கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில், பேராசிரியர் அன்பழகன் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வெளியிடப்படாமல்
இருப்பது கண்டு, அதற்கான நிதியுதவிகளைக் கொடுத்து, பல மருத்துவச் சுவடிகளைப் புத்தகமாக வெளியே கொண்டு வந்தா ர்கள். அப்படித்தான், பழனியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த, முருகனின் சீடரான போகர் சித்தரின் பாரம்பரிய மருத்துவச் சுவடிகளில் பல முதன்முதலில் புத்தக வடிவில் வெளிவந்தன. அவை மறுபதிப்பு செய்யப்படாததால், அப்படியான புத்தகங்கள் இருந்ததே நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இன்னமும், பல சித்த மருத்துவச்
சுவடிகள், கேட்பாரற்று மடங்களிலும், நூலகங்களிலும், மருத்துவச் சங்கங்களிலும், அருங்காட்சியகங்களிலும், பதிப்பாளர்களிடமும், மருத்துவர்களிடமும் பத்திரமாக பூட்டி
வைக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் அந்த தொண்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, அரிய சுவடிகள், நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்பது ஒட்டுமொத்த
தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர். தொ. பரமசிவன் அவர்கள், தமிழர்களுக்கும் சித்த மருத்துவத்திற்கும் இடையே உள்ள பண்பாட்டுப் பிணைப்புகளைப் பற்றி தீவிர ஆய்வு செய்து, சித்த மருத்துவத்தை முன்னிலைப்படுத்துவது மட்டும்தான், தமிழுக்கு அறிவியல் மொழி என்ற அடையாளம் வாங்கித்தரும் என்று தீர்க்கமாக எண்ணினார் . பாளையங்கோட்டையில், தனது வீட்டிற்கு அருகில் இருந்த அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பல போராட்டங்களிலும் துணை நின்றிருக்கிறார். தமிழர்களின் அறிவியல் சொத்தான சித்த மருத்துவத்தை பயிற்றுவிக்கும்
முதல் சித்த மருத்துவக்கல்லூரி அது என்ற பாசமும் அவருக்கு இந்த கல்லூரி மீது உண்டு. குஜராத் மாநிலத்தில் ஆயுர்வேதத்திற்கு என்று தனிப்பல்கலைக்கழகம் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டில் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதும், அகத்தியர் சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்த பொதிகைமலை அமைந்த திருநெல்வேலியில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் அவரது கனவு. அதற்காக அவர், பல
தன்னலமற்ற சித்த மருத்துவர்களையும், மாணவர்களையும் கலந்தாலோசித்து, ‘ நெல்லை சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கான மக்கள் இயக்கம்’ ஒன்றை ஆரம்பித்து, அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அந்த மாணவர் குழுவை வழிநடத்தி வந்த சித்த மருத்துவர் விஜய்
விக்ரமன் அவர்களுடன், நானும் தொ. ப அவர்களின் இல்லத்தில், அவரைச் சந்தித்து உரையாடிய நாட்கள் உண்டு.
இதே கோரிக்கையை முன்னிலைப்படுத்திப் போராடிய மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். உயர்நீதி மன்றமும் திருநெல்வேலியில் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சாதகமான தீர்ப்பு வழங்கியது. ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அப்போதிருந்த அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பின்னர் பேராசிரியர். தொ.ப வின் வழிகாட்டுதலின் படி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதிலும்
சாதகமான தீர்ப்பு வந்தது. அதன்பிறகும் பல்கலைக்கழகம் தொடர்பாக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்தக் காலகட்டத்தில் பேராசிரியர். தொ. ப உடல்நலம்
பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது வழிகாட்டுதலின்படி சித்த மருத்துவக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள்
முதல்வர் நவீன மருத்துவர் இராமகுருவும் அப்போதைய முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதற்கிடையே பேராசிரியர். தொ.ப, தனது திராவிட இயக்கத் தொடர்புகள் மூலமாக, தி.மு.க உயர்மட்டத் தலைவர்களிடம் அவர்களை சந்திக்க வைத்தார். நெல்லையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைவதற்கான தேவை எடுத்துரைக்கப்பட்டது. இதை ஏற்று, திராவிட முன்னேற்றக் கழகம் தனது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் இரண்டிலும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று அறிவித்திருந்தது.
