காந்தி “நீ எதை மற்றவர்களிடம் மாற வேண்டும் என்று எண்ணுகிறாயோ அந்த மாற்றத்தை நீ முதலில் உன்னிடமிருந்து தொடங்க வேண்டும்” என்று கூறுவார். இதை இங்கு கூறுவதற்கு ஒரு காரணம் நம் உள்ளாட்சிகள் மத்திய அரசு, மாநில அரசுகள் எங்களுக்குப் போதுமான நிதி தரவில்லை என்று கூறுகின்றன. ஆனால் உள்ளாட்சிகள் தாங்கள் உருவாக்க வேண்டிய நிதியை உருவாக்கினவா என்று வினவினால் இல்லை என்பதுதான் பதில்.
தாங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமையைச் செய்யத் தவறியதால், அவைகள் அரசாங்கம் என்று தங்களைக் கூறிக்கொள்ள இருந்த தார்மீக உரிமையை இழந்து நிற்கின்றன. மத்திய மாநில அரசுகள் தரும் நிதியைச் செலவு செய்யும் ஏவல் நிறுவனங்களாகத் திகழ்கின்றன. இதனால் மிகப்பெரிய நிதி இழப்பை உள்ளாட்சிகள் உருவாக்குகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கின்றன. அது மட்டுமல்ல, நிதி இழப்புடன் பல தேவையற்ற பணிகளை நிதி தங்களிடம் இருக்கின்றது, அதை செலவழித்திடை வேண்டும் என்று செலவழித்து நிதி விரயமும் செய்கின்றன என்ற விவாதத்தையும் பொது நிதி கையாளும் முறைமை பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதை 15வது நிதிக்குழு அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. உள்ளாட்சிகள் கிராம உள்ளாட்சிகளும், நகர்புற உள்ளாட்சிகளும் நிதி பற்றாக்குறை, நிதியே தருவதில்லை, மத்திய மாநில அரசாங்கங்கள் என்று புலம்புவதை நாம் பல உள்ளாட்சித் தலைவர்களிடம் கேட்க முடிகிறது. ஒரு சில பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறுகிறார்கள், நிதி தலைவர் முன் வந்து நிற்காது, தலைவர்களாகிய நாம் தான் தேட வேண்டும். அதற்கு நம் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நிதி தேடும் நிபுணத்துவம் வேண்டும். அது ஒரு கலை மற்றும் அறிவியல்.
இந்தத் தலைமை அறிவியலை, எந்தப் பயிற்சியிலும் கற்றுத் தருவதில்லை. அதே நேரத்தில் என் பஞ்சாயத்தில் நிதிக்குப் பஞ்சமேயில்லை என் பிரச்சினையெல்லாம் நிதி பற்றாக்குறை இல்லை, மக்களிடம் பொறுப்பான ஒரு பங்கேற்பை உள்ளாட்சியில் கொண்டு வருவதுதான் என்று கூறுவதையும் மற்றொரு பக்கம் பஞ்சாயத்துத் தலைவர்கள் மத்தியில் பார்க்கின்றோம். ஆனால் இப்படிக் கூறும் பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உள்ளாட்சிகள் மேல்நிலை அரசாங்கங்கள் நிதி முறையாகத் தரவில்லை, தருவதும் குறைவாகத்தான் தருகின்றன என்று குற்றம் சாட்டும்பொழுது, தாங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டபூர்வ அதிகாரத்தை வைத்து உருவாக்க வேண்டிய நிதியை உருவாக்கினவா என்ற கேள்வியை முன் வைத்தால் ஆம் வசூலித்து விட்டோம் என்று கூறும் பஞ்சாயத்துக்கள் மிகமிகக் குறைவு.
