சமீபத்தில் மநுநூல் பற்றிய விவாதம் பெரிய
அளவில் பேசுபொருளானது. அந்நூலின் சில
பகுதிகள் பெண்களை இழிவாகச் சித்திரிக்கிறது
என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன் பேசிய செய்தியைத் தொடர்ந்து
அதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகள்
போராட்டங்களை நடத்தின. நிகழ்வு அத்துடன்
நிறைவடைந்து விட்டது. அப்படி இல்லாமல்
பெண்களை இழிவாகச் சித்திரிக்கிறது என்பதைத்
தாண்டி அந்நூல் ஜனநாயகத்திற்கு எவ்வளவு
ஆபத்தானது என்னும் நிலையில் ஆரோக்கியமான
பரந்துபட்ட விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்க
வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர பிற
கட்சிகளோ அமைப்புகளோ அதை விவாதப்
பொருளாக மாற்றுவதற்கு போதியளவு முனைப்புக்
காட்டவில்லை. முந்தைய காலங்களில் மநுநூல்
பரந்த விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும்
உள்ளாக்கப்பட்டிருந்தாலும் வலதுசாரி சிந்தனைகள்
அதிகாரத்தின் துணையுடன் வேகமாகப் பரவிவரும்
இன்றைய சூழலில் அந்நூல் குறித்த விவாதம்
மேலதிகமாகத் தேவைப்படுகிறது. ஜனநாயகம்
காக்கப்படவேண்டும் என்பதற்கான
தொழிற்பாட்டின் ஒருபுள்ளியான மநுநூல் எதிர்ப்பு
அல்லது விமர்சனம் என்பதைத் தாண்டி மனுவை
ஒத்த நூல்களையும் விமர்சனத்திற்குள்ளாக்க
வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் வர்ணாசிரமத்தை ஆதரிக்கின்ற
நூல்கள் வெவ்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும்
கூடுதலாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் நூறுக்கும்
குறையாமல் கிடைக்கின்றன. அந்த நூல்களை
மநுவைப்போல வர்ணாசிரமத்தை ஆதரிப்பவை,
குறிப்பிட்ட ஒரு சாதியை மட்டும் உயர்வாகச்
சித்திரிப்பவை , குறிப்பிட்டஇரண்டு
சாதிகளுக்கிடையேயான சிக்கலை மையமிட்டவை
என வகைப்படுத்திக் கொள்ளமுடியும். இதில்
ஒவ்வொரு வகைமை நூலுக்கும் ஒரு நோக்கம்
இருந்திருக்கிறது. மனுவுக்கு அடுத்து எல்லா
காலங்களிலும் இம்மாதிரியான நூல்கள்
தோன்றினாலும் காலந்தோறும் சமூகக்
கட்டமைப்பில் நிகழ்ந்த உடைப்புகளை அந்நூல்கள்
கணக்கில் கொண்டிருக்கின்றன. உடைப்புகளின்
தொடர்ச்சிதான் அந்நூல்களின் தொடர்ச்சிக்கான
காரணமாகவும் அமைந்திருக்கிறது.
தமிழகச் சூழலில் சமய இலக்கியங்கள்
முன்வைக்கும் சமயப் பூசல்களிலேயே சாதிய
முரண்களின்தொடக்கப்புள்ளிகளைக் காணமுடியும்.
சமயம் உருவாக்கி வைத்திருக்கும் அதிகாரத்தில்
யார்யார் பங்கெடுக்க வேண்டும் என்பதை
வரையறை செய்கிற சமய இலக்கியங்களில் உள்ள
‘பொறுப்பற்றவனாக இருந்தேன்’, ‘கள்வனாக
இருந்தேன்’, ‘பாவங்கள் செய்பவனாக இருந்தேன்’,
‘பெண்பித்தனாக இருந்தேன்’, ‘தீய வழியே
என்னுடையதாக இருந்தது’, ‘ஊண் உண்பவனாக
இருந்தேன்’,’ உன்னைப் பற்றிய பின்புதான் என்
ஆன்மா தூய்மை அடைந்தது’ என்பதான
சொல்லாடல்கள் வழிசில குழுக்கள்
உள்ளிழுக்கப்பட்டும் சில குழுக்கள்
வெளித்தள்ளப்பட்டும் இருப்பதை அவதானிக்கலாம்.
சோழர்களின் காலத்தில் குறிப்பாக
ராஜராஜனுக்குப் பிறகு சாதிய ஓர்மை கூர்பட்டது.
ராஜராஜனின் நில அளவீட்டுமுறை அமலாக்கத்தில்
சாதியம் கெட்டிப்படத் தொடங்கியது. மனுவை
ஒத்த நூல்களின் தேவை அதிகரித்தது. அவை
புராணங்களாகக் குறிக்கப்பட்டன. புராணங்களின்
நோக்கமே கடவுளின் பெயரில் மக்களை
வகைப்படுத்துவதாக இருந்தது. புராணங்களே
அ க்காலத்திய சட்டநூல்களாக இருந்தன.
