Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

தோழர் தொ. ப.

காட்சி -1

இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் 1972 முதல் கற்பித்தல் பணி. 1965 -இன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மதுரை மாணவப் போராளியும், நண்பருமான புலவர் வீராசாமி என்ற மறவர்கோ
இளையான்குடி உயர்நிலைப்பள்ளியில்தமிழாசிரியர்.
தொ. ப. வும் வீராசாமியும் அறைநண்பர்கள். இரு ஆண்டுகளின் பின் தொ. ப. வுக்குத் திருமணம். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இல்லறம்.
இளையான்குடி போய்ப்போய் வந்தார். ஆண்டு நினைவு இல்லை; தொ. ப. பரமக்குடியில் வீடெடுத்து தங்கியிருந்த காலம்; பணியின் பொருட்டு இளையான்குடி போய்த் திரும்பினார். பரமக்குடியில்
மேல்மாடி வீடு. இரவு உணவுக்குப்பின் ஒருநாள் அவருடன் உரையாடல். பேசிக் கொண்டிருந்த வேளையில், புரட்சிகர மார்க்சிய லெனினியப் பாதையில் நான் பாலர் வகுப்பில் நுழைந்திருந்தேன்.
புரட்சிகர மா. லெ. அணிகளின் செயல்பாடுகள், அவைகளுக்குள்ளான கருத்து முரண்பாடுகள் பற்றி நிறையக் கேள்விகள் அவருக்குள் எழுந்தன.
மார்க்சிய லெனினிய இயக்கங்களின் நிலைப்பாடு, அவைகளுக்கிடையேயான முரண்கள், நடைமுறைச் செயல்கள் போன்றவைகளை எனக்குத் தெரிந்த அளவில் பகிர்ந்து கொண்டிருந்தேன். புரட்சிகர அணிகளின் நடைமுறைகள் பற்றி புதிய புதிய செய்திகள் அறிதலில் அவர் ஈடுபாடு மிகவும்
கொண்டர். முகம் மலர்வும் ஆச்சரியமுமாக விரிவு கொண்டது.
அதிகார அரசு நிறுவனங்களை மா. லெ. இயக்கத்தினர் எதிர்கொள்வதில் என்னென்ன முறைகளைக் கையாளுகின்றனர்? அதிகார எதிர்ப்பு தொ. ப. வு. க்குள் இயல்பாய் ஊன்றி இருந்தது;
கல்லூரியின் அதிகாரத் தோரணையை எதிர்த்தபோராட்டங்கள் அப்போது மேலெழுந்து வந்து கொண்டிருந்ததின் தொடர்ச்சி காரணமாக இருக்க வேண்டும்.
இறுதி நேர்காணலில் இந்தி ஆதிக்கம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் : உங்கள் இளமைக் காலத்தில் நடந்த இன்றும் உங்களைப் பாதிக்கும் விசயம் என்ன? “ இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் என்னைப் பாதிக்கும் விசயம்” இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தி தெரியும் என்கிற கூடுதல் தகுதியால் மத்திய அரசில் பதவி வகித்தது விமர்சனத்துக்கு உள்ளாகிறதே?
” அதிகாரத்துக்கு நாக்கைத் தொங்கப் போட்டால் அவ்வளவு தப்பையும் பண்ணித்தான் ஆகவேண்டும்” பட், பட்டென்று பதில் தருவது தொ. ப. வின் இயல்பு. அதிகார எதிர்ப்பின் சொற்களும்
வினையாற்றலும் உடனுக்குடன் வெளிப்படுதல்
நேர்மையான போர்க்குண செயல்வகை.

