Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம்

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல்
ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்கு
முன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன்
கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை
குறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானே
இலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள்,
கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்த
நேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல்
எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கேசொல்லிக்கொண்டிருக்கிறேன்
என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையான
இந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில்
இயங்கியுள்ளார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான்.

முதலில் களத்தை –அதுவும் புதிய புதிய களத்தைத்– தேர்ந்தெடுப்பது, பிறகு
அதன் மேல் நின்று கொண்டு எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் தகவல்களைத் தேடித்
திரட்டித் தன்னுணர்வாக உள்ளிழுத்துத் தேக்கி வைத்துக் கொள்வது, தொடர்ந்து
தேக்கி வைத்துக் கொண்டதைக் கதையாடலாக மொழிமயப்படுத்துவது என்று
முப்பரிமாணத்தில் தன் புனைவெழுத்தை நடத்திக் காட்டுகிறார் கிருஷ்ணா; இதை
இன்னும் கொஞ்சம் விரிவாகச் சான்றுகளோடு விளக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

அவருடைய முதல் நாவலான ‘நீலக்கடல்’ (2005), 16, 17ஆம் நூற்றாண்டுகளில்
பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரீசியஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்ட
புதுச்சேரிப் பிரெஞ்சு காலனிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பற்றிப் பேசுகிறது
மொரீசியஸ் தீவு என்ற, தமிழில் இதுவரை யாருமே தொடாத, புதிய களத்தில்
காலூன்றிக் கொண்டு அந்த நாவல் நடக்கிறது. இது போலவே மாத்தாஹரி (2008),
காஃப்காவின் நாய்க்குட்டி (2015), ரணகளம் (2018) ஆகிய நாவல்கள் பிரெஞ்சுக்
காலனியாக இருந்த, புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஐரோப்பா வரை நீளுகின்றன.
கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2012), நாயக்கர் காலச் செஞ்சியையும் புதுச்சேரியையும்
களமாகக் கொண்டு இயங்குகிறது. இறந்த காலம் (2019) என்ற நாவல் புதுச்சேரிக்கு
அருகில் இருக்கும் ‘ஆரோவில்’-ஐ இயங்குகளமாக அமைத்துக் கொள்ளுகிறது.
இப்போது இந்த நாவல், –சைகோன் புதுச்சேரி– பிரெஞ்சு காலனியாக இருந்த
இந்தோ சீனாவைத் (சைகோன்) தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக்
கொண்டு ஒரு பேராறு போல நகர்கிறது; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும்,
தகவல்களைத் திரட்டுவதும், தொடர்ந்து மொழிமயப்படுத்துவதுமென
முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய
கிருஷ்ணாவின் இந்த எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு
முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப்
பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழ்
புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த
அளவிற்குப் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ் மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள் நாம் போற்றும் பிரபஞ்சனும் நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்; இதிலும் பிரபஞ்சனின் களம் கா லனிக்குள்ளான புதுச்சேரி நிலப்பரப்பு மட்டும்தான்; ஆனால் கிருஷ்ணாவின் களம்
பிரெஞ்சுக் காலனிக்கு ஆட்பட்ட பல்வேறு வகையான நிலப்பரப்பென விரிந்தது என்பதையும்
குறித்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கிந்திய நாடுகளில் நடந்த ஐரோப்பியர்களின் காலனித்துவத்தைத் தமிழில் வேறு சிலரும்
எழுதியுள்ளனர்தான்; ப.சிங்காரம் (கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோனி), அகிலன் (பால்மரக்
காட்டினிலே), ஆர்.சண்முகம் (சயாம் மரண ரயில்), ரங்கசாமி (லங்கா நதிக்கரையில்), குமரன்
(செம்மண்ணில் நீல மலர்கள்), இளம் வழுதி (இலட்சியப்பாதை); பாரதியாரின் ‘கரும்புத்
தோட்டத்திலே ’ என்ற கவிதையையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையையும்
சேர்த்துக்கொள்ளவேண்டும்; ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணா போல் முழுக்க முழுக்கத் தன் நாவல் எழுத்துக்கள் அனைத்திலும் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை பிரெஞ்சுக் காலனித்துவத்தால் புதுச்சேரி வாசிகள் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு அசைவுகளைப் பல்வேறு கோணத்தில் நான் முன்பே சுட்டிக்காட்டியது போல பல்வேறு களத்தில்’ வைத்துத் தமிழில்
படைப்பிலக்கியம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இதை எந்த அளவிற்கு இன்றைய புதுச்சேரி
வாசிகளும் எழுத்தாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள்
என்பது தெரியவில்லை.

ஓடி ஓடி உலகம் முழுக்கக் காலனிகளைத் தேடி அடைய ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த
போட்டியில் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் காலனி நாடாக உருவெடுத்தது; மேலும்
பிரெஞ்சுக்காரர்களுக்கு இதுதான் முதலில் சிக்கிய காலனி என்ற தகவலையும் இந்த “சைகோன்
புதுச்சேரி” நாவல் மூலம் அறிந்து கொள்கிறோம்; இந்தப் போட்டியில் நாங்கள் மற்ற ஐரோப்பியர்களை விட வித்தியாசமானவர்கள்; யோக்கியவான்கள், காலனிக்குள்ளான மக்கள் நல த்தையும் எண்ணிப்பார்ப்பவர்கள் என்றொரு எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் தன் காலனி மக்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமையை வழங்கியது பிரெஞ்சு அரசு. இதற்குப்பெயர் “ரெனோன்சான்” என்பதாகும். இந்த ஆணைப்படிச் “சட்டப்பூர்வமான வயதடைந்த
பிரெஞ்சிந்தியர்கள் அனைவரும் ஜாதி, மதம், பாலின வேறுபாடுகள் குறுக்கீடின்றி, பிறப்பால்
அவரவருக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அடையாளத்தைக் (சாதி போன்ற அடையாளத்தை)
களைந்து கொள்ளலாம்.” குடும்பப் பெயர் ஒன்றைச் (சான்றாக எதுவார் என்பது போன்று) வைத்துக்
கொள்ளவேண்டும்.