திரு. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தி.மு.க ஆட்சி அமைத்து, மாநில திட்டக்குழு உருவாக்கப்பட்டு, அந்தக் குழுவில் சித்த மருத்துவரும் பிரபலமான பாரம்பரிய உணவுப்
பேச்சாளருமான கு.சிவராமன் ஒரு உறுப்பினராக்கப்பட்டார். முதல் சட்டமன்ற பட்ஜெட் உரையிலேயே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக 2 கோடி நிதியும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது தேர்தல் அறிக்கையையும், பேராசிரியர் தொ.ப வின் இறுதிக் கோரிக்கையையும் ஒருசேர
நிறைவேற்றியுள்ளார். இதற்காக ஒட்டுமொத்த சித்த மருத்துவர்கள் சமூகமும், தமிழக மக்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறார்கள்.
சித்தமருத்துவ அமைச்சகம்
மத்திய அரசு, இந்தியாவின் எல்லா பாரம்பரிய மருத்துவ முறைகளுக்காகவும் சேர்த்து, ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கி, அதற்காக தனி அமைச்சரையும் அமர்த்தி, சிறப்பாக ஆயுர்வேதத்தை நாடறிய, உலகறியச் செய்து வருவது எல்லாரும் அறிந்ததே. இதைப்போல, ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆயுர்வேதம், யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கென சிறப்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு , அதன் மூலம் , வேலைவாய்ப்புகளும், தொழில்களும், பெருகி அரசுக்கு வருமானமும் ஈட்டித்தருகின்றன. அந்த வகையில், தமிழகம் தவிர எந்த மாநிலத்திலும், சித்த மருத்துவத்திற்கான இடம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அண்டை மாநிலங்களான, கேரளா மற்றும் பாண்டிச்சேரியிலும் கூட
சித்த மருத்துவம் மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளைக் காட்டிலும், இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. எனவே, தமிழுக்கு தமிழகத்தை விட்டால் எப்படி வேறு கதியில்லையோ, அதைப் போலவே, தமிழ்மருத்துவமாம் சித்தமருத்துவத்துக்கும் வேறு கதியில்லாமல் இருக்கிறது என்ற உண்மையை ஒத்துக்கொள்வதில் எந்த சங்கடமும் இல்லை. எனவே, தமிழக அரசு சித்த மருத்துவத்துக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளும் இந்த அமைச்சகத்தின் கீழ் இருப்பதில் தவறல்ல. சொந்த வீட்டிலாவது, சித்த மருத்துவத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கச்செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகிறது. சித்த மருத்துவம், தனது மணம் மாறாமல், அறிவியல் கலந்து, அடுத்த தலைமுறையினருக்கும், கிடைக்கச்செய்வதே, தமிழன்னைக்கு முதல்வர் ஆற்றும் தொண்டாக இருக்கும்.
மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ கல்லூரி
இந்தியாவில் சுகாதாரத்துறையில் என்றுமே தமிழகம் முன்னோடிதான். மாவட்டத்துக்கு ஒரு நவீன மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை நாம் எட்டிப்பிடிக்கும் நிலையில் இருக்கும் போது, மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவக் கல்லூரியை அடுத்த இலக்காகக் கொள்ள வேண்டும். இந்த
கல்லூரிகள், அரசின் நவீன மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து செயல்பட்டால் சிறப்பு. ஆசிரியர்கள், கட்டிடங்கள், மருத்துவமனைப் படுக்கைகள், ஆராய்ச்சிக் கூடங்கள்,
நோய்கணிப்புக் கருவிகள், என அத்தனையும் இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இருக்க வேண்டும். இதனால், அரசுக்கு செலவுகள் வெகுவாகக் குறையும். மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதி தேவைப்பட்ட போது கிடைக்கும். இவ்வாறான
ஒருங்கிணைந்த மருத்துவ முறை (Integrative Medicine Approach) தற்போது உலக அளவில் மிகப்பிரபலமாகி வருகிறது. இந்தியாவில், தமிழகம் இதற்கு முன்னோடியாக
அடியெடுத்து வைக்க அருமையான வாய்ப்பாகும்.