இதைத்தான் இன்று உலக வங்கியிலிருந்து உள்ளூர் ஆய்வுவரை சுட்டுகின்றன. உள்ளாட்சிக்கு கிராமப்புற உள்ளாட்சிகள் தாங்களே நிதி உருவாக்கிக் கொள்ளும் இனங்கள் நாற்பதுக்கும் மேலாக இருக்கின்றன. அவைகளை படித்துப் புரிந்து கொண்டு நம் உள்ளாட்சித் தலைவர்கள் செயல்பட்டால்,உள்ளாட்சிகள் பெரு நிதியை உருவாக்கி விடலாம். இன்றுள்ள பல அடிப்படையான தேவைகளை அந்த நிதியிலிருந்தே நாம் மிக எளிதாக நிறைவேற்றி விடலாம். இந்தியா முழுவதும் இதை நம் ஊரக உள்ளாட்சிகள் செய்வதில்லை என்பதை தொடர்ந்து மத்திய நிதிக்குழு எடுத்துக்காட்டி வருகின்றது.
குறிப்பாக 15வது நிதிககுழு அதிக நிதியை உள்ளாட்சிக்குத் தந்தபோதும், உள்ளாட்சிகளை நிதி உருவாக்கத்திற்கு கவனம் செலுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளாட்சிகள் மக்களுக்கு அருகாமையில் இருந்து மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்கின்றன என்ற அடிப்படையில்தான் அதிக நிதியினை மத்திய நிதிக்குழு தொடர்ந்து பரிந்துரை செய்து மத்திய அரசை நிதி நல்க ஏற்பாடு செய்துள்ளது. அதே நேரத்தில் பல மாநில அரசுகள் அரசியல் சாசன வழிகாட்டுதலின்ப மாநில நிதிக்குழுவையே முறையாக அமைத்து முறையான நிதி நிர்வாகத்திற்கு வழிவகை செய்யாமல் மாநில அரசுகள் வாழா இருப்பது ஒரு நிர்வாகச் சீர்கேடு என்று பல அறிக்கைகள் கூறுகின்றன.
மாநில அரசுகள் அப்படி மாநில நிதிக்குழுக்களை உருவாக்கவில்லை என்றால் மத்திய நிதி ஆணையை நிதியை உள்ளாட்சிகளுக்காக பெற முடியாது என்று கட்டளையிட்டபின்தான் பல மாநில அரசுகள் நிதி ஆணையங்களை அமைத்தன. இந்த நிதி நிர்வாகச் சீர்திருத்தம் என்பது இன்று காலத்தின் கட்டாயம் என்ற நிலைக்கு வந்து நிற்கிறது. அடுத்த நிலையில் தேவைக்கு மிகுந்து செலவு செய்யும் பழக்கத்தை உள்ளாட்சிகள் உருவாக்கிக் கொண்டுவிட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதை ஆங்கிலத்தில் ஓவர் ஸ்பெண்ட் என்று அழைக்கின்றனர்.
உள்ளாட்சிகள் மட்டுமே அப்படிச் செய்வது கிடையாது, மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்கின்றன என்பதை பல நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான அறிக்கைகள் சுட்டியுள்ளன. நம் உள்ளாட்சிகள் இன்று நிதி செலவு செய்யும் அமைப்பாக இருப்பதுடன் நிதி விரயம் செய்யும் அமைப்பாக மாறிக்கொண்டு வருகிறது என பல ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. உள்ளாட்சிகள் சொந்த நிதி உருவாக்குவதில் தயக்கம் காட்டுகிறது. அதே நேரத்தில் மத்திய மாநில அரசுகள் தரும் நிதியை விரயம் செய்கின்றன உள்ளாட்சிகள். இது இரண்டும் களையப்பட வேண்டும் என்று தொடர்ந்து மத்திய நிதி ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இதில் உள்ளாட்சிகள் மட்டுமல்ல மாநில அரசுகளும்கூட கவனம் செலுத்தவில்லை.
