Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

நானும் கொரோனாவும்

சென்ற ஆண்டு 2020 பிப்ரவரி இறுதி தொடங்கி பத்து மாதம் ஊரடங்கில் வீட்டில்
முடங்கிக் கிடந்த ஏக்கத்தில் 2021 ஜனவரி தொடங்கி மார்ச் வரையில் தொடர்ந் து இலக்கிய
கூட்டங்களுக்காகபல ஊர்கள் செல்ல ஆரம்பித்தேன். மாசத்தில் சில நாட்களே வீட்டிலிருந்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணன் அவர்கள் கோவையில் ஏற்பாடு செய்த
இலக்கியக் கூட்டத்துக்கு சென்றுவிட்டு 3ஆம் தேதி சென்னை திரும்பினேன்.

4ஆம் தேதி முதல் ஜுரம், இருமல் இருந்தது. அது சாதாரண ஜுரம் என்று அசட்டையாக
இருந்துவிட்டேன். இடையில் தேர்தல் வந்தது. உடம்பு முடியவில்லையே என்று வீட்டிலிருந்தால்,
“என்ன ஆனாலும் நீ ஓட்டு போட்டே ஆகணும்; வா வா, பூத் சிலிப் இங்க எங்க கையில் இருக்கு”
என்று என் அனுகூல சத்ருக்கள் தொடர்ந்து என்னை போனில் அழைத்தபடி இருந்தனர். வேறு
வழியின்றி சென்றேன். வாக்குச்சாவடி வாசலில் நெற்றியில் கருவி வைத்து ஜுரம் எவ்வளவு
இருக்கிறது என்று பார்த்தவர், “போட முடியாது போ போ” என்று இரண்டு தடவை அந்த கருவியை
ஆட்டிவிட்டு, மூன்றாம் முறை அதே கருவியையே ஆட்டி, “சரி போ” என்று உள்ளே அனுமதித்தார்.
அரசின் பிரதிநிதி சொல்வதை கேட்க வேண்டுமல்லவா. தவிர போடாமல் வந்தால் வெளியில் இருக்கும் நண்பர்கள் என்னை ஜாதி பிரதிர்ஷ்ட்டம் செய்யவும் வாய்ப்பிருந்ததால்
வாக்களித்து திரும்பினேன். வரும்போது என்ன நமக்குத்தான என்று கேட்கும் போது ”பின்ன” என்று
அசட்டு ஜுர சிரிப்புடன் சொல்லி திரும்பிவிட்டேன்.

இதற்கிடையில் கவிஞரும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான என் நண்பர் மருத்துவர்
வசந்த் செந்திலிடம் போனில் ஆலோசனை பெற்று மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். மாத்திரைகள் எழுதி அனுப்பியபின் அவரும், “ஆர்சனிக் ஆல்பம், கபசுர குடிநீர், கசாயம், மூலிகை தேநீர் எல்லாம் குடியுங்கள். ரெண்டு வேளை ஆவி பிடிங்க; பாத்துக்கலாம்” என்றார். நமக்கெல்லாம் எப்படி கொரோனோ வரும் என்று
நான் நினைத்தது போல மருத்துவரும் நினைத்துவிட்டார்.

நாள் செல்ல செல்ல இருமல் கூடியது. ஜுரம் நிற்கவில்லை. 9ஆம் தேதி வேறு சில ஜுரங்கள்
இருக்கிறதா பார்க்கலாம் என்று நண்பர் டெஸ்ட்கள் எழுதி தந்தார். எடுத்தேன். மாலையே வேறு
ஜுரங்கள் ஏதும் இல்லை என்று வந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு சந்தேகம் வலுக்க 11ஆம்
தேதி கோவிட் பரிசோதனை எடுக்கச் சென்றேன். பெரும் ரேஷன் கடை கூட்ட நெரிசலில் ஜாதக
குறிப்பு தவிர சகலமும் பூர்த்தி செய்த படிவத்தைக் கொடுத்து விட்டு இரண்டரை மணி நேரம்
காத்திருந்து சோதனைக்குக் கொடுத்து வந்தேன்.

மாலை 4 மணிக்கெல்லாம் முடிவு பாசிட்டிவ் என்று வந்து விட்டது. அதை கையில்
வைத்துக்கொண்டு கையில் பணமுமில்லையே என்று திக்கு திசைதெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன். அப்போ து வழக்கறிஞரும் பேச்சாளரும் எழுத்தாளருமான சகோதரி சுமதி போனில் அழைத்தார். “என் கதை கலைமகளில் வந்திருக்கு படிச்சிங்களா” என்றார். நான் இருக்கும் நிலையைச் சொன்னதும் உடனடியாக எங்கெங்கோ அரசு மருத்துவமனைகளை விசாரித்து, எங்கும் இடம் இல்லை என அறிந்து, மருத்துவர் சுதா சேஷைய்யன்
மூலமாக ஸ்டான்லி மருத்துவ மனையில் இடமிருக்கிறது என்று தெரிந்து போகச்சொல்லி உடனடியாக எல்லா உதவிகளையும் செய்தார். தனியார் மருத்துவ மனைக்கு போகும்
வசதியில்லாததால் வாழ்வில் முதல் முறையாக சிகிச்சைக்காக ஒரு பொது மருத்துவமனைக்குச்
சென்றேன்.

