சென்னை மக்களால் டி.யு.சி.எஸ். எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெருமைமிகு கூட்டுறவு நிறுவனத்தில் 1975ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். பழமையான அந்த டி.யு.சி.எஸ். தொழிலாளர் சங்கத்திற்கு நான் பணியில் சேர்ந்த மூன்றே நடந்த தேர்தலில் நான் வெற்றிபெற்று
நிர்வாகப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். தோழர் சி. கெ. மாதவன் தலைவராகவும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு துணைத்தலைவராகவும், பூ .சி . பால சுப்பிரமணியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
தேனாம்பேட்டையிலிருந்த திருநாவுக்கரசின் ‘நம் நாடு’ அச்சகத்தின் ஒரு பகுதியில்தான் தொழிற்சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டுவந்தது. விடுமுறை நாட்களில் அரசியல் வகுப்புகள், தொழிற்சங்க வகுப்புகள், புத்தகங்கள் வாசித்துப் பகிர்வது எல்லாம் நடக்கும். அங்கு வழக்கமாக
திருநாவுக்கரசு அவர்களைச் சந்திக்கவரும் தோழர் இளவேனில் எங்களுக்கெல்லாம் அறிமுகமானார். அவர் நடத்திவந்த ‘கார்க்கி’ இதழ் பற்றியும் அவருடைய எழுத்தாற்றல் குறித்தும் தோழர்கள் சொல்லிக்கொண்டேஇருப்பார்கள். பத்திரிகை யாசிரியர், எழுத்தாளர் என்பதற்கும் அப்பால் இளவேனில் மிகச் சிறந்த ஓவியராகவும் இருந்தார். எங்கள் தொழிலாளர்கள் தொழிற்சங்க
நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள ‘போர்க்களம்’ என்னும் பிரசுரத்தைக் கொண்டுவந்தபோது அதற்கான தலைப்பு எழுத்தை வடிவமைத்துத் தந்தவர் இளவேனில். அது முதல் எங்கள் தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தோள்கொடுத்துத் துணைநின்ற ஆஸ்தான எழுத்தாளராகவும் ஓவியராகவும் தோழர் இளவேனில் இருந்தார்.
எண்பதுகளில் க. திருநாவுக்கரசு ‘நக்கீரன்’ என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்திவந்தார் . நக்கீ ரனின் முதல் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் உரிமையாளராகவும் இருந்த திருநாவுக்கரசு அவர்கள்தான் பின்னர் க.சுப்புவின் பெயருக்கு மாற்றம் செய்துகொடுத்தார். 1980ஆம் ஆண்டு
க. சுப்பு அவர்களை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் கொண்டு ‘நக்கீரன்’ இதழ் வெளிவந்தபோது எழுத்தாளராகவும் வடிவமைப்பாளராகவும் இளவேனில் பெரும் பங்கு வகித்தார். ’நக்கீரன்’ தலைப்பெழுத்து, விளம்பரப்பதாகைகள், சுவரொட்டிகள் எல்லாம் இளவேனிலின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன. இதழின் எழுத்துப்பணியில் இளவேனிலோடு க. சந்தான கிருஷ்ணன், இராயப்பா, ஜான் ராஜையா போன்றோரும் ஈடுபட்டனர். அவர்கள் தாங்கள் பணி செய்த இடத்தில் தங்கள் வேலையை முடித்துவிட்டுப் பகுதிநேரமாக வந்து நக்கீரன் இதழுக்குச் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . ’விடியல் ’
வேணுகோபால் ‘அம்பறாத் தூணி’ என்ற தலைப்பில் இதழ்தோறும் அரசியல் நிகழ்வுகள் குறித்த பத்தி ஒன்றை எழுதிவந்தார். அவர்களின் எழுத்துக்கள் நம்நாடு அச்சகத்தில் அச்சு கோக்கப்பட்டு அச்சுத் தாளாக வரும். இப்போதுபோல் அல்ல, அப்போதெல்லாம் ஒவ்வொரு பக்கத்தையும் வெட்டி,
ஒட்டி தலைப்பு எழுதி படங்கள் வரைந்து வடிவமைப்பு செய்ய வேண்டும். இளவேனில் அவ்வாறு வடிவமைப்பு செய்யும்போது நாங்களெல்லாம் அவரருகில் இருப்போம். இளவேனிலின் கைவண்ணம் எங்கள் கண்ணெதிரில் உயிர்பெறும் அழகே அழகு. அதனை நண்பர்கள் ராஜாராமும் மேத்யூசும் ‘பிளாக்’ செய்து அச்சுக்கு அனுப்புவார்கள். தோழர் மே. து. ராசுக்குமாரும் தோழர்நவநீதனும் அச்சிட்டுத்தருவார்கள்.
