1992 திசம்பர் 15-31 இந்தியா டுடே இதழ், பாபர் மசூதி
இடிக்கப்படும் காட்சியைத் தாங்கி வந்தது. இந்தியாவிற்குள்ளும்,
அதற்கு வெளியேயும் உள்ள சனநாயகத்தில் நம்பிக்கைக்
கொண்டிந்தோர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரம் அது. கருப்பு
நிறப் பின்னணியில் தேசத்தின் தலைகுனிவு என்று அந்த இதழ்
தனது அட்டையில் தலைப்பிட்டிருந்தது. பல வண்ணப்
பக்கங்களில் அது பாபர் மசூதி இடிப்பைக் காட்சிப்
படுத்தியிருந்தது. அதுவரையிலுமாக தேசம் காப்பாற்றி வந்த
மதசார்பின்மைப் பொருளற்றுப்போனது.
பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில்
கட்டுவதற்காகச் சட்டத்தை மீறி பாசக, விசுவ இந்து பரிசத்,
சிவசேனா போன்ற இந்து அமைப்புக்கள் திரண்டு வந்து
கரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர்.
இதற்காக நடெங்கிலுமிருந்தும் இலட்சக்கணகாகானக்
கரசேவகர்கள் திரட்டப்பட்டிருந்தனர். அணி, அணியாகத்
திரட்டப்பட்ட அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நன்கு
திட்டமிட்ட வகையில் பயிற்சி பெற்ற முன்களப் படையினர்
பாபர்மசூதியை இடித்துத்தள்ளினர். அவர்களுக்கு உதவியாக
இரண்டாவது மற்றும் மூன்றாவது அணியினர் செயற்பட்டனர்.
இப்படியாக மதக்சார்பின்மையின் உச்சவடிவமான இந்திய
சனநாயகத்தையும், சகிப்பையும், அவர்கள் 28 ஆண்டுகளுக்கு
முன்பு தரைமட்டமாக்கினர்.
மசூதியையும் இடித்துவிட்டு, நாடெங்கிலும் இசுலாமியர்
மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 2000 பேர் வரை
கொல்லப்பட்டனர். அதன் பின்னர் விரிவுபெற்ற இசுலாமியருக்கு
எதிரான போக்குகள், கலவரங்கள் என்பனத் தொடர்
நிகழ்வுகளாகிவிட்டன. மும்பைக் கலவரம், குசராத் கலவரம்
எல்லாம் பாபர் மசூதி இடிப்பின் பிறிதொரு வடிவங்களாக
மாறிப்போயின.
மசூதி இடிப்பின் அரசியல் வெற்றியாக, வாக்குவடிவமாக
பாசக ஆட்சிக்கு வந்தது. உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட
வடமாநிலங்கள் பலவற்றிலும் அதன் தொடர் ஆட்சிக்கும்,
இருப்புக்கும் வழிகோலியது. இன்றைக்கு ஆட்சியிலும்
சட்டத்திலும் சனநாயகத்தின் பெயரில், மக்கள் தீர்ப்பின்
பெயரில் பல இடிப்புக்கள், தகர்ப்புகளில் பாசக அரசு தொடர்ந்து ஈடுபட்டுவரும் நிலையில், மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோவிலைக் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியது. ஏதோ தரிசாக இருந்த ஒரு இடத்தில் நீங்கள் கோவிலை எழுப்பிக்கொள்ளலாம் என்பது போல அந்தத் தீர்ப்பு இருந்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர்கோவில் கட்டப்படுமென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் அது நிறைவேற்றபடுகிறது. அப்படியென்றால் மசூதி இடிக்கப்பட்டதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ராமர் கோவில் இருந்ததை ஒத்துக் கொண்டால் பாபர் மசூதியும் அங்கு இருந்ததை ஒத்துக் கெள்ளத்தான் வேண்டும். ராமர் கோவில் முன்பு இருந்தது
என்றால் தற்போது இடிக்கப்பட்ட நிலையில் பாபர் மசூதியும் அங்கு இருந்ததை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இருந்தது என்றால் இல்லையென்று பொருள். எனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்வதன் வழியே ராமர் கோவில் கட்டப்படுவதை ஏற்க வழி செய்கிறது நீதிமன்றத்தீர்ப்பு.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒப்புக்
கொண்டுள்ளது. இது திட்டமிட்டு நடந்த செயல் என்றும் சட்டத்தின் ஆட்சியை அவமானகரமான வகையில் மீறிய செயல் என்றும் முன்பு அது கூறியிருந்தது.