ஏன் இத்தனை கல்லூரிகள் என்று கேட்கலாம். சித்த மருத்துவம் ஒரு வாழ்வியல் முறை, நம் பாரம்பரிய வாழ்வியல் அறிவு. நம் முன்னோர்கள் நோய் வராமல் காப்பதற்காக
உருவாக்கிய வாழ்வியல் முறையைக் கடைபிடிப்பதன் மூலம், அதிக செலவில்லாத ஆரோக்கியத்தை மக்களுக்குக் கொடுக்க முடியும். மேலும், பணம் பெற்றுக்கொள்ளும் படுக்கை
அறைகளும் இங்கு உருவாக்கினால், வெளி மாநில, வெளி நாட்டு நோயாளிகளையும் நாம் மருத்துவ சுற்றுலாவுக்காக கவரலாம், இது அரசுக்கு வருமானம். அதே கல்லூரியில்,
சித்த மருத்துவம் மட்டுமல்லாது, செவிலியர்கள், மருந்தாளுனர்கள், யோகா, வர்மம், உணவு முறைகள், தாவரவியல், கவுன்சிலிங், நோய் வருமுன் தடுப்பது, துணை மருத்துவப் படிப்புகள், மூலிகையியல், மூலிகை வணிகம், மூலிகை உயிரித் தொழில்நுட்பம், மூலிகை மருந்து ஆராய்ச்சி
என ஏகப்பட்ட படிப்புகளை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நோய்க்கும் Integrative Medicine கூட்டு மருத்துவ முறை சிகிச்சைப் படிப்புகளை ஆரம்பித்தால், உலகெங்கும் உள்ள நவீன மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என பலரும் இங்கு வந்து படித்துச் செல்லலாம். இது multipurpose and
integrated campus ஆக இருக்கும் போது, குறைந்த செலவில், பல பயன்களை மக்கள் பெறச் செய்யலாம்.
மாவட்டத்துக்கு ஒரு ஒருங்கிணைந்த மூலிகைப் பண்ணை
இந்த சித்த மருத்துவக் கல்லூரியின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும். குறைந்தது 25 ஏக்கர் நிலத்தில், ஒருங்கிணைந்த மூலிகைப் பண்ணை (Integrated herbal forest/farm) ஒன்றை அரசு அமைக்கலாம். அங்கு செடிகள், அதன் விதைகள், அதில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்,
மூலிகைப் பொருட்கள், சித்த மருந்துகள் தயாரித்து விற்கலாம். மாணவர்கள், தொழில் முனைவோர், சிறுதொழில் தொடங்குவோர், பொதுமக்கள் என அனைவருக்கும் பயிற்சி
அளிக்கலாம். அந்தப் பண்ணையுடன், வனத்துறை, தாவரவியல், மூலிகை ஆராய்ச்சித்துறை, தோட்டக்கலை, மூலிகை விவசாயம், பயிற்சி மையம் என அனைத்து வகையான படிப்புகளையும் இணைத்துவிட்டால் , மாணவர்களுக்கும் இது பயன்படும். பொதுமக்களுக்கு நல்ல சுற்றுலாத் தலமாகவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் பயன்படும். பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்களுக்கு மூலிகைகளைப் பார்த்துப் படிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் இது பயன்படும். அங்கேயே சித்த மருத்துவமனையும் அமையும்போது இயற்கை மூலிகைச்
சாறுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் மருந்துகளைச் செய்யலாம். இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவரும்.
தமிழகத்தில் பல்வேறு மண்வளங்களைக் கொண்ட, பல்வேறு காலநிலைகளைக் கொண்ட பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு நிலப்பரப்பிலும் என்ன மூலிகைகளை வணிகத்துக்காகப் பயிரிடலாம் என்ற விவரத்துடன், அந்த மூலிகைகளிலிருந்து மதிப்புக் கூட்டி பொருட்கள் தயாரித்தல் என்ற பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உதாரணமாக, வறள்நிலத் தாவரங்களான, வெள்ளை எருக்கு, திருகு கள்ளி, கருவேல், வெள்வேல், பனைமரம், என
தமிழகத்தின் எல்லா நிலங்களிலும் வளர்க்கச் செய்யுமாறு மக்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் நமது பாரம்பரிய அறிவைத் தரும்படியான அருங்காட்சியகம், நூலகம் மற்றும் புத்தக சாலைகள் மக்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும். கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அவர்களின் பாரம்பரிய
மருத்துவத்துக்கென்றே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் உள்ளதை நான் பார்த்துள்ளேன். தமிழகத்தில் அப்படி இன்று வரை நாம் யோசிக்கவே இல்லை. நமது மருத்துவ ஓலைச் சுவடிகளையும், மருந்துகள் மற்றும் மூலிகைகளையும், மருந்து செய்யும் கருவிகளையும் இன்னும் பல அம்சங்களையும் உள்ளடக்கி அருங்காட்சியகம் அமைக்கலாம். இந்த ஒருங்கிணைந்த மூலிகைப் பண்ணையுடன் இணைந்த அருங்காட்சியகமானது, பண்ணை முறைகள், சுற்றுச்சூழல்,
பாரம்பரிய விவசாயம், தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, பனை காடுகளும் அதன் பொருட்களும், தமிழ்த்துறை, ஓலைச் சுவடியியல், தொல்லியல், மானுடவியல்
(anthropology) என இன்னும் பல படிப்புகளை உள்ளடக்கிய கல்லுரி வளாகமாக அமைய வேண்டும். அங்கு நம் தமிழ்ப் பிள்ளைகள் மட்டுமல்லாது, வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டினர் வந்து படித்துச் செல்வர். இதனால், பல புதிய தொழில் தரும் படிப்புகள் தமிழக மக்களுக்குக்
கிடைக்கும். இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த மூலிகைப்பண்ணைகள் மாவட்டம்தோறும்
அமைக்கப்பட்டால், பலவகைகளில் மக்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களும், அரசுக்கும் நலன் பயக்கும்.