இவ்வாறு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரி மக்கள், ஏறத்தாழ ‘மூவாயிரம் கல்’ தொலைவில்
இருக்கும் மற்றொரு பிரெஞ்சுக் காலனி நாடான வியட்நாமிற்கு, நாங்களும் பிரெஞ்சுக் குடிமக்கள்தான் என்ற கோதாவோடு, வசதியான வாழ்வைத் தேடிப் புலம்பெயர்ந்து வாழ்ந்த கதையைத்தான் இந்த நாவலில் புனைவாக்கியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. எட்டாம் வகுப்பு அளவிற்குப் புதுச்சேரிப் பள்ளிகளில் படித்தவர்களுக்கே சைகோனில் கடற்படை, ஆயுதக்கிடங்கு, கல்வித்துறை, கப்பல் நிறுவனம், நீதித்துறை, நகராட்சி, காவல்துறை… என்று கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற உத்தியோகங்கள் காத்திருந்தன என்ற தகவலைத் தருகிறார் கதைசொல்லி.

பிரெஞ்சு இந்திய நகரமான புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் விவசாயக் குடும்பம் ஒன்றில் இரண்டு
தம்பிகளோடு மூத்தவனாகப் பிறந்து செல்லமாக வளர்ந்த வேதவல்லியை அவளுடைய 14ஆவது
வயதில் 30 வயதடைந்த தாய்மாமன் சுப்புராயனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கிறார்கள்; ஒரே காரணம், தாய்மாமன் வீடு பக்கத்துத் தெருதான்; எனவே அன்பு மகளை எப்பொழுது
வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆசைதான்; ஆனால் சுப்புராயனோ, “திருமணம்
முடித்து நீ பக்கத்துத் தெருவிற்கு வருவதற்கே அந்த அழுகை அழுதவர்கள், சைகோனுக்கு உன்னை
அனுப்பச் சம்மதிப்பார்களா? யோசித்துப்பார்” என்று மனைவியைச் சமாதானப்படுத்திச் சம்பாதித்து வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையில் கப்பலேறி சைகோன் வந்து சேர்கிறான். இவ்வாறு “புருஷனுடைய காரியம் யாவிலும் கை கொடுக்க” விதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்தவேதவல்லியைப் பிரெஞ்சுக் காலனிய அடக்குமுறைக்குள்ளான வியட்நாமியரும், அடக்குகின்ற ஐரோப்பியரும், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரித் தமிழர்களும், மளிகைக்கடை, ஜவுளிக்கடை, வட்டிக்கடை என்று வணிகம் செய்து சம்பாதிக்க
வ ந்த பிரிட்டிஷ் இந்தியர்களும் ரெயோல் தமிழர்களும் (அதாவது ஐரோப்பியர் கலப்பால்
உருவானவர்கள் – தங்களுக்கான விசுவாசிகளை உருவாக்கிக்கொள்ள உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்துக்கொள்ளும் தந்திரத்தினால் உருவான இனம்) மற்றும் லாவோஸ், தாய், கம்போடிய
மக்களும் வாழ்கின்ற இந்தோசீனா எனப்படும் சைகோன் என்னவாக மாற்றி வளர்த்தெடுத்தது
என்பதுதான் இந்த நாவலின் அடிச்சரடு.

பத்து வயது ஆவதற்குள்ளேயே முழு வீட்டு மராமத்து அனைத்தையும் ஏற்று நடத்திய விவசாயக்
குடும்பத்துப் பொண்ணான வேதவல்லி எப்படிப்பட்டவள்? “எருமைத் தயிரை ஏட்டோடு
அகப்பை கொள்ள எடுத்துச் சோற்றுக்கு வலிக்காமல் தலையில் பூவை வைக்கிறது போல வைப்பவளாம்”; இப்படிப்பட்டவளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு பிடிக்கவா செய்யும்? “கை நிறைய சோத்தை அள்ளி வாயில் வச்சேன்; இங்கே கரண்டியைப் புடி, குச்சியைப் புடின்னு பாடம் எடுக்கிறாங்க” என்கிறாள் ஓரிடத்தில். கதைசொல்லியும் 1985 தொடங்கி இன்று வரை புலம்பெயர்ந்து பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதனால் புலம்பெயர்
வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அத்தனை அவஸ்தைகளையும் மிக நுணுக்கமாக வேதவல்லி
மூலமாக நாவலுக்கு எந்தப் பங்கமும் இல்லாமல் புனைவு வெளிக்குள் பொருத்தி விடுகிறார்.
ஆண்டுகள் பல ஆனாலும் வேதவல்லிக்குள் சைகோன் நுழையவே முடியவில்லை:

“சுப்புராயனைத் தவிர என்னுடையதென்று சொல்ல இங்கு எதுவுமில்லை.கண்களைக் கட்டிப்
புதைகுழியில் தள்ளப்பட்டிருப்பதைப் போலப் பல நேரங்களில் உணர்கிறேன்.ஒவ்வொரு கணமும்
புதுச்சேரிக்குத் திரும்பாமல் புதைந்துவிடுவேனோ என அஞ்சி நாட்களைக் கழிக்கிறேன். என் கால்
பதித்த பூமியை, கைதொட்ட பூவரசு மரங்களை, பழகிய சினேகிதிகளை, தாயை, தந்தையை,
தம்பிகளை, பாகூர் ஏரியை, புதுச்சேரி குயில் தோப்பை, அதிகாலை நாதஸ்வரத்தை, மார்கழிமாதத்
திருப்பாவையை, அம்மா ஆசையோடு கொடுத்த அதிரசத்தை என்றாவது ஒருநாள் திரும்பக்
காண்பேன், தொடுவேன், கேட்பேன், ருசிப்பேன் என்ற நம்பிக்கையில் கணங்களைக் கரைத்துக்
கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு “பிறந்த மண்நோய்” என்று சொல்லத்தக்க அளவிற்குப் பீடிக்கப்பட்டிருக்கும் வேதவல்லித்
தன்னைச் சைகோனுக்குக் கொண்டு வந்து சேர்த்த, காவல்துறையில் பணியாற்றும் கணவன் சுப்புராயன் நடவடிக்கையில் வெறுப்புற்று ஆண்-பெண் உறவில் ஆணின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பாங்கினை மிக நுட்பமாக உணர்ந்து கொள்பவளாகப்
பரிணாமம் அடைகிறாள். “விவேகம், சமயோசிதம், நிதானம், சாதுரியம் என எதிலும் வேதவல்லி மீசுரம்” என்று தன் கணவன் சுப்புராயன் வாயாலேயே சொல்லும் அளவிற்குச் சைகோன் வாழ்வில்
வளர்ச்சி அடைகிறாள் “அடை காத்த கோழியே தன் குஞ்சைப் பருந்து வசம் ஒப்படைத்த கதைதான்
என் திருமணம்” என்று உணர்ந்து கொள்ளும் அளவிற்கு உயர்கிறாள்:

