இயற்கை வளம் சூழ்ந்த கொடைக்கானல் அடிவாரத் திலுள்ள வாளாத்தூர் சொக்க
தேவன்பட்டி என்னும் ஊர்தான் தோழர் தா. பாண்டியன் அவர்களின் முன்னோர் வாழ்ந்த
இடமாகும்.தற்போதைய தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள வெள்ளைமலைப்பட்டி
என்னும் சிற்றூரில் நான்காவது மகனாக 18-05-1932 அன்று பாண்டியன் பிறந்தார்.அவரது தந்தையார் டேவிட், தாயார் ரேச்சல் நவமணி ஆகியோர் கிருத்துவ அமைப்பினர் நடத்திய பள்ளியில் ஆசிரியர்களாக அப்போது பணியாற்றி வந்தனர்.
காமக்காப்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறையினர் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு,
உசிலம்பட்டியில் இருந்த மதுரை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பயின்றார்.
எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, ஆசிரியராக இருக்கும் தந்தையிடம் எழுதி வாங்கிப் பேசுவார்
என்ற எண்ணத்தில் பாண்டியனின் ஆசிரியர் வரைப் பேச்சுப்போட்டியில் சேர்த்துவிட்டார்.
ஆனால், படிக்கும்போது மேடை ஏறுவதை விரும்பாத தந்தை எழுதிக் கொடுக்க மறுத்துவிட்டார்
அப்போது அவருடைய அண்ணன் தா. செல்லப்பா உரையினை எழுதிக் கொடுத்ததுடன், எப்படிப்
பேசவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அடுத்தடுத்து, தானே உரையாற்றும் பயிற்சியையும் பழக்கத்தையும் பாண்டியன் பெற்றார்.
விடுதலை இயக்கம் வீறு கொண்டு எழுந்திருந்த காலம் அது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
அண்ணன் செல்லப்பா விடுமுறையில் இல்லம் வந்தபோதெல்லாம் விடுதலைப் போராட்ட
விவரங்களுடன், பாண்டியனுக்கு மார்க்சியக் கல்வியையும் அறிமுகப்படுத்தினார். அதன்
விளைவாக, அவரது பத்தாவது அகவையில் வழியிலிருந்த காவல்நிலையத்தில் கல்லெறிந்து
ஆங்கில ஆட்சியின் மீது இருந்த சினத்தை பாண்டியன் வெளிப்படுத்தியிருக்கிறார் .
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, மாணவப் பருவம் என்பதால் விடுவிக்கப்பட்டார். பள்ளிக்
கல்வியை அடுத்து, இடைநிலைப் படிப்புக்காக (இன்டர்மீடியட்) காரைக்குடி அழகப்பா கல்லூரியில்
சேர்ந்து, அங்கேயேபொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அன்றைய ஆட்சியில் உயர் அலுவலர்கள் பெரிதும் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர். ஊர்
மக்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் இடையில் இணைப்பாக பாண்டியனின் தந்தையார்
விளங்கினார். பள்ளி ஆசிரியர் என்ற நிலைக்கு மேலாக ஆங்கில அறிவும் அவரிடம் மிகுந்திருந்தது.
அத்துடன், கிருத்துவராக இருந்தபோதிலும், தனது இரண்டு பிள்ளைகளுக்கு பாண்டியன் ,
பொன்னிவளவன் என்று அவர் பெயரிட்டிருக்கிறார். கிருத்துவர்கள் வழக்கமாக இத்தகைய பெயர்களைச் சூட்டுவதில்லை. இதனால், பாண்டியனது தந்தையார் தமிழ் ஆர்வமும் கொண்டிருந்தார் என்பதை அறியலாம். இத்தகைய பின்புலத்தில், ஆங்கில அறிவையும் தமிழ்ப் பற்றையும் இல்லத்திலிருந்த எளிதில் பெறக்கூடிய வாய்ப்பு பாண்டியனுக்கு இயல்பாக அமைந்தது. இதற்கு மேலாக, அண்ணன் செல்லப்பா வழியாகக் கிடைத்த மார்க்சிய அறிமுகம் அவருக்கு ஆழமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்று, அன்றைய நாள் காரைக்குடி அழகப்பா கல்லூரியும்
பெரும் புகழ் பெற்று விளங்கியது. பல துறைகளும் இருந்ததால், மாணவர் எண்ணிக்கையும் மிகுதி.
மாணவர் அனைவரும் வாக்களித்து மாணவர் பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பேரவைத் தேர்தல் ஒரு பொதுத் தேர்தல் போலவே நடைபெறும். இது அந்தக் காலத்திய கல்லூரிகள்
பெரும்பாலானவற்றுக்கும் பொருந்தும். ஆளுமையும் அறிவுப் பெருக்கமும் ஈர்ப்பும் பேச்சாற்றலும்
இருந்தால்தான் பேரவைத் தலைவராக முடியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்போர் நிகழும்.
திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்டு வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. பொதுக்கூட்ட
மேடைகள் மட்டுமன்றி, திரை உரையாடல்கள் வழியாகவும் திமுக தலைவர்கள் சொல் வலிமையையும் கருத்து வளத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தலைவர்களைப் பின்பற்றி, மாணவர்களும் இளைஞர்களும் அடுக்கு மொழிப் பேச்சாலும் சமூக சீர்திருத்த முன்மொழிவுகளாலும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியோராக விளங்கினர்.
எண்ணத்திலும் எண்ணிக்கையிலும் செல்வாக்கு மிக்க திமுக மாணவர்களின் ஊடுருவலையும் மீறி, பாண்டியன் மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அவருட பேச்சாற்றல் மட்டுமன்றி, ஆழ்ந்த ஆங்கில அறிவும் மார்க்சிய அறிமுகத்தால் பெற்றிருந்த விரிந்த
பார்வையும் துணைநின்றன. இவரை அடுத்து, இவரது இளவல் தோழர் தா.பொன்னிவளவனும்
அழகப்பா கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும்
இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.இளமையிலேயே மறைந்துவிட்ட தோழர் பொன்னிவளவன்
பொதுவுடைமை இயக்கத்தோடு முழுமையாக இணைந்திருந்தார்.
1950 களின் தொடக்கத்தில் இருந்து 1967இல்ஆட்சிக்கு வரும்வரை , கல்லூரி மாணவர்களிடையே திமுகவினரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது எண்ணிக்கூடப் பார்க்க இயலாத நிலையாகவே அன்று நீடித்திருந்தது. இந்தப் பின்புலத்தில் பாண்டியனும் பொன்னி வளவனும்
மாணவர்களிடையே போட்டியிட்டுப் பெற்ற வெற்றி தனித்துவமானதாகும்.
அப்போது, ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சியின் மாணவர் அமைப்பு பெரிதும்
செயல்பாட்டில் இருக்கவில்லை என்றே கூறிவிட முடியும். பொதுவுடைமை ஆர்வம் கொண்ட ஒருசில மாணவர்கள் ஆங்காங்கே க ல்லூரிகளில் இருந்திருக்கலாம்.1948-50களில் ஏற்பட்ட கட்சியின் தடையை அடுத்து, 1952 பொதுத் தேர்தலில் அன்றைய சென்னை மாநிலத்தில் கிடைத்த
எதிர்பாராத பெரும் வெற்றிக்குப் பிறகும்கூட, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மாணவர்களை
அமைப்பு அடிப்படையில் ஒன்றிணைப்பதில் முனைப்புக் காட்டவில்லை. இந்த நிலை 1965 இந்தி
எதிர்ப்புப் போராட்டம் முடியும் வரை தொடர்ந்துகொண்டிருந்தது. 1964இல் பிரிந்து சென்ற
மார்க்சிஸ்ட்டுக் கட்சியிலும் இதே நிலைதான். அதனால்தான், பாண்டியன், பொன்னிவளவன்
ஆகியோரது வெற்றி சிறப்பித்துப் பார்க்கப்படுகிறது.
திராவிட இயக்கக் கருத்து நிலைக்கு எதிர்வினையாற்றக் கூடிய , அடுத்த கட்ட வளர்ச்சியினை முன்னிறுத்தக்கூடிய, மாற்றினை முன்மொழியக்கூடிய அறிவும் ஆற்றலும் திறனும் வல்லமையும் பாண்டியனுக்கு வாய்த்திருந்தது என்பதை மறுக்க முடியாது. இங்கு மற்றொன்றையும்
மறந்துவிடக்கூடாது. தனது கல்லூரிப்பருவத்திலேயே 1953இல் தோழர் ஆர். எச். நாதன்வழியாக
பாண்டியன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் ஆகிவிட்டார். தோழர் ஜீவா அவர்களின் தொடர்பும் அக்காலத்திலேயே அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இவை பாண்டியனின் வளர்ச்சி–பயிற்சிப் படிக்கட்டுகளாக அமைந்தன.
பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், இவரது ஆங்கில அறிவின் பின்புலத்தில் அவர் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கிலத் துறையில் பயிற்றுநராக அமர்ந்தார். அப்போது விரிவுரையாளர் பணிக்கு முன்னதாக, பயிற்றுநர் (Tutor) என்ற ஒரு படி நிலை இருந்தது.
அடுத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கப்பட்டபோது , 1 9 6 1ஆ ம் ஆண்டு
கோவையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஜீவா தலைவராகவும் பாண்டியன் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதற்குப் பின்னர் கல்லூரிப் பணியை உதறித்
தள்ளிவிட்டு சென்னை வந்தடைந்த பாண்டியன், சட்டக்கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் கட்சியின்
முழுக் கால ஊழியராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
கலை இலக்கியப் பெருமன்றப் பணிகளோடு, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சென்னை
மாவட்டச் செயலாளர், மதுரை மாவட்டச் செயலாளர், சென்னைத் துறைமுகத் தொழிலாளர்
சங்கத்தின் துணைத் தலைவர், வேறு பல தொழிற்சங்கங்களின் பொறுப்புகள், ஜனசக்தி
இதழின் கட்டுரையாளர், கட்சிப் பொதுக்கூட்டங்களில் பரப்புரை என அவருடைய செயல்பாடுகள் மேலும் விரிவடைந்தன.