காட்சி -2

கல்லூரி நிர்வாகத்தின் அநீதிப் போக்கை எதிர்த்து ஆசிரியர் தொடர் போராட்டத்தின் விளைவாய் கல்லூரியில் இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அரசின் தலையீட்டின்
பேரில் மிகைப் பணியிடம்(Surplus) என்று கணக்கிட்டு மதுரைக்கு மாற்றப் படுகின்றனர். அதிலொருவர் இளையான்குடி பூர்வீகர். அவருக்குப் பணி ஒதுக்கீடு மதுரைத் தியாகராசர் கல்லூரி. பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர் தொ. ப. விடம். ”நமக்குள் இயல்பான மாற்றம்( Mutual Transfer) பெற முயற்சி மேற்கொள்ளலாமா” எனக் கேட்கிறார். ”செய்த

கொள்ளலாம்; ஆனால் நான் கேட்க மாட்டேன்.
நீங்கள் முயற்சி செய்தால் முழு ஒப்புதல் தருகிறேன்” என்கிறார். அதன் பேரில் இளையான்குடிக்காரர் பணியிடத்தில் தொ. ப. வும், தொ. ப. வின் இளையான்குடி இடத்தில் அந்த விரிவுரையாளரும்
மாறுதலாகிக் கொள்கிறார்கள். தமிழ் வளர்க்கும் பல்கலைக்கழகங்கள் என தமிழகத்தில் பெயர் பெற்றுக்கொண்டிருந்த மூன்று கல்லூரிகளில் மிக முக்கியமான ஒன்று மதுரைத் தியாகராசர் கல்லூரி. தொ. ப. வுக்கு இரட்டிப்பு
மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டிருக்கலாம். அறிவுசார் செய்ற்பாடுகளுக்கும் முன்னேற்றத்திற்கும் மதுரைச் சூழல் கை கொடுக்கும் என்று அவர் கருதியிருக்கக் கூடும்.
அன்றைய மதுரையின் கீகோடி முனையில் நிறுவப்பட்டிருந்தது தியாகராசர் கல்லூரி. “முன்புறம் அலையடிக்கும் தெப்பகுளம்;
பின்புறம் நீரோடும் வைகை. ” இரு நீர்நிலைகளின் இடையில் அமைந்த தமிழ்த் தாஜ்மஹால் ” என்று 1960- களின் தொடக்கத்தில் கல்லூரியில் வாசித்துக் கொண்டிருந்த நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
எதையும் கற்பனை ரீதியாகச் சொல்லிப் பார்த்து, கனவுகண்டு எடுத்துரைப்பது தானே இளமைக்காலம்! தியாகராசர் கல்லூரியின் அமைவிடம் என்கிற பருண்மைப் பக்கம் அல்ல; தமிழ் வளர்ச்சியில்
பழமை மிகு பேராசிரியர்கள் , சுற்றிலும் போர்க் குணமிக்க மாணவ ர்கள் என்னும் பொருண்மைப் பக்கம் அவரை ஈர்த்தது.
ஜாகிர் உசேன் கல்லூரி பூர்வீகம். ” துறை மேம்பாட்டு திட்டத்தின்” கீழ் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளச் செல்கிறார் தொ. ப. தியகராசர் கல்லூரி, மதுரைப்
பல்கலைக்கழகம் என ஒவ்வொரு படிக்கல்லாக கால் வைத்து ஆழம் காண இயலா தமிழ் பண்பாட்டுக் கிணற்றில் இறங்கி முங்கிக் குளித்து நீராடி புதிய உச்சங்களைத் தொட மேலே வருகிறார்.
”இளையான்குடியில் பணியாற்றிய காலத்தில் இதுபோன்ற பண்பாட்டு ஆய்வுத் துடிப்பு அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதா”
நண்பர் தமிழாசிரியர் வீராசாமியிடம் உசாவினேன்.
பதில் “ அவ்வாறு ஏதும் அப்போது நான் காணவில்லை. ஆனால் திராவிட இயக்கச் சிந்தனையாளர். பேசுபொருள் ஒவ்வொன்றிலும்
பகுத்தறிவுப் பூர்வமான தெறிப்புகள் இல்லாமல்
பேசியதில்லை.

