Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

எது சரியான மொழிக் கொள்கை?

பொதுவாக மொழிக் கொள்கை என்று
சொல்லும் போது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?
நான் பார்த்தவரையில் பலபேர் மொழிக்கொள்கை
என்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான வாய்ப்பு
என்று கருதுகிறார்கள். அல்லது பள்ளியில் ,
கல்லூரியில் என்ன மொழி படிக்க வேண்டும்
என்னும் விசயத்தைத்தான் நாம் மொழிக்கொள்கை
என்று கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இது,
மொழிக் கொள்கையின் பல கூறுகளில் ஒன்றுதான்.
மொழிக் கொள்கை என்பது அது மட்டும் கிடையாது.
ஒரு நாட்டினுடைய ஆட்சி அதிகாரம் அதன்
கூறுகளாக இருக்கக்கூடிய பாராளுமன்றம் ,
நீதிமன்றம், நிர்வாகத்துறை, வெளியே இருக்ககூடிய
பொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை,
நம்முடைய வாழ்வினுடைய ஒவ்வொரு இடத்திலும்
எங்கெல்லாம் மொழியை நாம் பயன்படுத்துகிறோமோ
எல்லா இடங்களிலும் நமக்குரிய அங்கீகாரம்
எல்லாம் சேர்ந்ததுதான் மொழிக்கொள்கை.
ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி படிக்கும்
வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு ஏழை மாணவர்
படிக்கும் அரசுப் பள்ளியில் அப்படியான வாய்ப்பு
தரப்படவில்லை. இது பாரபட்சம் இல்லையா? என்ற
கேள்வியை நிறையப் பேர் கேட்கிறார்கள். இந்தக்
கேள்வி எங்கிருந்து வருகிறது? ஏன் இந்த ஒரு கேள்வி
மீண்டும் மீண்டும் கேட்கப் படுகிறது? ஏன் இது ஒரு
பாரபட்சம் என்று சொல்லப்படுகிறது? எது
பாரபட்சம்?
இந்தியாவின் மொழிக்கொள்கை
அடிப்படையிலேயே பாரபட்சமானது. அது இந்திய
அரசாங்கத்தினுடைய அதாவது Union Government
-இன் மொழிக் கொள்கைதான். ஆனால் அது ஒட்டு
மொத்த நாட்டின் மொழி கொள்கை யாக
மாற்றப்பட்டுள்ளது. அதைக் கேள்வி கேட்காமல்
நாம் வேறு எங்கேயோ கேள்வி கேட்கிறோம் என்று
தோன்றுகிறது. அதைப்போல ஆங்கிலம் ஒரு
அன்னிய மொழி. இந்தி இந்தியாவில் பேசக்கூடிய

மொழி.ஒரு அன்னிய மொழியை ஏற்றுக்கொள்கிற
நாம் ஏன் இந்தியாவில் பேசக்கூடிய இந்தியை
ஏற்றுக்கொள்வதில்லை. இந்தக் கேள்விகள்
வெளிப்படையாகப் பார்க்கும்போது மிகவும்
நியாயமான கேள்விகள் போலத்தான் தெரியும்.
ஒரு நாட்டின் மொழிக்கொள்கை ஒற்றை
அடிப்படையில் கிடையாது. அது, பல காரணங்களால்
உருவாக்கப்படுகிறது. முதலாவதாக ஒரு நாட்டில்
உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு
மொழி இருக்கும் நாடாக இருந்தால், (உதாரணமாக
ஜெர்மனி அல்லது தாய்லாந்து, தென்கொரியா,
பின்லாந்து, ஸ்வீடன்) கல்வி மொழி, வணிக மொழி,
நிர்வாக மொழி எல்லாம் ஒன்றாக இருக்க முடியும்.
எந்த சிக்கலும் கிடையாது. இந்தியா அடிப்படையில்
பல நாடுகளைக் கொண்ட ஒரு ஒன்றியம். இந்திய
அரசியல் சாசனம் United union of states என்றுதான்
சொல்கிறது. பல அரசுகள் சேர்ந்த ஒன்றியம்
இந்தியா.அப்படியானால் அந்த அரசுகள் எப்படி
இந்தியாவோடு இருக்கின்றன என்றால் பல்வேறு
தேசிய இனங்களாக இருக்கின்றன. சரியாகச்
சொல்லப் போனால் பல்வேறு தேசங்களாக
இருக்கின்றன. ஆக இந்தியா ஒற்றைமொழி பேசும்
தேசம் கிடையாது.

சம வாய்ப்பு வேண்டும்

எனவே இந்தியாவில் இங்கே இருக்கக் கூடிய
அத்தனை மொழிகளுக்கும் சமமான வாய்ப்பு இருக்க
வேண்டும் என்பது அடிப்படை. இரண்டாவதாக,
மக்கள் சமூகத்தின் சமூக, பொருளாதார,கலாச்சார
வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்குத்தான் அரசியல்
அமைப்புச் சட்டம், பாராளுமன்றம், நீதிமன்றம்,
பல்கலைக்கழகம் , கல்லூரி, ஊராட்சி
ஒன்றியம், ஊராட்சி எல்லாமே. மக்கள் கூட்டத்தின்
சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக கலாச்சார
வளர்ச்சிக்காகத்தான் மொழிக் கொள்கை. ஆக ஒரு
மொ ழிக் கொள்கையை உருவாக்கினால்

அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்க வேண்டும்.
அனைவருக்கும் நீதி சமமாகக் கிடைப்பதற்காக,
வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சம
பங்களிப்பு இருப்பதாக இருக்க வேண்டும்.

சரியான மொழிக் கொள்கை

அப்படிப்பட்ட மொழிக் கொள்கைதான்
கல்வியில் பிரதிபலிக்கும். ஆனால் நமது சிந்தனை
எல்லாம் தலை கீழாக உள்ளது. நாம் முதலில்
பள்ளிகளில் இருந்து தொடங்குகிறோம். ஆனால்
அப்படி சிந்திக்கக் கூடாது. மாற்றி சிந்திக்க
வேண்டும். இந்தியா பல மொழிகளைப்
பேசக்கூடிய ஒரு நாடு.அதே நேரத்தில்
ஒரே ஊரில் பல மொழி பேசக் கூடிய
நாடு கிடையாது. சிங்கப்பூர் கூட multi
linguistic state தான். அங்கே, சீன மொழி,
மலாய்மொழி, தமிழ் மொழி இன்னும்
பல மொழி பேசுவார்கள் . அது
கிட்டத்தட்ட மசாலா மாதிரி. ஆனால்
இந்தியாவில் தெளிவாகவே தமிழகத்
தாயகம், மலையாளத் தாயகம் ,
பெங்காளித் தாயகம், பஞ்சாபித்
தாயக ம், குஜராத்தித் தாயகம் ,
மராட்டியத் தாயகம் இருக்கிறது.
எனவேதான் இது பல நாடுகள் சேர்ந்த
ஒரு கூட்டமைப்பாக உள்ளது. ஆக
இந்தியாவில் ஒரு மொழிக்கு மட்டுமே
அரசியல் சாசன அதிகாரத்தைத்
தரக்கூடிய ஒரு கொள்கை இருக்க
முடியாது. அரசியல் நிர்ணய சபையில்
இதை விரிவாகப் பேசி நாம் தோற்று
இருக்கிறோம். ஆனால், ஒரு சின்ன
வெ ற்றி கிடைத்த து. ஆனாலு ம்
இந்தியாவுக்கென்று ஆட்சி மொழி
கிடையாது.எதை ஆட்சி மொழி என்று
நாம் சொல்கிறோம் என்றால் official

language of union government. union
government என்பது இந்தியாவை
ஆளக்கூடிய அரசியல் சாசன
அமைப்பு. அந்த அமைப்புக்குள்
(பாராளுமன்றம், அமைச்சரவை
நி ர்வாக ம் உள்ளிட்ட
நிறுவனங்கள் உள்ளன) எந்த
மொழியை அலுவல் மொழியாகப்
பயன்படுத்துவது என்பதுதான்
கேள்வி.