உச்சநீதிமன்றம் இப்படி ஒப்புக் கொண்டிருந்த நிலையில், சிறப்பு
நீதிமன்றம் அதற்கு மாறாகத் தீர்ப்புக் கூறியிருப்பது இந்திய நீதிமன்ற வரலாற்றில் எப்போதுமில்லாத ஒன்றாகும்.
பாபர் மசூதி இடித்து வீழ்த்தப்பட்டதற்குச் சாட்சியில்லை என்றும்
இந்த வழக்கில் சி.பி.ஐ. சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை
என்றும் கூறி உச்சநீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.
முக்கியமாக மசூதியை இடிக்கத் தூண்டியதாகக் குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ வலுவான ஆதாரங்களைத்
தரத்தவறிவிட்டதால் குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 38 பேரும்
விடுவிக்கப்படுவதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிவசேனையின் தலைவர்
பால்தாக்ரே, விசுவ இந்துபரிசத் தலைவர் அசோக்சிங்கால் உட்பட
16 பேர் தற்போது உயிருடன் இல்லை. மத்தியப்பிரதேச முன்னாள்
முதல்வர் உமாபாரதி, உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் ஆகியோர் கொரோனா தொற்றின் காரணமாக நீதிமன்றில் நேர் நிற்க விலக்களிக்கப்பட்டிருந்தது. அத்வானி முதுமை காரணமாக நீதிமன்ற சலுகைப் பெற்றிருந்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் சாத்வி ரிதம்பரா, சம்பத்ராய் உட்பட
24 பேர் தீர்ப்பின் போது நீதிமன்றத்திலிருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட
பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோசி, உமாபாரதி, பாபர் மசூதி இடிப்பின்போது உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங், வினய்கத்தியார், விசுவஇந்துபரிசத் தலைவர் அசோக்சிங்கால், உள்ளிட்டோர் இந்த வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு கரசேவகர்களின் மெய்யான அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி என்று அத்வானி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். ரதயாத்திரையைத் தொடங்கிவைத்துப் பாபர்மசூதிவரைக்கும் அதை இழுத்துச் சென்றவருக்கு ஆனந்தக் கண்ணீர் வராவிட்டால்தான் வினோதம்.
சுமார் 351 சாட்சிகள், 600 க்கும் மேற்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள், ஒலி, ஒளிப்பதிவுகள் என சமர்ப்பிக்கப்பட்டுப் பல பத்தாண்டுகளாக நடந்துவந்த வழக்கில்தான் தற்போது, ஒலி, ஒளி உள்ளிட்ட எந்த ஒரு ஆதராங்களும் நம்பும்படி
இல்லை எனக்கூறித் தள்ளுபடி செய்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
குற்றம்சாட்டப்பட்டத் தலைவர்களின் தூண்டுதலில்தான் திட்டமிட்டு
பாபர்மசூதி இடிக்கப்பட்டது என்பதை நீதிமன்றம் முற்றாக நிராகரிப்பதுடன், இலட்சக்கணக்கான கரசேவகர்களில், பாபர்மசூதியை யார் இடித்தனர் என்பதை சி.பி.ஐ சரியாக அடையாளம் காட்டாத ஒன்றை நீதிமன்றம் தெளிவாக
இனம்காட்டுகிறது. அதாவது, பாபர் மசூதியை அன்றைக்கு இடித்துத்தள்ளியது
சமூகவிேராதிகள் தாம் என்கிறது. இந்த
சமூகவிரோதிகள் யார்?, எங்கிருந்து வந்தார்கள்
என்பதற்கு அது விளக்கம் தரவில்லை.