காட்சி- 3

”அரண்மனைக்கு ஆயிரம் செல்லும்” அடிக்கொருதரம் மக்களின் நாவில் புரளுகிற சொல்லாடல்: அரண்மனை அதிகார பீடம்; மக்களின் சொத்துக்களை தனதாக அபகரித்து, மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, மக்களின் வரிப்பணத்தில் தன் பிழைப்பை நடத்தி பெருமைபீத்திக் கொண்டு வாழுகிற பீடம். ஊரை அடித்து ஏற்றப்படும் உலையான இந்த அதிகாரம்,
இருவகையில் செயல்படுகிறது. அமைச்சு என்னும் – கருத்தியல் வடிவம். தளபதி, சேனை என்னும் – ஆயுத வடிவம். அமைச்சர்கள், தளபதிகள் என பெயர் கொண்டவர்கள் அவர்கள். ஊர் வாயை
மூட முடிவதில்லை: மெல்ல மெல்ல முணுமுணுப்பு
ஏறத் தொடங்கி எதிர்ப்புக்குரலாய் ஒலிக்கத் தொடங்குகிறது. ’ அரண்மனைக்கு என்ன ஆயிரம் செல்லும் ‘ என்று இளக்காரமாய் பார்க்கத் தொடங்குகிறார்கள் எளிய மக்கள்.
இன்று அரண்மனை இல்லை; மன்னர்கள் இல்லாமல் போயிருக்கலாம். அந்த ஆதிக்க மனோ பாவம் அனைத்து மட்டத்திலும் இடைவிடாமல் உயிர்த்துக் கொண்டிருக்கிறது.
வரலாற்று அசைவை நாட்டாரியல் பார்வையில், எதிர்ப்பு மொழியில் சுருண்டு கிடக்கும் அர்த்தங்களை சுருள்கத்தியை போல் விரித்து விளக்கப்படுத்தும் திறன் தான் தொ. ப. மக்களது அடியொற்றி நாட்டுப்புற வழக்காறுகளின் வேர் வரை போய்
காலத்தை வரலாற்றை எடுத்துக் காட்டுதல் அவரது
சமூக விமர்சனம்.
ஆனானப்பட்ட சொல்லானாலும் கிண்டிக் கிழங்கு எடுத்து விடுவதில் தோ பரமசிவன் அசகாய சூரர். ஒரு சொல்லின் பண்பாட்டு வேரை நோண்டி எடுத்து, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்ச் சமுதாயம் வளர்ந்து வந்த கால வரலாற்றை தூக்கிப் பிடித்துக்
காட்டுவார்.
இந்து என்ற சொல்லாடலின் வரலாற்று மூலத்தை அவர் ஆய்வு செய்த விதம் பெருவியப்புக்குரியது; அவர் வந்தடைகிற அடைவுகள் நம்மை இரு கை சேர்த்து ‘தத்தாங்கி’ கொட்ட வைக்கிறது.
கிண்டிக் கிழங்கு எடுப்பதில் இருவகை உண்டு சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு இதெல்லாம் உணவு பொருட்கள். ‘சாணாக் கிழங்கு’ என்று ஒரு வகை உண்டு. மானாவாரிப் பிரதேசத்தில், குறிப்பாய் கரிசல் மண்ணில்
‘கானாங்காத்தான் காடு’ என்று சொல்வார்களே, அந்த தொலைதூரக் காடுகளில், அது ஒரு அரைபாக உயரத்துக்கு வளர்ந்திருக்கும். நுனித் தண்டில் இளஞ்சிவப்பு பூ ஆடும். காற்றில் அத்தனை ஒயிலாய் பூவின் அசைவு இருக்கும். எத்தனை ஆண்டுகள்
பஞ்சம் வந்தாலும் அதனடியில் உள்ள கிழங்கு ஒருபோதும் சாகாது.
“ ஆளை பாத்தா அழகு, வேலையப் பாத்தா எழவு” என்று சொல்வார்கள் அதற்கு ஈடான இன்னொரு சொல் வழக்காற்றில் உண்டு. ” ஆளப் பாரு சாணாக்கிழங்கு மாதிரி பூத்திருக்கா ”என்பார்கள்.
அழகு நளினம் வடிவம் ;ஆனால் குணம் பத்தாது. அரிப்பும் எரிப்பும் நச்சுத் தன்மையும் கொண்ட மாதிரி கிழங்கு அவ என்றும் சொல்லிக்காட்டுவார்கள்.
சாணாக் கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லதில்லை ; எளிதாக சமைத்துச் சாப்பிடவும் முடியாது. சர்க்கரைவள்ளிக் கிழங்கை பச்சையாய் கடித்து சாப்பிட முடியும். ஆனால்
இரண்டு மூன்று முறை தண்ணீரில் வேகவைத்து
நீரை வடித்து, நச்சுத்தன்மையை முழுக்க நீக்கிய பிற்பாடுதான் சாப்பிடலாம். அதுவும் பிறகு வேறு சில பொருட்கள் சேர்த்து
கல்லுரலில் போட்டு ஆட்டி மாவாக்கி தோசை சுட வேண்டும்;
இவ்வளவு கை பார்த்தும் காரியங்களும் முடிந்து தான் வாயில்
வைக்க முடியும். என்ன செய்வது பஞ்சகாலத்தில் காடுகாடாய்ப் போய் இந்தக் கிழங்குகளைத் தேடி எடுத்து பசி தணித்தார்கள். அப்போதும் நாக்கில் அரிப்பெடுக்கும். தமிழர்களின் வரலாற்றில் இந்த நச்சுக்கிழங்கைத் தேடிப் போன ஒரு பஞ்சகாலம் உண்டானது. அது 1500 ஆண்டுகள் முன் தொடங்கியது.
சமணர் காலத்தின் போது காபி காலத்தின் பின் அது நுழைந்து தமிழரின் மொழி பண்பாடு மெய்யியல் தத்துவம் சமயம் பழக்கவழக்கம் மேல்கீழ் வேற்றுமை என தீமைகளின் ஒரு பஞ்ச காலமாக அது ஆட்டம் போட்டது 1500 ஆண்டுகள் முன்னர் வந்தடைந்த இன்று இந்து சமயம் என்று சுட்டப்படும் ஆரிய மாயம் ஆரிய மயம் சமஸ்கிருத மயமாக்கல் இந்தப் பஞ்ச காலம் இந்து சமயம் என்று இப்போது பெயர் கொண்டுள்ள வர்ணாசிரம சமயம். இதை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றுகிற வரை, பகுத்தறிவு உரையாடல் பெருக்கெடுத்த காலம் வரை இதை ஏன் எதற்காக என்று கேள்வி எழுப்பும் இடி இல்லை ஒன்றிரண்டு சலம்பல்கள் சித்தர் பாடல்கள் போல் அவ்வப்போது அங்கங்கே கேள்வி எழுப்பியிருந்தன.