’நக்கீரன்’ மக்கள் பிரச்சினைகளைத் தாங்கிவந்த இதழ். க. சுப்பு ஆசிரியராக இருந்தாலும் அவர் சார்ந்த கட்சியின் ஏடாக அது இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். பல்வேறு கொள்கை சார்ந்தவர்கள் எழுதிவந்த காரணத்தாலும் பலதரப்பட்ட வாசகர் பரப்பைக் கொண்ட
இதழாக அது பரிணமித்துவிட்டதாலும் எந்தக் கட்சித் தலைவர்களின் படத்தையும் அட்டையில் போடக்கூடாது என்ற பொதுமுடிவுக்கு வந்திருந்தோம். இந்தத் தீர்மானத்தை க. சுப்பு அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
’நக்கீரன்’ பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. சென்னையில் மட்டுமே பல ஆயிரம் பிரதிகள்
விற்பனையானது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பல நூறு இதழ்களுக்குக் காப்புத்தொகை செலுத்தி முகவர்கள் பலர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்குப் பதில் எழுதிப் பதிவு செய்வது, வரவு-செலவுக் கணக்குகளைப் பார்ப்பது, விற்பனைப் பணத்தை வசூலிப்பது ஆகிய பணிகளை எங்கள் முயற்சிகள் அனைத்திலும் பங்குபெற்று உதவும் நண்பர் மீனாட்சிசுந்தரம் செய்துவந்தார்.
அப்போது, அவசரநிலைக் காலத்தில் நடந்த செயல்கள் குறித்து இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த இதழின் அட்டையில் இளவேனில், இந்திரா காந்தியின் தலையில் முள்கிரீடம் இருப்பது போன்று படம் வரைந்து வடிவமைத்திருந்தார். அதனை விமர்சித்து ‘அண்ணா’
நாளேட்டில் செய்தி வர, அப்போது கூட்டணியிலிருந்த திமுக சார்பாக அதன் பொதுச்செயலாளர் க. அன்பழகன் ‘அலைஓசை’ நாளேட்டில் பதில் சொல்ல, நக்கீரன் இதழ் விற்பனை சூடுபிடித்தது. ஆனால், ஆசிரியர் சுப்புவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. நெருக்கடிகளைச் சமாளித்துவந்த க. சுப்பு ஒரு கட்டத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எங்களுக்குள் இருந்த
ஒப்பந்தத்திற்கு மாறாக அண்ணா படத்தை அட்டையில் போட வேண்டும் என்று வலியுறுத்த, கூடாது என நாங்கள் எதிர்வாதம் புரிய, இறுதியில் ஆசிரியரும் வெளியீட்டாளருமான
க. சுப்புவிடமே நக்கீரனை விட்டுவிட்டு, இளவேனில் உட்பட குழுவினர் அனைவருமே வெளியேறினோம்.
பின்னர் டி.யு.சி. எஸ். நலமன்றம் சார்பாகப் ‘போர்க்குரல்’ அதற்குப் பிறகு ‘போரணி’ எனத் தனிச்சுற்றுக்கான மாத இதழ்களைக் கொண்டு வந்ததோம். அவற்றின் தலைப்பெழுத்துகளை வடிவமைத்ததுடன் இளவேனில் தொடர்ந்து எழுதியும் வந்தார். அவருடன் சந்தான கிருஷ்ணன், க. திருநாவுக்கரசு, செம்பியன் ஆகியோரும் கட்டுரைகளை எழுதிவந்தனர். மக்கள் கவிஞர் இன்குலாப், மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி ஆகியோரும் அவ்வப்போது இதழ்களில் பங்களிப்பு செய்தனர். மீசை சோமு ‘போரணி’ இதழின் ஆசிரியர் ஆனார். பிற்காலத்தில்
‘போரணி சோமு’ என்று அவர் அறியப்படுகிற நிலைக்குப் ‘போரணி’ இதழ் பிரபலமாக ஆயிற்று.