கட்சியின் மாநிலக்குழு, நிர்வாகக்குழு, செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக் குழு என உயர்மட்ட அமைப்புகளின் உறுப்பினர் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன. அடுத்து தமிழ் மாநிலச் செயலாளர் ஆகும் வாய்ப்பும் வந்தமைந்தது.
பாண்டியன் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்ததுதான். கட்சியினர் மட்டுமன்றி, மாற்றுக் கட்சியினர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள்,
இளைஞர்கள், முதியோர், ஆண்கள் பெண்கள், கலை இலக்கியப் படைப்பாளர்கள், நகர்ப்புற – ஊர்ப்புற மக்கள், படித்தோர், படிக்காதோர், அறிவுத் துறையினர் என அனைவரையும் தனது பேச்சால் ஈர்க்கக்கூடியவராக அவர் இருந்தார். அவருடைய இறுதி மூச்சு வரை இந்த ஈர்ப்பு ஆற்றல் அவரிடம் தொடர்ந்து கொண்டிருந்தது. இதனால் , பாண்டியனை ஒரு பேச்சாளராக மட்டுமே பலரும் கருதுகின்றனர். ஆனால், அவர் அதற்கும் மேலானவர். ஒரு காலத்தில் சிறந்த மேடைப் பேச்சாளராக இருந்தோரே அரசியலிலும் தலைமைப் பொறுப்புக்கு வந்தனர். குறிப்பாக, திராவிட இயக்கத்தில் இதனை வெளிப்படையாகக் காண முடியும்.
ஆனால், ஆழமாக ஆய்ந்து பார்த்தால் , பேச்சாளர்களுக்கும் தலைவர்களுக்கும் உள்ள
நுட்பமான வேறுபாடுகள் எளிதில் புலப்படும். தமிழ், அடுக்குமொழி, இலக்கிய நயம், சொல்வளம்
எ ன்பனவற்றால் மட்டுமே தலைவர்கள் உருவாகிவிடவில்லை. திராவிட இயக்கத்தலைவர்கள்
பலர், தங்களுடைய பேச்சாற்றலோடு, சமூக நீதிக் கருத்துக்களையும் புதிய செய்திகளையும் இணைத்தே வெற்றி பெற்றனர். அண்ணா, கலைஞர், சொல்லின் செல்வர் சம்பத், பேராசிரியர் போன்றோர் இந்த வகையினர். மேலும், தலைமைக்கான ஆளுமையும் அ வ ர்களுடன் சேர்ந் து கொண்டது. பிறர் பேச்சாளராக மட்டுமே இருந்தார்களே அன்றி தலைவர்களாக அடுத்த கட்டத் தகுதி பெறவில்லை.
இதைப் போன்றுதான், பொதுவுடைமை இயக்கத்திலும், பேச்சாற்றலுடன் கருத்துச்
செறிவையும் தலைமைக்கான ஆளுமையையும் கொண்டிருந்தோர் மட்டுமே தலைவர்களாக உயர
முடிந்தது. பாண்டியன் போலவே ஏற்ற இறக்கங்களுடன் தமிழோடு விளையாட முயன்ற
பலர் தலைமை பெற முடியவில்லை. இதேபோன்று, பேச்சாற்றல் என்ற தனித்திறன் அமையாவிடினும், தங்களது கருத்து வலிமையாலும் அமைப்புத் திறனாலும் ஆளுமைமிக்க தலைவர்களாக இயக்கத்தில் பலர் மேன்மை பெற்றுள்ளனர்.
பாண்டியனது விரிந்த பார்வையும் பரந்த நோக்கும் அகன்ற அறிவும் ஆழமான புலமையும்
ஆற்றல்மிக்க வெளிப்பாடும் அவரைத் தனித்தன்மை கொண்டவராக ஏற்றிவைத்தன. அவருடைய
எல்லைகள் விரிந்து கொண்டே இருந்தன. தமிழர், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழர் நலன் என்பவற்றோடு அவர் நெருக்கமாக இருந்தார். மார்க்சியத்தை ஆழமாக அறிந்து வைத்திருந்ததைப் போலவே, பெரியாரையும் புரிந்துகொண்டிருந்தார்.