காட்சி -4

சொல்லாடல், பாடல், கதைப் பாடல், சொலவம், கதை , அழிப்பாங்கதை என மக்களின் நூற்றுக்கணக்கான வெளிப்பாட்டு முறைகளைச் சேகரித்தல், தொகுத்தல் என ஐம்பது அறுபதுகளில்
தொடங்குகிறது. இப்பணியின் மூலவராக பேராசிரியர் நா. வானமாமலை அறியப்படுகிறார்.
நா. வா. தொகுத்து வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் வெளியான ஆண்டு 1960. அடுத்ததாய் நா. வா . தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் வெளியான ஆண்டு 1964. இந்நூலில் சேகரித்தோர் பெயர் முதன்முதலாக குறிப்பிடப்படுகிறது எனக் கருதுகிறேன். சேகரிப்பு முனைப்புக்குக் கிடைத்த மரியாதை என
எடுத்துக்கொள்ளலாம். நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து வெளியிட்ட எத்தனையோ பேர் சேகரித்த பெயர்கள் குறிப்பிடாது சிம்மாசனம் ஏறிய வேளையில், நா வானமாமலை அறம்சார்ந்து
செயல்பட்டிருக்கிறர்.
தங்கம்மாள்புரம் எஸ். எஸ் போத்தையா, எஸ். எம் கார்க்கி, கவிஞர் சடையப்பன், எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன், எம். பி. ராஜவேலு, குமாரி பி. சொர்ணம், டி. மங்கை எனப் பெயர்கள் இந்நூலில் சுட்டப்பட்டுள்ளன .
பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் நல்லகண்ணு இரண்டொரு பாடல்கள் சேகரித்து அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டுப்
பாமரர் பாடல்களில் எஸ். எஸ். போத்தையாவின் பங்களிப்பு
எழுபத்தைந்து விழுக்காடு இருந்தது என்பதை பெருமிதமாகக் குறிப்பிட்டிருப்பார் நா. வா. நூலின் முன்னுரையில் ” எ ஸ் . எ ஸ் .
போத்தையாவின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால்
இத்தொகுப்பு முழுமையடைந்திருக்காது” என்பார்
நா. வா. சேகரிப்பு தொகுப்பு என்று பகிரப்பட்ட நாட்டார்
வழக்காறுகளில் முதன்முதலாக பொதுச் சமூகத்திற்கு பயன்படுத்தலில் இருவர் முன்னோடி ஆகின்றனர். ஒருவர் உரைநடை முன்னோடி கி. ராஜ நாராயணன். மற்றொருவர்
பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன். கி. ரா. கதைகள் சிறுகதைகள் நாவல் கட்டுரைகள் என தனது எழுத்துக்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்றார். பன்பாட்டு மூலவேர்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தல் வழி தொ. ப. பொதுச் சமூகத்துடன்
பகிர்ந்தார். பல்கலைக்கழகத்தின் ’துறை மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் ஆய்வு நுழைவு அது. ஆய்வு எனபது அவரது அறிவு, வாசிப்பு, தேடல், புத்தாக்க சிந்தனை, சமுதாய மறுஆக்கப் பயன்பாடு என கோர்வையாய் அவரின் மேம்பாட்டுக்கு வித்திட்டது.
பண்பாட்டு மேலாதிக்கம் பற்றி ஆலிவர் கிராம்சியின் கூற்று ஒன்றுண்டு. பண்பாட்டு பார்ப்பனிய மேலாதிக்கம் பற்றி தொ . ப .