இந்தியாவில் ஒன்றிய அரசாங்கத்தின் அலுவல் மொழியாக முதலில் இந்தி மட்டுமே என்றார்கள், பிறகு ஆங்கிலமும் தொடரும்படி
செய்தோம் . அதற்கு தமிழ்நாட்டின் போராட்டம்
தான் காரணம். ஆகவே இந்தியாவில் இரண்டு அலுவல் மொழிகளிருக்கின்றன.
நானே கூட இந்தியாவினுடைய என்று சொல்கிறேன்.
அது தவறு. இந்தியாவினுடைய ஒன்றிய அரசாங்கத்திற்கு இரண்டு அலுவல் மொழிகள் இருக்கின்றன. நாம் என்ன சொல்கிறோம் என்றால் இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் அனைத்து
மொழிகளும் அலுவல் மொழிகளாக ஆக்கப்பட
வேண்டும். மத்திய அரசை எந்த ஒருகுடிமகனும்
எந்த மொழியில் தொடர்பு கொள்கிறானோ அதே
மொழியில் பதில் அளிக்க கூடிய கடமை அரசுக்கு
இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு
மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழி
என்னவோ அந்த மொழியில் தான் மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்கள் இயங்க வேண்டும். இது தான் சரியான மொழிக் கொள்கையாக இருக்கும்.

அரசியல் காரணம்

ஒரு வங்கி தமிழ்நாட்டில் இருக்குமேயானால் அதில் மக்கள்
தொடர்புக்கு தமிழ், அனைத்திந்திய அளவுக்கான தொடர்புக்கு
ஆங்கிலம் இருக்க வேண்டும். இதுதான் தமிழ் நாட்டின்
ஆட்சிமொழிச் சட்டம் . அது கேரளாவில் மலையாளம் ,
ஆங்கிலமாக இருக்கலாம் . உத்தரப்பிரதேசத்தில் இந்தி ,
ஆங்கிலமாக இருக்கலாம். ஆனால் மத்திய அரசோடு, நேரடியாகத்
தொடர்பு கொள்ளும் நேரத்தில் நமது அனைத்து மொழிகளுக்கும்
சமமான அந்தஸ்த்து கொடுக்க வேண்டும். இன்னும் சொல்லப்
போனால் அனைத்து மொழிகளும் சமம் என்கிற கோட்பாட்டை
முதலில் கொண்டு வரவேண்டும்.

நடைமுறையில் இருக்கும் பிரச்சினையை எப்போது
வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பத்து மொழி
ஆட்சி மொழி என்றால் சிரமமாக இருந்திருக்கும்.
ஆனால் இன்றைக்கு ஐரோப்பிய யூனியனில்
இருபத்து நான்கு மொழி ஆட்சி மொழியாக
இருக்கிறது. எந்தச் சிக்கலும் இல்லை. எதிர்
காலத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மொழியில்
வேண்டுமானாலும் பேசலாம், கேட்கிறவர்கள் எந்த
மொழியில் வேண்டுமானாலும்
கேட்டுக்கொள்ளலாம். யார் வேண்டுமானாலும்
எந்த ஆவணத்தையும் எந்த மொழியில் இருந்தும்
எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை
வரப்போகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மொழி
பெயர்க்கக் கூடிய மொழி பெயர்ப்பு தொழில்
நுட்பம் வந்திருக்கிறது. ஆக இது நடைமுறை
பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினை.

திட்டமிட்டு திணிக்கிறார்கள்

மீண்டும் மீண்டும் திட்டமிட்டு திட்டமிட்டு இந்தி
மட்டுமே என்று சொல்லி அல்லது இந்தியும்
ஆங்கிலமும் என்று சொல்லி நடைமுறையிலே
இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக
கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அடுத்த கட்டமாக Hindi is a national language of
India என்று சொல்கிறார்கள். இந்த புரிதலில்
பார்த்தால் இந்தியாவின் ஆட்சியாளர்களில் ஒரு
பகுதியனர் அது காங்கிரஸ், பாஜக வேறு
பாடெல்லாம் கிடையாது. யாராக இருந்தாலும்
சுதந்திரப்போராட்டம் தொடங்கியே வட
இந்தியாவினர் ஒரு அரசியல் ஆதிக்கம் கொண்டு
முழுமையாகத் திட்டமிட்டு செயல்படுவதன்
காரணமாக இந்த மொழிக் கொள்கை அவர்களிடம்
இருக்கிறது. இதற்கு என்ன ஆதாரம் என்றால்,
வரலாறுதான் ஆதாரம்.
உலகத்தில் எங்கெங்கு பேரரசு போல ஒரு ஆட்சி
நடக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் ஒரு
பகுதியினர் மொழியை; யாரிடம் அரசியல்
அதிகாரம் இருக்கிறதோ அவர்களின் மொழியை
இன்னொருவர் மீது திணிப்பதுதான் வரலாறு.
இந்தியாவின் வரலாறு, பாகிஸ்தான் வரலாறு,
சீனாவின் வரலாறு, இலங்கையின் வரலாறு,
இந்தோனேசியாவின் வரலாறு எல்லாம் ஒன்றுதான்.
மெஜாரிட்டி மொழியை மைனாரிட்டி மீது
திணிக்கின்றனர். அந்த வேலையை தொடர்ந்து
செய்கிறார்கள். அதற்கு கட்டுக்கதைகளை
உருவாக்குகின்றனர்.
முதல் கட்டுக்கதை என்ன? இந்தியா ஒரு நாடு.
அதற்கென்று ஒரு மொழி இருக்கக் கூடாதா?
இந்தியா ஒற்றை நாடல்ல. ஏற்கனவே பன்மொழி
பேசக்கூடிய நாடு. நாடு என்பதை நிலப்பகுதியாக
பார்த்தால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் அரசியல் வரையறையோடு சொல்லும்போது
இந்தியா என்பது யூனியன் தான். இ ந்திய
அரசியலமைப்பு அப்படித்தான் சொல்கிறது.
அடிப்படையில் ஒரு பெடரேஷன். இந்திய நாடு
அல்லது தமிழ்நாடு ஏன் ராம்நாடு என்றுகூட