தனித்தமிழ் இயக்கத்தினர் நம்பிக்கைகளையும் அவர் புறக்கணித்துவிடவில்லை. தமிழ்த் தேசியம்
என்பதிலும் அவருக்குத் தெளிவான கருத்துக்களும் புரிதல்களும் இருந்தன. பிற மொழித் திணிப்பை அவர் புறம் தள்ளினார். சுருக்கமாகச் சொன்னால், அவர் காலத்தில் இருந்த முற்போக்கு முனைப்புகள் அனைத்திலும் அவருக்கு இயைபும் ஈடுபாடும் நம்பிக்கையும் நாட்டமும் இருந்தன. ஈழத்தமிழர் விடுதலையிலும் அவர் ஈர்ப்புக் கொண்டிருந்தார்.
பாண்டியன் அவர்களோடு எனக்கு 1967-68ஆம் கல்வியாண்டில் அறிமுகம் ஏற்பட்டது .
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் பேரவையில் பேச அவரை அழைத்திருந்தோம்.
அடுத்து, 30-03-1968அன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (அப்போது தமிழக மாணவர்
மன்றம்) தென்னார்க்காடு மாவட்ட மாநாட்டில் பேச, தோழர் பாலதண்டாயுதம் அவர்களுடன்
பாண்டியன் அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்திருந்தார். நான் முன்னின்று
ஏற்பாடு செய்த மாநாடு அது. சற்றேறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த மாணவர் அமைப்பு நடத்திய முதல்மாநாட்டு நிகழ்வும் அதுதான்.
தோழர் ப. மாணிக்கம் அவர்களை அடுத்து மாணவர் இயக்கத்துக்கு பாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு எங்களுடைய உறவும் தொடர்பும் மிகுந்தன.நானும் 1969இல் தமிழ்
முதுகலை பயில சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன்.இதனால் நாங்கள் அன்றாடம் பார்க்கவும் பழகவும் வாய்ப்பு அமைந்தது. மாணவர் அமைப்புக்காக மாணவர் முழக்கம் என்ற திங்கள் இருமுறை இதழ் 05-08-1969இல் தொடங்கப்பட்டது பாண்டியன் ஆசிரியராகவும் நான்
பொறுப்பாசிரியராகவும் இருந்தோம். கட்சியின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு புதிய கருத்துக்களோடு மாணவர் முழக்கம் நடத்தப்பட வேண்டும் என்பதில் பாண்டியன் உறுதியாக
இருந்தார். முழு உரிமையுடன் இதனை நடத்த எனக்கு வாய்ப்புகளைத் தந்தார்.
தமிழ்நாட்டில் பெரியார் விதைத்திருந்த கருத்துக்களையும் இணைத்துக்கொண்டு
பொதுவுடைமை இயக்கம் செயல்பட வேண்டும் என்ற தனது எண்ணங்களை அவர் பலவாறு
வற்புறுத்தியுள்ளார் தோழர்களிடம் உ ரையாடும்போது இக்கருத்துக்களை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
திராவிட இயக்கப் பரப்புரைகளையும், அவற்றால் விளைந்த வியக்கத்தக்க– வீரியமிக்க தாக்கங்களையும், அதனால் அடித்தளத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த பெரும் சமூக மாறுதல்களையும், காங்கிரசைப் போலவே பொதுவுடமைக் கட்சியினரும் பெரிதும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. திராவிடர் கழகமும் 1957 தேர்தல் வரை திராவிட முன்னேற்றக் கழகமும்தொடர்ந்து தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் சமூக இயக்கங்களாகவே நீடித்துக்கொண்டிருந்ததால், அவற்றின் விரிவும் வீச்சும் புரிந்து கொள்ளப்படவில்லை என்று கருத இடமில்லை. ஏனெனில், பெரியாரின் சோவியத் பயணம், சிங்காரவேலர் – ஜீவா தொடர்புகள் , பொதுவுடைமைக் கருத்துக்களையும் முன்னிறுத்திய சுயமரியாதை – திராவிடர் இயக்கங்களின் பரப்புரை போன்றவற்றை கம்யூனிச இயக்கம் பெருமளவில் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது என்றே கூறலாம். திமுக பிரிந்த பின்னர் அதனுடைய வளர்ச்சியின் பரவலும், திரையுலகில் அதன்
பங்களிப்புப் பயன்களும்,1957 தேர்தல் வெற்றிகளாக வெளிப்பட்ட பின்னர்தான் பொதுவுடைமை இயக்கத்தினரின் கண்கள் திறந்தன. உண்மையானகள நிலைமைகளைக் காணவிழைந்தனர். ஆனால், புரிந்துகொள்ள முயன்றனர் என்று கருத இயலாது.