எடுத்துரைக்கிற கூற்று கிராம்சியின் வாசகத்துடன் சரியாகப் பொருந்திப் போகிறது. பார்ப்பனியத்தின் பலமான அம்சங்களில் ஒன்று நிறுவன பலம். இந்த நிறுவனம் பழைய காலத்தில் பார்ப்பனர்களுக்கு இரண்டு வகையாக இருந்தது – ஒன்று நிலபுலன்களும் சொத்துக்களும் இருந்த பெரிய பெரிய கோயில்கள்:
மற்றொன்று கண்ணுக்கு புலனாகாத கருத்தியல் நிறுவனம். வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் ஆகியன. அக்காலத்தில் புராணக் கதைகளும் சாத்திரங்களும் பார்ப்பனரல்லாத மக்கள் கூட்டத்தை சிந்தனை அளவில் அடிமையாக்கி இருந்தன.
கோயில்கள் உலகியல் ரீதியாக அவர்களை நிரந்தர அடிமைகளாக ஆக்கி இருந்தன. அரசும் அரசு போன்ற அமைப்புகளுடனும் மக்கள் ஒத்துப்போதல் கருத்து ஒப்புதல் இல்லாமல் நடைபெறுவதில்லை.
மக்களின் ஒப்புதலோடே பார்ப்பனியம் முதுகு ஏறிற்று. ”இதுதான் பார்ப்பனியம்” – என்னும் நூல் 1992இல் வெளியாயிற்று. ஆசிரியர் சிவகுமாரன் என்றிருக்கும். இந்நூலினையும் இதுபோன்ற
கருத்துக்களையும் உள்ளடக்கி ”இந்து தேசியம் ”என்ற
முழு நூல் பிற்காலத்தில் தொ. பரமசிவன் பெயரில் வெளியாயிற்று.
”இந்து என்ற சொல்லுக்கு பொருள் என்ன ?” ”இந்து என்ற சொல் இந்தியாவிலேயே பிறந்த வேதங்களிலோ உபநிடதங்களிலோ ,
ஆரன்யகங்களிலோ பிராமண்யங்கள் என்ற சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலும் இல்லை இதிகாசங்களிலும்
கிடையாது இந்தச் சொல் 18ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில்’ ஓரியண்டலிஸ்ட் ’அதாவது கீழ்த்திசை நாடுகளை பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்த சொல்லுக்கு மரியாதை என்றால் இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த சொல் என்பது.
இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற
சொல்லுக்கு வேறு சொல் கிடையாது. ”
“இந்துக்கள் என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்”
” இந்து என்ற சொல் இந்திய அரசியல் சட்ட அங்கீகாரத்தை பெற்ற சொல்தான். அது ஒரு சமயச் சார்புடைய சொல் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்படுகிறது. இந்து என்ற
சொல்லுக்கு நேரிடையான வரைவிலக்கணம் கிடையாது. கிறிஸ்தவர் அல்லாத இஸ்லாமியர் அல்லாத ஆரியரல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறையான வரைவிலக்கணம் தான்
உண்டு. ஒரு மதம் என்றால் மூன்று செய்திகள் அடிப்படையாக அமைய வேண்டும் ஒரு முழுமுதற் கடவுள் ஆகமங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள் ஆகியன இந்து மதத்திற்கு அல்லது அப்படி
அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு இவை ஏதுமில்லை. இந்து மதம் என்ற சொல்லாடலில் தமிழ்நாட்டில் சைவர்கள் வைணவர்கள் என்று இரண்டு சொற்கள் பயன்படுத்தப் படுகிறது.
இந்துமதம் என்ற சொல்லாடலில் சைவர்கள் வைணவர்கள் ஸ்மார்த்தர்கள் இந்த மூன்றும் இல்லாத நூற்றுக்கணக்கான வழிபாட்டு முறைகளை உடையவர்கள் என்று பல மக்கள் துகள்கள் உள்ளன.