15வது மத்திய நிதிக்குழு ஒரு புள்ளி விபரத்தை கொண்டுவந்து தந்துள்ளது. அதாவது, உள்ளாட்சிகள் வசூல் செய்யும் வீட்டுவரி ஒன்றில் மட்டும் ரூ.42,160 கோடி வசூலாகும் வாய்ப்பு உள்ளது. அவற்றில் 10% மட்டுமே உள்ளாட்சிகள் வசூல் செய்கின்றன. உள்ளாட்சிகளே தங்களுக்கு இதன் மூலம் நிதி இழப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அடுத்து உலக வங்கி ஓர் ஆய்வு நடத்தி அறிக்கை தந்துள்ளது. அதில் இந்திய உள்ளாட்சிகளில் 78 விதமான வரி, வரி அல்லாத மற்ற இனங்களில் வருவாய் பெருக்கும் சட்டங்களை மேல்நிலை அரசாங்கங்கள் உருவாக்கித் தந்துள்ளன. இருந்தும் உள்ளாட்சிகள் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிக கவனத்தை செலுத்தவில்லை.
அதைவிட மிக முக்கியமாக அந்த செயல்பாடுகள் கட்டாயமாகச் செய்து உள்ளாட்சிகளை சுயச்சார்புடையதாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று மாநில அரசுகளும் உள்ளாட்சிகளை வலியுறுத்தவில்லை. மாநில அரசு, தாங்களும் மத்திய அரசும் தரும் நிதியை உள்ளாட்சிகள் செலவழித்து விட்டார்களா என்று மட்டும்தான் பார்க்கின்றதேயொழிய உள்ளாட்சிகள் தாங்கள் சட்டபூர்வமாக உருவாக்க வேண்டிய சொந்த நிதியை உருவாக்க என்னென்ன முயற்சிகளை உள்ளாட்சிகள் மேற்கொள்கின்றன என்பவற்றைப் பார்க்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டாத அறிக்கைகளே இல்லை.
இந்தச் சூழலைப் பின்புலத்தில் வைத்து, மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்யப் பணித்தது. அந்தக் குழுவும் இதை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் மிக முக்கியமாக மாநில அரசுகளையும் உள்ளாட்சிகளையும் இதன் முக்கியத்துவத்தை உணரும் வகையில் தன்நிதி உருவாக்கும் (Own Source Revenue) விவாதத்தை முன்னெடுக்க வைத்து, அதை மக்கள் மத்தியிலும் புரியவைக்க விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல் வரி விதிப்பு, மற்றும் வரி வசூலுக்கான சுதந்திரமான அதிகாரத்தை உள்ளாட்சிக்குத் தந்திட வேண்டும்.
எந்த அளவுக்கு நிதி உருவாக்கும் சக்தி இருக்கின்றதோ அந்த அளவுக்கு நிதியினை உருவாக்க உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்க தேவையான வழிகாட்டுதல்களை பல்வேறு வகைகளில் மாநில அரசுகள் செய்து தரவேண்டும். இதற்காக ஒரு பொது விவாதத்தை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்துள்ளது. இந்த அறிக்கை மேலும் பல முக்கியமான பரிந்துரைகளைச் செய்துள்ளது. இந்த அறிக்கையை படிக்கும்போது நமக்கு எழும் ஒரு கேள்வி, மாநில அரசுகள் ஏன் இவ்வளவு நிதி இழப்புக்களுக்கும் பாராமுகமாக இருந்து வந்துள்ளது என்பதுதான்.
ஜி.எஸ்.டியில் காட்டும் கவனத்தை இதில் ஏன் காட்டவில்லை. இதை ஏன் மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் நமக்கு எழும் கேள்வி. பல நேரங்களில் கள ஆய்வுக்குச் செல்லும்போது எப்படி கோடிக்கணக்கில் நம் உள்ளாட்சிகள் நிதியை இழக்கின்றன என்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு பத்து வருட தணிக்கை அறிக்கையை சற்று ஆட்சியாளர்கள் கவனமாக உற்று நோக்கி ஆய்வு செய்தால் நம் உள்ளாட்சிகள் எவ்வளவு நிதியை விரயம் செய்துள்ளனர் என்பதை அந்த அறிக்கைகள் எடுத்துக் காட்டிவிடும்.
