ஓர் உரைநடைஎழுத்து கவிதையைப்போல நம்மைக் கட்டிப்போட வைக்க முடியுமா?
முடிந்ததே. கவிதை என்ற பெயரில் பலரும் மோசமான உரைநடையை
எழுதிக்கொண்டிருந்தபோது இளவேனிலின் கார்க்கி இதழ் எழுத்துகள் தேர்ந்த கவிதைகளை விடவும் மேலாக நம்மைக் கிறுகிறுத்துப்போய் மயங்கித் திளைக்கவைத்ததே. இதை யாரும் மறுக்க முடியுமா? எழுபதுகளில் ‘கார்க்கி’ பத்திரிகையில் இளவேனில் எழுதிய கட்டுரைகளை மாந்திமாந்தி, மாணவர்களான நானும் என் நண்பர்களும் மயங்கிக்கிடந்தோமே,
மைதாஸ் கதையில் வருவதுபோல, ’கார்க்கி’யைத் தீண்டியவர் அனைவருமே தங்களுக்கு முன்னால் கனவாய் விரிந்த பொன்னுலகில் மிதந்தனரே. அதையெல்லாம் மறக்க முடியுமா?
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நான் வடசென்னையிலுள்ள தங்கசாலைப் பகுதியில்
வசித்துவந்தேன். என்னுடைய பள்ளி நண்பர்களான நடேசனும் சம்பத் குமாரும் என்னைப்போல
முற்போக்கு இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்களாக இருந்தனர். கல்லூரிப் பருவத்தில்
நாங்கள் ‘தேன்மழை’ என்னும் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தோம். அப்போதுதான் ‘கார்க்கி’ எங்கள் கண்களில் பட்டது. ’விறுவிறு’ வென்ற இளவேனிலின் உரைநடை அதற்கு முன் நாங்கள் அறியாதது. பிராட்வே சட்டக்கல்லூரிக்கு எதிர்க்கடையில் ‘கார்க்கி’ வரும். அது வருவதற்குள் போதை அடிமைகள் போல நாலைந்து முறை வந்துவிட்டதா
என்று போய் விசாரிப்போம். இதழ் கைக்குக் கிடைத்துவிட்டால் பரவசத்துடன் அங்கேயே நின்று
படித்துவிட்டுத்தான் அடுத்த வேலை.
பின்னர் ஒரு நாள் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவிலிருந்த ’கார்க்கி’ அலுவலகத்திற்குப் போய் எங்கள் கனவு நாயகன் இளவேனிலைச் சந்தித்துப் பேசினோம். இளவேனில், அலுவலகம் என்று தனியாக எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.
அவர் தங்கியிருந்த ‘மேன்ஷன்’ அறைதான் அது. இளம் வயதிலேயே பல உயரங்களைத் தொட்டவர்
அவர். வி. பி, சிந்தன், என். ராம், சந்துரு, உ. ரா. வரதராஜன், மைதிலி சிவராமன் போன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் முன்வரிசை யினருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது.
’கார்க்கி’யால் ஈர்க்கப்பட்டே நான் பத்திரிகைத் துறைக்கு வந்தேன். அந்த வகையில் இதழியலில்
எனக்கு முன்னோடி இளவேனில்தான். என் இதழியல் ஆசான் இளவேனிலே என் று
சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். இளவேனில் இருபதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த பத்திரிகைநடையாளராக இருந்தும்கூட, கவிஞர் என்றும், கதையாளர் என்றும், ஓவியர் என்றும், திரைப்பட இயக்குநர் என்றும் அவரைக் குறிப்பிடுவோர் ‘பத்திரிகையாளர்களின்
பத்திரிகையாளரான’ அவரை ஏனோ ‘மூத்த பத்திரிகையாளர் ’ என்று அடையாளப்
படுத்துவதில்லை. இதழியலில் அவரிடமிருந்து இ ன்றையோர் கற்றுக்கொள்வதற்கும்
பயன்கொள்வதற்கும் ஏராளமானவற்றை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். பயன் தெரிவோர்
கொள்வாராக.
