உலகில் எந்தஒரு சமயமும் அதுதோன்றிய சமூகத்திலிருந்து நாடுகடந்தும் கண்டம்கடந்தும்
பரவிச் செல்லும்போது, ஆங்காங்கேவேர்கொள்ளும் மனிதகுலம் ஏற்கெனவே பின்பற்றிவந்த சமூக,
சமயம்சார்ந்த பண்பாட்டு முறைகளையும் தன்னில் கலந்தாக வேண்டியது தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதனால் சிலபோது அச்சமயத்தின் கோட்பாடுகள்கூட தன்னில் திரிவுப்பெற்று மாறுபட்ட கருத்தாக்கத்தோடு பின்பற்றப்பட்டுப் போவதுமுண்டு. இத்தகைய மாற்றங்களுக்கு ஒரு சமயம் இடமளிக்கும் அளவினைப்பொருத்தே அம்மதம் தனது நெகிழ்ச்சித் தன்மையை வெளிக்காட்டுகிறது. இத்தன்மையால் அச்சமயம் அதன் தனித்தன்மையையும் குறைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.
இவ்வகையில் தமிழகத்தில் கிறித்தவம் கி.பி முதலாம் நூற்றாண்டு முதலாகவே இயேசுவின்
சீடரான புனிதத் தோமா மூலமாக விதைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கி.பி 14ஆம் நூற்றாண்டு
முதல் கத்தோலிக்க கிறித்தவமும் 18 ஆம் நூற்றாண்டு முதல் சீர்திருத்தக் கிறித்தவமும் வேகமான
வளர்ச்சியைக் கண்டது. இக்கிறித்தவச் சமயப்பரவல் தமிழக மக்களின் பண்பாட்டு மாறுபாடுகளின் தன்மைகளையும் அம்மாறுபாட்டின் வேகத்தையும் மாற்றியமைத்திருக்கிறது எனலாம்.
பொதுவாகப் பண்பாடு என்பது மனிதர்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பது. எனவே
மனித இனத்தின் வாழ்வியல் முறைகள் , சமயக்கொள்கைகள் மற்றும் அவற்றின் நம்பிக்கைகளால் பெரிதும் தாக்கமடைந்து மாற்றமடைந்தபடியே சமுதாயவெளிகளில்
இப்பண்பாடு மக்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. தனிமனித வாழ்வைக் கட்டமைக்கும் சமயம் சார்ந்த நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்காச்சாரங்கள், விழாக்கள் போன்றவற்றிற்கு மக்கள்கொள்ளும் அர்த்தங்களே மனிதக் குழுக்களின் முறையான
பண்பாட்டைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் வந்த ஐரோப்பியர்களால்
சீர்திருத்தக் கிறித்தவம் பரவியபோது அச்சமயக் கொள்கைகள் அதை ஏற்றுக்கொண்டவர்களால்
கடைப்பிடிக்கப் பட்டதோடு அதனிமித்தம் எழுந்த அவர்களது கலாச்சார மாறுபாடுகள் தங்களது
தாய்ப்பண்பாட்டின் சாரத்தையும் உள்வாங்கியே நகர்ந்தன. இதனால் ஏற்பட்ட பண்பாடு ஏற்றல்
கிறித்தவத்தின் தனிச் சிறப்பானதாக மக்களால் ஏற்கப்பட்டு இன்றுவரையிலான அதன் வளர்ச்சியில் பல்வேறு மாறுதல்களையும் கண்டு வருகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டுவந்த பண்பாட்டுமுறைமைகள் சீர்திருத்தக் கிறித்தவத்தின் கலப்பால் புதிய வடிவம் பெற்றதோடு அச்சமயநெறிகளிலும் பண்பாட்டின் சாயல்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய கட்டாயத்திலிருந்தது. எவ்வித நெகிழ்வும் தராத எந்தவொரு நிறுவனமும் நிலைபெற்றோங்க இயலாது என்பது சமயத்திற்கும் பொருந்தும். பண்பாடு ஏற்றல் என்பது நேரடியான அல்லது மறைமுகமான தொடர்புமூலம் தனிநபர்
அல்லது குழு இன்னொரு பண்பாட்டுச் சிறப்புகளை ஏற்றுநடத்தலே என்று வரலாற்றாளர் தா.இராபர்ட் சத்திய ஜோசப் குறிப்பிடுகிறார்.