“பொட்டைக் கழுதைகளுக்குத் தெரிந்து ஆவப்போவதென்ன என்பது அவருடைய உயர்ந்த
அபிப்ராயம். வயிற்றுக்குச் சோறு, உடுக்கத் துணி, இந்திரியங்கள் தாகவிடாயில் தவிக்கிறபோது
தாம்பத்ய உறவு, ஐரோப்பியர் கொண்டாட்டமோ, தமிழர் விழாக்களோ எதுவென்றாலும் தேர்போல்
ஜோடிச்சு, அம்மனைப் போல அலங்கரிச்சு இழுத்துச் சென்று சபையில் நிறுத்தும் புருஷ
லட்சணம்; இதற்கு மேல் ஒரு பெண்டாட்டி மூக்கைச் சிந்த என்ன தேவை இருக்கு என்கிற
சமூகத்திற்கு என் புலம்பல் காதில் விழாதென்று எனக்குத் தெரியும்.”

இது மட்டுமா? மற்றொரு இடத்தில்,

“பெரியார், பெண் விடுதலையென்று பேசுற ஆம்பிளைக்குக் கூடத் தங்கள் வீட்டுப் பெண்கள்
வேதகாலப் பெண்ணா இருந்தா திருப்தி”

என்றும் கிண்டல் செய்கிறாள். “இது என் கணவர் வாங்கிக் கொடுத்த புடவை” என்று ஒரு விழா
நிகழ்ச்சியில் வீட்டுக்காரரைப் பெருமைப்படுத்தும் ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்து ஒரு வாங்கு வாங்கி விடுகிறாள் வேதவல்லி:

“பிறந்ததிலிருந்து நம்மகேட்டு எது நடந்திருக்கு?இந்த ஆளுக்குக் கழுத்த நீட்டுன்னு சொன்னாங்க,
நீட்டி னோம். தொங்கத் தொங்கத் தாலி கட்டிக்கிட்டோம்.இதைச் சமைச்சி வை, அதைப்
பண்ணி வை’ என்பாங்க, செய்தோம், “சைகோனுக்குப் புறப்படுன்னு” சொன்னாங்க, புறப்பட்டு வந்தோம். நாமளும் மனுஷங்க தானே; அவங்களுக்கு ரெண்டு வார்த்தை, நம்மளுக்கு ரெண்டு வார்த்தைன்னு இருப்பதுதானே நியாயம்.

என்றெல்லாம் இன்னும் நீண்டு கொண்டு போகிறது அந்த உரையாடல்.

இப்படியெல்லாம் வேதவல்லி புதிய பரிணாமம் அடைவதற்கு ஒரு பக்கம் குடிகாரக் கணவன்
என்றால் மற்றொரு பக்கம் இஸ்மாயில் அண்ணன், அவர் மனைவி அமீனா பேகம் மற்றும் புருஷாந்தி போன்ற உன்னதமான ஆண்களோடு பழகக் கிடைத்த வாய்ப்பும், சைகோன் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டு அதன் நிர்வாகியாகவும் , தமிழாசிரியராகவும் பணியாற்றக் கிடைத்த சமூகச் சூழலும்தான் காரணம் எனச் சொல்ல வேண்டும்; இஸ்மாயில் அண்ணன் ஜவுளிக்கடை ,
பலசரக்குக்கடை என வைத்துப்பெருஞ்செல்வந்தராக விளங்குபவர். கணவன் மனைவி இருவரும் இந்தியர் சங்கம், அது சார்ந்த விழாக்கள் என அனைத்தையும் முன்னின்று நடத்துபவர்கள். இவர்களின் இஸ்லாமிய வீட்டைக் காட்சிப்படுத்தும் இடத்தில் கதைசொல்லியின் எடுத்துரைப்புத் திறனை அறிந்து வியந்து நிற்க நேர்கிறது; (இந்த மாதிரி சைகோன் நகரத்தையும் தெருக்களையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் வனங்களையும் ஆறுகளையும் கடலையும் போர்க் காட்சிகளையும் நாவலுக்குள் காட்சிப்படுத்த கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருக்கும்
கடும் உழைப்பினையும் மொழித்திறத்தினையும் புலப்படுத்த தனியாகவே ஒரு கட்டுரை
எழுதினால்தான் முடியும்).