1975ஆம் ஆண்டில் நான் ‘விடியல்’ இதழைக் கொண்டுவந்தபோது தலைப்பெழுத்தை எழுதித்
தரும்படி என் மானசீக ஆசானான இளவேனிலிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘நான் பஞ்சத்திற்கு
ஆண்டியானவன். வாங்க, பரம்பரை ஆண்டியான ஓவியரிடமே போவோம்” என்று சொல்லி, தமிழ்ப்
பதிப்புலகில் ஆயிரக்கணக்கான புத்தக அட்டைகளை வரைந் துதள்ளிய ஓவியர் ஆனந்தனிட ம்
அழைத்துச்சென்று தலைப்பெழுத்தும் கவிதை விமர்சனப் பகுதிக்கான ‘லோகோ’வும் வரையச்
செய்து வாங்கித்தந்தார். இளவேனிலே ஓர் ஓவியராக இருந்தும் கூட, பல ர் அவரை நாடிவந்து
ஓவியங்களைப் பெற்றுச் சென்ற நிலையிலும், ஆனந்தன், அமுதோன், மாருதி ஆகிய ஓவியர்களிடம் சென்று தனக்கான ஓவியங்களை இளவேனில் வாங்கிவருவார் . இளவேனிலின்
தலைப்பெழுத்துகளில் கூட ஆனந்தன், அமுதோன் பாணியின் ஆதிக்கம் காணப்படும்.
அதென்னவோ தெரியவில்லை, முற்போக்கான சிந்தனை கொண்ட இளவேனிலுக்கு நவீன
ஓவியங்களின் மீது இனம்புரியாத ஒவ்வாமை இருந்தது. அது தொடர்பாக நான் அவரிடம்
எவ்வளவோ விவாதித்திருக்கிறேன். ஆனால், அந்த விஷயத்தில் அவர் ஒரு பழைமவாதக்
கண்ணோட்டத்தையே கொண்டிருந்தார். ‘சங்கம்’ இதழில் ‘மொனாலிசாவின் புன்னகையை
கம்ப்யூட்டர் தோற்கடித்துவிடுமா?’ என்று ஒரு கட்டுரையை எழுதித் தன் கருத்தை அவர்
நிலைப்படுத்திக்கொண்டார்.
இளவேனிலின் எழுத்துநடையைப் போலவே ‘கார்க்கி’யின் வடிவமைப்பும் மிகச் சிறப்பாக
இருக்கும். ‘விடியல்’ இதழ்கைளக் கூர்ந்துகவனிப்பவர்களுக்குக் ‘கார்க்கி ’யின் வடிவமைப்புத் தாக்கம் என்னில் இருந்ததைக் காணலாம். ’கார்க்கி’க்குப் பின்னரும் ’நயனதாரா’,
‘பிரகடனம்’, ’குடியரசு’, ‘அங்குசம்’ எனப் பல இதழ்களை அவர் கொண்டு வந்தாலும் இன்னும்
‘கார்க்கி’ தான் அனைவரின் கண்ணிலும் கருத்திலும் தங்கியிருக்கிறது.
விவிலிய நடையில் எழுதப்பட்ட இளவேனிலின் உரைநடையின் வசீகரம் ‘கம்யூனிஸ்டுகளுக்கும்
அழகியலுக்கும் காத தூரம்’ என்ற பெருவழக்கால் ஏற்பட்ட பழியைத் துடைத்தெறிந்தது. இத்தனைக்கும் இளவேனில் தொடக்கக் கல்வியோடு தனது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டவர். பெரும் தமிழறிஞர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கைகூடிவராத அழகிய தமிழ் அவருக்கு வசப்பட்டிருந்தது.
