Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

கொரோனாவை ஒழிக்கும் கூட்டுச் சிகிச்சைமுறை!

உலகப்போர்கள் வந்து பல ஆண்டுகள் ஆயிற்று – அதன் விளைவுகள் எப்படி இருக்கும்
என்று பார்க்கும் வாய்ப்பு இன்று!

பக்தியின் ஆழத்தை இறைவன் சோதனை செய்த நிகழ்வுகள் புராண நூல்களில் மட்டுமே
வாசித்திருக்கிறோம் – இன்று நேரில் காண்கிறோம்.
தன் அணிகலன்க ள் ஒவ்வொன்றும் சிதைக்கப்படுவதன் வன்மத்தை இயற்கை ஒட்டுமொத்தமாக மனித குலம் மீது காட்டுகிறது!
பிறப்பு முதல் இறப்பு வரை எதையோ தேடித்தேடி ஓடிக்கொண்டே இருந்த மனிதனுக்கு,
சிந்திக்க வேண்டி ஒரு சிறிய இடைவெளி!
“கடவுளை மற; மனிதனை நினை” என்னும் முழக்கம் இன்று சொல்லாமல் சொல்ல உணர்த்தப்படுகிறது.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று படித்த நமக்கு, உயிர்பயம் வந்தால் எதுவெல்லாம் பறந்து போகும் என்பதற்கு நாமே சாட்சியாகி இருக்கிறோம்.
நம் கண்முன்னே, உடன் படித்தவர்கள், நண்பர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என
இளையோர் நம்மையும் முந்திகொண்டு நித்திய இளைப்பாறுதலை அடைவது மிகக்கொடுமை!

கண்ணுக்கு தெரியாதவைகள்.. அஞ்சு பூதங்களானாலும் சரி.. கடவுள்களானாலும் சரி,
பேய்களானாலும் சரி..அவைகளுக்குத்தான் அதீத சக்தி இருந்திருக்கிறது. அந்த வரிசையில்
இன்னொரு கண்ணுக்குத் தெரியாத…severe acute respiratory syndrome coronavirus 2
என்னும் கொடிய நோய்க் கிருமி… அடிக்கடி உருமாறி நிகழ்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இதற்கென இன்னும் நிரந்தர தீர்வு (definite cure ) எதுவும் இல்லாதபோது, நமது பாரம்பரிய மருத்துவமாம் சித்த மருத்துவம் தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டிக்கொண்டு இருக்கிறது.
முதல் அலை தானாகவோ அல்லது நவீன அலோபதி மருந்துகளாலோ அல்லது கபசுர
குடிநீர்போன்றநோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் மூலிகை மருந்துகளாலோ ஓரளவு கட்டுக்குள்
வந்துகொண்டிருந்த சமயம், அடுத்த வலுவான அலை நமக்கு பலவற்றை உணர்த்துகிறது.
வரலாற்றில் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளும் பல கண்டுபிடிப்புகளை,
சீர்திருத்தங்களை நோக்கி மனிதகுலத்தை தள்ளியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், உலக
அளவில், மருத்துவதுறையில் செய்யவேண்டிய ஒரு சீர்திருத்தம் இருக்கிறது , அது
ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளை மனதில் வைத்து திட்டமிடப்பட வேண்டிய ஒன்று.
இந்தக் கட்டுரை அதன் தேவையையும், எவ்வாறு அதை தமிழக மண்ணில் செயல்படுத்துவது
என்பதையும் ஆழமான பார்வையில் தொலைநோக்குச் சிந்தனையுடன் விவரிக்கிறது.

தமிழனின் சித்த மருத்துவம்:

பழங்காலத்தில், பேய்களும், கடவுள்களும்தான் நோய்களுக்குக் காரணம் எனவும், அவர்களை
சாந்தப்படுத்த வேண்டும் என்றும் மந்திரங்களுடனும் சிலைகளுடனும் ஒரு கூட்டம் கிளம்பிய போது,

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்க

என புதிய திசையைக் காட்டியது திருமந்திரம். அதாவது, சதையை உடைய உடம்பு தான் ஆலயம் என்றும், உள்ளம்தான் அதன் கருவறை என்றும், வாய்தான் கோவிலின் கோபுர வாசல் என்றும், உயிர் தான் அங்கே கடவுளாக வழிபடக்கூடிய சிவன் என்றும், ஐம்புலன்கள்தான் கோவிலின் அலங்காரவிளக்குகள் என்றும் கூறி, சிலைகளைக் கொண்டுள்ள கோவிலை விடவும், ஒவ்வொரு மனித உடலும் ஒரு கோவில்தான் என்ற புதிய சிந்தனையை விதைத்தனர் சித்தர்கள். என்
உடம்பு எனக்கு கோவில் என்றால், என் உயிர் என்னுள்ளே குடிகொண்டிருக்கும்
கடவுள் (சிவம்) என்றால், அந்தசிவம் போனபிறகு நான்சவம் ஆவேன்.
இதைப்போலத்தானே ஒவ்வொரு மனிதனும் கடவுள் குடிகொள்ளும்
நடமாடும் கோவில்கள். எனவே அத்தனை கோவில்களையும் , அத்தனை மனித உயிர்களையும்
மதிக்க வேண்டும் என்ற சமத்துவ சிந்தனையை முதலில் விதைத்த சிந்தனை வாதிகள் சித்தர்கள்.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே
– திருமந்திரம்