புராணங்களைப் பற்றிய அறிவுடையவர்களே சட்ட
அறிஞர்களாக இருந்தார்கள். இந்நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்ததை 1818
இல்வெளியான ‘சித்தூர் ஜில்லா அதாலத்துக்
கோர்ட் தீர்ப்பு’ நூல் வழி அறியலாம்.
புராணங்களைத் தவிர்த்து கடவுளின் பெயரால்
அல்லாமல் மநுவைப் போலவே நேரடியாக
வருணாஸ்ரமத்தை வலியுறுத்திய ஸ்மிருதி சந்திரிகை,
தாய வியாகம், விபவகார நிர்ணயம், மீதாட்சரம்,
வைத்னாத தீட்சதியம், பராசர மாதவ்வியம்,
வீரமித்ரோதயம், சுபோதினி முதலிய நூல்கள்
பார்ப்பனர்களால் எழுதப்பட்டவை. வணிக வைசிய
குல விளக்கம், கள்ளர் சரித்திரம், சர்வ வருணசமரச
விளக்கம், வருண பேத விளக்கம், குருகுல வரலாறு,
சூத்திர சீர்திருத்தம், வேளாண்மரபியல், பாண்டியகுல
விளக்கம், இடங்கை வலங்கையார் வரலாறு,
இடங்கை வலங்கை புராணம், வலங்கை சரித்திரம்,
இடங்கை வலங்கை சாதி வரலாறு, புதுவை
இடங்கை சாதியார் வரலாறு, இராமாயண
உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி
வரலாறும், பரதவர் புராணம், பாண்டியர் பரதவரான இலம்பகம்,
சான்றோர் மரபு முதலிய நூல்கள்
பார்ப்பனரல்லாதவர்களால் எழுதப்பட்டவை.
இவ்விருவகைமையாரும் வடமொழி நூல்களையே
பயன்கொண்டுள்ளனர். இந்து சட்டம் உருவாகக்
காரணமானவையாக இருந்த இந்நூல்கள், ‘நம்பிக்கை’
என்கிற சித்தாந்தை வலுவாகக் கட்டமைத்திருப்பது
மட்டுமில்லாமல் அதன் மீது கேள்விகளே
எழக்கூடாது என்கிற சிந்தனையை ஓர் இயக்கமாக
முன்னெடுத்திருக்கின்றன. இதிலிருந்து பறையர்
உற்பத்தி விளக்கம், ஆதிதிராவிடர் வரலாறு,
ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம் முதலிய நூல்கள்
வேறுபட்ட தன்மையில் அமைந்திருக்கின்றன.
இவ்விடத்து, 1872 இல் வெளியான
‘ஜாதிசங்கிரகசாரம்’, 1875 இல் வெளியான ‘சாதிநூல்’,
1895 இல் வல்லூர் தேவராயரால் மொழி
பெயர்க்கப்பட்டு, வித்வான் மீனாட்சிசுந்தரனார்
மேற்பார்வையில் வெளியான ‘சூதசங்கிதை’ ஆகிய
மூன்று நூல்களின் உள்ளடக்கத்தையும் உருவாக்கத்
தேவையையும் விவாதிக்கலாம்.
‘ஜாதிசங்கிரகசாரம்’ என்பதற்குக் ‘கலப்பு
சாதிகளின் தொகுப்பு’ என்று பெயர். இந்நூல்
சாதிகளை அனந்தசாதி, சங்கரசாதி என
வகைப்படுத்தியிருக்கிறது. ‘அனந்தசாதி’ என்பது
நால்வருண சாதிகளையும் அச்சாதிகளின்
கலப்பினால் உருவானது ‘சங்கரச்சாதி’ எனவும்
குறிக்கப்பட்டிருக்கிறது. அனந்தசாதி நான்கு,
சங்கரசாதி பதினான்கு என பதினெட்டுச்
சாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் இந்நூல், மகாபாரதம்,
திவாகரம், ரேவண சூத்திரம், பிங்கலம், சூடாமணி,
கந்தபுராணம், சூதசங்கிதை, தர்மசாஸ்திரஜாதி
நிர்ணயம், திருவிளையாடல்புராணம், அரிச்சந்திர
புராணம், ஏரெழுபது ஆகியவற்றில் வர்ணாசிரமம்
பற்றிச் சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பாக
அமைந்திருக்கிறது . ஆகவே , இதில்
சொல்லப்பட்டவற்றை ஒரு குறிப்பிட்ட நீண்ட
காலப்பகுதிக்கான தமிழ்ச்சமூகத்தின்சாதியமுகமாகக்
கொள்ளலாம்.
திருவாரூர் ஞானப்பிரகாச சுவாமிகள் எழுதியது
சாதிநூல். நால்வருணத்தையும் 81 கலப்பு சாதிகளைப்
பற்றியும் பேசும் இந்நூல் புராணச் செய்திகளின்
தொகுப்பாக அமைந்திருக்கிறது. பதினாறாம்
நூற்றாண்டில் சாதி பற்றிப் பேசும் புராணங்களுக்குக்
கூடுதல் பலத்தையும், பரவலாக்கத்தையும்
செய்திருக்கிறது.