சமூகவிரோதிகள் என்போர் தனி இனமா
அல்லது அந்த இலட்சக்கணக்கான கரசேவர்களில்
தீவிர செயற்பாட்டாளர்கள் ஆவேசமிகுதியில்
கூட இதைச் செய்திருக்க மாட்டார்களா?!
திட்டமிடப்படாத ஒரு நிகழ்வில் சமூகவிரோதிகள்
மட்டும் எப்படி திட்டமிட்டு பாபர்மசூதியை
இடித்தனர்? என்பது தெரியவில்லை.
அந்த முகமற்ற சமூகவிரோதிகள் இடிப்பின்
வழியாக மட்டுமல்ல தீர்ப்பின் வழியாகவும்
தப்பிச் சென்றுள்ளனர் என்றுதான் சொல்ல
வேண்டியிருக்கிறது. ஏற்கனவே தலைவர்கள்
மீதான குற்றசாட்டுத் தனியாகவும், பாபர்
மசூதியை இடித்தவர்கள்மீதான வழக்குத்
தனித்தனியாகவும் நடந்து வந்த நிலையில்
இடித்தவர்கள் யார்? தலைவர்கள் யார்? என்பது
தெரிந்துவிட்டால் அந்தத் தலைவர்கள் உத்தரவின்
பெயரில் செயற்பட்டவர்கள் யார் என்பதும்
தெரிந்துவிடும். நீதிமன்றம் முந்திக் கொண்டு
அவரகள் சமூகவிேராதிகள் என்று
சொல்லிவிடும்போது அதற்கு ஒரு அடையாளமற்ற
அடையாளம் கிடைத்துவிடுகிறது. அதைத்தான்
நீதியும், மன்றமும் தற்போது செய்து
கொண்டுள்ளது.
சமூகவிரோதிகள் என்று சொல்லும்போது
கரசேவர்களா என்று யாதொருவரும் கேட்டுவிட
முடியாது. ஆனால் சமூகவிரோதிகள் என்று
சொ ல்லிவிடும்போது அடையாளமற்ற
அ டையாளம் கி டை த்துவிடுகிறது .
முகம் கிடைத்துவிடுகிறது. பொது முகம் .
முண்டத்திற்கு முகம் கிடைத்துவிட்டால் பிறகு
முண்டம் என்று யாதொருவரும் சொல்வதில்லை.
இடித்தவர்கள் சமூகவிரோதிகள் அவ்வளவுதான்.
இந்தியாவின் கோடிக்கணக்கான முகங்களில்
சமூகவிரோதியைத் தேடியாக வேண்டும் .
அல்லது ஏற்கனவே சமூகவிரோதி, தேசவிரோதி
என்று தேசபக்தர்களின் பட்டியலிலிருப்போரைத்
தனியாகப் பிரித்து அடையாளம் காணவேண்டும்.
குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள் இடிப்பை
ஒத்திகைப் பார்த்தவர்களோ அல்லது
திட்டமிட்டுச் செயற்படுத்தியவர்களோ அல்லர்.
மாறாக, பாபர்மசூதி தரைமட்டமாக்கப்பட்டுக்
கொண்டிருந்தபோது அதைத் தடுப்பதற்கு முயற்சி
செய்தவர்கள், தடுக்க முயன்றவர்கள் என்கிறது
நீதி. இலட்சக்கணக்கான கரசேவர்கள், மக்கள்,
பாதுகாப்புப்படைகளைக் கடந்து போய் அந்த
சமூகவிரோதிகளைத் தடுக்க முயன்றவர்கள்
அந்த மாபெரும் தலைவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் தார்மீக
அடிப்படையில் பதவி ஏற்பதையும், அக்கட்சி
அவர்களுக்குப் பதவி வழங்குவதையும்
செய்திருக்கக் கூடாது என்று பேசுவதற்கான
எல்லைகள் கொண்டதல்ல அவர்களது கட்சி
அல்லது ஆட்சி. பிறர் மீது எவ்வளவு வெறுப்பை
உமிழ்கிறீர்களோ, பிளவு அரசியலைச்
செய்கிறீர்களோ அல்லது அதை சொல்லில்,
செயலில் காட்டுகிறீர்களோ அந்த அளவிற்கே
அவர்கள் தலைவர்களாக இருக்க முடியும்,
பதவியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற
கொள்கை அடிப்படையிலானச்
செயல்களுக்கானப் பதவியே பாபர் மசூதி
இடிப்பு வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கானப் பதவிகள்
தொடர்புடைய க் கட்சிகளால்
வழங்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சியாக
இருந்தால் அமைச்சு மட்டத்தில் அவர்கள்
பெருமைப்படுத்தப்படுவார்கள். இன்னும் கூட
பதவிகள் அவர்களுக்குக் காத்திருக்கக்கூடும்.