‘நக்கீரன்’ நின்றுபோன சில மாதங்களுக்குப் பின்னர், அதைப்போல இன்னொரு பத்திரிகையைக் கொண்டுவரும் எண்ணத்தைச் செயல்படுத்த விரும்பினோம். இளவேனில், சந்தான கிருஷ்ணன், டி.யு.சி.எஸ். வேணு, தாம்பரம் மணி ஆகியோரோடு தமிழக, கேரள மாநிலங்களின் பல
பகுதிகளுக்கும் சென்று நண்பர்களைச் சந்திக்கும் முடிவோடு, முதல் கட்டமாக மதுரை சென்றோம்.
இளவேனிலுக்கு ஒரு தந்தையைப் போன்று உதவிகளைச் செய்துவந்த எம். ஆர். எஸ். மணி அவர்களைச் சந்தித்தோம். மற்றும் மதுரைத் தோழர்கள் டாக்டர் சுப்பராயன், மனோகரன் போன்றோரையும் சந்தித்துப் பேசினோம். அங்கிருந்த நெல்லைக்குச் சென்று இளவேனிலுக்கு நெருக்கமான தோழர்கள் சிலரைச் சந்தித்துவிட்டுக் கேரளம் போனோம். அங்குக் கண்ணனூரில் முதுபெரும் தோழர் கே. பி. ஆர். கோபாலன், ராகவன் போன்று பலரையும் சந்தித்துவிட்டு
வந்தோம். ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் உள்ள நண்பர்களைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்டோம். எல்லோருடனும் கலந்துபேசி, புதிய பத்திரிகை ஒன்றைத்
தொடங்குவது என்று முடிவெடுத்தோம் . இரா . ஜவகரிடமிருந்து ‘வசந்தம் வருகிறது’ என்ற பெயரைக் கேட்டுப் பெற்றோம். எஸ். சி. சிவாஜியை ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் கொண்டு இதழ் வெளியானது. பத்திரிகை அலுவலகம் தியாகராய நகரில் செயல்பட்டுவந்தது.
அலுவலக மேலாளராக வழக்கம்போல் மீனாட்சி சுந்தரம் பொறுப்பேற்றார். அட்டை வடிவமைப்பு. இதழ் வடிவமைப்புப் பணிகளோடு இளவேனிலின் எழுத்தும் இதழுக்குப் பொலிவூட்டியது.
இந்தச் சூழலில் பெரியகுளம் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும்கட்சியினர் அவசர அவசரமாக
’மக்கள்நலத் திட்டங்களை’ நிறைவேற்றித்தந்தனர். தெருவுக்குத்தெரு குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் தாராளமாகச் செய்யப்பட்டது. இதன் விளைவாக, எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதழ்த் தயாரிப்புப்பணி முடிந்து தலையங்கம் மட்டுமே எழுத வேண்டியிருந்தது. தேர்தல் முடிவு தெரிந்ததும் எரிச்சலுற்ற இளவேனில், ‘இனி ஒரு எம். பி. எப்போது சாவார்?’ என்று ஆவேசமாகத் தலையங்கம் தீட்டினார், ‘தொகுதியில் 25
வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் இறுதியில் வென்றது 26ஆவது வேட்பாளரான குடிநீர் தான்’ என்று தலையங்கத்தை முடித்திருந்தார். முக்கியத் தலைகள் மண்டையைப் போட்டு இடைத்தேர்தல் வந்தால்தான் மக்களுக்குச் சில வசதிகள் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கம் வா சகர்களின் வரவேற்பைப் பெற்ற அதேவேளையில் இதழ் வெளியான மறுநாளே காவல் துறையை ப் பத்திரிகை அலுவலகத்திற்கு வரவழைத்தது. காவல் துறையின் உயரதிகாரிகள் அலுவலகத்தைச் சோதனையிட்டனர். அப்போது இளவேனில்
அங்கு இருந்தார். “இதுபோன்று எழுதலாமா? நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்?” என்று காவல்துறையினர் இளவேனிலிடம் துருவித் துருவிக் கேள்வி கேட்டனர். “நாங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அல்ல. தொகுதியில் மக்கள் பேசிக்கொண்டதைத் தான் தலையங்கமாக எழுதியிருக்கிறோம்” என இளவேனில் பதில் சொன்னார். வந்த காவல்துறையினர் அலுவலகத்தை இண்டுஇடுக்குவிடாமல் ஆய்வு செய்துவிட்டே புறப்பட்டுச் சென்றனர்.