கிறித்தவத்தின் அடிப்படைக் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களையும் ஏற்காமல் கடைபிடிக்கச்
செய்யும் முக்கிய நோக்கோடு அச்சமயம் சார்ந்த நம்பிக்கைகளினடிப்படையில் அச்சமயம் மக்களால் ஏற்கப்படுவதற்கு முன்பிருந்த கலாச்சாரத்தை முற்றிலும் விட்டுவிட்டுப் புதிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வது எளிதானதாக மக்களால் உணரப்படவில்லை.எனவே அவர்களது வாழ்வியல் மரபுகளைத் தவிர்க்காமலே கிறித்தவத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றும் போதனைகள் ஆரம்பக்கால சமயப் பரப்புனர்களால் மேற்கொள்ளப்பட்டு அதன் பல பரிமாண
மாற்றங்களால் இன்றுவரை பின்பற்றப்பட்டும் வருகிறது.
குறிப்பாக ஐரோப்பியர்களின் வருகையின்போது திருநெல்வேலி மாவட்டம் அதாவது இன்றைய
தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் நாட்டார்
தெய்வ வழிபாட்டுமுறைகளில் விலங்குகளைப் பலியிட்டுக் கொண்டாடுதல் வழக்கமான மரபு.
அதன்படி கிறித்தவத்தில் உயிர்ப் பலிகள் கூடாதெனினும் ஆண்டுக்கு ஒருமுறை திருநெல்வேலி
திருமண்டலத்தில் நடைபெற்று வரும் மாம்பழச்சங்க பண்டிகை அது தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ( கி.பி 1834)அக்காலத்திய கிறித்தவர்கள் தாங்கள்
இருந்து வந்த பழைய மதவிழாக்களை (ஆனி, ஆடி மாதம்) மறக்க இயலாமல் கிறித்தவர்களான
பின்னரும் அதே மாதங்களில் கிறித்தவக் கோட்பாடுகளினடிப்படையில் விழாக்களாகக்
கொண்டாடி தங்களது இயல்பான மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதன்படி அத்திருமண்டலத்தைச் சேர்ந்த அனைத்து திருச்சபையினரும் ஒரே இடத்தில் (பேராலயத்தில்) மூன்று நாட்கள் கூடி உணவிற்காக ஆடுகளை வெட்டிச் சமைத்துஉண்டு பின்னர் வீடுகளுக்குச் செல்வர். மாட்டு வண்டிகளில் குடும்பமாக பயணித்துச்செல்லும் இம்மக்கள் வீடு திரும்பும்போது வில்வண்டிகளின் மேற்கூரையில் ஆட்டுத் தோல்களை விரித்துக் காயவைத்தபடி தங்களது பண்டிகைக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் முகமாகச் செல்வர்.
நாட்டார் தெய்வ வழிபாடு அன்றைய இடைநிலை மற்றும் அடித்தள மக்களுக்கானது. அதே நேரம்
அவர்கள்தான் பெரும்பாலும் கிறித்தவத்தை தழுவியதும் கூட. இந்நிலையில் கிறித்தவச் சமய
கோட்பா டுகளும் ஏழை எளிய மக்களை அரவணைக்கும் வகையில் இருந்தது. (விவிலியம்
[லூக்: 6:24-25]) மேல்மட்டத்தினருக்கான சமய க்கொள்கைகள் அடித்தள மக்களை புறந்தள்ளுவதாகவே இருந்ததால் சமத்துவத்தைப் போதித்து ஏழை எளியோரை அரவணைத்த
கிறித்தவம் அத்தகையோரால் வரவேற்கப்பட்டது.
கிறித்தவ முறையின்படி நிகழ்த்தப்பட்ட சமயவிழாக்கள் இத்தகைய புதியக் கிறித்தவச் சமய
ஏற்பாளர்களால் தங்களது பழைய சமயவழிபாட்டு முறைமைகளையும் இதில் கலக்க முற்பட்டனர்.