முன்பு உடம்பினை பாரம்பாக/ கீழாக நினைத்தேன், ஆனால் உடம்புக்குள்ளேதான் இறைவன் (உறு
பொருள், உத்தமன்) இருக்கின்றான் என்று என்றைக்கு நான் தெரிந்து கொண்டேனோ , அன்றிலிருந்தே , இந்த பொக்கிஷமான உடம்பை நான் இருந்து ஓம்புகின்றேன் என்று திருமூலர் கூறுகிறார். உடலை ஓம்புவது என்பது விருந்து ஓம்புதல் மாதிரியே, அதாவது உடலைப் பராமரிப்பது (சேவை செய்தல்) ஆகும், அதற்காக உருவாக்கப்பட்ட வைத்தியம் தான்
சித்த வைத்தியம்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
– திருமந்திரம்

உடல் என்னும் கோவிலை பராமரிப்பதே பிரதானம் என்று சித்தர்கள் சொல்கின்றனர். அந்த
உடம்பை எப்படி வளர்க்க வேண்டும்? அதன் உபாயம் (technique) என்ன? என்பதைப் பற்றிய
ஆராய்ச்சியின் விளைவே சித்த மருத்துவம். இந்த சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தித்தான், தன்
உடலை பராமரித்ததாக திருமூலர் சொல்கிறார். உடனே சில மொழியியல் ஆய்வர்கள் எங்காவது
சித்த மருத்துவம் என்ற பெயர் சங்க கால நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறதா என்று கேட்பர்.
உண்மைதான் எங்குமே சொல்லப்பட்டவில்லை. ஆனால், தமிழ் மக்கள் இதைக் கண்டுபிடித்த
சித்தர்களின் நினைவாக சித்த வைத்தியம் என்று அழைக்கத்தொடங்கினர் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனித உடலின் உள்ளிருக்கும் கடவுளை அறிந்துகொள்ள தன்னுள்ளேயே கடவுளைத் தேடும்
(internal search, self realization) யோகக் கலையை அறிமுகம் செய்தவர்கள் தமிழ் சித்தர்கள். முதல்
சித்தன் சிவனை யோகாவின் கடவுளாகவும், பதஞ்சலியை யோகாவின் தந்தையாகவும்
உலகோருக்குச் சொன்னான். தற்போது தெரியும். அதே ஆதிசித்தன் சிவன்தான்
சித்தாவுக்கும் மூலம் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும் .
பதஞ்சலியும், திருமூலரும் ஒரே வகுப்பில் (same batchmate) பயின்ற எட்டு மாணவர்களாக இந்த
யோகாவைக் கற்றதாக திருமூலர் பின்வரும் பாடலில் சொல்லியிருப்பதை மறைத்துவிட்டனர்.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மற்று தொழுத பதஞ்ச்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே
– திருமந்திரம்

இந்த பதஞ்சலியும், திருமூலரும்
தமிழ் மொழியில் பல சித்த மருத்துவ
நூல்களை எழுதியுள்ளனர். இருவரும்
யோகத்தைப் பற்றி புத்தகங்கள்
எழுதியிருந்தாலும், பதஞ்சலியின்
எழுத்து சமஸ்கிருத்தில் இருந்ததால்,
அவருக்கு உலக அங்கீகாரம் வாங்கிக்
கொடுத்துவிட்டனர் சமஸ்கிருத
ஆதரவாளர்கள். அதே கருத்துக்களை
திருமூலர் தமிழில் எழுதியதற்கு, இன்று
தமிழ் உலகம் மிகப்பெரும் தண்டனையை அவருக்கு
கொடுத்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.
தமிழகத்தில் பொறியியல் படித்து விட்டு, வெளிநாடு சென்ற ண்பனுக்கும்,உள்ளூரில் அதுவும் கிராமத்தில் சேவை செய்யும் இன்னொரு நண்பனுக்கும் உள்ள
வித்தியாசம் தான் இந்த பதஞ்சலிக்கும் திருமூலருக்கும்.
தமிழ் மக்கள் சித்தர்களுக்கும் சித்த மருத்துவத்துக்கும்
செய்த இந்த வரலாற்றுப் பிழையை நம்
தலைமுறையிலேயே திருத்தியாக வேண்டும்.

பதஞ்சலி கடைசிக்காலத்தை ராமேஸ்வரத்தில் கழித்து, யோகத்தில் ஆழ்ந்து அங்கு சமாதியான

இடத்தில்தான் பிற்காலத்தில், ராமேஸ்வரம் சிவன் கோவில் கட்டப்பட்டதாக சித்த நூல்கள்
சொல்கின்றன. தமிழ் சித்தர்களை கடவுள் போலும், வித்தை காட்டுபவர்கள் போலும், கடவுள்
அவதாரங்கள் போலும், கடவுள் மறுப்பாளர்கள் போலும் பலர் நம்புகின்றனர். அவர்களைப்பற்றிய
சுவாரசியமான, கண்டிப்பாக அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மறைக்கப்பட உண்மைகள்
நிறைய உண்டு. அது பற்றியெல்லாம் பின்னர் எழுதுகிறேன். ஓகம் எனும் யோகம் என்றாலே
சமஸ்கிருதம், இந்து மதம் என்றும் பெருமைப்படும் உலகோருக்கு, அது தமிழனின் கலை என்பதை
உரக்கச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்த மனிதரைத் தொட்டாலே பாவம், அவன் குறிப்பிட்ட சாதியில் பிறந்ததே கர்மா, அவனின்
நோய்களும் கர்மத்தாலேயே வருகிறது என்கிற சனாதன அணுகுமுறைக்கு எதிராகக் கிளம்பியதுதான் சித்த மருத்துவம். இங்கு, மனிதனைத் தொட்டு கைகளில் நாடி பார்க்கவேண்டும், நோய்களை மருந்துகளால் பார்க்க வேண்டும், என்பது தான் முதன்மை. ஆண்டவன் கர்மாவுக்கு ஏற்ப கொடுத்த நோய்களை குணப்படுத்த முயல்வதே முதல் இறை மறுப்புதான், முதல் விஞ்ஞான சிந்தனைதான். எனவே, இந்திய நாட்டின் முதல் மருத்துவ அறிஞர்கள் தமிழ் நாட்டிலிருந்து கிளம்பிய சித்தர்களே. கடவுளை அடைய முயற்சிப்பவன் பக்தன், அடைந்தவன் சித்தன். எனவே அவர்களை கடவுளுக்கு நிகராக மதிப்பளித்து, வானுயர தெய்வத்துள் வைத்து, சித்தர் வழிபாடுகளே இங்கு இருந்திருக்கிறது. தாவரங்களின் பெயர்கள் , விலங்குகள், தாது உப்புக்கள், நோய்களுக்கான குறிகுணங்கள், நோயின் பெயர்கள், வைத்திய முறைகள், உணவு வகைகள், மருந்துகள் செய்யும் முறைகள் என ஆயிரக்கணக்கான, தமிழ் அகராதியில் சேர்க்கப்படாத தமிழ் அறிவியல் சொற்களை இன்னமும் சித்த மருத்துவம் தன்னகத்தே கொண்டுள்ளது.