சொல்லிக்கொள்ளலாம். தமிழ் நாட்டிற்குள்ளேயே
குட்டி குட்டி பகுதிகளை எல்லாம் ஒரு காலத்தில்
நாடு என்றுதான் சொன்னார்கள். சேர நாடு, சோழ
நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு என்பது போல
சின்னச் சின்ன ஊரைக்கூட நாடு என்றுதான்
சொல்வார்கள். நாடு என்பது புவியியல் பகுதி.
அவ்வளவுதான்.
இந்திய அரசியல் சாசனப்படி ஒரு யூனியன்
நடைமுறையில் ஒரு பெடரேஷன். ஒரு யூனியனுக்கு,
ஒரு பெடரேசனுக்கு இ ணைப்பு மொழி
வைத்துக்கொள்ளலாம். இந்தியா என்கிற இந்த
யூனியன் உருவாவதற்கு பிரிட்டிஷ்காரர்கள்
காலம்தான் சாத்தியமானது. அந்தக் காலகட்டத்தில்
எல்லாப் பகுதிக்கும் வழங்கிய உலகத்தின் மற்ற
பகுதிகளுக்கும் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு
மொழியை இணைப்பு மொழியாக ஆக்கினால்
போதும் என்பதுதான் புத்திசாலித்தனமான
நடைமுறை சாத்தியம். இதைத்தான் அறிஞர்
அண்ணா மிகவும் அழகாக பாராளுமன்றத்தில்
சொன்னார். அந்தக் கதை உங்கள் அனைவருக்கும்
தெரியும். ஆங்கிலம். அன்னிய மொழி என்பதால்
சேர்க்கக்கூடாது என்று சொன்னால் தமிழுக்கு
இந்தியும் அந்நிய மொழிதான். அன்னிய என்பதை
எதைவைத்து வரையறுக்கிறார்கள். பிரிட்டிஷ்காரன்
தமிழ்நாட்டை ஏன் இந்தியாவினுடைய எல்லா
பகுதியையும் சேர்த்து ஒரு அரசாக மாற்றும் முன்பு
நமக்கு எல்லாமே அந்நியம் தான். அவர்களுக்கு நாம்
மிலேச்சர்கள் தான். வட இந்தியர்கள் காலம்
காலமாக வேற்று ஆளாகவும் மிலேச்சர்கள் ஆகவும்
தான் பார்த்தார்கள். நாமும் அவர்களை வேற்று
ஆளாகத்தான் பார்த்தோம். அந்நியன் என்கிற
வார்த்தை அரசியல் வார்த்தை இல்லை. அது ஒரு
கலாச்சார வார்த்தை.

இணைப்பு மொழிதான் தேவை

ஆங்கிலத்தின் தேவை இருப்பதன் காரணமாக
உலகம் முழுக்க அது அமலில் உள்ளது. ஒரு
காலத்தில் எந்தெந்த ஊர்களில் ஆங்கிலம் படிக்க
வில்லையோ அவர்கள் கூட இன்று ஆங்கிலம்
படிக்கிறார்கள். ஆக இணைப்பு மொழியாக
தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கிற எந்த ஒரு
பகுதியையும் அது கர்நாடகாவாக இருக்கலாம்
அல்லது கஜகஸ்தான் ஆக இருக்கலாம் ஆங்கிலத்தின்
மூலமாக இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்
என்றால் அது இணைப்பு மொழி. ஆனால் தமிழும்
இந்தியாவின் ஒன்றிய அரசாங்கத்தின் ஆட்சி
மொழிகளுள் ஒன்றாக இரு க்க வேண்டு ம்
என்பதுதான் சரியான மொழிக்கொள்கை. இதை
நான் அரசியல் ரீதியாகச் சொல்கிறேன்.
ஒரு சமூகப் பொருளாதார முன்னேற்றம்
என்பதற்கு நவீன காலத்தில் என்ன பொருள்
என்றால் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கக்கூடிய
மனிதர்களை குறிப் பாக குழந்தைகளை
அறிவுள்ளவர்களாக மாற்றி, பல்வேறு துறைகளிலே
அவர்கள் தொழில் செய்யவும் அல்லது
தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபடவும் வாய்ப்பு
உருவாக்குவது என்பதுதான். ஒரு குழந்தையின்

எதிர்காலம் என்ன? எதிர்காலத்தில் அவர்கள் ஒரு
இடத்தில் ஊழியராக இருப்பார்கள் அல்லது ஒரு
இடத்தில் தொழில் செய்வார்கள் அல்லது
ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். எப்படிப்பார்த்தாலும்
அது ஒரு தொழில் ஆகத்தான் இரு க்கு ம் .
அடிப்படையில் ஒரு carrier ஒரு பணிக்கு அவர்களை
நாம் தயார்ப டுத்துவது. ஆனால் சமூகப்
பொருளாதாரம் என்று சொல்வது அதுமட்டுமல்ல.
ஒட்டுமொத்தம ாக அனைத்து அறிவையு ம்
அ வ ர ்களுக்குத் தருவதுதா ன் ச மூ கப்
பொருளாதாரத்தில் முதல் படிநிலை. அதற்குத்தான்
கல்வி தேவைப்படுகிறது. பிறகு அந்த அறிவைப்
பெற்றவர்கள் நிறுவனங்களில் அந்த அறிவை ஒரு
தொழிலாக, வெளிப்பாடாக, படைப்பாக கொண்டு
செல்வார்கள். அந்த இடத்தில் மொழி செயல்படும்.
பிறகு அவர்கள் ஊதியத்தின் மூலமாகசம்பாதிப்பதை
தங்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில்
செலவிடுகிறார்கள். குடும்பம், பொழுதுபோக்கு,
கலாச்சாரம், சுற்றுலா என என்ன வேண்டுமானாலும்
இருக்கலாம். அப்படி பல துறைகள் சம்பந்தப்பட்டதுதான் மனித வாழ்க்கை.

தாய்மொழியில் வாய்ப்பு வேண்டும்

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு ஜெர்மானியர்
அல்லது ஒரு சீனர், ஒரு ஜப்பானியர் இருக்கிறார்
என்றால் அவரைப் பொருத்தவரை எந்த ஒரு
இரண்டாவது மொழியின் துணையே இல்லாமல்
அவருடைய தாய் மொழி என்னவோ அந்த
மொழியில் எல்லாமே கிடைக்கிறது. அதே சமயத்தில்
உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு இன்னொரு
மொழியையும் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
அதனால் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற
நாடுகள் வளர்ந்த நாடுகள் என்று எதையெல்லாம்
சொல்கிறோமோ அவர்கள் முதலில் தங்களுடைய
தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கொண்டு
வந்தார்கள்.
தங்களுடைய வளர்ச்சிக்கு இன்னொரு மொழியை
கற்றுக்கொள்ள வேண்டியதை அவசியமாக
வைக்கவே இல்லை. அப்படி இன்னொரு மொழி
கற்றுக்கொள்ள தேவைப்பட்டால் அதை கற்றுத்தர
அமைப்புகள் இருக்கின்றன. ஐரோப்பாவில்
ஒவ்வொரு நகரத்திலும் மொழிப் பள்ளிகள்
இருக்கின்றன. சீனாவிலும், ஜப ்பானிலு ம் ,
கொரியாவிலும் தெருவுக்குத் தெரு ஆங்கில Institute
தனியே இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் இருக்க
வேண்டுமென்ற அவசியமே கிடையாது.
உலகத்தில் உள்ள எல்லா ஆய்வாளர்களும்
யுனெஸ்கோ போன்ற நிறுவனங்களும் தாய்மொழி
மூலமாக அறிவை அவருக்கு கொடுங்கள், பிறகு
அவர் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்
கொள்ளலாம் என்கிறார்கள். அறிவுதான் மொழிக்கு
அடிப்படை, மொழி அறிவுக்கு அடிப்