’வசந்தம் வருகிறது’ இதழுக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருந்தது. ஆனாலும் பொருளாதார நெருக்கடியைத் தாங்கியே இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. பல நண்பர்கள் பண உதவி செய்து பங்குதாரர்களாகச் சேர முன்வந்தபோதும் ‘வேண்டாம்’ என்றே முடிவெடுக்கப்பட்டது. கணக்கு வைத்திருந்த கனரா வங்கியின் மேலாளர் ‘நிறுவனச் சட்டத்தின்கீழ் இதழைப் பதிவுசெய்து ஆவணங்களை அளித்தால் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் கடன்
அனுமதிப்பதாகச் சொன்னதன் பேரில் ‘டான் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற பெயரில் ஆவணம் தயாரிக்கப்பட்டது. அதனை வங்கியில் கொடுத்துப் பதிவு செய்ய எஸ். சி. சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை.
இந்தச் சூழ்நிலையில் பொள்ளாச்சி நீதிமன்றத்திலிருந்து ‘வசந்தம் வருகிறது’ என்ற தலைப்பு தங்களுடையது என்று யாரோ உரிமை கோரியதன் பேரில் நோட்டீஸ் ஒன்று எங்களுக்கு வந்தது. இதழை நிறுவனச் சட்டத்தின் கீழ் கொண்டுவரவும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும்
வழக்கறிஞர் எஸ். சி. சிவாஜியிடம் இளவேனில் உட்பட பலர் பேசியும் அவர் அதற்கு உடன்படவில்லை. காவல்துறை கெடுபிடிகள், பொருளாதார நெருக்கடிகள், நீதிமன்றத்
தடையாணை எனப் பிரச்சினைகள் முற்ற, வெளியீட்டாளர் எதற்கும் ஒத்துவராத நிலையில் இதழ் நின்றுபோனது. அப்போது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பணியிலிருந்த வேணுகோபால் என்னும் ராகவன் தம்பி, காவல் ஆய்வாளர் நாகராஜன், சிவ.ராமதாஸ் ஆகிய மூவரும் இணைந்து திரைப்படம் ஒன்று தயாரிக்க முற்பட்டனர். அதற்கு மீனாட்சி சுந்தரம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். ’மலையூர் மம்பட்டியான்’ என்னும் அந்தப் படத்தின் கதை விவாதத்தில் தொடங்கிப் படத் தலைப்புகளை எழுதுவது வரை இளவேனில் முக்கியப் பங்கு வகித்தார். அப்போது நாங்களும் அங்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தோம்.
அதன்பிறகு இளவேனில் அடிக்கடி டி.யு.சி.எஸ். அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டுப் போவார். விடியல் வேணுகோபால் நடத்திவந்த ‘தங்கம் பிரிண்டர்ஸ்’ அச்சகத்திலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். 1983-’84ஆம் ஆண்டுகளில் நான் தங்கசாலைப் பகுதியில் இருந்த
கிளையில் பணியாற்றியபோதும் இளவேனில் அங்கும் வருவார். டி. யு. சி. எஸ். நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தின் மேல்தளத்தில் ஒரு பகுதியில் ஒரு குடும்பம் வசித்துவந்தது. மறுபகுதி காலியாக இருந்தது. அப்பகுதியில் என்னோடு பணி செய்த ஊழியர்கள், நண்பர்கள் எனச் சுமார்
15 பேர் தினமும் மதியம் சாப்பாடு தயாரித்துச் சாப்பிட்டுவந்தோம். என்னைச் சந்திக்கவரும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் அங்குதான் சாப்பாடு . அரசால் பழிவாங்கப்பட்டு வேலை இழந்த பால்வள நிறுவன ஊழியர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் பல்வேறு முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசிவிட்டும், பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்றுவிட்டும் அங்குதான் வந்து ஓய்வெடுப்பார்கள். எங்கள் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சி. கெ. மாதவன் அவர்கள் பல நாட்கள் அங்கு வந்து ஓய்வெடுப்பார் . ‘போரணி ’ இதழும் அங்கிருந்துதான் வெளிவந்துகொண்டிருந்தது. அதன் காரணமாக சோமு அடிக்கடி அங்கு வருவார். இளவேனில் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும் என்பதால் அங்கு வந்து அனைவரிடமும் பேசிக்கொண்டிருப்பார்.