சித்த மருத்துவம் செத்த மருத்துவமா?

தமிழ் மக்களின் புராதனமான ஆரோக்கிய வாழ்வு முறையானது, நாட்டு வைத்தியம், பண்டுவம்,
சித்த வைத்தியம், ஆயுள் வேதம் (சிலப்பதிகாரம் குறிப்பிடுவது) என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு, இன்றுவரை தமிழ் மக்களின் ஆரோக்கிய வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக
இருக்கிறது. நான்கு வேதங்களைக் கொண்ட ஆரியர்கள், ஐந்தாவது வேதமாக இந்த தமிழனின்
ஆயுள் வேத்தை, ஆயுர்வேதமாக தன்னகத்தே கொண்டனர் என்பது, ஒரு நம்பிக்கை. இந்த
வரிகளுக்கு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான தேவை இருக்கிறது. தமிழன் உலகெல்லாம் பரந்து விரிந்து சென்ற போது, அவன் கையோடு எடுத்துச்செல்ல மறந்த இந்த துறைதான் சித்த மருத்துவம். மேடை நாடகங்கள் இன்று சினிமாவாகவும், கையெழுத்துப்
பிரதிகள் இன்று இணைய பத்திரிகைகளாகவும், தெருக்கூத்துப் பாடல்கள் இன்று ராக்
ஆல்பங்களாகவும், மாட்டு வண்டியின் சக்கரம் இன்று உலகத்தையே இயக்கும் இயந்திரங்களின்
சக்கரங்களாகவும் நவீனமயமாகிவிட்ட போது, இன்னமும் தமிழன் அறியாமையால் ஒளித்து
வைத்திருக்கும் ஒரு மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். நமக்கு தெரிந்ததெல்லம் ஏதோ,
சிட்டுக்குருவி லேகியமும், இப்போது கபசுர குடிநீரும் தான், இவையெல்லாம் ஒரு டிரையிலர்தான்.
கொஞ்ச நேரம் உ ட்கார்ந்து சித்தாவின் முழுக்கதையையும் கேட்க தமிழனுக்கு நேரமில்லை,
முழுக்கதையும் தெரிந்தவர்கள் இப்போது முதிர் வயதில் கேட்பாரற்று கிடக்கின்றனர். அதன்
ஆழமும் அகலமும் தெரிய முற்பட்டவர்கள் கடைசியில் இயற்கையின் ரகசியங்களை அறியும்
வாய்ப்பையும், முக்திபெறும் உத்தியும் அறிந்து, புளியம்பழத்தில் எவ்வாறு பழம் ஓட்டுடன் ஒட்டாது
தனித்து இருக்குமோ , அதைப் போலவே , உலகப்பற்ற ற்று, விளம்பரம் தேடாமல் தனித்திருக்கின்றனர்.

தமிழ் என்ற மொழி தனித்துவமானதாயின், தமிழ்
குடிகள் மூத்த குடிகள் என்பது உண்மையாயின்,
போர் புரிந்து பெற்ற விழுப்புண்களை ஆற்றியது உண்மையாயின்,

, தமிழ் தாத்தாக்கள் (திருவள்ளுவர் உட்பட) கூறிய அறம் தனித்துவமாயின், தமிழர்
உணவு தனித்துவமாயின், அவர்களுக்கு நோய்கள் வந்தபோதெல்லாம் தீர்த்து இதுகாறும் இந்த இனம் விருத்தியாகியிருக்கிறது எனில், தனித்த ஒரு மருத்துவ மரபு இருந்திருக்கக் கூடும் என்பதை கூட நாம் ஏன் யோசிக்க வில்லை? திருக்குறள் நால்வேதங்களின் சாராம்சம் என்று அங்கொருவன் கூவினால், இது தமிழரின் தனித்த ஆன்மீகவியல் (Tamil philosophy) என்று ஆர்ப்பாட்டம் செய்யும் நாம், சமஸ்கிருதத்தின் ஆயுர்வேத வைத்திய மரபைதான் தமிழன் சித்தா என்று வைத்திருக்கிறான், அவனுக்கென தனியான மருத்துவ மரபு இல்லையென கூவும் குரல்களுக்கு
எதிர்க்குரல் எழுப்பவில்லையே? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதைப்
போல, நம் வீட்டு மல்லிகையை அரளிபூவைபோல நசுக்கிவிடும் மன நிலையை நாம் மாற்ற வேண்டுமா? அதற்கு தமிழ்பேசும் ஒவ்வொருவரும் சித்தர் இல்லையா? மருத்துவத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தமிழ் மேடைகளில் சித்த மருத்துவத்துக்கு இடம் தர வேண்டும். தமிழ் ஊடகங்கள்- எழுத்தாளர்கள் சித்த மருத்துவத்தைப் பற்றி பேச வேண்டும். மாட்டு கோமியத்துக்கு இந்திய அளவில் எழும் குரல், சித்த மருந்துகளுக்கு தமிழகத்தில் எழாதது வருத்தமே.