கிடையாது என்று சொல்கிறார்கள். ஒரு பிறந்த
குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகத்தை
அறிந்து கொள்ளும் போது தான் மொழியே
உருவாகிறது. ஆக அறிதல் முதல். மொழி அதனுடைய
விளைவு.
அறிதல் என்ற செயல்பாடு இல்லாமல் கற்றல்
என்ற செயல்பாடு இல்லை. அறிவு என்றால் ரொம்ப
பெரியது கிடையாது. சிறியதும் கூட அறிவுதான்.
ஆக இந்த அறிதல் என்ற செயல்பாடு இயல்பாக
தாய்மொழியில் நடந்து அதைகற்றுக் கொள்ளும்போது
பிறகு அதை வெளிப்படுத்துவதற்கு அல்லது
கூடுதலாக கற்றுக்கொள்வதற்கு நீங்கள் எத்தனை
மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் உங்களுடைய தாய்மொழியிலேயே
சிறப்பான வாழ்க்கை வாழ வாய்ப்பு தரப்பட
வேண்டும்.
ஆங்கிலம், பிரஞ்சு, இந்தி என எந்த மொழி
வ ேண்டுமானாலும் ப டியுங்கள். ஆனா ல்
தமிழ்நாட்டில் ஒருவர் தமிழ் மட்டுமே படித்து
உயர்ந்த இடத்திற்கு போவதற்கான வாய்ப்பு இருக்க
வேண்டும். அவர் ஆங்கிலம் படித்து நிறைய கற்றுக்
கொள்வதையும் அல்லது இந்தி படித்து வடநாட்டில்
போய் வேலை செய்வதையும் எல்லாம் நான்
மறுக்கவில்லை. ஆனால் தாய்மொழியிலேயே
அனைத்தும் கற்றுக்கொள்வதற்கான அடித்தளம்
என்பது ஒரு மனித உரிமை. அதைத்தான் linguistic
right என்று சொல்வோம். பள்ளிக்கூடத்தில்,
கல்லூரியில் படிக்கும் போது, ஆராய்ச்சியில்
ஈடுபடும் போது, வர்த்தகம் செய்யும் போது,
நூலகங்களில் நூல்கள் பெறும் போது, இன்டர்நெட்
அல்லது வாட்ஸ்அப் அல்லது ஏதாவ து
பயன்படுத்துவதற்கான உரிமை எல்லாம் எனக்கு
என் மொழியில் இருக்க வேண்டும். தமிழில் 80%
அவ்வாறு இருக்கிறது. அதனால் நமக்கு ஆச்சரியமாக
தோன்றா து. பல இடங்களில் இது கூட
சாத்தியமில்லை.

ஆதிக்கத்திற்கான கொள்கை

இந்தியா மொழிக் கொள்கையை எப்படி
வைத்திருக்கிறது என்றால் இந்திக்கு மட்டும்தான்
எல்லாம். தத்துவரீதியாக பாஜக வந்தால் கூடுதலாக
சமஸ்கிருதம் சேர்த்துக் கொள்வார்கள். காங்கிரஸ்
வரும்போது அதிகம் பேச மாட்டார்கள். ஆங்கிலம்
எல்லோருக்கும் தேவைப்படுகிறது என்பதால்
இந்தியாவில் தவிர்க்க முடியாது. மற்ற மொழிகளைப்
பற்றி கவலைப்படவில்லை. அரசியல் ரீதியாகப்
பார்த்தாலும் அனைத்து மொழிகளுக்கும் சம
அந்தஸ்து என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு தாய்மொழி
அடிப்படை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
ஒரு சிலர் வட இந்தியாவில் இருக்கக்கூடிய ஆதிக்க
சமூகங்களின் ஆதி க்கத்தி ற்கான மொழிக் கொள்கையை தான் இந்தியாவின்மொழிக்கொள்கை என்று சொல்கிறார்கள்.

காலனிய ஆதிக்கம்

‘இந்தி பிரச்சார சபா’ என்று ஏன் வைக்கிறீர்கள்
Indian language பிரச்சார சபா என்று வைத்து எல்லா
மொழியையும் கற்றுக்கொடுங்கள். எங்களிடம்
இருந்து தானே வரி வாங்குகிறீர்கள். பிறகு ஏன்
இந்திக்கு மட்டும் செலவு செய்கிறீர்கள் என்று
மத்திய அரசைச் சார்ந்த ஒருவரிடம் கேட்டபோது
அவர் “அதற்குத்தான் தமிழ்நாடு அரசு இருக்கிறது”
என்கிறார். இந்திக்கு உத்தரப்பிரதேச அரசா
செலவிடுகிறது. மத்திய அரசு தானே செலவிடுகிறது.
இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிக அளவு
வரிப்பணம் தருபவர்கள் இந்தி பேசாத மாநிலங்கள்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளாதான்
அதிகமான வரி தருகிறார்கள். ஆனால் செலவிடுவது
எல்லாம் இந்திக்கு மட்டும்; இந்தப் பாரபட்சம்
சாதாரணமானது கிடையாது. கிட்டத்தட்ட
காலனிய அணுகுமுறை அளவுக்கு வந்தாயிற்று.
அதுதான் கனிமொழிக்கு நடந்தது. அதுதான்
வெற்றிமாறனுக்கு நடந்தது. சென்னையில் இருக்கும்
விமான நிலையத்தில் ஒரு அதிகாரி உனக்கு இந்தி
தெரியவில்லை என்றால் நீ இந்தியனா என்று
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழியை
கேள்வி கேட்க முடிகிறது என்று சொன்னால்
அதற்குப் பெயர்தான் இந்தி காலனிய ஆதிக்கம்.
கண் முன்னாலேயே அதற்கு உதாரணம்
இருக்கிறது. மத்திய அரசு இந்தியில் தான் இயங்கும்.
எனவே இந்தி பேசுபவர்களுக்குத்தான் வேலை
கொடுப்பேன் என்று தெளிவாகப் பேசுகிறது.
நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் மத்திய அரசின்
வ ேலை வா ய்ப் பு க ள் தமிழ்நாட்டிலும் ,
கர்நாடகத்திலும், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும்,
பஞ்சாபிலும் இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமே
தரப்படுகிறது. இந்தி படித்தால் மத்திய அரசு வேலை
கிடைக்கும் என்று சொன்னார்களே!; ஏன் வேலை
கிடைக்கவில்லை? அரசுப் பள்ளியில் மட்டும் தானே
இந்தி படிக்கவில்லை. தனியார் பள்ளியில் இந்தி
படித்துள்ளார்களே! பெரும்பாலும் வங்கி, ரயில்வே
போன்ற தேர்வு எழுதவில்லையா? அவர்களுக்கு
எங்கே வந்தது வேலை. நூற்றுக்கு 90 சதவீதம் வட
இந்தியர்களை கொண்டு வந்து இங்கே மத்திய அரசு
வேலையில், மத்திய பொதுத்துறை வேலைகளில்
போடுகிறார்கள் என்றால் இங்கு இருப்பது மொழிக்
கொள்கை அல்ல. மொழியைக் கருவியாகப்
பயன்படுத்திக்கொண்டு இந்தியாவின் ஒரு தரப்பு
மக்கள் இன்னொரு தரப்பு மக்கள் மீது ஆதிக்கம்
செலுத்தக்கூடிய காலனிய ஆதிக்கம்.