மருத்துவமனைக்கு பிக்னிக் போவது போல, எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு
சென்று கொண்டிருந்தேன். அப்போது சுதா சேஷைய்யனே போனில் பேசி, “நான் அங்க
சொல்லிருக்கேன்; நல்லா கவனிச்சிப்பாங்க” என்று இரண்டு மருத்துவர்களின் அலைபேசி எண்களை தந்தார். நன்றி சொல்லிவிட்டு ஒருவாறு பல பிரயத்தனங்களுக்கும் பிறகு, அந்த அட்மிஷன் பகுதியை அலைந்து திரிந்து அடைந்தேன். அங்கும் சரவணா ஸ்டோர்ஸ் அளவு கூட்டம் இருந்தது. இந்த உடல் நிலையோடு என்ன செய்யப்போகிறோம் என்று அயர்ச்சியாக இருந்தது. இந்த சனியன் வந்தால் யாரும் கூட வர முடியாது. அங்கு உடலெல்லாம் முகக்கவசம் அணிந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நர்ஸுகள் தவிர, பார்த்தவர்கள் எல்லோருக்கும் பெரும்பாலும் ஜுரம். பலர் இருமிக்கொண்டிருந்தனர். சிலர் உட்கார முடியாமல் பாதையிலேயே படுத்தும் கிடந்தனர். ஒரே பேச்சு சத்தம். சத்தமில்லா அழுகை. செறுமல்கள். கொட கொட ஸ்டெச்சரிலும், கால் வைக்கும் இடத்தில் தாம்பு கயிறு கட்டப்பட்ட வீல் சேரிலும் மருத்துவ
பணியாளர்கள் யார் யாரையோ தள்ளிக்கொண்டு போனார்கள். எனக்கு டீன் சுதா சொல்லியிருந்தும் அந்த மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. எல்லோரும் போனில் இருந்தார்கள். மிச்ச நேரத்தில் அவ்வப்போது வேலைகள்.

ஆறு மணிக்கு போன எனக்கு, இரவு 12 மணிக்கு வார்டு ஒதுக்கினார்கள். அதுவரை எக்ஸ்ரே,
பிளட் டெஸ்ட், ஈஸிஜி, சிடி ஸ்கேன் என்று ஒவ்வொன்றிற்கும் வரிசையில் நின்று எடுத்து பின்
அட்மிஷன் க்யூவில் நின்று படுக்கை ஒதுக்கப்பட்டு வந்து சேர்ந்தேன். அதுவரை பாத்ரூம் போகவில்லை. சாப்பிடவில்லை. சாப்பாடும் இல்லை. படுக்கைக்கு வந்தால் அது படுக்கையா என்று எனக்கு புரியவில்லை. எல்லா இடமும் நாற்றம். தூசி. இருமல் சத்தம். மூச்சு திணறும் முனகல் சத்தம். அந்த பொது கழிப்பறை பஸ்டாண்ட் கழிப்பறையை விட ஒரு மோசமான நரகமாக இருந்தது. கண்ணுக்கு நேரே பிளாஸ்டிக் பேப்பரில் மனிதர்களை சுற்றிக்கொண்டு
போனார்கள். பெரும் பீதியோடு அந்த படுக்கையில் கையில் கொண்டு போயிருந்த போர்வையை விரித்து காற்று தலையணையை ஊதி படுத்துக்கொண்டேன். மின்விசிறி வேறு எங்கோ சத்தமாக சுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு படுக்கைக்கும் எப்படி மின்விசிறி வைக்க முடியும். வேர்த்துக்கொட்டியது. பக்கத்தில் ராஜ்மோகன் பாபு என்று ஒருவர் படுத்திருந்தார். அந்த பன்னிரண்டு மணியிலும் எழுந்து உட்கார்ந்து வாங்க வாங்க என்று விருந்துக்கு
வந்திருப்பவன் போல் உபசரித்தார். “கொரோனாவா” என்றார். “ஆமாம்” என்றேன்.

“எத்தனை நாள் ஆச்சு.”

“இன்னைக்கு தான் டெஸ்ட் எடுத்தேன் தெரிந்தது.”

“பயப்படாதிங்க நல்லா ஆயிடும்”

அந்த வார்த்தை அப்போது எனக்கு தேவைப்பட்டது.

“சாப்ட்டிங்களா.”

“இல்லை எதும் சாப்பிடலை.”