உலக அளவில், சீன, சமஸ்கிருத, தமிழ், உருத போன்ற பழம் மொழிகளுக்குடையே இப்போது ஒரு
அறிவியல் போட்டி நடக்கிறது, அதாவது தனக்கென்ற பாரம்பரிய மருத்துவ அறிவியலுக்கான போட்டி. இங்கு மத்திய அரசு வழக்கம்போல, சமஸ்கிருதம் சார்ந்த ஆயுர்வேதத்தை மட்டுமே உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. தமிழ் மொழிக்கென தனி நாடு எதுவும் இல்லாத நிலையில், தமிழ்நாடு தான் சித்த மருத்துவத்தை தமிழ் தேசிய மருத்துவமாக அறிவிக்க வேண்டும். பாட்டி செய்த உணவுகளின் அந்த உருசியை நம் தாயின் சமையல் தருவதில்லை. தாயின் சமையல் உருசியை மகள் தருவதில்லை… கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனகதை இந்த சமையலில் மட்டுமல்ல, சித்த மருத்துவத்திலும்தான். ஆனால், சமையலுக்கென்று வரையறுக்கப்பட்ட
(standardized) பாடத்திட்டத்துடன் படிப்புகள் வந்தது போலவே, சித்தாவுக்கும் படிப்புகள் வந்துவிட்டன. இலங்கையில் கூட தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டு, தன் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்க்க வேண்டி, இரண்டு சித்த மருத்துவக் கல்லூரிகளை (வடக்கு மற்றும் கிழக்கு மாநில தமிழ் அரசுகள்) நடத்தி வருகின்றன. இது தமிழனின் முக்கியப் பொறுப்பு என்பதை நாம் அவர்களிடமிருந்து கரம்கொள்ள வேண்டும். அவர்கள் MD (சித்தா) படிக்க தமிழ்நாடு
வருகின்றனர். கடந்த கால தமிழ் நாடு அரசுகள் சித்த மருத்துவத்துக்கு சிறந்த ஆதரவு தந்துதான்
இருக்கிறார்கள். தமிழ் நாட்டில், 10 க்கும் மேற்பட்ட சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அலோபதியை போலவே 51/2 ஆண்டுகள் இளம்கலை படிப்பும் (BSMS), பட்ட மேற்படிப்பும் (MD), Ph.D. படிப்பும் உள்ளன. BA/MA தமிழுக்கு அடுத்த படியாக, தமிழின் சித்த மருத்துவம்தான் இந்த UGC மற்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற செம்மைப்படுத்தப்பட்ட படிப்புகளாக இருக்கிறது. அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள், தமிழ் போராளிகளாகிய நமக்கு தெரியவில்லை என்பதால், சித்த மருத்துவம் செத்த மருத்துவம் அல்ல.

இத்தாலியின் சமையலுக்கு முன்னால் தமிழ் சமையல் போட்டி என்று போட முடியாமல்
இருக்க லாம், ஆனாலும், தமிழ் நாட்டின் அடுக்களைகளும், தமிழனின் வயிறும் கேட்பது தமிழ்
சமையலைத்தானே. என்றோ ஒரு நாள் உருசிக்காக, அல்லது தேவைக்கு மட்டும் இத்தாலியன் உணவுகளை தின்பது நல்லதுதான். தினமும் தின்னுவதற்கு நமக்கு நம் மரபு உணவுகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நம் சித்த மருத்துவம். தமிழனின் மரபணு நமது உணவுக்கும், மரபு மருத்துவத்துக்கும் பழக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிறது. அதிலிருந்து விலகிச் செல்ல செல்ல, அதற்குண்டான ஆரோக்கியக் கேட்டை நாம் அனுபவிக்க வேண்டிவரும். சித்த மருத்துவம் ஒரு போதும் சாவதில்லை. மனித குலத்துக்காக சித்தர்களால் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவம், தமிழகத்தில் புதைக்கப்பட்டால், வேறு எங்கோ, எதோ பெயரில், அந்த மக்களுக்கு பயனை தந்து கொண்டுதான் இருக்கும். தமிழர்களின் சித்தமருத்துவத்தை கேரள
சேட்டன்கள், கேரள ஆயுர்வேதமாக பெயரிட்டு, மிகப்பெரும் பொருளாதாரத்தை கேரளத்துக்கு ஈட்டி தருகின்றனர். திருக்குறளை சமஸ்கிருதத்தில் பெயர்த்து வெளியிட்டு விட்டு, சமஸ்கிருத
திருக்குறள்தான் ஆதி நூல் என்று கிளம்பினால், நாம் என்ன செய்ய இயலும்? சித்த மருந்துகளும்
இன்று அப்படித்தான், வேறு மொழிகளில், வேறு மாநிலங்களில் மக்களுக்கு பயன்பட்டுக்
கொண்டுதான் இருக்கிறது. சித்த மருத்துவத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்றும் பெருமையே.

எவனோ ஒளித்து வைத்த இந்தியாவை எவனோ தேடிக்கண்டுபிடித்த பிறகே அது உலக வரைபடத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். அதேபோலத்தான், இப்போது சித்த மருத்துவத்தை உலக வெளியில் காட்டத் தவறினால், தமிழுக்கு நாம் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகிவிடும். வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம், அப்துல்கலாமும், மோடியும் திருக்குறளையும் திருமந்திரத்தையும் சொல்லத்
தவறியதில்லை. அதைப் போலவே, நாம் சித்த மருத்துவத்தையும் சொல்லத் தவறக்கூடாது.

மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும்
மறுப்பது உள நோய் மருந்தென சாலும்
மறுப்பது நோய் இனி வராதிருப்ப
மறுப்பது சாவையும் மருந்தெனலாகும்
– திருமூலர் கற்பவிதி

மருந்து என்றால், அது உடல் மற்றும் உள்ள (மன) நோய்களைப் போக்கவேண்டும், அவைகளை
வராமல் தடுக்க வேண்டும் (preventive care), அது சாவையும் (முதுமையையும்) தள்ளிப்போட
வேண்டும் என்று இந்தப் பாடலில், திருமூலர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
அன்றிருந்த பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு சவால் விட்டிருக்கிறார். அந்த சவாலை ஏற்று,
மக்களுக்கு பலனளிக்கும் வகையில்தான் சித்த மருத்துவத்தை சித்தர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் தான், geriatric medicine, regenerative medicine, stem cell therapy என்று
முதுமையை வெல்லும் யுக்திகளைப் பற்றி மருத்துவத் துறை சிந்திக்கத் தொடங்கி உள்ளது. இதற்கென்றே, திருமூலர் போன்ற எல்லா சித்தர்களும், காயகல்பம் (காயகற்பம்) என்ற ஒரு உயரிய துறையை வைத்திருக்கிறார்கள். யோகா என்பது, அந்த காயகல்பத்தின் ஒரு பயிற்சிமுறை ஆகும். எனவே சித்த மருத்துவம், இன்னும் பல தலைமுறைகளுக்கும் கூட பலன்தரும் நோக்கிலேதான் அன்றைக்கே வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனக்குத் தெரிந்து, உலகத் தமிழர்கள், இனிமேல் சித்தாவை மையப்படுத்தினால் மட்டுமே, தமிழ்
மொழிக்கு அறிவியல் மொழி என்ற பெருமை கிடைக்கும், தமிழ் சமூகத்துக்கு ஒரு அங்கீகாரம்
கிடைக்கும், அதன் வழியாகதமிழகப்பொருளாதாரம் பெருகும், பெருமளவு வேலை வாய்ப்புகளை
அள்ளித்தரும், வருங்கால சந்ததியினர் நோய் நொடியில்லாமல் வளர்வர். இதைப் பற்றிய
விரிவான கட்டுரைகளை நான் ஏற்கனவே எழுதி விட்டதால், இங்கு தவிர்க்கிறேன்.

ஒருங்கிணைந்த மருத்துவம் (Integrative Medicine):

அலோபதியில் ஒரு மூலக்கூறுதான் ஒரு மருந்து. ஆனால், பல மூலக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு
மூலிகையோ அல்லது அவ்வாறு பல மூலிகைகள் சேர்ந்தோதான் (polyherbal formulation) சித்தாவில்
ஒரு மருந்து. இந்த வரையறையிலேயே சித்தா போன்ற பாரம்பரிய மருந்துகள்
நிராகரிக்கப்படுகின்றன. ஒரு மூலக்கூறை உட்கொண்ட பிறகு எங்கு போகிறது, எவ்வளவு
நேரம் தங்குகிறது, கல்லீரல் அதை எப்படி உருமாற்றம் செய்து எந்த வழியாக எவ்வளவு நேரம் கழித்து உடலை விட்டு வெளியேற்றுகிறது என ஒவ்வொரு மூலக்கூறின் சாதகமும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்த பிறகே அதற்கு மருந்து என்ற அந்தஸ்து கிடைக்கும். உதாரணமாக ‘பாராசீட்டமால்‘ என்ற மருந்து 6 மணி நேரம் உடலில் தங்கி சுரத்தை
குறைக்கும், சரியாக 6 மணி நேரம் கழித்த பிறகு சுரம் மறுபடியும் எட்டிப் பார்க்கும். இதை
அடிப்படையாக வைத்துத்தான், ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கொருமுறை இந்த மருந்தை உண்ண
வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துவார், ஆக, அத்துணை ஆராய்ச்சிகளும் முடிந்த பிறகுதான், ஒரு புதிய மருந்தை மனிதன் உட்கொள்ள அனுமதிக்கிறது அலோபதி மருத்துவ முறை. இடையில் ஒரு வேளை, அந்த மருந்தில் ஆபத்து இருக்குமானால், அதன் மருந்து அந்தஸ்தை நீக்கவும், தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் அரசால் இயங்கி வருகின்றன. ஆனால், இப்படி எந்த விதமான அறிவியல் தரவுகளும் இல்லாமல், நம் பாரம்பரியம் என்ற ஒரே
காரணத்துக்காக சித்த மருந்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றால், அது அத்தனை
எளிதானது அல்ல. நம்பிக்கை சார்ந்த ஒவ்வொரு விடயமும் அது கடவுளே ஆனாலும் சரி, இளைய
சமுதாயம் கேள்விகள் கேட்கிறது. ஒவ்வொரு சித்த மூலிகைகளையும் அதன் சாதகத்தை அலசி ஆராய பல கோடிகள் வேண்டும், பல ஆண்டுகளும் ஆகும். ஆனால், இதை சரிகட்ட வேறு ஒரு வழி இருக்கிறது. அதாவது, ஏற்கனவே பெருவாரியான மக்களால் உண்டுவரப்படும் ஒவ்வொரு சித்த மருந்துகளுக்கும் என்ன பக்கவிளைவுகள், அது என்ன மாதிரியான பலன்களைத் தருகிறது, என்ற விடயங்களை ஆவணப்படுத்தினால், சில வருடங்களில், அந்த மருந்துகளின் அறிவியல் சாதகத்தை எழுதி விடலாம். உண்மையிலேயே சிறப்பாக இருக்கும் சித்த மருந்துகளை மட்டும், அடுத்த கட்ட முழு ஆய்வுகளுக்கு எடுத்துச் செல்லலாம். இதைத்தான் பின்னோக்கு மருந்தியல் ஆராய்ச்சி (Reverse Pharmacology) என்று அழைப்பர். இதைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