வேதவல்லி வாழ்வில் பெரும் இடம் பிடித்த மற்றொருவரான லெயோன் புருஷாந்தியும்
புதுச்சேரியைச் சேர்ந்த ரெனோன்சான்தான்; ஆனால் மற்ற பிரெஞ்சு இந்தியரைப் போல்
இல்லாமல் பிரிட்டிஷ் இந்தியா விடுதலை பெற வேண்டும்; அப்பொழுது தான் பிரெஞ்சு
இந்தியாவான புதுச்சேரிக்கும் விடுதலை சாத்தியமென்று இயங்குபவர்; சைகோனிலுள்ள
பிரெஞ்சு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த புருஷாந்தி, இந்தியாவில் காந்தியடிகள் ,
‘அந்நியர்களிடம் அடிமை வேலை பார்க்கும், உத்தியோகத்தை உதறிவிட்டுத் தேசத்திற்காக
வெளியே வரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தபோது தானும் வங்கி வேலையை உதறிவிட்டு வெளியே வந்தவர். அதுமட்டுமல்ல நான்கு பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் கோடீஸ்வரியான தன் உறவுக்கார விதவையை இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டதால் பெரும் சீர்திருத்தவாதி என்று பேர் பெற்றவர்; இவரைக் குறித்து வேதவல்லி ஓரிடத்தில், “என்னைப் போல பிறந்த மண்ணுக்கு ஏங்கும் ஓர் ஆணைச் சந்தித்தேன்; 15 ஆண்டுகாலம் அந்த மனிதருடன் எனது சினேகிதம்” என்கிறாள். அவரைக் குறித்துக் கேள்விப்படுவனவும், நேரடியாகவும் பார்க்கின்ற
அவரது நடைமுறைச் செயல்பாடுகளும் வேதவல்லியை அவருக்கு நெருக்கமாக இட்டுச்
செல்லுகின்றன.

இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஜெர்மனி பிரான்சு தேசத்தைப் பிடித்துவிடவே, பிரெஞ்சுக்
காலனியான சைகோன் தலைமை, ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான் கைக்கு மாறுகிறது. இந்த
நிலையில் இங்கிலாந்துக்கு எதிரியான ஜப்பான் உதவியோடு சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்களைத் திரட்டி, “இந்திய தேசிய சுதந்திர லீக்” சார்பில் “இந்திய தேசியப் படை” என்ற விடுதலைப் படையை உருவாக்கி அதன் தலைவராக இருந்த நேதாஜி, சைகோனுக்கும் வருகை தருகிறார்; சைகோன் தமிழர்களிடையே படு குழப்பம்; தற்போதைய தலைமை, நேதாஜிக்கு வேண்டிய ஜப்பானின் தலைமை என்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வரவேற்கத் தயாராகின்றனர்.
விடுதலை விரும்பியான புருஷாந்திதான் துணிச்சலாக முன்னின்று நடத்துகிறார்; அரசு ஊழியனான கணவனின் முணுமுணுப்பையும் பொருட்படுத்தாமல் வேதவல்லி ஆர்வத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறாள். அப்பொழுது வேதவல்லி கூறும் ஒரு கூற்று முக்கியமானது: “புருஷாந்தியின் சகோதரர் போல இருந்தார் ‘நேதாஜி’ ” என்கிறாள். தன் விரல்களில் கழுத்தில் கிடந்தவை மட்டுமல்லாமல், தன் மனைவி உடம்பில் கிடந்த நகைகளை எல்லாம் கழற்றி நேதாஜி கையில் கொடுத்த புருஷாந்தியைப் பார்த்து வியந்து விம்மி நிற்கிறாள் வேதவல்லி. இதை
ஒட்டி வேதவல்லியின் நினைவோட்டத்தைக் கதைசொல்லி சித்திரிக்கும் பகுதி மிக முக்கியமானது.
வேதவல்லியின் நெஞ்சில் எந்த அளவிற்குப் புருஷாந்தி வேர் விட்டுப் படர்ந்துவிட்டார்
என்பதைக் காட்டும் பகுதி:

“நேதாஜிக்கும் புருஷாந்திக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை.உயரம், ஆகிருதி, தேஜஸ் ,
முகவிலாசம்- இரண்டுபேருக்கும் அப்படியொரு ஒற்றுமை. இருவருமே சராசரி மனிதர் கூட்டத்தில்
பிறந்தவர்கள்… அதிகம் போலிகளே நிறைந்த மனிதர் கூட்டத்தில் இப்படிப் பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்… புருஷாந்தியும் நேதாஜியும் விதியால் தீர்மானிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை; விதியைத் தீர்மானிக்கிற மனிதர்கள். சொந்த விதியை மட்டுமல்ல ,மானுடத்தின் விதியை, தேசங்களின் விதியைத் திருத்தி எழுதுகிறவர்கள்; இந்த அபூர்வ
மனிதர்களுக்கு முன்பாக சுப்புவும் நானும் எங்களைப் போன்ற கோடானு கோடி ஈனப் பிறவிகளும்
மழைக்கால ஈசல் போலப் பிறப்பதும் தெரியாது; இறப்பதும் தெரியாது. இந்த மகாபுருஷர்கள்
முளைப்பர்கள், செடியாவார்கள், கொடியாவார்கள், மரமாக நிற்பார்கள்.பூவாக, காயாக, கனியாகக் கற்பகோடி காலம் பயன் தருவார்கள்.”

இப்படியெல்லாம் புருஷாந்தியைத் தன் நெஞ்சில் பரவிப்படர அனுமதிக்கும் வேதவல்லி ஓரிடத்தில்,
“மனதில்கூட அந்நிய ஆடவனைத் தீண்டக் கூடாது என்பது உங்கள் சமூகவிதியெனில் நான் உத்தமி கிடையாது” என்று சொல்ல நேர்கிறது; மேலும் புருஷாந்தி, “எங்கள் ரப்பர் தோட்டத்து வேலையாள் ஒருத்தன் ‘இந்தக் குழந்தை அனாதை’ என்று என்னிடம் வந்து விட்டுள்ளான்; இதை நீங்கள்தான் உங்கள் குழந்தையாக ஏற்று உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டபோது குழந்தை இல்லாத வேதவல்லி, கணவனிடம் கூட முன் அனுமதி கேட்காமல் சம்மதிக்கிறாள். ‘லட்சுமி’ என்று பெயரிட்டுப் பின்பு கணவனையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறாள்; புருஷாந்தி செய்கிற ஒவ்வொரு செயலும் அவளுக்குள் இனிமை தருவதாக அமைகிறது.