சட்டென சற்று தள்ளி யாரோ ஒரு படுக்கையில் இருந்தவரிடம் போய் அவர் சொல்ல, படுத்திருந்த
அவர் அந்த அர்த்த ராத்திரியில் கட்டிலுக்கடியில் இருந்த பையை திறந்து, ஒரு குட் டே பிஸ்கட்
பாக்கெட்டும், ஒரு மேரி பிஸ்கட் பாக்கெட்டும் கொண்டு வந்து தந்தார். “பசிச்சவங்களுக்கு என்
கையால தரணும்; அதனால எந்திரிச்சு வந்தேன்” என்று இருமலுக்கிடையே சொன்னார். இரண்டு
பிஸ்கட் பாக்கெட் இரவு உணவாக அமைந்ததும் என் வாழ்வில் அன்றுதான். சாப்பிட்டதும்
ராஜ்மோகன், “மூச்சு திணறல் இருக்கா” என்று கேட்டார். அவர் கேட்டதும் எதோ திணறுவது
போல் இருந்தது. “பரவாயில்லை. மூச்சு திணறல் இருந்தால், இப்படி எடுத்து வச்சிக்கங்க” என்று தன்
பின்னால் இருந்த ஆக்ஸிஜன் முகமூடியை எடுத்து முகத்தில் மாட்டி காண்பித்தார். அந்த அர்த்த
ராத்திரி குறை வெளிச்சத்தில் பக்கத்து கட்டிலில் ஒரு சின்ன விண்வெளி வீரர் படுத்திருப்பது போல
இருந்தது எனக்கு. என் தலைக்கு பின்னாலும் ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க் இருந்தது. ஆனால், எடுக்கவில்லை. எத்தனை பேர் உபயோகப்படுத்தியதோ இந்த சுத்தமற்ற படுக்கை, கழிப்பறைகள் போல என்று எண்ணிக்கொண்டேன். அங்கங்கே இருமல் சத்தம் விட்டு விட்டு கேட்டபடி இருந்தது.

அதிகாலை நாலு மணிக்கு மூச்சு விட சிரமம் போல தோன்றிற்று. பின்னால் திரும்பி மாஸ்க்கை
தேடினால் அதை காணும். ராஜ்மோகனை தொடாமல் எழுப்பி, “என்னங்க ஆக்ஸிஜன்
மாஸ்க்கை காணுங்க” என்றேன்.

“வேற யாராவது சீரியஸ் பேஷண்டுக்காக எடுத்துட்டு போயிருப்பாங்க” என்று சொல்லிவிட்டு
திரும்பி படுத்துக்கொண்டார்.

என்னை சுற்றி என்ன நடக்கிறது. நாம் இருக்க போகிறோமோ. இல்லை முடிவு நெருங்கிவிட்டதா
என்று தோன்றிக்கொண்டிருந்தது. இந்த மூச்சுத் திணறலே இது போன்ற பயத்தினால்தான் என்று
அப்பறம் தோன்றியது.. ‘சே. நாம எவளோ பெரிய கவிஞன் எத்தனை பேருக்கு புத்தி சொல்றவன்.
மரணத்தை கம்பீரமாக எதிர்கொள்வோம்’ என்று சற்று உள் நடுக்கத்துடன் சொல்லிக்கொண்டே
வழக்கமான அரைத் தூக்கத்துக்குப் போனேன்.

காலை சாப்பாடு எப்போது வரும் என்று காத்திருந்தேன். ஒரு வழியாய் எட்டு மணிக்கு வந்தது.
அரசாங்க சாப்பாடு, காண்ட்ராக்ட்காரர்களிடம் கொடுத்து செய்ய சொன்னது. தரகுத்தொகை
எல்லாம் போக, அது எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது. பசியாய் கிடந்தவனுக்கு ருசிக்கென்ன
உரிமை இருக்கிறது. கடகடவென சாப்பிட்டேன்.

நர்ஸ்கள் வருகிறார்கள்; மருத்துவர்கள் வருகிறார்கள்; எல்லோரையும் பார்க்கிறார்கள்; என்னை மட்டும் ஏதும் கேட்கவில்லை, பார்க்கவில்லை. இரவு வரை இதே கதி. எந்த மாத்திரை மருந்து ஊசி ஏதுமில்லை. இதற்கிடையில் சுதா, “உங்களை நல்லா கவனிச்சிக்க சொல்லிருக்கேன்; நல்லா கவனிச்சிக்கறதா போன்ல எனக்கு சொன்னாங்க. பயப்படாதிங்க தைரியமாக இருங்க” என்றார். அவர் டீன். அவரிடம் போய் இந்த பஞ்சாயத்தை எல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என்று தோன்றிற்று. “ஆமா, ஆமா சரிம்மா ரொம்ப ரொம்ப நன்றிம்மா” என்று மையமாக
சொல்லி வைத்தேன்.