அலோபதியில் இரண்டு மூலக்கூறுகளை (மருந்துகளை) சேர்த்து ஒரே மாத்திரையாக (fixed
dose combiaiton) பயன்படுத்துவதற்கே அத்தனை ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தில் இன்னமும் ஒரு பழக்கம் இருக்கிறது. பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தில், மணமகன் மணமகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது கடைசி கட்டம்தான். அதற்கு முன்பே, இருவரின் சாதக பொருத்தங்களும் தீவிரமாக அலசப்படுகிறது. சாதி, மதம், மொழி, பெற்றோர் மற்றும் குடும்ப பின்னணி, வேலை, சம்பளம் என்று பல
ஆராய்ச்சிகளுக்குப் பிறகே, இருவரும் நேராகப் பார்த்துக்கொள்ளும் படலம் ஏற்பாடு
செய்யப்படுகிறது. எல்லாம் ஒத்து வந்தாலேயே இருவரும் இணைய அனும திக்கப்படுவர்.
பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னும் அதீத ஆசையால்தான் இப்படி எல்லாம் செய்கின்றனர். மணமுறிவு பெற்ற அல்லது ஒருவர் இளம்வயதிலேயே மரணம் அடையும் பல தம்பதியர் கூட இந்த ஆராய்ச்சிகளை செய்து பின்னர் இணைந்தவர்கள் தான் என்பது ஒரு குறிப்பு. இதை போலத்தான், அலோபதி சித்த மருந்துகளை இணைத்து கொடுக்கும் போது எதாவது தீய விளைவுகள் நோயாளிக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தால் தான், ஆராய்ச்சிகள் இல்லாத ஒருங்கிணைந்த மருத்துவ முறைக்கு அவ்வளவு எளிதில் அங்கீகாரம் கிடைப்பதில்லை.
ஆனால், சிறிய வயதிலேயே முறைப்பையனாக முறைப்பெண்ணாக வளர்ந்த இருவரையோ அல்லது முழு வீச்சில் காதலித்துவிட்ட இருவரையோ அல்லது திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகிவிட்ட இருவரையோ, தீவிர ஆராய்ச்சிகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டு விடுகின்றனர். இந்த குறுக்கு வழியைத்தான் இப்போது, ஒருங்கிணைந்த சித்த மருத்துவ முறைக்கு கடைபிடிக்க வேண்டி இருக்கிறது,
ஏனென்றால், ஏற்கனவே தமிழக மக்கள் அலோபதி மற்றும் சித்தா என இரு மருத்துவ முறைகளையும் இணைத்தே பல ஆண்டுகளாக உரிமையுடன் பயன்படுத்தியும் அதன் பலனை அனுபவித்தும்தான் வருகின்றனர். உதாரணமாக நீரிழிவு நோய்க்கு அலோபதி மாத்திரைகளுடன், சித்தா மூலிகை பொடிகளும், யோகமும், கைவைத்தியங்களும் சேர்த்தே மக்கள் பயன்படுத்தத்
தவறுவதில்லை. ஆனால், இது அலோபதி மருத்துவருக்குத் தெரியாது. இந்த நிலையில் அரசு
ஒரு சிறந்த நேர்மையான மருத்துவர்கள் குழுவை (நிபுணர்கள் உலகின் எந்த முறையில் இருந்தாலும் இணைத்து) உருவாக்கி, இதற்கு முடிவு எடுக்கலாம் . இது சாத்தியமான ஒன்றுதான்.

சித்த மருத்துவமும் கோரோனாவும்:

முதலில் தோன்றிய உயிர் எதோ ஒன்றை தின்றுதான் வாழ்ந்திருக்கும், அதற்கு ஒரு சீக்கு (நோய்) வந்த போது தன்னைதானே குணமாக்கிகொள்ள ஒரு யுக்தியை பயன்படுத்தி இருக்கும். வைரஸ் என்ற கிருமிகளுக்கும் மனிதனுக்கும் அன்று தொட்டு இன்றுவரை தொடரும் யுத்தத்துக்கு, அவ்வப்போது மனித குலம் ஏதோ ஒரு உணவு/மூலிகைகளை தின்றுதான், தன் இனத்தை இன்னும் விருத்தி செய்து கொண்டு இருக்கிறான்.