வேதவல்லியின் இத்தகைய நடவடிக்கைகளைக் காண்கின்ற குடிகாரக் கணவனுக்குள்ளும் சந்தேகம் பரவி வினைபுரிவதையும் கதைசொல்லி பதிவு செய்கிறார்; புருஷாந்தியின் கார் டயரைத் தன் ஆட்களை விட்டுப் பஞ்சர் பண்ண வைக்கிறார்; புருஷாந்தியோடு சேர்ந்து நேதாஜி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவில் வீடு திரும்பும்போது மழையில் நனைந்துவிட்ட
வேதவல்லி, கதவை எவ்வளவு தட்டியும் திறக்காமல் இரவு முழுக்க வெளியிலேயே கிடக்கும்படிச்
செய்கிறார்; தாங்க முடியாத மனநிலை மேலெழும் ஒரு நிலையில் நேரடியாகவே தன் மனைவியைப் பார்த்து “வேதா! நீ என்னை விட்டுப் போய்விட மாட்டீயே” என மருவுகிறார்.பதிலுக்கு ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்கிறாள் மனைவி.

வேத வல்லி “க ட ந்த 15 ஆண்டுகளாக , புருஷாந்தியுடன் எனது சினேகிதம் ” என்று சொல்லிக் கொண்டாலும் காதலென்றும் சொல்ல முடியாத, வெறுமனே நட்பு என்றும் சொல்ல முடியாத ஏதோ ஒரு விதமான பெயர் வைக்க முடியாத உறவு இருவர்க்கிடையே உருவாகிச் செயல்படுவதைக் கதைசொல்லி மிக நுட்பமாகப் புனைந்து காட்டுகிறார். ஆண் – பெண் உறவில் பெரிதும் பேசப்படாத, ஆனால் சமூகத்தில் பெருவாரியாக நடைமுறையில் உள்ள நுட்பமான ஒரு புதிரான உறவை -மொழிவழிக் கதையாடுவதற்குச் சவாலாக இருக்கும் உறவை -மிக மேன்மையான
முறையில் போகிற போக்கில் பதிவு செய்வது போன்ற ஒரு பாவனையில் படைத்துக்காட்டியிருப்பது, கதைசொல்லியின் மனித உறவுகள் குறித்த மகாபுரிதலையும் அதைப் புனையும் மொழியாற்றலையும் காட்டுவதாக உணர்ந்து வாசகன் என்ற முறையில் மகிழ்ந்தேன். ரவிந்தரநாத் தாகூர் இந்த மாதிரியான ஓர் உறவைத் தனது சிதைந்த கூடு (நஷ்ட நீட) என்றொரு கதையில் எழுதிக் காட்டியிருக்கிறார்; சத்யசித்ரே கூட அதைக் ‘காதம்பரி’ என்று திரைப்படமாக எடுத்துள்ளார். மகாமேதைகளின் அடையாளம் இத்தகைய நுண்ணிய தளங்களில் இயங்கிக் காட்டுவதுதான் போலும்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்குவதைப் பார்த்து அமெரிக்கா, பிரிட்டீஷ்
அரசாங்கத்திற்கு, “இனி இந்தக் காலனிய அரசியலைத் தொடரக் கூடாதென்ற” நிபந்தனையுடன் உதவ முன் வந்தவுடன் இங்கிலாந்து வெற்றி அடையத் தொடங்குகிறது; 1945 மார்ச்சு முதல் ஆகஸ்டு மாதம் வரை ஜப்பான் சைக்கோனில் எதிர்த் தாக்குதல் நடத்திப் பிரெஞ்சு வீரர்களைக் கொன்று குவித்தது; ஆனாலும் சைகோன் முழுதும் ஜப்பானியர்தான் இருப்பது போல நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் B52 விமானம் குண்டு மழை பொழியவே மீண்டும் சைகோன் பிரெஞ்சுக்காரர்களின் கீழ் வந்தது. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகிக் கிடந்த பிரான்சிலும்
போரில் ஜெர்மன் தோற்றதால் மீண்டும் பிரெஞ்சியர் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது; ஆக்ரமிக்கப்பட்ட பிரான்சில் இருந்து தப்பித்து இங்கிலாந்தில் இருந்து கொண்டு தெகோல், பிரான்சு விடுதலைப் படையை நடத்திக் கொண்டிருந்ததால், இந்த விடுதலைப்படைக்குப் புதுச்சேரியில் உள்ள தமிழ் மக்களும் நிதி திரட்டினர் என்ற தகவலையும் கதைசொல்லி பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு சைகோனில் மீண்டும் பிரெஞ்சியர் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டவுடன் ஜப்பான்
ஆதரவுடன் இயங்கிய நேதாஜிக்குச் சைக்கோனில் வரவேற்பும் நன்கொடையும் அளிப்பதை முன்னின்று நடத்திய புருஷாந்தி கைது செய்யப்படுகிறார்; அவர் குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அவரை வெளியே கொண்டு வர வேதவல்லி படாதபாடு படுகிறாள்..அவருடைய அருமை பெருமைகளையும் சமூகச்சேவைகளையும் பட்டியலிட்டு அதிகாரத்தின் முன் கோரிக்கை வைக்க மனு ஒன்றைத் தயாரித்துப் பலரிடம் கையெழுத்து வாங்க அலைகிறாள்.. ஆனால் யாரும் அதிகாரத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவரிடம் உதவிகள் பெற்ற
தமிழர்கள் யாரும் புருஷாந்தியை எட்டிக் கூடப்பார்க்கவில்லை. இந்த இடத்தில் கதைசொல்லி
தமிழர்களின் மன அமைப்பில் உறைந்து கிடக்கும் அடிமை உணர்வையும் ஒற்றுமையின்மையையும் புலப்படுத்திவிடுகிறார். மிகவும் வேண்டிய இஸ்மாயில் அண்ணன் கூட ஒத்துழைக்கவில்லை; தனக்குப் பிறகு சைகோன் வந்து சேர்ந்த சின்னத்தம்பி சிங்காரவேலும்
மனுவில் கையெழுத்துவிட மறுத்துவிடுகிறான்; இறுதியில் விசாரணை என்ற பேரில் வதைபட்டு
மனம் பிறழ்ந்த நிலையில் புருஷாந்தி சிறையிலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்..

