புதிய கண்டுபிடிப்புகள் வர வர பழையவை வழக்கொழிந்துபோவது நடைமுறை யதார்த்தம். சில தொழில்களை இவை முற்றிலுமாக அழித்துவிடும். இதனால் அந்தத் தொழில் சார்ந்தவர்கள் வேலையிழக்கும் ஆபத்தும் நிகழும். அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு நாம் தரும் விலைதான் இவை.
காணொளி வசதி (Video Conferencing) புழக்கத்திற்கு வந்தபிறகு யாருமே எதிர்பார்த்திராத இரண்டு பெரும் தொழில்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டன. ஒன்று தொழில் நிமித்தமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அடுத்தபடியாக ஹோட்டல் அறைகள் பல காலியாயின.
தொலைபேசி பரவலான பிறகு தந்தி அனுப்பும் முறை ஒழிந்தது. தனி நபர் அவசர தகவல் பரிமாற்றத்தை எழுத்து வடிவில் அனுப்ப உதவியாக முதலில் வந்தது பேஜர். செல்போனும், அதைத் தொடர்ந்து வந்த ஸ்மார்ட்போனும் பேஜரை அல்பாயுசில் காலி செய்தன.
இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது சாட் ஜிபிடி. கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி இது வெளியிடப்பட்டதிலிருந்து, இதுபற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பேசுபொருளாகி பிரபலமானதாக வலம் வருகிறது சாட் ஜிபிடி (ChatGPT). செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) திறன் அடிப்படையில் செயல்படுகிறது. மனிதனால் சாத்தியமில்லை என்ற விஷயங்களையும் சாத்தியமாக்கும் திறன் கொண்டதாக இது உருவெடுத்துள்ளது அனைவரையும் வியப்பிலாழ்த்துவதோடு எதிர்காலத்தில் மனிதர்களின் வேலை வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஏஐ ஆய்வு நிறுவனமாக 2015-ம் தேதி தொடங்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், ஆய்வாளர் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் இதைத் தொடங்கினர். இதில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
செயற்கை நுண்ணறிவோடு, இயந்திர கற்றலும் இணைந்து சாட் ஜிபிடி செயல்படும் விதம் பிரமிப்பூட்டுகிறது. மொழி மாற்றம், தகவலை மீட்டெடுத்து தருவது, உணர்வுபூர்வமான பகுப்பாய்வு, தகவல்களின் சுருக்கம், கேள்விக்கு பதில் என அனைத்து செயல்பாடுகளையும் இது கொண்டுள்ளது.
பொதுவாக இயந்திரவழி அரட்டை இயந்திரம் என இதைக் கூறினாலும், நமது கண்டுபிடிப்புகளே நமக்கு சவாலாக உருவெடுத்துவிட்டதோ என்று கவலைப்படும் அளவுக்கு இதன் வளர்ச்சி உள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களில் 10 கோடி பேர் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதிலிருந்தே இதன் அசுர வளர்ச்சியையும், அதீத செயல்பாட்டையும் உணர முடியும்.
இந்தப் பிரிவில் சாட் ஜிபிடி-யைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் பிஏஆர்டி, மைக்ரோசாப்டின் பிங், சாட்சோனிக், சீனாவின் பைடு நிறுவனத்தின் எர்னி ஆகியன செயற்கை நுண்ணறிவுத்திறன் மற்றும் இயந்திர கற்றல் திறனுடனான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் சர்வதேச அளவில் சுனாமி பேரலையை எழுப்பியுள்ளன என்றால் அது மிகையல்ல. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன மதிப்பீட்டின்படி இந்த சாதனங்கள் 30 கோடி வேலை வாய்ப்பை தட்டிப்பறித்துவிடும் என்று மதிப்பிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழிலில் இது மிகப் பெரும் பாதிப்பை உலக அளவில் ஏற்படுத்துவது நிச்சயம் என்பது நிரூபணமாகிவருகிறது.
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் 10 தொழில்களில் பாதிப்பு ஏற்படும் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. சாஃப்ட்வேர்: கம்ப்யூட்டர் செயல்பாட்டில் பிரதமானமாக இடம்பெறும் மென்பொருள் உருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தொடக்க நிலை செயல்பாட்டாளர் மற்றும் கோடிங் எழுதுவோர் ஆகியோரது பணிகளை செயற்கை நுண்ணறிவு நுட்பம் காலி செய்துவிடும்.