இன்று தமிழ் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் இல்லை. சித்தாவுக்கான மேடை இல்லாமல், எப்படி ஆடுவது என்பதுதான் நிதர்சனம். கோரோனாவை பொறுத்தவரை , அரசு சொன்னாலும்
சொல்லாவிட்டாலும், தமிழகமக்கள் தாங்களாகவோ அல்லது தங்களுக்கு தெரிந்த சித்த வைத்தியர்கள்/ மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலோ ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு வைத்திய முறைகளை அடுக்க ளை அளவில் அமுல்படுத்தி தான் வந்திருக்கிறார்கள். இவைகள் என்னென்ன – பலன் தருகிறதா – பலன் இல்லையா – அலோபதி மருந்துகளுடன் சேர்த்து உண்ணும் போது என்ன நடக்கிறது என்ற எந்த ஒரு ஆவணப்படுத்துதலும் கடந்த ஒரு வருடமாக நடக்கவில்லை. முதலில் நாம் செய்திருக்க வேண்டியது இதுதான். அமெரிக்கா,
இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற மூன்று நாடுகளிலும் கடந்த ஒரு வருடமாக 4 லட்சத்து 50
ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏப்ரல் 2021 ல், BMJ Nutrition, Prevention & Health,
என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. ஒரு வருடமாக எந்த வகையான உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களிடம் கொரோனா அண்டவில்லை என்பதே அந்த ஆராய்ச்சி. Omega-3 fatty acid, probiotic, vitamin D, multivitamins போன்ற supplements களை தொடர்ந்து எடுத்து கொண்டவர்களுக்கு கோரோனாவிலிருந்து பாதுகாப்பு உறுதி செய்யப்படிருக்கிறது. தமிழகத்தில் நாம் இதை செய்யத் தவறி விட்டோம். இனியும் செய்ய முடியும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய 6000 நூல்களை தமிழில் கொண்டுள்ள சித்த மருத்துவ முறையில் 64 வகையான சுரங்களும், 13 வகை சன்னிகளும் (complications associated with fever) மற்றும் 21 வகையான கப (ஐய்யம் அல்லது சிலேற்பன) நோய்களும் கொரோனாவுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அதற்கான
ஏறக்குறைய 50 க்கும் மேற்பட்ட சித்த மருந்துகளும் புழக்கத்தில் உள்ளன. நிலவேம்பு குடிநீரில்
ஆரம்பித்து லிங்க செந்தூரம் (medicated mercury), தாளக கருப்பு (medicinal arsenic) வரையிலும் பல
மருந்துகள் இங்கே புழக்கத்தில் உள்ளன . ஆனால் , சிறுபான்மையாக இருக்கும் BSMS
படித்த சித்த மருத்துவர்களால் மட்டுமே கொரோனாவுக்கான சித்த மருந்துகளை
வெளிக்கொணர முடியாது . அதுபோல, சித்தாவை அல்லது அலோபதியை மட்டுமே வைத்து அனைத்து கட்டங்களிலும் அனைத்து கொரோனா நோயாளிகளையும் சரிசெய்து விட முடியாததால், இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த மருத்துவ முறையை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கபசுர குடிநீர் மாத்திரையும் நிலவேம்பு மாத்திரையும்:

பதினைந்து மூலிகைகளைக் கொண்ட கபசுர குடிநீராகட்டும், ஒன்பது மூலிகைகளைக் கொண்ட
நிலவேம்பு குடிநீராகட்டும், இரண்டுமே கொரோனா கிருமியை அழிப்பதிலும், கோவிட் நோயாளியை தேற்றுவதிலும், அற்புதமாக வேலை செய்கிறது, ஆனால் அது கசப்பாக இருக்கிறது , சிறு குழந்தைகளால் குடிக்க முடியவில்லை, வயிற்றுப்புண் இருப்பவர்கள் குடித்தால் வாந்தியாகிறது, வெறும் வயிற்றில் குடித்தால் குடலை பிரட்டுகிறது , தொடர்ந்து பல நாட்கள் குடித்தால் வயிற்றில் வாய்வு தொல்லை வருகிறது என இதற்கென ஒரு மறுபக்கமும் இருக்கிறது. 5 கிராம் பொடியை எடுத்து, குடிநீர் தயார் செய்யவும் என்று அறிவுறுத்துதல் கொடுக்கப்பட்டாலும், அனைவரும் ஒரே மாதிரி தயார் செய்வதில்லை. மூலிகைபொடியானது, டப்பாவின் அடிப்பாகத்தில் மாவுபோலும், மேல்புறம் திருதிராகவும் (உதிரி) உள்ளது, எனவே முதலில் பயன்படுத்தப்படும் திருதிரு பகுதிக்கும், அடியில் உள்ள மாவுபோன்ற பகுதிக்கும் அடிப்படையில், மூலக்கூறுகளின் வேறுபாடு இருக்கும், அதனால் சில நேரம் பலனளிக்காமல் போகலாம் அல்லது
பக்கவிளைவுகள் வரலாம். எனவே உடனடியாக இந்த குடிநீர்களை மாத்திரை வடிவில் மாற்றி அரசு
மக்களுக்கு வழங்க வேண்டும். அப்போது, ஓரளவுக்கு அதன் முதற்கட்ட standardization level ஐ எட்டி
விடலாம். இந்த அடிப்படையைக் கூட நாம் சிந்திக்காமல் இருப்பதுதான் கவலையளிக்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் இந்த மூலிகைகளை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி
வருவதால், இன்னேரம் இந்த பூமியில் அந்த மூலிகைகள் அழிந்தேகூட போயிருக்கும். பல
மூலிகைக ள் மழைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை, பல வெளியூர்களிலிருந்து வர
வேண்டியிருக்கும். ஆக, தொடந்து இந்த மூலிகைகளை பல மாதங்களாக வேருடன் பிடுங்கி எடுப்பதால், இந்த குடிநீரில் அனைத்து மூலிகைகளும் தரமாக சேர்க்கப்படுகிறதா என்ற கேள்வி எழும். எனவே அதற்கு மாற்றாக, வேறு சித்த மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டியது சித்த மருத்துவர்களின் கடமையாகும். செடியும் கொடிகளும் இல்லாவிட்டால் சித்தா இல்லை.
எனவே, இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு பல செயல்பாடுகளை முன்னெடுக்க
வேண்டியிருக்கிறது. மூலிகை விவசாயம், வரள்நில மூலிகை விவசாயம், மூலிகை மதிப்புகூட்டு
பொருள்கள், ஏற்றுமதி இறக்குமதி, மருத்துவ சுற்றுலா என தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி போடும் அளவுக்கு, ஏன் டாஸ்மாக்கின் வருமானத்தையே அரசு நம்பாமல் இருக்கக்கூட,
இந்த சித்தா வணிகம் வழிவகுக்கும்.