குறிப்பாக விழாக்காலங்களில் மாவிலைத் தோரணம் கட்டும் பழக்கத்திற்குப் பதில் பனையோலை
அல்லது தென்னையோலையால் சிலுவை வடிவ தோரணங்கள் செய்து ஆலய வளாகத்தை
அலங்கரிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
அதைப்போன்றே திருமண விழாவில் முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடும் விழா
திருமணத்திற்கு முந்தின நாள் ஆலமரம் அல்லது திருமண முருங்கை மரத்தின் கிளையை இலைகளை அகற்றி அதன் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் தோய்த்த கயிறால் கட்டுவர். அதன் இடைப்பகுதியில் வெள்ளைநிற துணியில் மஞ்சளைத் தடவி அதில் செப்புக்காசு வைத்துக் கட்டுவர். அடியில் நவதானியங்கள் வைத்து மரத்திற்கு திருநீறும், குங்குமமும் வைத்து பூசை செய்வர். மணமக்களின் குடும்ப உறவினர்கள் அனைவரும் சூழ்ந்து நிற்க அம்மரக்கிளை முகூர்த்தக்கால் என்ற பெயரில் நடப்படும்.
இந்நிகழ்வு கிறித்தவத்திற்கு மாறியவர்களால் சற்று மாற்றம்பெற்று ஆலயப் போதகரை அழைத்து
அதைப்போன்றே மரக்கிளையில் சந்தனத்தால் சிலுவைஅடையாளத்தை வரைந்து ஜெபம்செய்து
கிறித்தவச் சமயம்சார்ந்த பாடல்களைப் பாடி நடப்படுகிறது .
நாட்டார் வழக்காற்றுத் தெய்வ வழிபாட்டினரின் வழிபாட்டின் அடையாளமாக நெற்றியில் திருநீறு,
குங்குமம் போன்ற அடையாளங்களை இடுவதைப் போன்றே கிறித்தவ ஆலயங்களில் குத்துவிளக்குகளில் எண்ணை ஊற்றப்பட்டு ஆராதனை அல்லது வழிபாடு முடிந்ததும் வெளியே வரும்போது அக்குத்து விளக்கிலுள்ள எண்ணையை விரல்களில்தொட்டு நெற்றியில் சிலுவை
அடையாளமிட்டுச் செல்வர். ஓரடிமுதல் ஐந்தடிக்கும்மேல் உயரமுள்ள குத்துவிளக்குகள்
இன்றும் சிலஆலயங்களில் உள்ளன. ஆனால் இம்முறையும் தற்சமயம் பல ஆலயங்களில்
வழக்கொழிந்து வருகிறது.
கிறித்துவத்தில் திருமண முறையிலும் கழுத்தில் சிலுவை அடையாளம் பதிக்கப்பட்ட செயின்
அல்லது மஞ்சள்நிற கயிறு அணிவது தமிழ்ப் பண்பாட்டின் ஏற்பே ஆகும். கிறித்தவ சமயப்பரப்பினர்களான ஐரோப்பியர்கள் மோதிரம் அணிவதையே பழக்கமாகக் கொண்டிருப்பினும் தமிழகப் பண்பாட்டின் தாக்கத்தை ஏற்றே கிறித்தவம் வளர்ந்தது.
வீடு கட்டும்போது தமிழக மரபுப்படி அடிக்கல்நாட்டு விழா அல்லது நிலைவிடுதல்
விழாவிலும் கோழியின் இரத்தம் தெறிக்கவிடுவதும் ஐம்பொன் கலந்த உலோகம் வீட்டின்
நிலைக்காலுக்குள் புதைக்கப்படுவதும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதையே கிறித்தவர்கள் கிறித்தவ போதகர் வந்து பிராத்தனை செய்து நிலைக்கதவில் சந்தனத்தால் சிலுவையடையாளமிட்டு தண்ணீரைத் தொட்டு அதை இயேசுவின் இரத்தமாகப் பாவித்து அதைத் தெளித்து தொடங்கி வைப்பார். கதவில் ஆட்டுக்கடாவின் இரத்தம் தெளிக்கும் வழமை யூதர்கள் மரபில் இருந்துவந்த ஒரு வழக்கமாக விவிலியம் தெரிவிக்கிறது (யாத்திராகமம்12 : 7, 22).