இரண்டாம்தர குடிமக்களா நாம்?

சென்னைக்கு வரக்கூடிய ஒரு விமானம் அது
மலேசியன் ஏர்லைன்ஸ் ஆகவோ, சிங்கப்பூர்
ஏர்லைன்ஸ் ஆகவோ, பிரிட்டீஷாரின் பிரிடிஷ்
ஏர்வேஸாகவோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகவோ
இருந்தால் ஒரு நிமிடம் தமிழிலே வரவேற்பு
செய்கின்றார்கள். சென்னையிலிருந்து மதுரைக்கு
போகக்கூடிய ஒரு விமானம் அது இண்டிகோ
விமானம் ஆக இருந்தால் இங்கிருந்து இரண்டு
இடமும் தமிழ்நாட்டுக்கு உள்ளேதான் இருக்கிறது:
தமிழில் அறிவிப்புச் செய்வது இல்லை. ஆங்கிலத்தில்
இந்தியில் அறிவிக்கிறார்கள். இதை சாதாரணமான
விஷயமாக நினைக்கலாம், ஆனால் இண்டிகோ
விமானம் எதற்கு ஆங்கிலத்திலும் இந்தியிலும்
பே சுகிறது. அதைக் கேட் கு ம்போ து இ து
இந்தியாவுடைய பாலிசி என்கிறார்கள். நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன் இந்தியாவினுடைய
பாலிசி இல்லை Union Government உடைய Official
Language policy க்கும் மக்களுடைய பணத்தை
வாங்கிக்கொண்டு சேவை செய்யக்கூடிய ஒரு
விமான நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம்
இருக்கிறது. என்னுடைய பணத்தை வாங்கிக்கொண்டு
விமான சேவை நடத்துகிறீர்கள். ஆனால்
என்னுடைய மொழியிலே சேவை தர மறுக்கிறீர்கள்.
ஜெர்மனியிலோ, இங்கிலாந்திலோ, ரஷ்யாவிலோ,
சீனாவிலோ இதைச் செய்ய முடியுமா?
ஒன்றிய அரசின் Official Language policy யே தவறு
என்று நாம் சொல்லுகிறோம். ஒரு வாதத்திற்காக
அது சரி என்றே வைத்துக்கொண்டாலும் Union
Government ன் Official Language policy எப்படி
இண்டிகோ விமான நிறுவனத்திற்குப் பொருந்தும்.
அது எப்படி வங்கிக்குப் பொருந்தும். ஏனென்றால்
அரசினுடைய தொடர்புகளுக்கு மட்டும்தான்
ஆங்கிலமும் இந்தியும்; மக்களுக்கும் அரசுக்குமான
தொடர்பு எப்படி தமிழில் இல்லாமல் இருக்க
முடியும். இவர்கள் ஓட்டுக் கேட்க தமிழ்நாட்டுக்கு
வரும்போது தமிழில் தானே ஓட்டு கேட்கிறார்கள்.
வருமான வரித்துறை வரிகட்ட சொல்லும்போது
தமிழில்தானே அறிவிப்புகள் இருக்கிறது. ஓட்டு
கேட்கும்போது மட்டும் வணக்கம் ஆனால்
வேலைக்கு போகும்போது மட்டும் நமஸ்காரா?
இந்தியாவில் இருக்கக் கூடிய தனியார்
நிறுவனங்கள் அத்தனையுமே கூட மத்திய
அரசாங்கத்தின் ஆட்சி மொழிக் கொள்கையை
பயன்படுத்துவோம் என்று நிர்பந்திக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள விமான சேவை,
ரயில்வே சேவை, பெல் நிறுவனம் போல
எல்லாவற்றிலும் தமிழ் கட்டாயம் பயன்படுத்த
வேண்டும் என்ற சட்டம் இருந்தால் தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர்கள்தான் வேலைக்கு வைத்துக் கொள்ள
முடியும். ஆனால் அது தேவையில்லை என்று
முடிவுக்கு வரும்போது எல்லா வேலை வாய்ப்புகளும்
வட இந்தியருக்குத் தந்து இந்தியில் பேசலாம்.
சென்னையில் இருந்து கோவைக்கு, மதுரைக்கு
செல்லும் விமானத்தில் அறிவிப்பு இந்தியிலும்
இங்கிலீஷிலும் தான் இருக்கும் என்று சொன்னால்
தமிழனுக்கு வேலை தர வேண்டிய அவசியமில்லை.
தமிழர்களை சுட்டுக்கொன்று இனப்படுகொலை
செய்த இலங்கையில் கூட இந்த நிலைமை கிடையாது.
ஆக இந்தியாவினுடைய மொழிக் கொள்கை
அரசியல் ரீதியாக நம்மை இரண்டாம்தர
குடிமக்களாகவே நடத்துகிறது.

ஏன் இருமொழிக் கொள்கை?

ஏன் இருமொழிக் கொள்கையை அண்

கொண்டு வந்தார். இந்தி இந்தியாவில் வெறும்
மொழியாக செயல்படவில்லை. அது ஒரு
அரசாங்கத்தினுடைய திட்டமாக, கலாச்சார
எந்திரமாக செயல்படுகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப்,
வங்காளம், ஒரிசா இந்த நான்கு மாநிலங்களுக்கும்
முறையே மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியாதான்
தாய்மொழி . ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு
இந்த மாநிலங்களில் இந்த மொழிகள்தான்
முதன ்மை ய ா ன உள்ளூர் மொ ழியா க
பயன்படுத்தப்பட்டது. இந்தி பசார் மொழியாக
பேசப்படுகிறது. பசார் மொழி என்றால் ஒரு
இணைப்பு மொழி . அதுவும் இந்துஸ்தானி பயன்படுத்தப்படுகிறது.
எது இந்துஸ்தானி என்றால் முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் உருவான ஒரு 300, 400 வருடமாக
வணிகர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு மொழி. அது மேற்கு உத்தரப்
பிரதேசத்தில் கிட்டத்தட்ட தாய்மொழி
போல இருந்தது. மீதி எல்லா இடங்களிலும் அது பசார் Language
என்று அழைக்கப்பட்டது. உலகில் பல பசார் Language உண்டு. மலாய்மொழி கூட ஒரு பசார் Language தான். தமிழ்
கூட ஒரு காலத்தில் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், பர்மாவிலும் பசார் மொழியாக இருந்தது. அதனை
கொஞ்ச ம் கொஞ்சம் புரிந்து கொள்வார்கள். இந்து ஸ்தானி
இந்தியுடைய சகோதர மொழி என்பதால் தமிழ் தெலுங்கு போல,
தமிழ் கன்னடம் போல, தமிழ் மலையாளம் போல சில ஒற்றுமைகள்
இருக்கிறது. ஆனால் அவரவர் இடத்தில் அவரவர்
மொழிதான் ஆட்சி மொழியாக இருக்கிறது. அல்லது
சமூகத்தின் முதன்மையான மொழியாக இருக்கிறது.