இதற்கிடையில் சைகோனை நூறாண்டு காலமாக அடிமைப்படுத்தி வியட்நாம் மக்களை வாட்டி
வதைத்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சுக் காலனித்துவத்திற்கு எதிராகக் கடந்த ஒன்பது
ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஹோசிமின் தலைமையிலான
கம்யூனிஸ்டு விடுதலைப் படை ‘தியன்பியன் பூ’ – எனும் இடத்தில் தன் கடைசி யுத்தத்தைத்
தொடங்கிவிட்டது. இந்தப் போர்க்களக் காட்சிகளையும், வியட்நாம் மக்களின் வீரதீரங்களையும் கதைசொல்லி கம்பனைப் போல், நேரில் பார்த்தவர் போல் அவ்வளவு நேர்த்தியாக எடுத்துரைக்கிறார். எப்பொழுதுமே சம்பளம் வாங்கும் அரசாங்கக் கூலிப் படைக்கும் உயிரைப்
பணையம் வைத்துப் போராடும் விடுதலைப் படைக்கும் நடக்கும் போரில் விடுதலைப் படை
வெற்றி பெறுவதுதானே வரலாற்றின் அறம். “யானைக்கும் புலிக்கும் இடையிலான யுத்தம்” என்று
இந்தப் போரை வர்ணித்தாராம் ஹோசிமின். நாவலாசிரியரும் புலிகள் போலப் பாய்ந்து வியட்நாம்
விடுதலை வீரர்கள் போரிட்டதை வாசகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறார். கடந்து வர முடியாதபடி
அகலமான, கொடூரமான முள்கம்பிவேலி போட்டிருக்குமாம் காலனிய அரசு; முன்னே செல்லும் வியட்நாம் வீரர்கள் அந்த முள் வேலிமேல் தலைகுப்புறப் படுத்துக்கொள்வார்களாம்; பின்னே
வரும் வீரர்கள் அந்த உடலின் மேல் மிதித்து முன்னேறிச் செல்வார்களாம். இப்படி மிதிபட்டு
உயிரோடு இருந்தவர்கள் குறைவு.இவ்வாறு 56 நாட்கள் உயிரைக் கொடுத்து நடத்திய போரில்
சைகோன் தன் விடுதலையைச் சாதித்துக்கொண்டது.

இனிப் பிரான்சுக்குச் செல்வதா?புதுச்சேரிக்குச் செல்வதா?சைக்கோனிலேயே தங்குவதா? என்று
பிரச்சனைகள் எழுந்தபோது வேதவல்லி கணவனோடு புதுச்சேரிக்குத் திரும்புகிறாள்; தம்பி
சிங்காரவேலுவும் அவனது வியட்நாம் மனைவி மரியாவும் அவர்களின் மகள் இஸபெல்லாவும்
பிரான்சுக்குப் புறப்படுகிறார்கள். மகன் பிலிப், கம்யூனிஸ்டு படைவீரன் என்பதால் சைகோனையே
தேர்ந்தெடுக்கிறான்.லட்சுமி என்று வேதவல்லியின் வளர்ப்பு மகளாக அறியப்பட்ட, வியட்நாம்
தாய்க்கும் ஒரு தமிழர்க்கும் பிறந்த பைஃபோங், பாகூரில் சிங்காரவேலுவின் முதல் மனைவி
ஜானகிக்குப் பிறந்து அவளால் தந்தையைத் தேடி அடைய சைகோனுக்குக் கப்பலேற்றி அனுப்பப்பட்ட பொன்னுசாமியை மணந்துகொண்டு பிரான்சுக்குப் புறப்படுகிறாள்.

புதுச்சேரிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு நாள் வேதவல்லி, வீட்டில் செய்த புட்டை ஒரு
பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தன்னைப் போலவே புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த புருஷாந்தியைப்
பார்க்கக் காலாற நடந்து போகிறாள். அவர் மனம் பிறழ்ந்த அதே நிலையில், ஒரு பெஞ்சி ல்
அமர்ந்திருக்கிறார்; கொண்டு வந்த பாத்திரத்தை வேதவல்லி கொடுக்கிறாள்.வாங்கிக் கொண்ட
புருஷாந்தித் திருப்பி அவளிடமே கொடுக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பக்கத்து
மனிதர் ஒருவர் “அவருக்குக் கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கம் இல்லை” என்கிறார்.
வேதவல்லி திரும்பி நடக்கத் தொடங்குகிறாள்.“ஹோ ஹோ எனப் புருஷாந்தி சிரிப்பது வெகுதூரம்
கேட்டது” என்று நாவல் முடிகிறது. இந்தச் சிரிப்புக்கான அர்த்தத்தை வாசகர்கள்தான் எழுதி
நாவலை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அங்கும் இங்குமெனக் காலத்தாலும் இடத்தாலும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப்பட்டுள்ள ஒரு
நேர்கோட்டில்லா நாவலுக்குள் இருந்து நானிங்கே வேதவல்லி என்கிற ஓரிழை வழியாக மட்டும்
நாவலைக் குறித்து உரையாடியுள்ளேன். இதேபோல் ஒவ்வொரு இழையைப் பிடித்துக் கொண்டும்
மொழியாடுவதற்கு நாவலுக்குள் விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.அவற்றுள் ஒன்றிரண்டையாவது சொல்லி என் முன்னுரையை முடித்தால்தான் என் மனம் நிறைவடையும்.