ஏனைய சாதிநூல்கள் சாதி பற்றிய புராணச்
செய்திகளின் தொகுப்பாக அமைய, 4 காண்டம்,
109 அத்தியாயம், 3003 பாடல்களைக் கொண்ட
சூதசங்கிதை தனிப் புராணமாக அமைந்திருக்கிறது.
இதில் பன்னிரண்டாவது அத்தியாயமான சாதி
வரலாறு உரைத்த அத்தியாயம் மட்டும்
கலப்புசாதிகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.
அத்தியாயத்தின் இறுதிப்பகுதி ‘சாதி ஒழுக்கப்படி
நடப்பவன் முக்தியடைவான்’ (பாடல் எண் 36),
சாதிபேதம் மிருகங்களுக்கு இல்லை; மனிதர்களுக்கு
மட்டுமே உண்டு, மனிதர்களிலும் உடலுக்குத்தான்
உண்டு உயிருக்கு இல்லை (பா.எ.37), வேதாந்தத்
தெளிவின் படி வாழ்ந்தால் சிவனின் அருளைப்
பெறலாம் (பா.எ.38), நால்வருணத்தில் தவறுகிறவர்கள்
சிவனைத் தொழுதிட வேண்டும் (பா.எ.39) என்று
சாதியின் கட்டமைப்புத் தேவையை சிவனோடு
இணைத்திருக்கிறது.
கலப்புச் சாதிகளின் உருவாக்கத்திற்குக் காரணமே
கள்ளஉறவு தான் என்பதைச் சொல்லாமல் சொல்லும்
இந்நூல், கலப்புச்சாதிகளுக்கு வைத்த பெயர்கள்
ஏனைய சாதிநூல்களில் இருந்து வேறுபட்டனவாக
இருக்கின்றன. குண்டகன் (கணவன் இல்லாத மறைய
பெண்ணுக்கும் கள்ள மறையவனுக்கும் பிறந்தவன்),
பிங்களன், வர்த்தன சாலிகன் (சூத்திரனுக்கும்
நாய்கர் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்), நிடாதன்,
மாகதன் சீலகன் (சீவகன்?) முதலிய பெயர்கள்
பெளத்த, சமண இலக்கியங்களில் வரும் பாத்திரப்
பெயர்களாகவும் இடப்பெயர்களாகவும்
இருக்கின்றன. இதன்வழி சமயப் பூசல்களை
எதிர்கொள்வதற்கான தேவையும் சாதிநூல்களுக்கு
இருந்திருக்கின்றன என்பதை அவதானிக்க முடிகிறது.
‘சைவம் இந்து மதம் அல்ல’ என்று சில சைவ
அமைப்புகள் சொல்கின்றன. பார்ப்பன மதத்தின்
நால்வருணத்தை ஆதரிக்கும் சைவ நூல்களை
அவ்வமைப்பு எப்படி புரிந்துகொண்டிருக்கிறது
என்பதையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்
அரசிடம், தமது சாதியை அறிமுகம் செய்வதற்காக,
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தமது
சாதி மக்களைச் சேர்க்க வேண்டிய வகைப்பாட்டை
வலிறுத்துவதற்காக, சுய சாதிப்பெருமை
பேசுவதற்காக, தமது சாதியை இழிவாகக் குறிப்பிட்ட
சாதிநூலைக் கண்டிக்கும் நூலாக சாதிநூல்கள்
எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியச் சமூக
அமைப்பின் நீட்சியைப் பேசும் இந்நூல்களில்
இருந்தே இன்றைய வலதுசாரிகள் ஊக்கம்
பெறுகிறார்கள்.
அறிவு மரபுக்கும் நம்பிக்கை மரபுக்குமான
முரண்பாட்டை வரலாறாகக் கொண்ட இந்தியாவில்
இன்று அறிவு மரபு முன்வைக்கும் ‘அனைவரும்
சமம்’ என்பது வருணாசிரம ஆதரவாளர்களால்
தீவிரவாதச் சொல்லாடலாக முன்வைக்கப்படுகிறது.
நம்பிக்கை மரபின் ‘அனைவரும் சமமல்ல’ என்பது
அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில்
திணிக்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள வேண்டிய
பன்முனைகளில் சாதிநூல்களின் அபத்தங்களைப்
புலப்படுத்துவதும் அவசியம்.
3 thoughts on “பேசப்படாத சாதி நூல்கள்”
மிகவும் பயனுடைய செய்திகளை தாங்கிய கட்டூரை. மணுசாஸ்திருத்திரத்திற்கு சமமான தமிழ் நூட்களை தேடும்போது கிடைத்து. மிக்க நன்றி.
ஆசிரியர் யார்?
ஆசிரியர் பெயர் ஞா. குருசாமி
பின் : 8300044180
ஞா.குருசாமி ஆசிரியர் – பேச 83000 44180