ஏற்றுக்கொண்டதும் திணிக்கப்படுவதும்

இன்றைக்கு இந்திக்கு எதிரான போராட்டம்
மகாராஷ்டிராவில், கர்நாடகாவில், பஞ்சாபில்
மற்றும் பல மாநிலங்களில் நடக்கிறது. கடந்த நான்கு
ஆண்டுகளில் மட்டும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா,
தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, பஞ்சாப்,
மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அந்த மாநில
அரசுகள் அனைத்துப் பள்ளிகளிலும் தங்கள் தாய்
மொழியை கட்டாயமாக கற்றுக் கொடுக்க
வேண்டுமென்று அரசாணைபோட்டிருக்கிறார்கள்;
சட்டத்தை இயற்றி இருக்கிறார்கள், அல்லது
வலியுறுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதோ
செய்ததை ஏன் அவர்கள் இப்போது செய்கிறார்கள்
என்றால் இந்த இடங்களிலெல்லாம் இந்தி உள்ளூர்
மொழிகளை பதிலீடு செய்ய ஆரம்பித்துவிட்டது.
மும்பையில் மராத்தி இல்லை, கல்கத்தாவில்
வங்காளி அழிந்து கொண்டிருக்கிறது, ஒரிசாவில்
ஒருவரும் ஒரிய மொழி படிப்பதில்லை. இந்தி தான்
படிக்கிறார்கள், பஞ்சாப் சொல்லவே தேவையில்லை
ஏற்கனவே அவர்கள் பாதி பாதியாக இருக்கிறார்கள்;
அவர்கள் மொழி அழிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1ஆம்
தேதி 2018 சண்டிகர் நகரில் தங்களுடைய மொழியான
பஞ்சாபி மொழியை அரசு பயன்படுத்த வேண்டும்
என்ற மிகப்பெரிய ஊர்வலத்தில் நான் கலந்து
கொண்டேன். மூன்றாண்டு களுக்கு முன்பு
கர்நாடகத்தில் நடந்த பல மொழி உரிமைப்
போராட்டங்களில் நான்கலந்து கொண்டிருக்கிறேன்.
அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு
வங்காளத்தில் கூட்டாட்சி பற்றிய ஒரு கூட்டத்தில்
நான் பேசியிருக்கி றேன் . அதில் கலந்து
கொண்டவர்கள் தமிழ்நாட்டின் இருமொழிக்
கொள்கை தான் சிறந்தது நாங்கள் ஏமாந்து விட்டோம் என்று
பேசினார்கள். ஆக இந்தி உள்ளூர் மொழிகளை கபளீகரம் செய்கிறது. ஆங்கிலம் இதை செய்யவில்லையா?
என்று கேட்டால், ஆமாம் ஆங்கிலமும் இதைச் செய்கிறது. ஆனால் ஆங்கிலம் என்ன செய்ய முடியாது என்றால் ஒட்டுமொத்தமாக நமது சமூக கலாச்சார வாழ்க்கையை மாற்ற முடியாது. ஆனால் இந்தி அப்படி இல்லை ; நமது சினிமா வை அழிக்கிறது. ஹாலிவுட் படங்கள் தமிழ் சினிமாவை பாதித்ததா ? இல்லை. ஆனால் இந்தி படம் மராட்டிய சினிமாவை அழிக்கிறது.
ஒரு சிபிஎஸ்சி ஆங்கிலக்கல்வி தமிழ்க்
கல்வியை முழு மையாக அழிக்கவில்லை. ஆனால் இந்தி
அழிக்கிறது; மற்ற இடங்களில் இந்தியை பயன்படுத்தும்போது
உள்ளூர் மொழியைபயன்படுத்தாமல் போவதற்காக இந்தி திணிக்கப்படுகிறது.
இரண்டாவது இப்போது இருக்கும் ஆங்கில
மோகம், இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம்
முழுக்கவும் இருக்காது. ஆங்கிலம் என்பது நாம்
ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம்; இந்தி நம் மீது
திணிக்கப்படுவது. உலகம் முழுக்கவே ஏற்பட்டு
வரும் மாற்றங்களை பார்த்தால் உலகப் பொது
மொழி என்ற ஒன்று இருக்காது என்கிறார்கள். அந்த
அளவுக்கு தொழில்நுட்பம் கை கொடுக்கப்
போகிறது.

இந்தி கொன்ற மொழிகள்

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா,
உத்தர்கண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகியனதான்
இந்தி பேசும் பகுதி. இந்த பகுதியில் இருந்த
கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர்
மொழிகளை ஏற்கனவே இந்தி கொன்று குவித்து
விட்டது. போஜ்புரி என்ற மொழி கிழக்கு உத்தரப்
பிரதேசத்திலும் பீகாரிலும் பேசப்படக் கூடியது.
பீகாரில் பேசப்படும் அங்கீகா, மைதிலி, பஜ்ஜிகா,
மகதி மத்திய பிரதேசத்தில் புந்தேல்கண்டி, சத்தீஸ்கடி
உத்தரப்பிரதேசத்தில் வ்ரஜ, அவதி உத்தரகாண்டில்
கார்வாலி, குமாவுனி ராஜஸ்தானில் ராஜஸ்தானி,
ஜயபுரி, நேபாளி, மார்வாரி இமாச்சல் பிரதேசத்தில்