இலங்கையில் தமிழர்கள் மீது கொள்ளும்
வெறுப்பின், செயலின் விளைவுகளைக்
கொண்டே அங்கே சிங்களத் தலைமைகள்
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதைப் பார்க்க
முடியும். தமிழர்களை உக்கிரப்போரில்
கொன்றொழித்ததற்கான வெகுமதிகளையே
இன்றைக்கு ராஜபக்சே, அவரது குடும்பத்தினர்
அரசியலில் ஆகப்பெரிய அதிகாரத்தைப்
பெறுபவர்களாக, பெற்றுக் கொண்டவர்களாக
இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கான
தொடர் வெகுமதிகள் இருக்கவே செய்கின்றன.
இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் போது
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை தனது
துவக்கால் தாக்கிக் கொல்ல முயன்ற சோமவீர
என்ற சிங்கள படைவீரன், இன்றைக்கு அங்கு
செல்வாக்கு மிக்க அரசியல் தலைவன். பிளவு
அரசியலின் வெகுமதி இப்படித்தான் இருக்கும்.
இருக்கிறது. காந்தியைக் கொன்ற
நாதூராம்கோட்சேக்கள் அவர்களது வாரிசுகள்
ஆட்சிக்கு வருவதற்கும், வரமுடிவதற்கும் அதுவே
காரணமாக இருக்கிறது. பிளவு அரசியலை
ஏற்கும் வரைக்கும் பிளவுவாதிகளே நமது
தலைவர்களாக நீடிப்பார்கள். பிளவின் உற்பதி
கோட்சேக்களையும், இட்லர்களையும்
உருவாக்கிச் செல்கிறது. பிளவுகளின் நீதி
மனிதனை சகமனிதனிடமிருந்துப் பிளப்பது
முதல், அது சகல துறைகளையும் பிளந்து
செல்கிறது. பிளவே இடிக்கச் சொல்கிறது
பிறிதொன்றைக் கட்ட சொல்கிறது. பிளவே
அதற்கான நீதியையும் வழங்கிவிடுகிறது.
பாபர் மசூதி இடிப்புக்கான வெகுமதிகள்
அரசியல், அதிகார மட்டம் என சகல
துறைகளிலும் அவரவருக்கான வெகுமதிகளாகக்
காத்திருக்கின்றன. பாதுகாப்புத் துறை தொடங்கி
கரசேவையில் ஈடுபட்டவர் வரையிலும் இந்த
வெகுமதி இருக்கக்கூடும். லட்சக்கணக்கானோர்
பார்த்துக் கொண்டிருந்த நிலையில் யாதொருவர்
கண்களுக்குமே தெரியாத வகையில் மசூதியின்
செங்கற்களை உருவிய ஒவ்வொரு சமூக
விரோதிக்கும் அதற்கான வெகுமதிகள்
கிடைக்கவே செய்யும். இடித்தவர்களுக்கான
குறைந்த பட்சத் தண்டனை ஒரு பக்கம்
இருக்கட்டும். இடித்ததை ஒப்புக் கொண்டு
அதைக் கண்டிப்பதற்கான எந்த நீதியும், அறமும்
பிளவு அரசியலில் இருப்பதில்லை .
இருக்கவுமில்லை.