ராஜ்மோகனுக்கு ஏதோ மருத்துவமனையில் உள்ளவர்கள் மூலம் செல்வாக்கு இருந்தது .
அவருக்கென தனி சாப்பாடு வந்துகொண்டிருந்தது. “ஆஸ்பத்திரி சாப்பாட்டையும் வேஸ்ட்
பண்ணக்கூடாதில்ல சார்” என்று அதையும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். தவிர, எப்போதும்
எதோ ஒரு பழத்தை சாப்பிட்டபடியே இருந்தார். கறி மீன் குழம்பும் வந்துகொண்டிருந்தது. அந்த
ஒல்லியான உடம்பு எப்படி இவ்வளவையும் கொள்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் எப்போது எங்கே போய் ஷேவ் பண்ணுகிறார் என்பதும் புதிராக இருந்தது. அவர் ஒரு வாரமாக
இருப்பதால் ஐம்பத்தி ஐந்து வயசு மாப்பிள்ளை போல இருந்தார். “ஏன் வீட்டுக்கு போகல” என்று
கேட்டேன். “நான் தர்மபுரி சார். வீட்ல பாக்க ஆள் இல்ல. அதனால இங்கயே குவாரண்டைன்
இருந்துட்டு போகலாம்ன்னு இருக்கேன்” என்றார். அவரை மருத்துவமனை உபத்திரவங்கள் எதுவும்
பாதிக்கவில்லை. இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கான் என்று மற்ற படுக்கைகாரர்கள் நினைக்கும் படி போனில் சினிமாபாடல்களைகேட்டுக்கொண்டு எல்லாரையும் “எப்படி இருக்கிங்க ” என்று விசாரித்தபடி உற்சாகமாக வலம் வந்துகொண்டு இருந்தார் . எல்லோருக்கும் அந்த மனம்
வாய்ப்பதில்லை. கடவுள் கிருபை அது.

இரண்டாம் நாள் காலை மாத்திரை டிரேயோடு வந்த நர்சிடம் கேட்டேன்: “ஏன் எனக்கு மட்டும்
எந்த மாத்திரையும் தரவில்லை; முந்தாநாள் இரவு வந்தேன்” என்றேன். “எல்லாம் சரியான இந்த
ராஜ்மோகனுக்கு கூட தருகிறீர்களே” என்று கேட்டேன். உடனே அவர் கடகடவென்று
கத்தரிக்கோலால் ஒற்றை ஒற்றை மாத்திரைகளாக வெட்டி தந்தார். “இதெல்லாம் எதுக்கு, என்ன” என்று கேட்டேன். “ஒண்ணும் பேசாதிங்க சாப்டுங்க” என்றார். “நான் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்”
என்றேன். “அதுக்கு என்ன இப்ப. இங்க எல்லாரும் ஒண்ணுதான் தெரியும்ல்ல . நேத்து அங்க
படுத்திருந்தவர் என்ன ஆனார்ன்னு பாத்திங்கள்ல” என்று ரெண்டு படுக்கை தள்ளி இருந்த பெட்டை
காண்பித்தார். அதற்குள் அதில் வேறொரு புதியவர் படுத்து இருமிக்கொண்டிருந்தார்.

”நெடு நல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு”

என்று வள்ளுவன் சொன்னது
போல அவர் சாதாரணமாய்ச் சொன்னார். நான்
அதுக்குப்பிறகு எதும் பேசவில்லை. அப்புறம் அவரே வந்து இது பாரசிட்டமால், இது ஆண்டி பயாட்டிக், இது இரும்புச் சத்து, இது இருமலுக்கு, இது விட்டமின் சி என்றார். நம்பித்தானே ஆகவேண்டும். மாத்திரைகளை இப்போ சாப்பிடலாமா என்றேன். “ம்” என்றார். அதற்குள் டியூட்டி மருத்துவர் என் கையில் உள்ள மாத்திரைகளைக் கேட்டார். ஏன் என்றேன். “இப்பதான் உங்க சிடி ஸ்கேன் உட்பட எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்ஸும் வந்திருக்கு. அதுக்கு தக்க தான் மாத்திரைகள் தரணும்” என்று சொல்லி அதை நர்சிடம் திருப்பி கொடுத்துவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ரெண்டாம் நாள் மதியமாய் வந்து ஏதேதோ மாத்திரை கொடுத்தார்கள். சாப்பிட்டேன். ஜுரம் நிற்கவில்லை. வயிறெக்கி வரும் இருமல் கூடிக்கொண்டே வந்தது. இரண்டாம் நாளும் மருத்துவர்கள் யாரும் வந்து ஏதும் கேட்கவில்லை. சுதா போன் செய்து, “என் அசிஸ்டண்ட் ஒருத்தரை நாளை வந்து பார்க்க சொல்லிருக்கேன், பயப்படாதிங்க; நல்லாயிடும்,
தைரியமா இருங்க” என்றார். இதற்கிடையில் ஏப்ரல் 14ல் நம் நண்பர்கள் போனில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிகொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சதா போனில் சத்தம்
கேட்டபடி இருந்தது. பார்க்கவும் முடியவில்லை. பதில் சொல்லவும் தெம்பில்லை.