குறிப்பாகப் பாகூர்க்கரையில் பழகி, வயிற்றில் கருவை உருவாக்கிவிட்டுச் சைகோனுக்குக்
கப்பலேறிவிட்ட வேதவல்லியின் சின்னத்தம்பி சிங்காரவேலுவை அடைவதற்குப் போராடும்
ஜானகியின் கதை, பெண்ணின் பேராண்மையையும் போராடும் மன வலுவையும் புலப்படுத்தும் ஒரு கதை ஆகும். ஊரைச் சமாளித்துக் குழந்தையைப் பெற்று வளர்த்து ‘நாலு எழுத்துப்’ படித்துத்
தகப்பனைத் தேடி அவனைச் சைக்கோனுக்கு அனுப்ப முடிவெடுகிறாள் ஜானகி. படிக்க வைக்கப்
புதுச்சேரி சென்றால்தான் சாத்தியமென்று , வெள்ளைக்காரத் துரை வீட்டில் வேலைக்காரியாகச்
சேர்ந்து சாதிக்கிறாள்.ஒரு நாள் அந்தத் துரை வீட்டுத் துரைசாணி, “எனக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை; இன்று இரவு அவரோடு கட்டிலில் நீதான் படுக்க வேண்டும்” எனக் கட்டளையிடுகிறாள்.
வேலை போனாலும் பரவாயில்லை என்று ஜானகி மறுத்துவிடுகிறாள்.நல்ல வேளை, இவளை அங்கு
வேலையில் சேர்த்துவிட்ட அந்த முகவரே, வேறொரு பெண்ணை அதற்கு ஏற்பாடு செய்து விடுகிறார். இப்படி இந்தக் கதையாடலை நிகழ்த்திக்காட்டுகிறார் கதைசொல்லி; இதில் ஜானகியின் போராடும் திறம் மட்டுமா வெளிப்படுகிறது?காலனித்துவ அதிகாரம் தன் காலனிய மக்களை எந்த அளவிற்குச் சுரண்டிக் கொழுத்துத் திரிந்துள்ளது என்பதையும் இந்தக்
கதையாடல் உரத்துப் பேசவிடவில்லையா? கதைசொல்லி எதுவும் பேசவில்லை; காட்சியைக்
காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார்; இப்படியான தொனிகளோடு கூடிய எடுத்துரைப்பு நாவல்
முழுவதும் பரந்து கிடப்பதால் நின்று நிதானமாக வாசிக்கும் வாசிப்பை நாவல் எதிர்பார்த்துக்
கிடக்கிறது.

சைகோனின் பண்பாட்டுக் கூறுகளை நாவலுக்குள் படம் பிடிக்கச் சிங்காரவேலுக்கும், வியட்நாமியப் பெண் மரியாவிற்கும் ஏற்படும் காதலையும், தொடர்ந்து நடக்கும் திருமண வாழ்க்கை நிகழ்வுகளையும் கதைசொல்லி பயன்படுத்திக் கொள்ளுகிறார்; மரியாவின் முழுப்பெயர் மரியா ஹோவாம்மீ; அன்னமிட்டுகள் என்று அழைக்கப்படும் இந்த வியட்நாமியர் வழக்கப்படி ஒரு பெண்ணை மணம் முடிக்க வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டார்தான் சீர் வரிசை எல்லாம் செய்யவேண்டும். அரக்கு வண்ணத்திலுள்ள வட்டமான பெட்டி
நிறைய வைத்திலை பாக்கு, மணப்பெண்ணுக்குச் சிவப்பு நிறத்தில் பட்டுச்சேலை , மேல்
சட்டைக்காகவும் நீண்ட கால்ச்சராய்க்காகவும் பட்டுத்துணி, பொன்னாலான காதணி, இரண்டு
ஜாடி நிறைய ஒயின், ஒரு கொழுத்த பன்றி – இவ்வளவும் கொடுத்தால்தான் பெண் கிடைக்கும்.

இதேபோல் வியட்நாம் உணவு வகைகளின் பெயர்களை, –பன்ச்சா, மிக்வாங், பன்ச்சுங், நேம்,
ச்சாய் ஜா, கோய்கோன், லெச்சே – எல்லாம் நாவலுக்குள் கொண்டு வருவதோடு, ‘பன் கஸ்யோ’
என்ற உணவை எப்படிச் சமைத்து உண்ப என்பதையும் பதிவு செய்கிறார். (உப்பு, மசாலா
கலந்து வேக வைத்த இறால், பன்றி இறைச்சி, பீன்ஸ், முட்டை கலந்த கல வையை அரிசிமாவு ரொட்டியுடன் சேர்த்து, அதற்கான மீனு் சாஸ்-இல் நனைத்துச் சாப்பிட வேண்டும்.) வியட்நாமில்
சாப்பிடப்படும் மற்றொரு உணவையும் இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். கோழி 21 நாள்
முட்டையை அடைகாத்து முடித்தால் குஞ்சு பொரிக்கும்; ஆனால் கொழ கொழவென்று
திரவத்துடன் இருக்கும் அந்த வளராத குஞ்சை 15ஆம் நாளிலேயே எடுத்துப் பக்குவம் செய்து
சாப்பிடுகின்றனர். வேதவல்லியின் சுப்பு இதை விரும்பிச் சாப்பிடப் பழகிக் கொண்டாராம்.
இவ்வாறு சைகோனின் உணவு, உடை, அலங்காரம், நடை, உடை, பாவனை முழுவதையும் நாவலுக்குள் வாசிப்பிற்குத் தடையேதும் இல்லாமல் பொருத்தி விடுகிறார்.“கிழக்காசியாவின் முத்து ” என்று கொண்டாடப்படும் சைகோனின் நிலவரை அமைப்பையும் இயற்கை வளத்தையும் வாசிக்கிற வாசகனை உணரச் செய்து விடுகிறார்.