கிராஃபிக் டிசைனர் மற்றும் வெப் டெவலப்பர்: செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் கிராஃபிக் டிசைனர் உருவாக்கும் வடிவமைப்பை உருவாக்க முடியும். லேஅவுட் போடுவது, காட்சி வடிவமைப்பு எவ்விதம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஆகியவற்றை இதன் மூலம் செய்ய முடியும்.
வாடிக்கையாளர் சேவை: ஏற்கெனவே வங்கித்துறை, மருத்துவம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர் சேவையில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொலைபேசி வழி தகவல், ஆன்லைன் சேவையை இவை வழங்குகின்றன. இத்தகைய பணியில் உள்ளவர்களுக்கு இனி எதிர்காலம் சற்று கடினமானதாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
சட்டம் மற்றும் கணக்கியல் சேவை: சட்ட விதிகளை அறிந்து தகவல் அளிக்கும் சட்டத்துறையினரின் வேலையை இது எளிதாக செய்துவிடும். அதேபோல கணக்கீடுகளையும் விரைவாக செய்துமுடித்துவிடும். மாதம் அல்லது வாரக் கணக்கில் ஆடிட்டர் தனது பரிவாரங்களுடன் தயாரித்து அளிக்கும் ஆண்டறிக்கையை அரை மணி நேரத்தில் இது தயாரித்துத் தந்துவிடும்.
நிதி ஆலோசனை: முதலீடு சார்ந்த ஆலோசனைகளை இவை வழங்குகின்றன. இவற்றின் உள்பதிவீடு பல தரவுகளைக் கொண்டிருப்பதால் இவற்றின் கணிப்பு மனிதர்களின் கணிப்பைவிட சிறப்பாக உள்ளது. இதனால் சந்தை சார்ந்த முதலீடுகளில் இவற்றை பயன்படுத்துவது அதிகரிக்கும்.
சந்தை ஆய்வு மற்றும் பகுப்பாய்வு: அதிக அளவிலான தரவுகளைத் திரட்டி அவற்றை பகுப்பாய்வு செய்து தருவது இத்தகைய செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களுக்கு மிகவும் எளிதாகும்.
மனிதவளம்: தொழிற்சாலைகளில் வேலைக்கு ஆள் சேர்க்கும் மனிதவள பிரிவின் பணியை இது சிறப்பாக செய்து முடிக்கும். திறன்மிகு பணியாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையை இவை வழங்கும்.
மொழிபெயர்ப்பாளர்கள்: தற்போது கூகுள் ஏஐ மற்றும் ஓபன் ஏஐ ஆகியன பல மொழிகளை மொழிபெயர்த்துத் தருகின்றன. சாட்ஜிபிடி 50-க்கும் மேற்பட்ட மொழிகளை மாற்றித்தரும் திறன் பெற்றுள்ளது. மெயில் மற்றும் ஊடக மொழிகளையும் இவை மொழிமாற்றம் செய்வதால் இத்தகைய பணியை நம்பியிருப்போருக்கான எதிர்காலம் மங்கிப்போவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆசிரியர்கள்: மாணவர்கள் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய பாடப் பணிகளுக்கு சாட்ஜிபிடி தற்போது உதவுகிறது. ஆசிரியருக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் அதைவிட ஒருபடி மேலாக கற்றுத் தருகிறது. சிறு வயது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படலாம். ஆனால் ஆன்லைன் வகுப்பு மற்றும் உயர் வகுப்புகளுக்கான ஆசிரியர் தேவையை சாட்ஜிபிடி குறைத்துவிடும்.
ஊடகத்துறை: பத்திரிகையாளரின் பணியே எழுத்துதான். செய்திகளை தங்களின் செய்தித்தாளின் நடைமுறைக்கேற்ப எழுதுவது, மொழிமாற்றம் செய்வது, புதியதாக உருவாக்குவது போன்றவை. இப்போது அமெரிக்காவில் முன்னணி ஊடகத்துறையினரே சாட்ஜிபிடி-யை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தற்போது சிறு பிழைகள் ஆங்காங்கே இருப்பினும் வருங்காலத்தில் ஊடகத்துறையில் இதன் ஊடுருவல் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கும் சாதக அம்சங்களும் இருக்கும், பாதக அம்சங்களும் இருக்கும். சாதக அம்சங்கள் அதன் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.
சாட்ஜிபிடி-யில் உள்ள பாதக அம்சங்களைக் கண்டறிந்து அதில் வெற்றி காண்பதுதான், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம், மனிதனை வெற்றி கொள்ளாது என்பதை நிரூபிக்கும் வழிமுறையாகும்.
மனிதர்களை எதிர்கொள்ளும் காலம் மாறி இனி இயந்திரங்களை எதிர்கொள்ளத் தயார் படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.