இரண்டாம் நாள் இரவு நான் கிளம்பிவிடலாம் என்று ஒருவாறு முடிவெடுத்து ராஜ் மோகன்
தூங்கும் வரை காத்திருந்து, நர்ஸ் கேபினில் இல்லாத நேரம் பார்த்து இரவு கிளம்பினேன். வாசலில்
பிடித்துக்கொண்டார்கள்.

“எங்க போறிங்க.”

“ட்ரீட்மெண்ட் சரியில்ல. நான் கிளம்புறேங்க” என்றேன்.

“போக முடியாது.”

“ஏங்க சரியான ட்ரீட்மெண்டும் இல்லை போகவும் விடமாட்டங்கிறிங்க. சாகிறதுன்னா கூட
நான் வீட்ல போய் சாகிறேன். இந்த பிளாஸ்ட்டிக் பேப்பர்ல்லல்லாம் சுத்தி போறதல்லாம் பாத்தா
பயமா இருக்கு” என்றேன்.

“விடமாட்டோம். அப்பறம் நாளைக்கு கொரோனோ நோயாளி தப்பி ஓட்டம்ன்னு
பேப்பர்ல வரும். எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணி போலீஸ் கேஸாயிடும்’ உங்க ஆதார் கார்டு எல்லாம்
இங்க இருக்கு” என்றார் அந்த ‘வாட்ச் வுமன்’.

‘ச்சே, இந்த நிலையில் இது வேறயா. என்ன வாழ்க்கைடா இது. நிம்மதியா சாவக்கூட உரிமை
இல்லாம பொயிடுச்சே. ஜெயிலை விட மோசமா இருக்கே’ என்று படுக்கைக்குத் திரும்பினேன்.
ஏழைகளுக்கு வியாதியே வரக்கூடாது என்ற நினைப்போடு வழக்கமாக வரும் இரண்டு மணி நேர
அரை தூக்கத்துக்கு போனேன். திடீரென்று ”அய்யய்யோ” என்று ஒரு பெண்ணின் அழுகுரல்
கேட்கவும் அந்த தூக்கமும் போனது.

இன்னொரு கோணத்தில் ஐம்பது பேர்களுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் ஒரு இடத்தில்
சூழலில், இருநூற்று ஐம்பது பேர்களுக்கு மேல் கூடும்போது, மருத்துவர்களும் செவிலியர்களும்

சுகாதாரப் பணியாளர்களும் என்னதான் செய்ய முடியும் என்றும் தோன்றியது. அந்த உடைகளைப்
போட்டுக்கொண்டு இந்த ஏப்ரல் மே மாதத்தில் ஏசி இல்லாத இடத்தில் வேலை செய்யும் போது, அதை கழட்டும் நேரம் குளித்த ஈரத்தோடு துவட்டாமல் வந்து நிற்பது போல் நிற்கிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான பணிச்சுமைகளால் மிகுந்த மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார்கள். எந்த
நேரத்திலும் தொற்று அவர்களைத் தாக்கும் அபாயத்தில்தான் விடுப்பு கூட எடுக்க முடியாமல்
பணியாற்றுகிறார்கள் என்பதையும் நாம் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

காலை இன்னொரு கவிதைச் சகோதரி ரத்னா வெங்கட் கவிதை பத்தி பேசச் செய்தார். நான் என்
பாடுகளை எல்லாம் சொல்லவும் பதறிப்போய் அவரது உறவினர் – அமைச்சர் உதவியாளர்
எழுத்தாளர் பேச்சாளர் மணிகண்டன் மூலம் மாலையே என் டிஸ்சார்ஜ்க்கு ஏற்பாடு செய்தார்.
நான் நான்கு மணிக்கு புறப்படும் போது , ராஜ்மோகனிடம் வரேன் என்றேன். “இங்க எதுக்கு
வரணும் இனி வராதிங்க” என்றார். “உங்க கிட்டநீங்க எழுதின கதை எல்லாம் கேக்கலாம்ன்னு
நினைச்சேன்; அவசரப்பட்டு புறப்பட்டுட்டிங்க” என்றார்.

“நீங்க தான் பாத்திங்கள்ல எப்படி கவனிச்சிகிட்டாங்க என்று.”

“அதெல்லாம் அப்படித்தான் சார்” என்று சொல்லிவிட்டு மதியம் அவர் உறவினர் சாப்பாட்டோடு கொண்டு வந்து கொடுத்திருந்த ஒரு கூலிங்கிளாசை போட்டு, “இது நல்லா இருக்கா” என்று கேட்டார்.