காட்சி -5

தொ. ப. வெளிப்படுத்துகிற நாட்டாரியல் தொடர்பான ஒவ்வொரு தகவலும் வரலாற்றுத் துளிகள்; இதில் இரண்டு வகைகளை அவர்
கையாண்டார். இதுவரை கேள்விப்பட்டிராத வாசித்திராத புதிய தகவல் அல்லது சொல்லாடல்.
மற்றொன்று இதுவரை நாம் கூர்ந்து பார்த்திராத புதிய விளக்கம். ’அறியப்படாத தமிழகம் ”நூல் வெளிப்பட்டபோது, அவரை அறியாதிருந்த தமிழகத்திற்கு அது அவரைக் கொண்டு சேர்த்தது.
திராவிட இயக்கச் சிந்தனைகள், பகுத்தறிவு, மார்க்சிய லெனினிய சிந்தனைகள் என்பவைகளின் இணைவில் வாசகருக்கு புதிய கருத்துக்களை தருகிறவராக வெளிப்பட்டார். அவைகளைப் பற்றி
சிலாகித்தார்; நாட்டுப்புறத்தான் என்று சொல்வதில் எத்தனை இளக்காரம் கொண்டிருந்தோம் ! அவனைத் தொடர்ந்த விசயங்களையெல்லாம் நோக்காமல் ஆராயாமல் விட்டிருந்தோம் .
அவைகளையெல்லாம் தன் மடி மேல் ஏற்றிக் கொஞ்சினார்.
ஒவ்வொரு மனுசன் மனுசியின் அசைவிலும் நாச்சுழட்டலிலும் முகபாவத்தினதும் வழியாக வெளிப்படும் குணவாகுகளைக் கூர்ந்து கவனித்தார்.
என்ன வகையாக இந்த எறும்புகள் எந்தப் புள்ளியில் இருந்து புறப்பட்டு வருகின்றன என்பதை வாசித்தார். இது ஒரு கதைசொல்லி செய்ய வேண்டிய காரியம்; அதனால். மண் சார்ந்த படைப்புகளைத் தருகிற செய்கிற கதைசொல்லிகள் தொ. ப, வுக்கு
பிரியமானவர்களானார்கள்.

