் கையிலெடுத்தது. தமிழ்ப் பெருமிதங்களின்
மீதே அது கட்டமைக்கப்பட்டது. அதிகாரக் காதலையும்
அது கொண்டிருந்தது. மூன்றாவது அடுக்கு, பேராசிரியர்
தொ.ப. குறித்து நிற்கும் அடித்தளப் பண்பாட்டுச் சார்பு
கொண்டது. அது வழக்காற்றுத் தளத்தில் சொல்லாடும்
பண்பாட்டுப் பரப்பை விழைகிறது. பெரியாரிய,
அம்பேத்கரிய, மார்க்சிய இணைப்பை அது குறிக்கிறது.
பகுத்தறிவுக்கும் பண்பாட்டுக்கும் (Reason and
Culture) இடையில் ஒரு சங்கடமான உறவு உண்டு.
ஒன்று மற்றொன்றுடன் எளிதில் பொருந்திப் போகாது.
அறிவு, நவீன யுகத்தின் காத்திரமான முதல் போராளி.
பண்பாடு, மானுடப் பரப்பின் ஆழங்களைப் பற்றி நிற்பது.
பேராசிரியர் தொ.ப. இவை இரண்டுக்குமிடையில் ஓர்
உரையாடலை முன்னெடுத்தார். பெரியாரிய மானுடவியல்
என்ற ஒரு புதிய போக்கினை அவர் உருவாக்கித் தர
முயன்றுள்ளார். மொழி, பண்பாடு, மானுடவியல், விளிம்பு
நிலை மக்கள் என்ற சந்திப்பில் பேராசிரியர் தொ.ப.வைக்
காணுகிறோம். தமிழ் தேசியத்துடன் விவசாயிகள் நலன்,
உழைப்பாளிகள் நலன் ஒன்றுசேரும் தருணம் உருவாகி
வருகிறது. இப்படி ஒரு முன்மாதிரியை போலந்துக்கும்
அயர்லாந்துக்கும் மார்க்ஸ் 19 ஆம் நூற்றாண்டில்
முன்மொழிந்தார். நிலத்தில் உழைப்பவரின் வாழ்வும்
நலனும் சம்மந்தப்படாத தேசியம் முன்செல்லாது என்று
மார்க்ஸ் கூறினர். பேராசிரியர் தொ.ப.வின் பண்பாட்டு
அக்கறை தமிழ் தேசியத்தோடு இயற்கை விவசாயத்தை,
இயற்கை உணவுப் பழக்கங்களை, இயற்கை மருத்துவத்தை
(பெரியவர் நம்மாழ்வாரை) இணைக்கிறது. இவை
நீண்டகாலப் பயணத்துக்கான முன்னுரை. தொ.ப.வை
பெரியாரே ஏறிட்டுப் பார்ப்பார். பண்பாட்டைப் பேராசிரியர்
தொ.ப.நம்புகிறார். வீதிகளின் ஓரங்களில் சரிந்து நிற்கும்
பழைய தெய்வங்கள் நிமிர்ந்து எழுவர் என அவர்
எதிர்பார்க்கிறார். பண்பாடு, முதலாளியத்தோடு போராடும்
என அவர் கருதுகிறார். அப்படி நிகழ்ந்தால், அது ஒரு
பெரும்போராக அமையும்.
பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற ஈழத்
தமிழ்ப் பேராசிரியர்களின் மீது புலமைக் காதலும்
மரியாதையும் கொண்டவர் பேராசிரியர் தொ.ப.
ஈழப்பிரச்சினையில் அழுத்தமான ஈடுபாடு கொண்டவர்
ஈழத்தமிழர் எடுத்துக் காட்டிய போர்க்குணத்தைக் கண்டு
அவர் கிளர்ச்சி உணர்வில் திளைத்தார். பின்னர் ஈழத்தமிழர்
குறித்து அவர் ஏதிலியாய்க் கண்கலங்கி நின்ற
சந்தர்ப்பங்களை நான் கண்டிருக்கிறேன். தமிழ்ச்
சூழல்களில் சந்தர்ப்பவாதிகளாக ஆகிப்போன தமிழ்த்
தலைவர்கள் மீது அவர் கொதித்துக் கோபித்த
சந்தர்ப்பங்களையும் சந்தித்திருக்கிறேன். “அந்தக்
கட்சிகளைக் கலைத்து விடச் சொல்லுங்கள்” என்று அவர்
உறுமியிருக்கிறார்.
பல நோக்குகளில், இத்தாலிய மார்க்சியர் அந்தோனியோ
கிராம்சியின் பண்பாட்டு அரசியலைப் பேராசிரியர் தொ.ப.
நினைவூட்டுகிறார். அவர் குறித்த உரையாடல்கள் நம்மில்
தொடரட்டும், அவை நம்மைச் செழுமைப்படுத்தட்டும