“உங்களுக்கு எது போட்டாலும் நல்லா இருக்கும் ராஜ்மோகன்” என்று சொல்லி புறப்பட்டேன்.

“தைரியமா இருங்க. போயிட்டு வாங்க” என்று வணங்கினார். மருத்துவமனையில் என் பொறுப்பில்
நான் போவதாக எழுதி வாங்கிக்கொண்டு என்னை ஒரு வழியாய் அனுப்பி வைத்தார்கள்.

எப்படியோ தப்பித்து வீட்டுக்காவது வந்தோம் என்று பார்த்தால், அதற்குள் மாநகராட்சி ஆட்கள்
வீட்டுக்கு வந்து சானிடைஸ் பண்ணுகிறேன் என்று சமையலறை உட்பட எல்லா இடங்களிலும் மருந்து அடித்தார்களாம். எப்படியாவது இந்த கொரோனோவை அழித்துவிட வேண்டும் என்ற
வேகம் அவர்களுக்கு. அப்படித்தானே ஆண்டாண்டு காலமாக நாம் மூச்சு திணறத் திணற இன்றும் கொசு மருந்து அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த மருந்து அடிக்கும் போதே, அந்த ஸ்பிரேயர் மேலேயே பெரும் பெரும் கொசுக்கள் கேலியாக கைதட்டிச் சிரிப்பதை எத்தனை முறை நாம் கேட்டிருக்கிறோம். வீட்டிலிருந்த என் மனைவி, மகன், மகள் மூவரையும் ஏதோ குற்றவாளி போல் நடத்தி, வீட்டுக்கு வாசலில் வெளியே நிறுத்தி, ஏக களேபரம் செய்து, பக்கத்து அக்கத்தில் எல்லோரும் எங்களைக்கண்டு பயப்படும் படி செய்து , பரிசோதனைக்கு சாம்பிள் எடுத்து போயிருக்கிறார்கள்.

நான் போகும் வரை அவர்கள் முடிவு வராமல் பதட்டத்தில் இருந்தனர். நான் வந்த பிறகு அந்த
பிரகிருதிகளுக்கு போன் செய்து கேட்டால், “ பாசிட்டிவ்ன்னா உடனே சொல்வோம் ; நெகட்டிவ்ன்னா எதும் சொல்லமாட்டோம் சார்” என்று சொன்னார்கள். ”நல்ல சிஸ்ட்டம். தேங்க்ஸ்”
என்று வைத்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்து மூன்று நாள் ஆனது. நான் தனிமையில் இருமிக்கொண்டும் ஜுரத்தோடும்
கிடந்தேன். மருத்துவர் செந்தில், “சார், ஆக்ஸிஜன் தேவைப்பட்டால் ஒண்ணும் செய்ய முடியாது நான் இரண்டு லட்சம் தருகிறேன் நீங்கள் எப்படியாவது மேலும் ரெண்டு லட்சம் ஏற்பாடு செய்து பிரைவேட் ஹாஸ்பிட்டல் போங்க. இல்லியா உங்களுக்கு எதுக்கு இவ்ளோ செல்வாக்கு வாழ்றதுக்கு இல்லாம சாகறதுக்கா. எல்லாத்தையும் யூஸ் பண்ணுங்க” என்று கடிந்துகொண்டார்.

பிறகு என் தங்கை தமிழச்சி எம்பிக்கு போன் செய்து விஷயம் சொன்னேன். அது என்னை, “ஏன்
இவ்வளவு தாமதம் செய்தீர்கள் அண்ணா” என்று கடிந்துகொண்டது. “கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் நல்லா பார்க்கிறாங்களாம் அங்க அட்மிஷன் வாங்கி குடும்மா” என்று கேட்டேன். சற்று நேரத்தில் பலர் அங்கு சேர வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார்களாம் என்று அதன் பி.ஏ. இளஞ்சேரன் தகவல் சொன்னார். சரியென என் நண்பர் நீதியரசர் ஒருவரை தொடர்புகொண்டேன். அவருக்கும் அதே தகவல். இதற்கிடையில் என் நண்பர் அசோக் நகர் பயர்
சர்வீஸ் எஸ்.பி. சையது அகமது ஷா மருத்துவ மனைக்கே சென்று எனக்காக அட்மிஷனுக்காக போராடிக் கொண்டிருந்தார். தினமணி ராஜ்கண்ணன் யாரோ பி.ஆர்.ஓ மூலமாக
சொல்லிக்கொண்டிருந்தார். எப்படியோ மறுநாள் கிங்க்ஸ் இன்ஸ்டியூட்டில் இருந்து போன் வந்தது,
தமிழச்சி சொன்னதாக. போய் சேரப்போனால் அங்கும் கடுங்கூட்டம். ஆனால், என்ன. எங்கும்
சுத்தமாக, சத்தமில்லாமல் இருந்தது.