பஹாடி, ஜார்கண்டில் சந்தாலி, கோ, சத்தீஸ்கரில்
கோண்டி, ஒரிசாவில் ஒரியா,கோஹ்லி இந்த
மொழிகள் அத்தனையையும் இடம் தெரியாத
அளவுக்கு அழித்திருக்கிறார்கள். ஆனால் அறுபது
எ ழு ப து ஆ ண் டு க ளுக்கு மு ன் பு இ ந்த
மொழிகளெல்லாம் இந்தியைப் போலவே நன்கு
பேசப்பட்ட, எழுதப்பட்ட, ஊடகங்கள் இருந்த,
இலக்கியம் இருந்த உள்ளூர் பகுதிகளில் செல்வாக்குப்
பெற்றிருந்த மொழிகள் ஆகும்.
“ராம்சரித் மனாஸ்” (ராமசரிதமானஸ்) என்ற
இலக்கியத்தை துளசிதாசர் எழுதினார் என
எல்லோரும் சொல்வார்கள். பாடத்தில் துளசிதாசர்
இந்தியில் ராமசரிதமானஸ் எழுதினார் என்று
படிக்கிறோம். ஆனால் இது எழுதப்பட்டது இந்தி
மொழியில் அல்ல; லக்னோவில் பேசப்பட்ட
அவதியில்.
1850 களுக்குப் பிறகு கடந்த 150 ஆண்டுகளில்
இந்தி, வட இந்தியாவில் மட்டும் 50 மொழிகளைக்
கொன்று இருக்கிறது. அவர்களை இந்திக்காரர்கள்
என்று சொல்லி அவர்கள் த ாய்மொழியை
மறுக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நான் சொன்ன
அத்தனை மொழிகளிலும் தங்களுடைய மொழிக்கு
அரசியல் சாசன அந்தஸ்து வேண்டும் என்று
போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்
சாசனத்தின் எட்டாம் பிரிவில் உள்ள பட்டியலில்
எங்கள் மொழியை சேர்க்க வேண்டும் என்று
போராடிக் கொண்டிருக்கிறார்கள். போஜ்புரி,
பஜ்ஜிகா, மகதி மொழியினர் இன்றைக் கு
போராடுகிறார்கள். பல கூட்டங்களில்
கலந்துகொண்டு ஆச்சரியமும் வேதனையும்
அடைந்தேன். கடந்த பிப்ரவரி 21 அன்று இந்த
ஆண்டு டெல்லியில் இந்த மாதிரியான அங்கீகாரம்
இல்லாத மொழிகளுக்கான போராட்டத்தை
நாங்கள் நடத்தியபோது போஜ்புரி மொழியைச்
சேர்ந்த ஒருவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். அவர்
என்னை பார்த்து சொன்னார்; ஏனென்றால் நான்
அமைப்பின் செயலாளராக இருக்கிறேன். “செந்தில்
உங்களுக்கு தெரியுமா, நாம் நீண்ட காலமாக
உறவினர்கள், பிரிட்டிஷ்காரன் காலத்தில்
மொரீஷியஸ், செஷல்ஸ், பிஜித்தீவு, வெஸ்ட்இண்டீஸ்
போன்ற பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து கூலிகளாக
அ ழைத்துச் செல்லப்பட்ட மக்கள்
தென்னிந்தியாவிலிருந்து தமிழர்கள், வட
இந்தியாவிலிருந்து போஜ்புரி மொழி பேசக்
கூடியவர்கள். அப்படி போஜ்புரி மொழி பேசக்
கூடியவர்கள் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்,
ஃபிஜி போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். எங்கள்
துயரம் என்ன தெரியுமா நாங்கள் எங்கெல்லாம்
புலம்பெயர்ந்து போனோமோ அங்கே எங்கள்
மொழி உயிரோடு இருக்கிறது. நாங்கள் இருக்கும்
போஜ்புரி நிலத்தில் எங்கள் மொழி கொல்லப்படுகிறது”
என்று பேசி விட்டுச் சொன்னார், தமிழர்களாகிய
நீங்கள் மொழிப் போராட்டம் நடத்தி தப்பித்துக்
கொண்டீர்கள். நாங்கள் மாட்டிக் கொண்டோம்.
ஆனாலும் நாம் உறவினர்கள் என்றார். நான்
நிலைகுலைந்து போனேன். ஒருவர் இருவர் அல்ல
நான்கைந்து கோடி பேர் இந்த மொழி பேசுகிறார்கள்.
இந்த நிமிடம் வரை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கத்

தயங்குகிறது. இந்தியாவில் முதலில் கொல்லப்பட்ட
மொழிகள் வட இந்திய மொழிகள் தான். நாம் எதை
இந்தி பெல்ட், இந்தி மாநிலங்கள் என்று
சொல்கிறோமோ அதெல்லாம் இந்தி மாநிலங்கள்
இல்லை.

மும்மொழிக் கொள்கை ஏமாற்று

அடுத்ததாக பஞ்சாபி, உருது, பெங்காளி, ஒரியா,
மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகள்
பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பு தங்களுக்கும்
வருகிறது என்று தெரிந்து கொண்ட பின்புதான்
கர்நாடகத்தில் கன்னடர்கள் இந்திக்கு எதிராக
போராட ஆரம்பித்தார்கள். இரண்டு வாரங்களுக்கு
முன்பு இருமொழிக் கொள்கை எங்களுக்கும்
வேண்டும் என்று அவர்கள் ட்விட் செய்தார்கள்;
அதைத்தான் மம்தா பேசுகிறார், நவீன் பட்நாயக்
பேசுகிறார், கேரளாவும் வழிமொழிகிறது. 1937- 38
லிருந்து தமிழ்நாடு மொழிப் பிரச்சனையில் என்ன
சொல்கிறதோ அதுதான் இந்தியாவின் புதிய

குரலாக, இந்தி பேசாத எல்லா மாநிலங்களிலும்
உருவாகியுள்ளது.
அவர்கள் திட்டம் அமல் ஆக்கப்பட்டால்
தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் தமிழ், இந்தி,
இங்கிலீஷ் படிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில்
இருப்பவர் இந்தியும்,இங்கிலீசும் படிப்பார் .
மூன்றாவது மொழியாக எதையும் படிக்க வேண்டிய
அவசியம் அவருக்கு இல்லை. வலியுறுத்தினால்
சமஸ்கிருதம் எடுத்துக்கொள்வார்கள். எல்லோரும்
அதைத்தான் செய்கிறார்கள். அப்படியும் இந்தி
பகுதியினர் இந்தி மட்டும் படித்தால் போதும்.
ஏனென்றால் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ
அலுவல் மொழியில் ஒன்றாக, சாராம்சத்தில்
ந டை மு றை யில் உ ள்ள து. உண்மையில்
உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு குழந்தை ஒரு
மொழி மட்டும் படித்து அனைத்து அதிகாரங்களையும்
வகிக்க முடியும். ஆனால் கன்னடத்திலும் ,
தமிழ்நாட்டிலும் இருக்கும் பிள்ளைகள் மூன்று
மொழிகளைப் படிக்க வேண்டும். சுமை அதிகம்

வரும்.அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி,
இங்கிலீஸ் தெரிந்தால் போதும் உங்களுக்கு எதற்கு
தமிழ் என்று சொல்வார்கள். ஆமாம் தமிழ்
வேண்டாம். நடைமுறையில் இந்தி இங்கிலீஷில்
இந்தி படித்தாலே மத்திய அரசில் வேலை கிடைக்கும்
அல்லவா என்று பிரச்சாரம் ஆகும்.பின்னர்
இந்தியை அடிப்படை மொழியாக மாற்றி
விடுவார்கள். இந்தி படித்துவிட்டு எந்த நாட்டில்
போய் வேலை செய்யப் போகிறீர்கள்?