பாபர் மசூதி இடிப்பை வேடிக்கை பார்த்த,
தமது மவுனத்தையேப் பரிசாகத் தந்த காங்கிரசு
அரசின் அன்றைய பிரதமர் நரசிம்மராவ்
காலத்தில் அமைக்கப்பட்ட லிபரான் கமிசன்
இந்திய சனநாயகத்திற்கு ஓர் ஆகச் சிறந்த
எடுத்துக்காட்டு. ‘பொதுவாகவே ஒன்றை முடிக்க
வேண்டுமானால் அதன் மீது கல்லைப்போடு
அல்லது ஒரு கமிசனைப் போடு’ என்பது நமது
சனநாயகத்தின் மீதான மொழி. அதற்கு லிபரான் கமிசனையே எடுத்துக் காட்டாகச் சொல்லாம்.
16 ஆண்டுகள் இது குறித்து ஆய்வு செய்த
கமிசன் அறிக்கையை வெளியிடுவதற்கு ஏற்பட்ட
தடைகள், ஏற்படுத்தப்பட்ட தடைகள் நமது
சனநாயகத்தின் ஆகப்பெரிய வீழ்ச்சி. ராம
ஜென்மபூமி இயக்கத்திற்கான நிதிக்காகத்
தனிநபர் தொடங்கிப் பல்வேறு அமைப்புகளின்
பெயரில் நிதி எப்படித் திரட்டப்பட்டது, யார்
யாருக்கு கமிசன் சென்றது என்பவற்றை அது
விரிவாகச் சொல்கிறது. மேலும் கூட்டத்தைத்
திரட்டியது முதல் மசூதியை இடித்ததுவரைத்
துல்லியமான திட்டமிடல் இருந்தது என்பதை
அது வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது.
இந்த நிகழ்வு அன்றைய உ.பி முதல்வர்
கல்யாண்சிங்கிற்கு தெரியாமல் நடந்த ஒன்றல்ல
என்றது கமிசன். நரசிம்மராவ் வரையில் அதன்
விசாரணை நீண்டு செல்லவே செய்தது.
நமது அரசியல்வாதிகள் பாபர்மசூதி இடித்த
கற்களைப் போட்டு லிபரான்கமிசனையே
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள். லிபரான்
கமிசன் ஒன்று பாபர் மசூதி இடிப்புக் குறித்து
16ஆண்டுகள் ஆய்வு செய்து ஒரு நீண்ட அறிக்கை
வெளியிட்டது என்பது பற்றிய ஒரு செய்திகூட
நமது நினைவுகளிலோ, பாபர் மசூதி குறித்தத்
தீர்ப்புகளிலோ இருக்கவில்லை என்பது நமது
சனநாயகத் துயரமன்றி வேறில்லை.
ஏற்கனவே பெருந்தொற்றில் நாளாந்தம் மக்கள்
வீழ்ந்து மடிந்து கொண்டிருக்க, உச்சநீதிமன்றத்
தீர்ப்பிற்கு முன்னதாகவே ராமர் கோவில்
கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில்
பிரதமரும், உ.பி.முதல்வரும் கலந்து கொண்டதன்
வழி நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்க
வேண்டும் என்பதையும் இந்தியா மதசார்பற்ற
தேசமல்ல என்பதையும் செயலில்
உறுதிப்படுத்தியிருக்கின்றனர். பாபர் மசூதி
இடிப்பின் மீதானத் தீர்ப்பின் நீதியை
அப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.
“இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள
ஒருவர் அதன்காரணமாகவே தாம் சிறியவராக
இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார்
என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட
இந்தியா அல்ல!” என்று காந்தியார் சொன்னார்.
பாபர் மசூதி இடிப்பு, அதன் பின்னரான
கலவரங்கள், உயிர்ப்பலிகள், உறுப்பிழப்புக்கள்,
பொருளிழப்புக்கள், ஏதிலி முகாம்கள், நிரந்த
ஊனம், நிரந்தரத் தொழில் இழப்பு என்பவை
எல்லாம் சிறுபான்மையினரை ,
சிறுபான்மையாகவே உணரச் செய்யும் அரசியலே.
வென்றவர்கள் நீதி என்று ஒன்று இருக்கத்தான்
செய்கிறது. முடியாட்சி நாட்டுக்கு அது சரி.
குடியாட்சி நாட்டுக்கு இப்படியான நீதி
ஆபத்தானது.