காலை எட்டு மணிக்கு போன என்னை அங்கும் அதேசோதனைகளைமறுபடி செய்து, பன்னிரண்டே முக்காலுக்கு தனியறை ஒதுக்கி அனுப்பினார்கள். அன்றைக்குத்தான் அறிமுகமான கிண்டி பயர் ஆபீஸர் தமிழ்பாண்டி எதையும் பொருட்படுத்தாமல் என் பை , தண்ணீர் பிளாஸ்க் எல்லாம் எடுத்துக்கொண்டு கூடவே வந்து எனக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தார். லிஃப்ட் ஆப்ரேட்டர் காபி குடிக்க ஐம்பது ரூபாய் கேட்டார். கொடுத்தேன். பெரிய ஓட்டலில்தான் காபி குடிப்பார் போலிருக்கிறது.

மூன்றாம் தளத்தில் தனி அறை ஒதுக்கினாலும் கழிப்பிடம் பொதுதான். அதுவும் ஸ்டான்லிக்கு
சளைத்ததில்லை என்றுதான் இருந்தது. எத்தனை தடவை சுத்தம் செய்தாலும் போகிறவர்கள்
கொஞ்சம் கூட, அதை சுத்தமாக வைத்துக்கொள்ள முயலவில்லை. முகக் கவசத்தை கழிவறையில்
போட்டுவிட்டு வந்துகொண்டு இருந்தனர். அது மிதந்து மிதந்து வந்துகொண்டிருந்தது. தனியாக அங்கே பொது குப்பைத் தொட்டி பெரியதாக இருந்தும் நோயாளிகள் மிச்ச சாப்பாட்டை,
பழத்தொலிகளை, பிளாஸ்டிக் கவர்களை அங்கு போட்டுக்கொண்டே இருந்தனர் . எதோ
கொடையளித்து செல்வது போல் நினைத்து என்ன செய்தாலும் தண்ணீர் ஊற்றாமல் சென்று
கொண்டிருந்தனர் . கழுவிவிட்டுத்தான் போகிறார்களா என்றே சந்தேகம் வந்தது எனக்கு.
சாப்பாட்டு மிச்சங்களாலும் சளியாலும் அடைத்து வாஷ் பேசின்கள் கலர்கலராக நிரம்பி
வழிந்துகொண்டிருந்தன. பாடத்திட்டத்தில், நாம் முதலில், கழிப்பறைகளை எப்படி சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தைத்தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் .
அப்போதுதான் அடுத்த தலைமுறையாவது உருப்படும் என்று தோன்றிற்று. கழிவறையைச் சுற்றி
எங்கும் தண்ணீர் நின்று கொண்டிருந்தது. கதவுகள் ஜன்னல்கள் சரிவர இயங்கவில்லை. அரசியல்வாதிகள் காண்ட்ராக்ட்காரர்கள் கூட்டு கைங்கரியம் துல்லியமாகத் தெரிந்தது. எவ்வளவு நன்றாக கவனித்துக்கொண்டாலும் இந்த விஷயம் முக்கியமில்லையா. விமான நிலைய கழிவறை போல, எப்போதும் ஆட்கள் சுத்தம் செய்துகொண்டிருக்க வேண்டிய விஷயம் இல்லையா. பிறகெப்படி வியாதி கட்டுக்குள் வரும்.

ஆனால், இதற்கு நேர்மாறாக மருத்துவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை வந்து
கவனித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு முறை வரும்போதும் காது குறைபாடு உள்ளவர்களிடம்
கேட்பது போல, உங்கள் பேரென்ன என்று சத்தமாகக் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்குள்
வேறு யாரும் மாறி இருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கும் போல அவர்களுக்கு. அவர் மிகச்சிறந்த
கவிஞர். ஆவணப்பட இயக்குநர். இலக்கியவாதி. சிந்தனையாளர். உள்ளே அவரை நன்றாகக்
கவனியுங்கள் என்று சொ ல்லி, அன்றைய ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடி நலத்துறை
அமைச்சர் வி.எம்.ராஜலக்‌ஷ்மி அவர்கள் கிங்ஸ் மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமிக்குக்
கடிதம் எழுதியிருந்தார். நீதியரசர் நண்பரும் உரிய அதிகாரிகள் மூலம் எ ன்னை நன்றாகப்
பார்த்துக்கொள்ள சொல்லியிருந்தார். நண்பர் கவிஞர் ஜெயபாஸ்கரன், எம்.பி. அன்புமணியின்
பி.ஏ. அவர்கள் மூலம் சொல்லி கவனிக்க சொல்லியிருந்தார். இதனாலெல்லாம்கூட என்
பெயரை அவர்கள் அப்படி கேட்டிருக்கலாம்.