யார் யாருடைய மொழியைக் கற்பது?

உலகத்தில் job market என்பது என்ன? நாம்
வளைகுடா நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர்
போகிறோம் இங்குதான் job market. Supply demand
என்று சொல்வார்கள். நம் பிள்ளைகள் படித்துவிட்டு,
எந்த இடத்தில் வேலைக்கு வாய்ப்புகள் இருக்கிறதோ
அங்கு இன்ஜினீயராகவோ, டாக்டராகவோ,
டீச்சராகவோ அல்லது ஒரு டெக்னீசியன் ஆகவோ
அதிக சம்பளம் தரக்கூடிய, அதிக வாழ்க்கை வசதி
இருக்கக்கூடிய, முன்னேறத் துணையாக இருக்கக்
கூடிய இடத்திற்கு வேலைக்குப் போகிறார்கள். அது
தானே உலகின் நியதி.
ஒன்று தமிழ்நாட்டில் வேலை பார்க்க வேண்டும்;
இல்லை என்றால் நாம் நம்முடைய படிப்பை
பொறுத்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,
அமெரிக்கா, ஜெர்மன் கொஞ்சம் குறைவாக
இருந்தால் சிங்கப்பூர், மலேசியா இன்னும் குறைவாக
இருந்தால் வளைகுடா நாடுகள் போகிறோம்.
அங்குதான் சம்பளம் அதிகம்; வாய்ப்பு அதிகம்.
அந்த இடத்திற்கு போவதற்கு எல்லாம் ஆங்கிலம்
மட்டுமே போதுமான தாக இருக்கிறது .
இல்லையென்றால் உள்ளூரில் போய் அரேபிய
மொழியோ, வேறுமொழியோபடித்துக் கொள்ளலாம்.
இந்தியை படித்து எந்த வேலைக்கு போகப்
போகிறீர்கள். இந்தி பகுதியில் இருக்கும் அத்தனை
பேரும் தென்னிந்தியாவுக்கு வேலைக்கு
வருகிறார்களே! அப்படியானால் யார் யாருடைய
மொழியை கற்றுக்கொள்வது. தமிழ்நாட்டிற்கு வரும்
ஒருவன் தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமா?
தமிழநாட்டுக்கு வரும் இந்திக்காரனிடம்
பேசுவதற்காக நாம் இந்தி படிக்க வேண்டுமா?
அடிப்படையில் மொழிக் கொள்கை என்பது
மொழி அரசியலாக இந்தி பேசாத மக்களுக்கு
எதிராகத்தான் இந்தியாவில் இருக்கிறது. இதைப்
வெறுமனே படிக்கும் விஷயமாக தயவுசெய்து
சுருக்கி விடாதீர்கள். அப்படி சிந்திக்க வைக்க
வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
நாமும் தவறாகப் புரிந்து கொள்கிறோம். டெல்லிக்கு
ரயிலில் போகும்போது இந்தி தெரியவில்லை
என்பதால் எனக்கு டீ வாங்கி குடிக்க முடியவில்லை.
டெல்லியில் கரோல் பாகில் ஷாப்பிங் செய்ய
போனேன் இந்தி தெரியவில்லை என்பதால் பேரம்
பேச முடியவில்லை. எங்கள் வீட்டு வளாகத்தில்
உள்ள குர்காவிடம் இந்தியில் பேச முடியவில்லை.
சிறிய கம்பெனி வைத்திருக்கிறேன், வேலை செய்ய
வந்த வடநாட்டுக்காரர்களிடம் இந்தியில் பேச
முடியவில்லை. ஒரு மொழியை முதல் வகுப்பிலிருந்து
படிப்பதற்கு இதெல்லாமா காரணம்?
அவமானமாக இல்லையா இதையெல்லாம்
சொல்வதற்கு! இதை 50 வருடமாக தமிழ்நாட்டில்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். துக்ளக் சோ
போன்றவர்கள் தொடங்கி இன்றைக்கு வரை இந்த
கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மொழியைபடிப்பதற்கானகாரணமே இல்லாமல்
அதை நாம் படிக்கிறோம் என்று சொன்னால்,
அப்படிப் படித்தே ஆக வேண்டிய தேவை என்ன?
உங்களுடைய வேலைவாய்ப்பை பறிப்பதற்குத் தான்
இந்தியை அவர்கள் பேசுகிறார்கள் என்பது
நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மயக்கம் வேண்டாம்

நம்முடைய மாபெரும் தலைவர்களான
பெரியாரும் அண்ணாவும் மற்ற தலைவர்களும்
திராவிட இயக்கத்தின் அன்றைய காலகட்டத்
தலைவர்களெல்லாம் முன்கூட்டியே இதை
கணித்துமிகச் சிறப்பாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் புத்தகங்களை மீண்டும் படியுங்கள். இந்தி
மொழி மீது வெறுப்பு இருந்தால் இந்திப் படம்
பார்க்க மாட்டோம். இந்தி பிரசார சபாவை
ஏற்கமாட்டோம். அரசியல் சாசன ரீதியாக இந்தி
மட்டுமே என்று சொல்வதை எதிர்க்கிறோம் என்று
முழங்குங்கள்.
அனைத்து மொ ழி களுக்கும் அனை த் து
அதிகாரமும் தரக்கூடிய ஒரு ஜனநாயக மொழிக்
கொள்கை வரவேண்டும். தேசிய கல்விக் கொள்கை
இதைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது;
அது தவறானது. மும்மொழி கொள்கை என்பது
ஏமாற்று வேலை. அதன் பொருள் தமிழ்நாட்டில்,
கர்னாடகத்தில் மூன்று மொழி; உத்தரப் பிரதேசத்தில்
ஒரு மொழி. அந்த ஒரு மொழி படிப்பவர்களுக்கு
தான் எல்லா பெரும்பான்மை வாய்ப்புகளும்
இருக்கிறது. அவர்களுக்கே இந்தியாவில் உள்ள
அனைத்து வேலை வாய்ப்புகளையும், தொழில்
வாய்ப்புகளையும் கொடுக்கக்கூடிய ஒரு சதிகார
மொழிக் கொள்கைதான் ஒருமொழிக் கொள்கை.
அ தனா ல்தான் 1968 இல் இரு மொழி க்
கொள்கையை நாம் கொண்டு வ ந்தோம் .
தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இன்னும் நிறையச்
செய்ய வேண்டி இருக்கிறது. அதைப் பற்றி கவலைப்
படுவோம். தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள்
மீது மாணவர்களைப் பார்த்து இந்தி வெறியர்கள்
நீலிக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்து நாமும் மயங்க
வேண்டாம். இந்த அரசு பள்ளி மாணவர்களின் பல
பிரச்சனைகளை நாம் தீர்க்க வேண்டும்.
எனவே, ஒரு ஜனநாயகப்பூர்வமான அனைத்து
மொழிகளுக்கும் சமவாய்ப்பு வழங்குகிற மொழிக்
கொள்கையே சரியான மொழிக்கொள்கை ஆகும்.
இதனைப் புரிந்து போராடுவோம்

 

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!