இவைகளையெல்லாம் தணிக்கை அறிக்கை எடுத்துக்காட்டியபோதும் மாநில அரசாங்கம் அதை சரி செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் நமக்கு எழும் கேள்வியாகும். அடுத்து இன்னொரு வகையான நிதி விரயம். நிதி இருக்கிறது, நிதி வந்துவிட்டது எப்படியாவது செலவு செய்துவிட்டு கணக்கு காண்பித்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் உள்ளாட்சிகள் நிதியை செலவழிக்கின்றன.
மாறாக உள்ளாட்சிகள் தேவை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் செலவு செய்துவிட்டு தந்த நிதியை செலவிட்டு விட்டேன் என்று சாதனையாகக் கூறுகின்றன. அடுத்து நிறைய பொதுச் சொத்துக்களை பராமரிப்பின்றி வைத்திருப்பது, அந்தச் சொத்துக்களை ஆக்கிரமிக்க அனுமதிப்பது, அதற்கு உறுதுணையாகவும் இருப்பது, ஆக்கிரமிப்பை அகற்றி பாதுகாத்து வருமானம் ஈட்டும் வழிவகை செய்யாமல், கவனமற்று செயல்படுவது, என எண்ணற்ற நிதி உருவாக்கும் செயல்களைப் பற்றி உள்ளாட்சிகள் கவலையற்று இருப்பதுதான் இன்றைய கள நிலவரம்.
இதைப் பல ஆய்வுகள் சுட்டிக் காட்டியபோதும் தீர்வுக்கான நடவடிக்கையை எங்கும் காண இயலவில்லை. இந்த இடத்தில் தான் சொந்த நிதி உருவாக்குதலின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே கவனத்தில் கொள்ளாது அதை நிதியாக, வருவாயாக மட்டுமே பார்க்கிறோம். அதற்குமேல் அதில் உள்ள சமூக மாற்றத்திற்கான வாய்ப்பை நாம் பார்ப்பது கிடையாது. இதைப்புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைத் தந்தால் சுலபமாக இருக்கும். ஒரு சமூகக் கோவில் ஒன்று உள்ளது.
அதை உருவாக்கியது அரசாங்கம் அல்ல, சமூகம்தான். அதற்குத் திருவிழா கொண்டாட அரசிடம் நிதி கேட்பதில்லை. மக்களே அந்த நிதியினை உருவாக்கிக் கொள்கின்றனர். அதைச் செலவழிக்கும்போது, மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர். அதை நிர்வகிப்பதும் நேர்மையாக இருக்கிறது. மக்களும் அதைக் கண்காணிக்கின்றனர். பொதுவாக நிதி உருவாக்கும் பொறுப்பு உள்ளாட்சியிடமிருந்தால் உள்ளாட்சிகளுக்கு பொறுப்புக்கள் அதிகம், மக்களுக்குக் கடமைப்பட்டதாக மாறிவிடும்.
மக்களும் தாங்கள் தந்த நிதிக்கு உள்ளாட்சியிடம் கேள்வி கேட்பார்கள். நேரடியாக நிதி திரட்டும்போதுதான் சமூகத்துடன் நமக்கு அதாவது உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் உருவாகும். தாங்கள் நிதியை உருவாக்கும்போதுதான் அதை செலவழிக்கும்போது ஒரு நிதானம், பக்குவம், பயம் வரும்.
சுயநிதி உருவாக்கி செயல்படும்போது தான் சேவைகளின் தரமும் கூடும் என்பது பல ஆய்வுகளில் நிரூபணமான உண்மை. இந்த விபரங்களை மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பொது மக்கள் விழிப்புணர்வும், உள்ளாட்சித் தலைவர்களுக்கு அதற்கான நிபுணத்துவப் பயிற்சியும் தரப்பட வேண்டும். இதை பயிற்சி நிறுவனங்களும், ஊடகங்களும் செய்ய முயல வேண்டும். அதுதான் இன்றைய தேவை.