மருத்துவமனையில் அருமையான சாப்பாடு. காலையில் ஏழு மணிக்கு இஞ்சி சாறு. ஏழரைக்கு
நல்ல சிறப்பான காலை உணவு. அதன் பின் கபசுர குடிநீர். அதன் பிறகு ஒரு மணி கழித்து பால் இரண்டு அவித்த முட்டை. அதன் பின் ஒரு மணி நேரம் பின் ஏதோ ஒரு மிளகு கலந்த சூப். அதன் பின் நல்ல சத்தான இனிப்புடன் கூடிய சுவையான மதிய சாப்பாடு. இரண்டு மணி நேரம் கழித்து ஒரு கஞ்சி. அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து சுண்டல். எலும்பிச்சை சாறு. அதன் பின் தினம் எதாவது ஒரு நட்ஸ் பாக்கெட் சிறியது. இரவு ஏழு மணிக்கு நல்ல சுவையான உணவு. சாப்பாடு விஷயத்தில் எதோ மாமனார் வீட்டுக்கு வந்த மருமகன் போல்
கவனித்துக்கொண்டனர்.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் நண்பர்கள் சிலரின் உதவியால்தான் இதிலிருந்து
மீண்டேன். நண்பர்களால் தான் வாழ்ந்தேன். இன்றும் அவர்களால்தான் வாழ்கிறேன். எனக்கு
ஆக்ஸிஜன் தரவில்லை. ட்ரிப் ஏதும் போடவில்லை. மாத்திரைகள் மட்டும் தந்தார்கள். நாலாந்தேதி முதல் இருப்பதால் குறைந்திருக்கும் போல. ஆறாம் நாள் பிளட் டெஸ்ட் எடுத்துவிட்டு, நீங்கள் நன்றாக உள்ளீர்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். இங்கு டிஸ்சார்ஜ் எல்லாம் உடனடியாக நடந்தது. திரும்பும் போதும் அதே கூட்டம் ஏகப்பட்ட நோயாளிகள் வாசலில் காத்திருந்தனர்.

அரசாங்க கணக்குகள் எப்போதும் எதிலும் பொய் தானே என்று நினைத்துக்கொண்டேன்.
நோய் இருப்பது தெரிந்தும் தேர்தலுக்காக பட்டியை திறந்து, மந்தையை ஓட்டி விடுவது போல ஓட்டிவிட்டு, எது நடந்தாலும் எங்களுக்கு தேர்தல்தான் எங்களுக்கு முக்கியம் பரப்புங்கடா. சாவுங்கடா என்று அனுப்பி திரிய விட்டுவிட்டு இப்போது எல்லோரும் நீலிக்கண்ணீர் வடிப்பதும், அதிலும் அரசியல் செய்வதும், ஊழல் செய்வதும் மருந்து விலைகள் ஏற்றப்படுவதும் எதற்கும் கேள்வி கேட்காமல் இருக்கும் பாவப்பட்ட, அதே சமயம் அறிவுகெட்ட ஜென்மங்கள் வாழும் ஒரு தேசத்தில் நடக்கும்தானே.

சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை ஆள்கிறவர்கள் அரசு பணத்தை செலவழித்த
அளவுக்கு அடிப்படை வசதிகளை எதையும் முழுமையாகச் செய்து தரவே இல்லை. சிற்சில விதி
விலக்குகள் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் கண் துடைப்பு. சாலைகள், கல்விக்கூடங்கள்,
கழிப்பறைகள், சாக்கடை வசதிகள் எல்லாவற்றையும் சராசரியாய் வெறும் இருபத்தி ஐந்து விழுக்காட்டில் செய்து தந்துவிட்டு பாக்கி அவ்வளவு பொதுப் பணத்தையும் இயற்கை வளங்களையும் பொது சொத்துக்களையும் முழுக்க முழுக்க தங்களது சொந்த சொத்தாய் ஆக்கவே இது நாள் வரை கர்ம சிரத்தையாய் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அதன் அவல கதியின் நீட்சிதான் இந்த கொடுங்காலத்தில் எதிரொலிக்கிறது. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர்,
மலேசியா, துபாய் போன்ற நாடுகள் மக்கள் பணத்தை எவ்வளவு முழுமையாக மக்களுக்காக
செலவு செய்து அதன் காரியங்களை பின் எப்படி தொடர்ச்சியாக நிர்வாகம் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் ஏக்கப் பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

ஆளுகிறவர்கள், மலின அரசியல் பண்ணுபவர்கள் எல்லாருமே குறைந்த பட்சம் அடிப்படை
படிப்பாவது படித்தவர்களாகவேதான் உள்ளனர். ‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்’ என்கிறான் பாரதி. ம்கூம். ஒருவரும் அப்படி போனதாக தெரியவில்லை. எல்லோரும் குண்டுக் கல் மாதிரி நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!