இவற்றின் எதிர்வினையாகவே தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. தாமரை இதழும் தொடங்கப்பட்டது. இரண்டையும் வழிநடத்தியவர் ஜீவா அவர்கள்தான். அன்றைய கட்சித் தலைமையின் கட்டுக்குள் முழுமையாக நின்று கொண்டு தான் , வரையறைகளுக்குள் முடங்கிக்கொண்டுதான் கலை இலக்கியப் பெருமன்றம் செயல்பட வேண்டியிருந்தது. சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திமுக என்ற அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களில், சமூக-பொருளிய-பண்பாட்டுத் தளங்களில் தமிழ்ச்சமூக மறுமலர்ச்சிக்காகவும்
மாறுதல்களுக்காகவும் பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சாதி மறுப்பு, கலப்புமணம், சுயமரியாதை மணம், விதவை மறுமணம், பெண் விடுதலை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு, ஆரியப் புறக்கணிப்பு, இந்தி எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு, உழைப்பாளரைப் போற்றுதல், தமிழ்ப் பண்பாட்டை முன்னிறுத்துதல், தமிழ் இலக்கியங்களைப் பெருமைப்படுத்துதல் என்பன போன்ற பல வடிவங்களை அவைகொண்டிருந்தன. இவற்றையொட்டிய பரப்புரைகள், நாடக-திரை ஆக்கங்கள், இலக்கியப் படைப்புகள், இயக்கங்கள் எனப் பல்வேறு முயற்சிகளும் முன்னேற்றம் கண்டு இருந்தன.
இவற்றுக்கு எதிர்வினையாகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், பெரியாரையும் அவரது கொள்கைகள் சார்ந்த அனைத்து வளர்ச்சி நிலைகளையும் முற்றாக– முழுமையாகப் போருட்படுத்தாமல் ஒதுக்கிவைத்துவிட்டு –விலக்கிவைத்துவிட்டு, தமிழர்
பண்பாட்டை மட்டுமே முன்னெடுக்க நினைத்தது; திராவிட இயக்கங்களின் முற்போக்கு முனைப்பு களாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த இலக்கியப் படைப்புகளை நச்சு இலக்கியங்களாகப்
பார்த்தது; மக்கள் மனம் கவர்ந்த திரையாக்கங்களைத் தீமை தருவனவாகக் கருதியது.
திகவிலிருந்து பிரிந்து வந்த காலகட்டங்களில், திமுக பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பரப்புரைகளை அமைத்துக்கொண்டது. இதனால், பெரியார் பண்படுத்தி வைத்திருந்த களத்தை முழுமையாகத் தனதாக்கிக்கொண்டது.
தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர், படிப்படியாக வாக்கு வங்கி அரசியலுக்கு
ஏற்பத் தனது போக்குகளை மாற்றியும் திரித்தும் வேறு வகையான கொள்கைகளை
வடிவமைத்துக் கொண்டது.இருப்பினும், மேம்போக்கான சில தொடர்ச்சிகளை
மட்டும் அவ்வப்போது சுட்டிக்காட்டி, சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டுப்
படிப்படியாகப் பெற்றிருந்த பயன்கள் அனைத்துக்கும் உரிமையும் பங்கும்
இருப்பதாக இன்னும் நம்பவைத்துக்கொண்டு இருக்கிறது. அதுபோன்று பொதுவுடைமை
இயக்கமும், அன்றைய சமூக-பொருளிய- பண்பாட்டு முன்னெடுப்புகள் அனைத்தையும் உள்வாங்கி அரவணைத்துக் கொண்டு– தனதாக்கிக்கொண்டு, அங்கிருந்து தொடங்கி, பின்னர் தனது கண்ணோட்டத்துத் தக்கவாறு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளுக்கு எடுத்துச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில், அவை எதுவும் மார்க்சியத்து க்கோ, முற்போக்குச் செயல்பாடுகளுக்கோ முழு அளவில் முரண்பட்டதாக எப்போதும் இருக்கவில்லை.
மாறாக, முன் வரலாற்றை முற்றிலுமாக மறந்தோ, மறுத்தோ, மறைத்தோ, கலை
இலக்கியப் பெருமன்றம் வழியாகப் புதியதொரு முற்போக்கு முகாமைக் கட்டமைத்துவிட முடியும் என்று அன்றைய பொதுவுடைமையினர் நம்பினார்கள் அல்லது நம்பவைக்க முயன்றனர். சமூக
சீர்திருத்தங்களை, அதா வது சமூக மாறுதல்களை வேண்டிய பல திராவிட
எழுத்தாளர்களைப் புறக்கணித்து , அவர்களுக்கு எதிரணியில் இருந்து கொண்டிருந்த ‘தேசிய’ எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்திச் சிறப்பித்தனர். 1967 தேர்தலுக் கு முன்னரும் பின்னரு ம் ,
திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டதை அடுத்து ,தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றத்தின் நோக்கும் போக்கும் நீண்ட காலம் திக்குத் தெரியாத காட்டில் பயணம்
செய்வதாகவே அமைந்துவிட்டது.