நாவலுக்குள் வாசிப்பின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் கதைசொல்லிகள் பயன்படுத்தும்
மர்மமுடிச்சினையும் லட்சுமி என்ற வேதவல்லியின் வளர்ப்பு மகள் மூலம் அமைத்துக்கொள்ளுகிறார்; அனாதைக்குழந்தை என்று புருஷாந்தியால் இந்த மர்ம முடிச்சுப் போடப்படுகிறது; பிறகு போகப் போகக் கதை வளர்ச்சியின் ஊடே அந்த முடிச்சைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துக் கொண்டே போகும் கதைசொல்லியின் நுட்பம் நாவலுக்கு அலாதியான அழகை ஊட்டுகிறது. இறுதியில் அந்த லட்சுமியின் தாயை அடித்துச் சிதைத்துப் பைத்தியக்கார நிலைக்குத் தள்ளியது, தன்னை வளர்த்த தந்தை சுப்பராயன்தான் என்று மகளே அறிந்து துடித்துத் தந்தையை வெறுத்து ஒதுக்கித் தள்ளும் ஓர் அபத்த நாடகமாக அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படுவதும் நாவலுக்குக் கனம் சேர்க்கிறது.

இப்படிச் சைகோன் நிகழ்வுகளையும் அதன் அரசியல் போக்குகளையும் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் ஒடுக்குமுறைகளையும் விவரித்துக் கொண்டு போகும்போதே புதுச்சேரியில் நடக்கும் அரசியலையும் அங்கு இங்கு என்கிற முறையில் நாவலுக்குள் கொண்டு வந்துவிடுறார். தலைவர் சவரிநாதன் தலைமையில் புதுச்சேரி அரிஜனசேவா சங்கம் நடத்திய கூட்டத்திற்குக் காந்தியடிகள் வந்து சொற்பொழிவாற்றியதையும், காந்தியடிகள் தன் பேச்சில் புதுச்சேரி விடுதலை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாதது விமர்சனத்திற்கு உள்ளான தகவலையும் பதிவு செய்கிறார்; இந்நிகழ்ச்சியை முன்வைத்து சிநேகிதர்கள் சேஷாசலம் ரெட்டியாரும் சதாசிவ முதலியாரும் உரையாடுவது போல் ஒரு காட்சியை அமைத்துத் தமிழ்ச் சமூகத்தின் சாதிய
முகத்தைக் குறித்து அலசிவிடுகிறார்; ஒரு ஊருக்குள் எல்லோரும் பக்கத்தில் பக்கத்தில் கலந்து இருக்காமல் தனித்தனியான குடியிருப்புக்களில் இருக்கும் நிலை நீடிக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது என்று நண்பர்கள் இருவரும் பேசிக் கொள்கின்றனர்.

மேலும் புதுச்சேரியில் நடந்த ஆலைத்தொழிலாளர் போராட்டத்தில் காலனிய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானது (20 பேருக்கு மேல் காயம்), தோழர் சுப்பையா நாடு கடத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவெல்லாம், (பிரான்சில் தொழிலாளர் நலம் பேசும் அரசு ஆட்சியில் இருந்தாலும்கூட ) வெள்ளை இனத்தினருக்கு நடுவில்தான்; காலனிய கறுப்பு
மக்களுக்குக் கிடையாது என்ற நிலைதான் நிலவியது என்பதை எடுத்துக் காட்டுகிறார்; கூடவே
புதுச்சேரியில் இயங்கிய பிரெஞ்சு இந்தியர் கட்சி, மகாஜன சபை முதலியவற்றின் அரசியலையும் நேரு எடுத்த முயற்சியால் விடுதலைபெற்ற இந்திய யூனியனோடு புதுச்சேரிப் பிரெஞ்சு இணையப்போகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன் நேற்று வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு விசுவாசியாக இருந்த குபேர் போன்ற தலைவர்கள், உடனே மாறிக் கொண்டு இந்திய விடுதலைத் தியாகிகளாக வலம் வந்த வரலாற்றுக் காட்சிகளையும், செல்வராஜ் செட்டியார் சுடப்பட்ட நிகழ்வினையும், புதுச்சேரி வ ந்தபோது தன்னைப் பார்க்க விரும்பிய காந்தியடிகளைப் பார்க்க மறுத்து விட்டார் அரவிந்தர் என்ற தகவலையும், 1954 அக்.18-இல் புதுச்சேரி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கீழையூர் வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளையும், கதைசொல்லி நாவலுக்குள் இணைத்துவிடுகிறார். இவ்வாறுநாவல் முழுக்கவும் சமூகவரலாறும் புனைவும் கலந்து
ஒன்றையொன்று மேன்மைப்படுத்திக்கொள்கின்றன.

2019இல் எழுதிய ‘இறந்த காலம்’ நாவலிலேயே தமக்கை வேதவல்லி சைகோனில் இருந்து சிரஞ்சீஷத் தம்பி சதாசிவத்திற்கு, 1934ம் வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி மடல் எழுதுவதாகப் படைத்து, வேதவல்லியையும் புதுச்சேரித் தமிழர்களின் சைக்கோன் வாழ்வையும் அறிமுகப்படுத்திவிட்டார்; ஆனாலும் மனநிறைவு அடையாமல், முழுமையாகச்
சைகோனைக் களமாக வைத்து, அங்குப் புலம் பெயர்ந்து வாழ நேர்ந்த புதுச்சேரி மக்களைக் குறித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று 2020 – ஜனவரியில் பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு 1 ½
மாத விடுமுறையில் வந்தபோது சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்பொழுது சொன்னபடி ஓர் ஆழமான பின்காலனித்துவ நாவலை எழுதி முடித்துவிட்டார்;
தீவிரமான ஒரு படைப்பாக்கத் தீயைத் தனக்குள் கொண்டிராமல் இது சாத்தியமில்லை; அதே
நேரத்தில் இந்த ஓராண்டாக உலகம் முழுவதிலும் மக்களைக் கொள்ளை கொண்டு போவது
மட்டுமல்லாமல் இருக்கின்றவர்களின் நடமாட்டத்தையும் நான்கு சுவர்களுக்குள் சுருக்கிப்
போட்டுவிட்ட இந்த கோவிட் – 19 தொற்றுக் காலத்தில் இப்படியொரு படைப்பு உருவாகவும்
வாய்க்கிறதே என்று இந்த நாவலைப் படித்து முடித்த கையோடு தொற்று நோய்க்கும் ஒரு நன்றி சொல்லவும் தோன்றுகிறது.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!