ஒருங்கிணைந்த மருத்துவ முறை
இன்றைய சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, ஒரு மருத்துவ முறையில் தீர்வு இருப்பதில்லை, ஆனால், இதை மருத்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. விவரம் அறிந்த நோயாளிகள், ஒரே நோய்க்கு, பல மருத்துவ முறைகளை அவர்களாகவே எடுத்துக்கொள்கின்றனர். உதாரணமாக,
நீரிழிவு உள்ள நோயாளி, அலோபதி மாத்திரையும் சாப்பிடுவார், அலோபதி மருத்துவருக்கு தெரியாமல், சித்த மருத்தும் உண்பார் . இருவருக்கும் தெரியாமல் கைவைத்தியமும் செய்வார். இதில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எனவே, இதைபற்றிய ஆராய்ச்சிகள்
முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இதை நவீன மருத்துவர்களோ அல்லது சித்த மருத்துவர்களோ தனியாகச் செய்ய முடியாது. நவீன மருத்துவத்தையும் சித்த
மருத்துவத்தையும் ஒருசேரப் படித்த ஒருவரால் மட்டுமே, இந்த ஆராய்ச்சிகளைத் திறம்படச் செய்ய முடியும். சில சித்த மருத்துவர்கள் BSMS, MBBS என இரண்டு படிப்புகளையும் படித்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் BSMS அல்லது MD க்குப் பிறகு MSc.Medical Pharmacology, Biochemistry,
Physiology, biotechnology, microbiology, biostatistics, epidemiology, genetics and molecular biology என பல நவீன
மருத்துவ அறிவியல் சார்ந்த படிப்புகளை படித்து விட்டு, ஆராய்ச்சியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களை interdisciplinary Siddha doctors என்று அழைப்பர். இவர்களையும், நவீன மருத்துவர்களையும், சித்த மருத்துவர்களையும், மருத்துவத்துறை அதிகாரிகளையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இதில் இருக்கும் நவீன மருத்துவரும், சித்த மருத்துவரும் கண்டிப்பாக சிறப்பு மருத்துவராக இருக்க வேண்டும்.
உதாரணமாக, புற்று நோய், குழந்தையின்மை, ஆட்டிசம், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள் என எந்த நோய்க்கான ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை முன்னெடுக்க வேண்டுமோ, அந்த துறைசார்ந்த மருத்துவர்களும், மேற்சொன்ன interdisciplinary Siddha doctors களும் இணைந்த குழுவை உருவாக்கி, அவர்கள் மூலம் இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறையை தமிழக அரசு
செயல்படுத்தலாம். ஒன்றிய அரசு இந்த முறையைச் செயல்படுத்த கடந்த பத்து ஆண்டுகளாக முயற்சித்து வந்தாலும், சரியான குழு அமைக்கப்படாததால், எப்படி ஆரம்பிப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், ஒன்றிய அரசு, பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளதால், அது மேலும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. அப்படியே முனைந்தாலும் சித்த மருத்துவத்துக்கு அங்கு இடம் கிடைக்குமா என்பது குதிரைகொம்புதான். தமிழகத்தைப் பொறுத்தவரை, நவீன மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்குவது எளிது. யோகா, வர்மம், உணவு மருத்துவம்
என ஏகப்பட்ட முறைகள் சித்தாவிற்குள்ளேயேபொதிந்துள்ளது. ஏற்கனவே, காலஞ்சென்ற நவீன மருத்துவர் சே.நெ.தெய்வ நாயகம் அவர்கள் AIDS என்ற கொடிய நோய்க்கு ரசகந்தி