பண்பாட்டுக் கூறுகளை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தாலும், பாண்டிய னுடைய தெளிவும் புரிதலும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் போக்குகளை மாற்றப் பயன்படாமல் போய்விட்டது என்று கூறினால் அது தவறாகாது. மாணவராக இருந்தபோது, அழகப்பா கல்லூரியில் திமுக மாணவர்களை எதிர்கொள்ளும் அறிவும் ஆற்றலும் சொல்வளமும் கருத்துச் செறிவும்
கொண்டிருந்த பாண்டியனுடைய முழுமையான பங்களிப்பினை, தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றத்தின் வழியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பொதுவுடைமை இயக்கம் தவறிவிட்டது
என்றுதான் கருதத் தோன்றுகிறது.
எந்தப் பொருளாக இருந்தாலும் நுணுக்கமாக ஆய்ந்து தெரிந்துகொள்ளும் இயல்பு பாண்டியனுடையது. மார்க்சிய அறிவு, உலக நிகழ்வுகள், இந்திய அரசியல் போக்குகள் ,
தமிழ்நாட்டின் சூழல்கள்என்பவற்றோடு, தமிழ், ஆங்கில இலக்கியங்களில் பரவலாக அறிமுகம்
அவருக்கு இருந்தது. அதனால்தான், எழுத்திலும் பேச்சிலும் அவரால் தனித்துவத்தை வெளிப்படுத்த
முடிந்தது.
ஜீவா காலம் வேறு. கட்சி பிளவுபடாதபோது அவர் எடுத்த முயற்சிகள் கலை இலக்கியப்
பெருமன்றத்துக்கு மதிப்பை உருவாக்கிக் கொடுத்தன என்பதை மறுக்க முடியாது .
எழுத்தாளர்கள், கலைஞர்கள் , ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் என வேறுபட்ட பலரையும் ஈர்க்கும் ஆற்றலாக ஜீவா விளங்கினார். ஆனாலும் , குறிப்பிட்ட மட்டத்துக்குக்கீழே உள்ள
மக்களிடம் கலை இலக்கியப் பெருமன்றம் சென்றடையவில்லை என்பதும் உண்மை.
உழைக்கும் கீழ்த் தட்டு மக்களைச் சென்றடையக்கூடிய செயல் திட்டங்கள் ஏதும் பெருமன்றத்திடம் இருக்கவில்லை. அதற்கான கொள்கை முன்னெடுப்புகளும்
இருக்கவில்லை. உழைக்கும் மக்கள் கலை, இலக்கியம் என்ற உரையாடல்களின் இடையே,
அவர்களது வாழ்க்கைமேம்பாட்டுக்கான சீர்திருத்தச் செயல்பாடுகள் ஒன்றிணைக்கப்படவில்லை. கலை இலக்கியப் படைப்பாளரின் – பார்வையாளரின் – துய்ப்போரின் அமைப்பாக மட்டுமே இருந்ததேயன்றி, சமூக-பண்பாட்டு இயக்கமாக மாறி மாற்றங்களை ஏற்படுத்தவில்லை . அ தா வது, திராவிட இயக்கத்துக்கான எதிர்வினையாக எழ முடியவில்லை. இதனால், பாண்டியனது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பரவலான மக்கள் திரளை ஈர்த்தன, இணைத்தன, இணங்கவைத்தன. இயங்கவைத்தன என்றாலும், இத்தகைய சார்பு நிலைகளைப்
பயன்படுத்தி, அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கு இழுத்து வரக்கூடிய அளவுக்குச் செல்வாக்குச்
செலுத்தக்கூடிய செயல்திட்டங்களைக் கட்சி வடிவமைத்துக் கொள்ளவில்லை என்பது
வருந்தத்தக்கது.
ஜீவாவின் மறைவை அடுத்து, 1964 பிளவுக்குப் பின்னர், குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்டுக்
கட்சியின் தமிழ் மாநிலத் தலைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்றுதான் கூற
முடியும். தோழர்கள் பாலதண்டாயுதம், வ. சுப்பையா, ப. மாணிக்கம், ஏஎஸ்கே, மா. காத்தமுத்து போன்றோர் தமிழ் மாநிலச் செயற்குழுவில் இடம்பெற்றுவிட்டார்கள். அப்போது பாண்டியன்
மாநிலக்குழு உறுப்பினராக மட்டுமே இருந்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் பெரும்பான்மையோர் விரிந்த பார்வையும் பரந்த நோக்கமும் கொண்டோராகவே இருந்தனர். இவர்களுக்கு அப்பால், பரந்துபட்ட பார்வையுடன் விரிவாக்க எண்ணங்களைக் கொண்டிருந்தோர் பலர், தலைமைப் பொறுப்புக்கு வெளியிலும் இருந்தனர். தோழர்கள் ஆர்.கே. கண்ணன், நாகை கே. முருகேசன் போன்ற எண்ணற்றோர் இருந்தனர்.
தமிழ்நாட்டுச் சூழலில், பெரியாரும் திராவிட இயக்கமும் விழிப்புணர்வை ஏற்படுத்திவைத்திருந்த
வாய்ப்பினை அடிப்படைகளாக அமைத்துக்கொண்டு கட்சியைக் கட்டமைக்க வேண்டும் என்பதில்
அவர்கள் உறுதியான, தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பதை இவர்கள் அனைவரோடும் உரையாடிய வகையில் நான் உணர்ந்திருக்கிறேன்.