விவிலியத்தில் திருமணமாகிச் செல்லும் மணப்பெண்ணை முந்தின நாள் உறவினர்களோடு
தோழியரும் இணைந்து பலவாறு வாழ்த்தும் முறை இருந்திருக்கிறது( விவிலியம்_ஆதியாகமம் 24:60). இதனடிப்படையில் தமிழகக் கிறித்தவர்களிடையேயும் திருமணத்திற்கென்றே
பாடல்கள் இயற்றி மணப்பெண்ணை வாழ்த்தும் பழக்கத்தை ஆரம்ப கால மிஷனெரிகள்
ஏற்படுத்தியிருக்கின்றனர். இம்முறை இன்றுவரை கிறித்தவ கிராமப்புறங்களில் உள்ளது. இம்முறையின் சிறப்புத் தன்மையால் சமயப் பாகுபாடு பாராமல் பிற மதக்குடும்பங்களிலும் கூட இப்பழக்கத்தை ஏற்று நடப்பிக்கின்றனர்.
திருமணத்தன்று மாப்பிள்ளையின் சகோதரிகளுள் மூத்தவர் பேளைப்பெட்டி(வேலப்பெட்டி) என்ற
பனையோலையால் செய்யப்பட்ட பெட்டியில் அரிசி, தேங்காய், பழங்கள், வெற்றிலைப்பாக்கு,
மஞ்சள் குங்குமம் மற்றும் மணப்பெண்ணிற்கான அலங்காரப் பொருட்கள் அனைத்தும் வைத்து
இடுப்பில் சுமந்தபடி மாப்பிள்ளையின் பின்னால் நடந்து செல்வார் . இப்பெண்ணிற்கு ‘வேலப்பெட்டிக்காரி’ என்று பெயர். இப்படி சுமப்பதால் திருமணத்திற்குப் பிறகும் அண்ணன்
தங்கை(சகோதரிகள்) உறவு நீடிக்கும், குடும்ப ஐக்கியம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தென்
மாவட்டங்களில் இருந்து வருகிறது. வேலப்பெட்டி சுமக்கும் பெண்ணிற்கு பெண் வீட்டிலிருந்து
தங்கத்தால் மோதிரம் வழங்கும் பழக்கமும் சில இடங்களில் இன்றைய நாட்களில் உள்ளது .
இம்முறையின் சிறப்புத் தன்மைகருதி கிறித்தவத்திற்கு மாறியவர்களும் அதனைத் தொடர்ந்து அந்தப் வேலப்பெட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது. ஆனால்
வேலப்பெட்டிக்குள் அரிசி, பழங்கள், கருப்புக்கட்டி (இனிப்பு பொருள்), மஞ்சள் ஆகியவை இடம்பெறும்.
அதைப் போன்றே கருவுற்ற பெண் வளைகாப்பு எனப்படும் விழா செய்யப்பட்டு தனது தாய்வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் போது பெண்ணின் கையில் வேப்பிலையை கொடுத்து அனுப்புவர். போகும் பாதையில் பேய்ப்பிசாசுகள், காத்துக் கருப்பு அண்டாது என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். இதே முறையை கிறித்தவத்திலும் பின்பற்றி வேப்பிலைக்குப் பதிலாக வேதாகமத்தை(விவிலியம்) கொடுத்து அனுப்பும் பழக்கம் உள்ளது.
இத்தகைய பண்பாட்டுஏற்றலின் மற்றொருமுகமே இந்தியக் கிறித்தவத்தில் சாதியத்தின் ஏற்பும்கூட. சமூகத்தில் ஊடுருவியிருந்த சாதியப் பாகுபாடுகள் கிறித்தவத்தை ஏற்றப் பின்னரும் அந்தந்த சாதியினரின் பழக்கவழக்கங்களும் வாழ்வியல் முறைகளும் மாற்றங்காணாமல் அதே சமயம் கிறித்தவக் கொள்கைகளின் அடிப்படையிலான நம்பிக்கைகளையும் வழிகாட்டு முறைகளையும் பின்பற்றி புதியதொரு கலாச்சாரப் போக்கை கிறித்தவம் ஏற்படுத்தியிருக்கிறது.