மெழுகு, அமுக்கரா சூரணம் மற்றும் நெல்லிக்காய் லேகியம் என்ற மூன்று சித்த மருந்துக் கலவைகளைக் கொண்டு ஒருங்கிணைந்த மருத்துவ முறை மூலம். தாம்பரம் சானட்டோரியத்தில் பல எயிட்ஸ் நோயாளிகளைப் பிழைக்க வைத்து ஒருங்கிணைந்த மருத்துவம் தமிழகத்தில் சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார். அவரின் காலத்திற்கு பிறகு, அந்த ஆராய்ச்சியை எவரும் தொடராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த கூட்டுச் சிகிச்சை மூலம், மருத்துவச் செலவுகள் குறையும்; நாட்பட்ட நோய்களை எளிதில் கட்டுக்குள் வைக்க முடியும். சித்த மருத்துவத்தையும் நவீன மருந்தியல் துறைகளில் மேற்படிப்புகளையும் நான் படித்திருப்பதால், ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சியை கடந்த 13 ஆண்டுகளாக மணிப்பால் பல்கலைக்கழகத்தில் செய்து வருகிறேன். எனவே, இந்த ஒருங்கிணைந்த சித்தா- அலோபதி மருத்துவ முறை தமிழகத்தில் சாத்தியமான ஒன்றுதான் என்னும் நம்பிக்கையை உலகுக்கு உரக்கச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா (Siddha wellness Tourism) திட்டம்
கேரளா ஆயுர்வேத டூரிசம், மக்களை உலகம் முழுவதும் இருந்தும் கவர்ந்து கொண்டு வருவதால், இந்த துறை அந்த மாநில அரசின் கணிசமான வருவாய் ஈட்டும் துறையாக இருக்கிறது. அதைப் போலவே தமிழகத்திலும், மக்கள் அதிகம் கூடக்கூடிய கோவில்கள், திருத்தலங்கள், சுற்றுலாத்
தலங்களில் உலகத்தரம் வாய்ந்த படுக்கை வசதிகள் கொண்ட தனி அறைகள் அமைத்து, அங்கே வெளிநாட்டினர்கள் வந்து தங்கி சிகிச்சை பெற வசதி செய்ய வேண்டும். இதை தமிழ்நாடு சுற்றுலாத் துறையினருடன் இணைந்து செய்ய வேண்டும். இந்தியாவில் ஆண்டுதோறும் தமிழ்
நாட்டுக்குத்தான் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்களை நமது சித்த மருத்துவ மையங்களில் மருத்துவம் பார்க்க வரவழைத்தால், மருத்துவச் சுற்றுலாவும் (Medical tourism) அதிகரிக்கும், தமிழக அரசுக்கு வருமானமும் கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஆண்டு தோறும் ஒரு முறையாவது குடும்பத்துடன் தாய்நாடு வந்து செல்கிறார்கள். இன்றைய சூழலில் அவர்கள் பாரம்பரிய மருத்துவம் தேடி கேரளா செல்கின்றனர். அவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை தமிழ்நாட்டின் சித்த மருத்துவத்தைப் பெற இங்கு வந்து சென்றாலே, அதுவே போதுமான வருமானத்தை அரசுக்கு ஈட்டித் தரும். மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மண்ணை அடிக்கடி நம் மக்கள் எட்டிப் பார்ப்பர்.
இன்றுவரை, தமிழக உணவு, தங்கும் விடுதிகளில், கேரள ஆயுர்வேத மசாஜ் மற்றும் பஞ்சகர்மாதான் இருக்கிறது, தவிர, சித்த வர்ம மசாஜ் இல்லை என்பதிலிருந்தே நாம் இந்த
துறையில் இன்னமும் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது, இந்த மருத்துவச் சுற்றுலா, உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாக அமையும். வெளிநாட்டு நோயாளிக்கு, இந்தியாவில் தரமான பாரம்பரிய மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் நவீன மருத்துவக் கூட்டுச் சிகிச்சையும் குறைந்த விலையில் கிடைப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இப்படி ஒருங்கிணைந்த மருத்துவம் நம்மால் கொடுக்க முடியுமானால், உலக நோயாளிகளைக் கவரவும், அரசுக்கு
பணம் ஈட்டவும் வேறென்ன வேண்டும் நமக்கு? தமிழ்நாடு அரசின், தங்கும் விடுதிகள் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருக்கிறது. அங்கெல்லாம், கண்டிப்பாக ஒரு சித்த மருத்துவப் பிரிவு ஆரம்பிக்க வேண்டும், அதன் வழியாக தமிழ் மருத்துவ மணத்தை உலகறியச் செய்ய
வேண்டும். இந்தத் திட்டத்துக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும்.
மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க, தமிழ்நாட்டின் எல்லா ரெயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும், அந்தந்த ஊரில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளை/ மையங்களைப் பற்றி விளம்பரம் வைக்கலாம். இன்றளவும் எவ்வளவோ விமான நிலையங்களை இந்தியாவிலும்,
வெளிநாடுகளிலும் கடந்து செல்கிறேன். பல நாட்டு அரசுகள் அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பற்றியும், சிகிச்சை நிலையங்களைப் பற்றியும் விழிப்புணர்வு வீடியோ
மற்றும் பதாகைகள் வைத்து பயணிகளை ஈர்க்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் கூட ஆயுர்வேதம் மற்றும் பஞ்ச கர்மா வைத்திய முறைகளுக்கு அரசே விளம்பரம் தருகிறார்கள். இதைப் போல, தமிழக அரசும் சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வும், விளம்பரமும், செய்தால் அது ஒரு சிறந்த முயற்சி ஆகும்.
இந்த மையங்களில், மூலிகைத் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், நாட்டு மாடு/ஆடு/கோழி/காடை பண்ணைகள், இயற்கை விவசாயம், நடைபாதை அமைக்கலாம். அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பால், போன்றவை களை வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே உணவாகத் தயார் செய்யலாம். இயற்கை மர செக்கு ஒன்று வைத்துக் கொள்ளலாம். அவர்களையும் உடன் அழைத்துச் சென்று புதியதாக மூலிகைகள் பறித்து, மூலிகைத் தேநீர் தயாரித்துக் கொடுக்கலாம். குளிக்கும் மூலிகைத் தண்ணீரில் இருந்து, பல்பொடி, கோரை/ பனை ஓலைப்பாய் வரையிலும்,
அனைத்திலும் தமிழனின் பாரம்பரியம் கமழ வேண்டும். வீட்டு மருத்துவத்தில் எவ்வாறு மூலிகைகளைப் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளிக்கலாம். நமது பாரம்பரிய முறைப்படி கட்டிய ஓட்டு வீடுகள், குடிசைகள், செட்டிநாடு அமைப்பில் கட்டிய வீடுகள் என
இந்த மையத்தை அமைத்துக் கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இதனுடன் சேர்த்து நமது பாரம்பரிய விளையாட்டுகள் (கபடி, உறி அடித்தல், காளை அடக்குதல், சிலம்பம்), நாட்டியம், நடனங்கள், வில்லுப்பாட்டு, கோவில் திருவிழாக்கள், பொங்கல், போன்ற தமிழர் கலாச்சாரம் குறித்த நிகழ்வுகளையும் கண்டு களிக்க ஏற்பாடு செய்யலாம். சிலவேளை, அவர்கள் விருப்பப்பட்டால், நமது மையத்துக்கே அந்தந்த கலைஞர்களை வரவழைத்தும் நிகழ்சிகள்
நடத்தலாம். இந்த சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா மையங்கள் நன்றாகச் செயல்பட்டால், தமிழக கிராமியக் கலைஞர்களின் வாழ்வில் இது ஒளியேற்றும் என்பதில் ஐயமில்லை.
சித்த மருத்துவ இருக்கைகள்
பாரம்பரிய மருத்துவத்துக்கென்று ஒவ்வொரு நாட்டிலும், தனி நிறுவனங்களோ அல்லது தனித் துறைகளோ அமைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவச் (Integrative Medicine) சிகிச்சை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சித்த மருத்துவம் இன்றளவும், தமிழ்
நாட்டை விட்டு தாண்டவில்லை. இந்திய ஒன்றிய அரசு, இந்தியா முழுவதும் உள்ள AIIMS மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேதத்தை வெகுவாகப் பரப்பி, அதற்கென தனிச் சந்தையை உருவாக்கி உள்ளது. உலகத்தின் பல நாடுகளின் பல்கலைக் கழகங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவங்களின் இருக்கைகள் அமைய வழிவகை செய்கிறது, அதற்கான மூன்று வருடச் செலவையும் இந்திய அரசே ஏற்கிறது. அதன்படி, பல ஆயுர்வேத மற்றும் யோகா
இருக்கைகள் அமைத்து, அதன் மூலமாக பல ஆராய்ச்சிகள், மாநாடுகள் மற்றும் பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். இன்றுவரையிலும், ஒன்றிய அரசு ஒரு சித்த மருத்துவ இருக்கை அமைப்பதற்கான சிறிய முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்த
சீரிய முயற்சியை தமிழக அரசு எடுத்து செயல்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் ஒவ்வொரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழும் பாரம்பரிய சித்த மருத்துவ
இருக்கைகள் அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்தப் பணிகள் செவ்வனே நிறைவேறும் போது, அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் கூட தமிழர்களின் மருத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். அவர்களின் நோய்களை சித்த மருத்துவம்
போக்கும் பட்சத்தில், தமிழ் பெயர் கொண்ட சித்த மருந்துகளையும், மூலிகைகளையும், உணவுகளையும் அவர்கள் நாவு மந்திரமென உச்சரித்து கிடக்கும். தமிழுக்கும் அறிவியல் மொழி என்ற பெயர் கிடைக்கும். அதற்கு அப்புறம், சித்த மருத்துவத்தைப் படிக்க வேண்டுமானால், தமிழை தானாகப் படிக்க வருவார்கள்.