சிறையிலிருந்து விடுதலையானபோது, அரசியல் அடிப்படையில் திமுக எதிர்ப்பாளராக
இருந்த போதிலும், பெரியாரை எந்தவகையிலும் புறக்கணித்தவராக பாலதண்டாயுதம் இருக்கவில்லை. 1967 தேர்தலையடுத்து, குறிப்பாக 1971 தேர்தலுக்குப் பின்னர், பாலதண்டாயுதம்
அ வ ர்களுடைய எண்ணங்களும் பார்வையும் மாற்று வகையிலான செயல்திட்டங்களை முன்வைக்கக்கூடிய அளவிலேயே அமைந்திருந்தன . 1972க்குப் பிறகு, கட்சிஅளவில் கலை
இலக்கிய அரங்கத்திற்கு பாலதண்டாயுதம் பொறுப்பேற்றார்.
அவரது பணிகளில் என்னையும் இணைத்துக் கொண்டு, கலை இலக்கியப் பெரு மன்றத்தின் அமைப்பாள ராக்கினார் . இருப்பினும், தமிழகச் சூழலுக்கு ஏற்றதான செயல்திட்டங்களும் நடைமுறை அரசியல் செயல்பாடுகளும், இவற்றையொட்டிய அணிதிரட்ட ல்களும் ஏன் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பது புதிராகவே இருந்தது. பாண்டியன் தமிழ் மாநில நிர்வாகக் குழு, செயற்குழுப் பொறுப்புகளுக்கு வந்த பின்னரும் இந்த நிலை நீடித்தது.
ப. மாணிக்கம் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், மாறுதலுக்கான சில
முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. திராவிட இயக்கத்தின் அடிப்படைகள், கொள்கைகள்,
நடைமுறைகள், இலக்கியப் படைப்புகள், திரைத் துறையின் பங்கு, பரவல், தாக்கங்கள் போன்றவை குறித்து முழுமையாக மதிப்பிட, கோவையில் கலந்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1980களின் தொடக்கத்தில், சென்னையில் மற்றொரு கூட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பினை மாணிக்கம் அவர்கள் எனக்கு வழங்கினார்.
தோழர்கள் பாலதண்டாயுதம், மாணிக்கம், பாண்டியன், இவர்களைப் போன்ற வேறு சிலர்
எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்றியிருந்தன. இவர்கள் இணைந்து பணியாற்றும் சூழ ல்
ஏற்பட்டிருந்தால், தமிழ்நாட்டில் வியக்கத்தக்க மாற்று அரசியல் மட்டுமன்றி, சமூக-பண்பாட்டுத்
தளங்களிலும் வேறுபட்ட முற்போக்கு முனைப்புகள் முகிழ்ந்திருக்க வாய்ப்புகள் மிகுந்திருக்கும் .
எதிர்பாராது பாலன் 1973இல் மறைந்துவிட்டார். அடுத்து, கட்சியில் மீண்டும் ஏற்பட்ட ஒரு பிளவினால் பாண்டியன் பிரிந்து சென்றுவிட்டார். அப்போது மாநிலச் செயலாளராக இருந்த மாணிக்கம் அவர்களின் உழைப்பும் முயற்சிகளும் கட்சி அமைப்புகளைக் கட்டிக் காப்பதில் திக்கு
மாறிவிட்டன. எண்ணங்களைச் செயல்படுத்தக் காலம் இடம்தரவில்லை. அதைப்போன்று ,
பாண்டியனது பங்களிப்பு அப்போது அவர் சார்ந்திருந்த கட்சிக்குச் சென்று விட்டது. மாணிக்கம்,
பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பும் சூழலும் அமைந்திருந்தால், கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுப்பதில் பல மாறுதல்கள் நேர்ந்திருக்கலாம்.
ஆயினும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் பாண்டியன் மீண்டும் இணைந்த பிறகு மாநிலச்
செயலாளராகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் தனது எண்ணங்களுக்கு ஏற்பப் பல முயற்சிகளை முன்னெடுக்க முயன்றார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
பல ஆண்டு காலப் பட்டறிவினால், கட்சி அணிகளிடமும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அடுத்த தலைமுறையினர், புதிய எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் உள்வாங்கிக்கொள்ளும்
உள்ளங்களையும் உணர்வு களையும் பெற்றிருக்கின்றனர். இந்தியக் கம்யூனிஸ்டு ( மார்க்சிஸ்ட்) க ட்சியின் தமிழ் மாநிலத் தலைமையிலும் மாறுதல்கள் தென்படுகின்றன. மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் போன்றோர் முந்தைய தலைமுறையின் தவறுகளைப்
புரிந்திருக்கின்றனர் என்றே தோன்றுகிறது.