சாதி என்ற சொல் விவிலிய மூலமொழியில் இல்லாதிருக்க தமிழ் விவிலியத்தில் பல இடங்களில்
இனத்தைக் குறிக்க சாதி என்றே மொழிப் பெயர்க்கப்பட்டிருப்பது ஆய்விற்குரியது .
இருப்பினும் முதன்முதலில் விவிலியத்தை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்ய விளைந்த போது
ஐரோப்பிய மிஷனெரிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடைய அன்றைய மேல்மட்ட வகுப்பினரை தமது பணிக்கு நியமித்திருந்தனர். இவர்களது கண்ணோட்டத்தில் இந்திய சாதீய சமூக அமைப்பை முன்வைத்து இவ்வாறான மொழி பெயர்ப்பை செய்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
நாட்டார் தெய்வவழிபாட்டு முறைகளில் கோவிலை மூன்றுமுறை சுற்றிவந்து கற்பூரம் ஏற்றி
வழிபடும் வழக்கத்தைப் போன்றே கிறித்தவத்தில் ‘குருத்தோலை ஞாயிறு’ என்று கூறப்படும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தின ஞாயிறன்று
பனையோலை அல்லது தென்னையோலைகளைக் கையிலேந்தி தெருத் தெருவாக ஊர்வலம் (பவனி) சென்று இறுதியாக ஆலயத்தைச் சுற்றி வந்த பின்னரே ஆலயத்திற்குள் நுழையும் பழக்கம்
இன்றும் இருந்துவருவது பண்பாடு ஏற்றலாகவே உள்ளது. அத்தோடு ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வெளிச்சம் காட்டும் முறையும் தமிழ்நாட்டு சமயப் பண்பாட்டின் கலப்பே ஆகும்.
கண்ணேறு போக்கல் (திருஷ்டி கழித்தல்) என்ற மரபு தமிழ்ப் பண்பாட்டில் வழிவழியாக இருந்து
வரும் ஒன்று. இதன்படி உப்பு, மிளகாய்வற்றல், காலடிமண்சேர்த்து துணியில் கட்டி அதைக்கொண்டு மௌனமாக உச்சிமுதல் உள்ளங்கால் வரை தடவி தலையை மூன்றுமுறை சுற்றி அதில் எச்சில் உமிழ்ந்து நெருப்பில் இடுவர் .இதன்மூலம் மற்றவர்களின் பொறாமை, சாபம், கோபம் போன்ற உணர்ச்சிகளின் தாக்கம் தீங்கு விளைவிக்காது என்று நம்புகின்றனர்.
அதனையே கிறித்தவத்தை ஏற்றப்பின்னரும் இந்நம்பிக்கையிலிருந்து மக்கள் விலகியபாடில்லை.
அவர்கள் சற்று மாறுதலாக மெழுகுவர்த்தியைக்கையில் வைத்தபடி உச்சிமுதல் பாதம் வரை
மனதிற்குள் கர்த்தருடைய செபம் எனப்படும் இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்த செபத்தை கூறியபடியே தடவி பின்னர் தலையை மூன்றுமுறை சுற்றி முன்னிரவு நேரத்தில் தலைவாசலுக்குப் பின்புறம் கொளுத்தி வைப்பர்.இதன்மூலம் கண்ணேறு போக்கல் நிகழ்ந்து விட்டதாக நம்புகின்றனர்.
இவ்வாறு தமிழக கிறித்தவத்தின் பரவலின் போது அதன் பண்பாட்டு முறைமைகளுள் மக்கள் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வந்த மனக்கிளர்ச்சிகளை, வாழ்வியல் மனோபாவங்களைத் தகர்க்காமல் அதே நேரத்தில் சமயக்கொள்கைகளில் முரண்பாடுகள் ஏற்படாதவண்ணம் சில மாறுதல்களோடு ஏற்றுக் கொள்ளப்பட்டே வந்திருக்கிறது.
இது அந்தந்தப் பகுதிகளில் பின்பற்றப்பட்டுவந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள், விழாக்கள் போன்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றே கிறித்தவத்தின் முறைமையாக மாறியுள்ளது.