“மண் சார்ந்த படைப்புகளைத் தருவதில் உங்களை
கவர்ந்தவர்?”
தொ. ப. பதில்:
“பா. ஜெயப்பிரகாசம். தஞ்சாவூரை ஜானகிராமனும்,
திருநெல்வேலியை புதுமைப்பித்தனும் நன்றாகப் பதிவு
செய்திருக்கிறார்கள். சோ. தர்மனையும் சொல்கிறார்கள்; நான்
இன்னும் படிக்கவில்லை. ”

அவரது இந்த கடைசி நேர்காணல் முக்கியத்துவமிக்கது.

காட்சி -6

நீரழிவு நோய் காரணமாக, முழங்காலின் கீழ் நீக்கப்பட்டது. மாற்றுத் தோற் கால் சரியாகப் பொருந்தவில்லை கனமாக இருந்தது. பிறகு அதைச் சரி செய்தல்; இயல்பான நடமாட்டம் இல்லாமல்
போனது. நோயின் நொய்மை பதகளிப்பாக்கிற்று.
அதனினும் மேலாய் அவரைப் பதகளிப்பாக்கியது கொரானா சூழல் உண்டாக்கிய தனிமை.
10 ஆண்டுகள் தியாகராசர் கல்லூரி: 1998 முதல் 2008 வரை பத்தாண்டுகள் நெல்லைப் பல்கலைக்கழகப் பணி. பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றியபோது பார்க்கச் சென்றிருந்தேன். அழைத்துச் சென்று துணைவேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்த பின்னர் தமிழ்த் துறையில் இருந்த பேராசிரியர்
ஸ்டீபனிடம் தமிழிலக்கிய மாணவர்களோடு உரையாடலும் சந்திப்பும் நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுகொண்டர். பொறுப்பை ஸ்டீபனிடம் ஒப்புவித்து விட்டு அவர் புறப்பட்டுச்
சென்றார். ’ வேலை இருக்கிறது நிறைய ”என்ற கவிஞர் மீராவின் பாடல் வரி எனக்குள் மேலெழுந்து வந்தது.
அதன் பின்னர் விருப்ப ஓய்வு பெறவைப்பதற்கான உள் சலம்பல் துறைக்குள் முளைத்தது தான் காரணம். லேசுபாசாய், ஒரு ரகசியம் போல் என்னிடம் கலந்து கொண்டார் தொ. ப. ஓய்வு பெற்ற பின் வீட்டில் மூன்று முறை சந்திப்பு.
இரண்டாவது சந்திப்பின் போது வீட்டில் பேசிக் கொண்டிருந்த வேளையி ல் , அவருடைய துணைவியார் சொன்னார் ” இவரே தன் உடம்பைக் கெடுத்துக் கொண்டார்”
புகைக்கும் பழக்கம்: உணவு இறங்குவதில்லை. தேனீர் மட்டும் உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது மற்றொன்று கொரானோ உண்டாக்கிய தனிமை.
நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என தொடர்ந்து வந்து கொண்டே இருந்த வருகை அருகிப் போயிற்று.
தனிமை தனிமை தனிமை !
முதுமையை வேகப் படுத்துகிறது தனிமை,
மரணத்தையும்.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!