அடித்தல், திருத்தல் இல்லாத இளவேனிலின் கையெழுத்துப்படியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். அத்தனை அழகாக, நேர்த்தியாக எழுதுவார். முத்துமுத்தான, வீச்சான, அழகிய கையெழுத்து அவருடையது. இன்னொரு சிறப்பு அச்சில் எப்படி வரவேண்டும் என்று நினைக்கிறாரோ அவ்விதமே எழுதித்தருவார். முதல் பத்தியின் முதலெழுத்தைக் கட்டம் போட்டு (பெரிய எழுத்தில் வரவேண்டும் என்பதைக் குறிக்க), உள்தள்ளி வரவேண்டிய வரிகளை உள்தள்ளியே எழுதி, சாய்வெழுத்துகள், தடித்த எழுத்துகள் வரவேண்டிய இடங்களில் அவற்றுக்கான குறிப்புகளை எழுதித் தருவது இளவேனிலின் பழக்கம். அவ்விதம்
அச்சுக்கும் பதிப்புக்கும் இணக்கமானவர் அவர். இளவேனில் எழுதிய ‘கவிதா’வைப் பதிப்பித்தபோது அவருடைய தமிழறிவு கண்டு நான் வியந்ததுண்டு.
நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால்
ஆதாரங்களோடு சுட்டிக்காட்டவும் அணியமாக இருக்கிறேன், தமிழ்ப் பேராசிரியர்கள் ,
துறைத்தலைவர்கள், துணைவேந்தர்கள் எழுத்தில் கூட, சாதாரண ஒற்றுப் பிழைகளும், ஒருமை,
பன்மை மயக்கங்களும் பென்னம்பெரிய இலக்கணப் பிழைகளும் நேர்ந்தது கண்டு நான் மனம்
நொந்ததுண்டு. ஆனால், உருபெருக்கிக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட இளவேனிலின் எழுத்தில் எள்ளளவும், எள்மூக்கின் நுனியளவம் இலக்கணப்பிழை தென்படாது. என்னுடைய
பதிப்புஅனுபவத்தில் அவரிடத்தே கண்ட அந்த அசாத்தியமான திறமையை நான் வேறு எவரிடத்தும் கண்டேனில்லை. இதை என் நண்பர்களிடம் பலமுறை சொல்லிச்சொல்லி வியந்திருக்கிறேன்.
”ஒரு தாய் தன் குழந்தையைக் கல்லில் அறைந்து கொல்வாள்” என்றோ, “எங்கள் எம். எல். ஏ.
எப்போது சாவார்?” என்றோ அதிர்ச்சி மதிப்புடனான தலைப்பு கொடுத்து கட்டுரைக்குள் வாசகனை இழுத்துக்கொள்வார் இளவேனில். பொதுவாகக் கவிதை வரிகள்தாம் நம் நினைவில் தங்கும். ஆனால், இளவேனிலின் உரைநடையில் பல வரிகள் எனக்கும் என்னைப் போன்று பல தோழர்களுக்கும் மனப்பாடம். “திருடர்களின் கோஷமும் தேசிய கீதமும் பிரிக்க முடியாத பந்தமாகிவிட்ட இந்த நாட்டில்” என்றும், “குடிகாரனின் நியாயமான சோகம் கூடப் பரிவுக்குப் பதிலாக ஆத்திரத்தையே ஏற்படுத்தும்” என்றும் போகிறபோக்கில் அவர் எழுதிச் சென்ற நூற்றுக்கணக்கான் வரிகள் மறக்கவொண்ணாதவை.
இளவேனிலைக் குறித்து எதிர்மறையான பல எண்ணங்களைப் பலர் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், என்னைப் போன்ற அணுக்கத் தோழர்களுக்கு அதெல்லாம் பொருட்டில்லை.
இளவேனில் என்றவுடன் நிமிர்வுடன் கூடிய புன்னகை பூத்த அந்த அழகான முகமும், அன்பன்றி
வேறொன்றறியா பண்பும் மட்டுமே என் நினைவில் என்றும் வாழும்.