கொரோனாவுக்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவம்:

தமி ழகத்தைப் பொறுத்தவரையில் சித்த மருத்துவம்தான் தேசிய மரபு மருத்துவமாகவும்,
மற்றவை எல்லாம் (அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி) நமக்கு மாற்று
மருத்துவமாகவும் அறிவிக்கப்பட வேண்டும். யோகா என்பது சித்த மருத்துவத்தின் ஒரு பகுதிதான்,
அதனால் அதை சித்த மருத்துவர்களே பார்த்துக்கொள்வர்.

“வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே” என்பதன் பொருள்,
முதலில் மூலிகைகளை கொண்டு பார்க்க வேண்டும், அதில் தீராவிட்டால், பற்பம் செந்தூரம் போன்ற உயர் சித்தா மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அதிலும் தீராத நோய்களுக்கு மட்டுமே, நவீன அலோபதி மருத்துவம் தேட வேண்டும். மக்களின் நோய்களுக்கு, முதலில் சித்த மருத்துவர்களைத் தான் அணுகி வைத்தியம் பார்க்க வேண்டும், தேவைப்படின் மாற்று மருத்துவ முறைகளை சேர்த்தும், அவற்றில் முடியாத போது கடைசியாக அலோபதி வைத்திய
முறைப்படி உயிரை காக்கவும் வேண்டிய மன பக்குவத்தையும், நடைமுறையையும் கொண்டுவர
வேண்டும். பல சித்த மருத்துவர்கள் கூடுதலாக MBBS படித்து இருக்கிறர்கள், பல MBBS மருத்துவர்கள் சித்தாவின் மீது நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். பல MBBS மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் சித்த
மருத்துவர்களாகவோ அல்லது தனது குடும்ப உறுப்பினரகளுக்கு சித்த வைத்தியம் மேற்கொண்டதன் பேரிலோ, சித்தா மீது ஒரு நல்லெண்ணம் இருக்கும். பல சித்த மருத்துவர்கள் என்னைப்போன்று நவீன அறிவியலின் பல்துறைகளில் மேற்படிப்பு பயின்று சித்தா வளர்ச்சிக்கு பணிசெய்ய வாய்ப்புகளை தேடிக்கொண்டும் இருப்பர். இந்த மாதிரியான ஒட்டுரக (interdisciplinary or hybrid Siddha doctors) மருத்துவர்களை இணைத்து குழு உருவாக்க வேண்டும்.

இந்த குழு, கோவிட் நோயாளியின் ஒவ்வொரு குறிகுணத்துக்கும் என்னென்ன சித்தா/அலோபதி
மருந்துகள் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு கட்டத்துக்கும் என்னென்ன மருந்துகள் உண்டு, எந்த நிலைவரை சித்தா மருந்துகள் வேலை செய்யும், அதன் எல்கை என்ன, எந்த நிலையில் இரண்டு வைத்திய முறைகளும் சேர்த்து பயன்படுத்த வேண்டும், எந்த நிலையில் முற்றிலும் அலோபதியிடம் நோயாளியை ஒப்படைக்க வேண்டும் என்பன பற்றிய விரிவான விவாதம் நடத்த வேண்டும். இந்த முதற்கட்ட வேலை முடிந்தால், 70% கோரோனா பாதித்த மக்களை வீட்டில் இருந்த படியே நாம் குணப்படுத்த முடியும், 20% நோயாளிகளை ஒருங்கிணைந்த மருத்துவ மையங்களில் கூட்டு சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். வெறும் 10% மட்டுமே தனித்த அலோபதிமுறைக்கு செல்லக்கூடும். இதனால், அரசுக்கு செலவு குறையும், பக்க விளைவுகள் குறையும், சிறந்த பலன் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தை முதலில் ஏதோ ஒரு மையத்தில் அல்லது மாவட்டத்தில் சோதனை முறையில்
ஆரம்பிக்க வேண்டும். ஏகப்பட்ட நோயாளிகள் தாங்களாகவே இந்த கூட்டு சிகிச்சைக்கு வருவார்கள் என்பதும் அரசு யாரையும் நிர்பந்திக்க வேண்டியதில்லை என்பதும் கூடுதல் சிறப்பு.
நோயாளிகளை கொரோனா நோயின் தீவிரத்தன்மை, நுரையீரல் பாதிப்பு, பலவிதமான துணைநோய்களை கொண்டவர்கள் என பல குழுக்களாகப் பிரித்து, ஏற்கனவே திட்டமிட்ட படி சித்தா மட்டும் அல்லது ஒருங்கிணைந்த வைத்திய முறை அல்லது அலோபதி மட்டும் என்று மூன்று வகையான வைத்திய முறைகளை செய்து அதன் முடிவுகளை ஆராய வேண்டும். ஒவ்வொரு நோயாளியையும் அறிவியல் முறைப்படி அணுகி, கூட்டுச் சிகிச்சை முறைகளை
கொடுத்து, ஆவணப்படுத்தும் போது , ஒரு மாதத்திற்குள் நமக்குத் தேவையான முதல் கட்ட
ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்துவிடும். அதன் பின், அதை தமிழகம் முழுதும் அடுத்த நாளே விரிவு
படுத்தலாம். இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைமுறையானது, கொரோனாவோடு முடிந்து
விடாமல், இன்னும் வருங்காலங்களில், பல நாட்ப ட்ட நோய்களுக்கும் சிறப்பான
முன்னெடுப்பாக அமையும்.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!