பல நாடுகளில், சித்த மருத்துவ இருக்கைகளை அமைப்பதில் சட்டச் சிக்கல் இருக்கலாம், செலவும் அதிகம் ஆகலாம். ஆனால், இந்தியாவுக்குள் உள்ள மாநிலங்களில் சித்த மருத்துவ இருக்கை அமைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. முதலில் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவப்
பல்கலைக்கழகங்களைத் தெரிந்தெடுத்து, அங்கு சித்த மருத்துவ இருக்கைகளை/ துறையை அமைக்க வேண்டும். அதன் மூலம், தமிழ் மருத்துவ நூல்கள் மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்தல், சித்த மருத்துவத்தைப் பரப்புதல், ஆராய்ச்சிகள் செய்தல் எனப் பல உச்சகட்ட வேலைகளைச்
செய்யலாம். எங்கெல்லாம் சித்த மருத்துவத்துக்கு சந்தைகளை உருவாக்குகிறோமோ, அங்கெல்லாம் தமிழைப் பற்றிய சிறந்த புரிதல்கள் வரும், மாநிலங்களுக்கிடைய ஒற்றுமை வளரும். அந்த இருக்கைகள், சித்த மருத்துவப் பணியோடு, தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் செயலையும் செய்யலாம், தமிழகத்தின் ஒரு பரப்புரை மையமாக அது இயங்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் இதைச் செய்தாலே போதும். அத்தனை செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தலாம், அல்லது தமிழக அரசு அந்தச் செலவில் சில பகுதியை அளிக்கலாம். பிற்காலத்தில், இவை ஒவ்வொன்றும் ஒரு சித்த மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட வேண்டிய அளவில், அடித்தளமிட்டு ஆரம்பம் முதலேதொலைநோக்குச் சிந்தனையுடன் இதை செயல்படுத்த
வேண்டியது அவசியம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் மட்டுமே சித்த மருத்துவம் பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், சித்த மருத்துவத்தை பாரம்பர்ய மருத்துவர்களோ அல்லது பட்டம்பெற்ற சித்த மருத்துவர்களோ பயிற்சி செய்வதற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. ஆக தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களிலேயே சித்த மருத்துவத்தை அறிமுகம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகம் கடந்த 5 வருடங்களாக சட்டப்படி பெரும்முயற்சிகள் செய்து, 2020 ஆம் ஆண்டுதான் தமிழரின் சித்த மருத்துவம் கர்நாடகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறையாக அரசு இணைத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகூடங்கள், 53 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து படிக்க வரும் மாணவர்கள், அதிகத்
தமிழர்கள் (இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து) வந்து படிக்கும் பல்கலைக்கழகம், என இந்த இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகத்துக்கு மிகப்பெரும் வரலாறு உண்டு. இத்துடன் நமக்காகப் போராடி சித்த மருத்துவத்துக்கு கர்நாடகத்தில் அரசு அங்கீகாரம் வாங்கித்தந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இத்துடன் நில்லாது, சித்த மருந்துகளை ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி, PhD பட்டமும் வழங்கி வருவது நம்மில் பலருக்கும் தெரியாது.
உலகத்திலேயே முதல் முறையாக, சித்த மருந்துகளை நவீன மருத்துவத்துடன் இணைத்து புற்றுநோய், சோரியாசிஸ் என்ற தோல்நோய், குழந்தைப்பேறின்மை என பல நோய்களுக்கு
ஒருங்கிணைந்த மருத்துவ முறையை முன்னெடுக்கும் முதல் பல்கலைக்கழகம் இதுதான். அதற்கு கைமாறாக தமிழ் சமூகம் ஏதாவது செய்தாக வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்கத் தமிழர்கள், இணைந்து Global Center for Siddha Medicine and Research என்ற அமைப்பை North Carolina வில் ஆரம்பித்து, முதல் சித்த மருத்துவ இருக்கையை இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஒட்டு மொத்த பணியில் நானும்
ஈடுபட்டுள்ளேன் என்பதால், உண்மை பிரளாமல் இங்கு உரைக்க முடியும். இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் தனது மருத்துவக் கல்லூரிகளையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. உலக நாடுகளின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களுடன் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த மணிப்பால் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ இருக்கை அமைவதன் மூலம், சித்த மருத்துவம்
இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பரவ வழிவகுக்கும்.