அங்குதான் எனக்கும் மறைந்த எனது வாழ்க்கைத் துணைவியார் லீலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னைச் சந்திக்க வரும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் லீலா நன்கு அறிமுகம் ஆனார். லீலா கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்துகொண்ட இளவேனில் அவரிடம், “ஆண்டவர் சிறந்தவரா? சாத்தான் சிறந்தவரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியால் துணுக்குற்ற லீலா,
“ஆண்டவர்தான் சிறந்தவர். சாத்தான் எப்படிச் சிறந்தவராக முடியும்?” என்றார். அதற்கு இளவேனில், “தெளிவில்லாமல் இருந்த ஆதாம்- ஏவாளுக்குத் தெளிவை ஏற்படுத்தியவர்
சாத்தான். தெளிவில்லாமல் தொடர்ந்து இருக்கச் சொன்னவர் ஆண்டவர். இப்போது சொல்லுங்கள், ஆண்டவரா, சாத்தானா யார் சிறந்தவர்?” எனக் கேட்டுத் தெளிவுபடுத்திய பின்னரும் உண்மைநிலையை ஏற்றுக்கொள்ள மறுத்து, லீலா இளவேனிலுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு எங்கள் இருவீட்டாரிடமும் சம்மதம் பெற்று நாங்கள் திருமணத்திற்குத் தயாரானோம். திருமணத்தை எப்படி நடத்துவது என்று இளவேனில், வேணுகோபால், வைகறை ஆகியோர் கலந்துபேசி, தோழர் சி. கெ. மாதவன் தலைமையில் பூ. சி. பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடத்துவது என்று முடிவெடுத்தனர். ”உளமார நேசித்தோம்; ஒன்றாய் இணைகிறோம்; அன்பு நெஞ்சங்களே, வாழ்த்த வாருங்கள்”என இளவேனில் அழைப்பிதழ் வாசகங்களை நொடியில் எழுதித்தந்தார். மறுநாளே அழைப்பிதழை வடிவமைத்து வேணுகோபாலிடம் கொடுத்துவிட்டார். அவருடைய தங்கம் பிரிண்டர்ஸ் அச்சகத்தில் அழைப்பிதழ் அச்சானது. விரைவாக விநியோகமும் செய்யப்பட்டது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு முழுவதும் சிவப்புக் கொடிகள் ஒட்டும் பணியைத் தோழர்கள் இணைந்து செய்தனர் . இளவேனில்
தலைமையேற்று அதனை நடத்திக்கொடுத்தார். தோழர்கள் இன்குலாப், இளவேனில், செம்பியன், ஆர்.ஆர். தனபால், ரங்கையன், சந்தான கிருஷ்ணன், ஏ.ஜே. சீனிவாசன் இணைப் பதிவாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்க திருமணம் இனிதே நடந்தது.
டி.யு.சி.எஸ். பணியிலிருந்து நான் ஓய்வு பெற்றபோது தோழர்கள் முன்னெடுத்த விழாவில் இளவேனில் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தாவிட்டாலும் வாழ்த்துரை எழுதித் தந்தார்.
’காக்கைச் சிறகினிலே’ இதழைத் தொடங்கியபோது அதில் எழுதும்படி இளவேனிலைக் கேட்டுக்கொண்டேன். அவர் மறுக்கவில்லை, சம்மதமும் தெரிவிக்கவில்லை. அது ஏன் என்று எனக்குப் பிடிபடவில்லை. எனவே, அதற்குப் பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்த தருணங்களில் அது குறித்து நான் எதுவும் கேட்டதில்லை, அவரும் காக்கை குறித்துப் பேசியதில்லை.
பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்த இளவேனில் யாருக்கும் அடிபணியாதவர், யாரிடமும் இச்சகம் பேசிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளாதவர், அதேசமயம் தனது தேவைகளுக்காக உற்ற தோழர்களிடம் உரிமையோடு எதையும் கேட்கத் தயங்காதவர் என்ற மனச்சித்திரமே என்
நெஞ்சில் அந்தக் கலைஞனின் நினைவாக இன்றும் நிலைத்திருக்கிறது.