அதேவேளையில், 1950, 1960களிலும்,1970களிலும் இருந்த கள நிலை தமிழ்நாட்டில் வெகுவாக
மாறிவிட்டது. தமிழ்த் தேசிய இயக்கங்கள், புதிய அரசியல் கட்சிகள், சமய-சாதிய அமைப்புகள், சமய நல்லிணக்கக் குலைவு என வெவ்வேறான போக்குகள் தலையெடுத்திருக்கின்றன. முற்போக்குப் பயணங்களும் இருக்கின்றன. பிற்போக்குச் சறுக்கல்களும் இருக்கின்றன. மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ்டுக் கட்சி என்ற பொறுப்பில், முற்போக்கு முனைப்புகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, அவை யாவற்றையும் தனதாக்கிக்கொண்டு, தலைமை தாங்க முன்வரவேண்டும். பெரியார் பண்படுத்திக் கொடுத்த களம், அடித்தளத்தில் வலிமையாக இருந்தாலும், மேற்கட்டுமானம் தளர்ந்து கிடக்கிறது. தேர்தல் அரசியலுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் மனப்போக்கு வேரூன்றிவிட்டது.
ஈழத்தமிழர் உரிமைகளையும் விடுதலையையும் முன்னிலைப்படுத்தி பாண்டியன் மேற்கொண்ட
மாநிலம் தழுவிய இயக்கங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, 2008 அக்டோபர் 2 அன்று
மேற்கொண்ட உண்ணாமைப் போராட்டத்தைக் காணலாம். தோழர் மாணிக்கம் தொடங்கிவைத்து, தோழர் து. ராஜா தொடர்ந்த ஈழச் சிக்கல்கள் குறித்த புரிதல்கள் பாண்டியனது முயற்சிகளை எளிதாக்கின.
அரசியல் அளவிலோ , அமைப்பு வகையிலோ,பார்வை நோக்கிலோ, நடைமுறை நிலையிலோ பாண்டியனது செயல்பாடுகளில் மறுப்புகள் இருக்கலாம்; மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்; முரண்பாடுகளும்கூட இருக்கலாம். ஆனால், கம்யூனிஸ்டுக் கட்சியினது இயக்கச் செயல்பாடுகளின் எல்லைகளை மேலும் விரிவாக்க அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
கட்டுக்கோப்பான அரசியல் கட்சி என்ற அளவில், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தனி
ஒருவர் மட்டுமே திக்கு மாற்றித் திருப்பிவிட முடியாது, திருத்திவிட முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், தனிமனிதருக்கும் பங்களிப்பு உண்டு என்பதை பாண்டியன் நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
பொதுவுடைமையரின் வருங்காலம் (2017, என்சிபிஎச்) என்ற அவரது நூலில்,தனது கனவுகள்,
எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், பட்டறிவுப் பாடங்கள், பொதுவுடமை இயக்கம் நழுவவிட்டநல்
வாய்ப்புகள், செய்யவேண்டிய கடமைகள் என அனைத்தையும் மிகவும் வெளிப்படையாக மனம்
திறந்து கூறியிருக்கிறார்.
அகவையும்உடல் நலனும் ஒத்துழைத்திருந்தால், அவரது நீண்ட பயணத் தின் பயன்க ளை
எட்டிப்பிடிக்கும் தொலைவுக்கு அவரால் பயணிக்க முடிந்திருக்கலாம். பாண்டியன் போன்றோரை
முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் அளவில் கட்சிஅப்போது இருக்கவில்லை. ஆனால் இன்றைய நிலை வேறு.
தமிழ்நாட்டில் இன்றைய நிலைமைகளைக் கணக்கில் கொண்டு தமிழ், தமிழர், தமிழர் உரிமை
என்பன உள்ளிட்ட சமூக-பொருளிய-பண்பாட்டு- அரசியல் திட்டங்களைக் கட்சி வகுத்துக் கொள்வது இயலாதது அல்ல. இன்று கம்யூனிஸ்டுக் கட்சியின் பொறுப்பில் உள்ளோருக்கு இதில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சியின் அனைத்திந்தியப் பொதுச்செயலாளர் ராஜாவும் ஒத்த கருத்துடையவர்தான்.இவர்கள் அனைவரும் விரிந்த பார்வையுடன் இன்றைய வேண்டல்களுக்கு வடிவம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாண்டியன் இன்று (26-02-2021) மறைந்திருக்கலாம். ஆனால்,பாண்டியன் போன்றே இப்போதும் பலர் இருக்கின்றனர். புதிய நிலைமைகளில், பாண்டியன் போன்று இன்னும் பலர் தோன்றுவார்கள். இவர்கள் அனைவரது ஒன்று பட்ட, ஒன்றிணைந்த பங்களிப்புகள் தமிழ்நாட்டுக்கான எதிர்காலமாக
அமையும் என்பதில் அய்யமில்லை.