திருவள்ளுவர் சிலையை கர்நாடகத்தில் நிறுவியது போல, இந்த சித்த மருத்துவ இருக்கையும், கர்நாடக மக்களுக்கு தமிழ் மீது சரியான புரிதலை ஏற்படுத்தும். இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள உடுப்பி என்ற இடமானது 1956 வரைக்கும் சென்னை மாகாணத்தின் ஒரு பாகமாக
இருந்து வந்துள்ளது. அக்காலத்தின் தமிழக முதல்வர் காமராசர் இந்த மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்களைத் திறந்து வைத்த கல்வெட்டு இன்னமும் இங்குண்டு. கண்ணகி, கேரளா வழியாக இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாக மக்கள் நம்புகின்றனர். தமிழ் நாட்டின் கண்ணகியை இங்கு மங்களா தேவி என்று கோயில்கள் வைத்து வணங்குகின்றனர், அதனால் தான் மங்களூர் என்ற பெயரும் வந்தது. முருகனுக்கு, சுப்பிரமணியன் என்ற பெயரில் பல கோவில்கள் இங்குண்டு. தமிழின் பிள்ளையான துளு மொழியின் பிறப்பிடமும் இந்த மண்தான், இதற்கு துளுநாடு என்றும்
ஒரு பெயருண்டு. இங்கு இன்னமும் துளு பேசும் மக்கள், தமிழுக்கும் தனக்கும் உள்ளதொடர்பை பற்றிப் பெருமையோடு பேசுகிறார்கள். துளு மொழியின்/ மக்களின் கலாச்சாரத்திற்கும்,
அவர்களின் பாரம்பரிய மருத்துவத்துக்கும், நமது சித்த மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் ஒற்றுமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது, இங்கு சித்த மருத்துவம்
அதிகாரபூர்வமாக இல்லாதால், துளு மருத்துவ முறைகள் ஆயுர்வேத மருத்துவமாக மாற்றப்படுவது நடக்கிறது, இங்கு சித்த மருத்துவ இருக்கை அமைந்தால், நம் சகோதர துளுவையும் நம்முடன் இணைக்க முடியும். தமிழர்களை குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையை கொண்ட கர்நாடகத்தில்,
சித்த மருத்துவம் வளர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசே செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த மணிப்பால் பல்கலைக்கழகம், ஏற்கனவே பல சித்த மருந்துகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அறிவியல் தரவுகளை வெளிகொண்டு வந்திருப்பதோடு, சித்த மருத்துவ இருக்கை அமைந்தால், அதற்கென தானும் நிதியுதவி செய்வதாக இப்பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது நமக்குப் பெருமையே. போதிய நிதியின்மையால், முழுவீச்சில் இன்னமும் இது
செயல்படவில்லை. இந்த இருக்கைக்காக, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமானால், முதல் சித்த மருத்துவ இருக்கையை தமிழகம் தாண்டி, நம்மால் இங்கு நிறுவ முடியும். இதே போன்று இந்தியாவின் தலைசி றந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சித்த மருத்துவ இருக்கை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இதனால் பல தமிழ் வல்லுனர்கள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கு உலக அளவில் வேலை கிடைக்கும். தமிழ் நாட்டில் இருந்துதான், மூலிகைகள், சிறு தானியங்கள், பனை
கருப்பட்டி போன்ற சித்த மருத்துவப் பொருட்கள் எல்லாமே வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்னும் போது, பல தமிழர்கள் உலக
அளவில் வியாபார வாய்ப்புகளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளும் கைமேல் பலன் பெறுவர். இவ்வாறெல்லாம் நாம் செய்தால் மட்டுமே நம் தமிழ் அன்னைக்கு கிடைக்க வேண்டிய உலக அங்கீகாரம் கிடைக்க முடியும். நம் தமிழ் மொழிக்கு, அறிவியல் மொழி
என்ற அடையாளம் கிடைத்தால் அதைவிட பெரிய அங்கீகாரம் தமிழன்னைக்கு வேறு இல்லை. சித்த மருத்துவத்தின் வளர்ச்சியே தமிழின் வளர்ச்சி; தற்போதைய அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழுக்கும் சித்த மருத்துவத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதே
ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும்.