தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்.
கவனமாக வாசித்த தமிழகம் அதன் சூதினை உள்வாங்கி அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் இதற்கு எதிர்வினையாற்றும் என்றும் எதிர்பார்த்தே இருந்தது மத்திய அரசு.
ஆனால் இங்கு கிளம்பியுள்ள கொதிநிலையின் உச்சநிலை அவர்களைக் கொஞ்சம் அசைக்கவே செய்திருக்கிறது.
எல்லோரும் ஏற்கிறார்கள். ஏன் தமிழகம் மட்டும் இந்தக் கொள்கையை இப்படி முரட்டுத்தனமாக எதிர்க்கிறது என் று முனகத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கான காரணம் எளிதானது.
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்றான் பாரதி.
“பசியோடு இருக்கிற ஒரு மாட்டினை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். குஜராத். பீஹார் , உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைச்
சேர்ந்தவர்களும் மற்றவர்களும் சும்மா இருக்கலாம்.
காரணம் அவர்களது பூமி தரிசு. ஆனால் எங்களது பூமி கல்வி, கலாச்சாரம், நாகரிகம் போன்ற விழுமியங்கள் விளைந்து செழித்திருக்கிற பூமி.
அதனால்தான் நாங்கள் வேலியைச் சாத்த முயற்சிக்கிறோம்” என்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மட்டுமல்ல இந்த அறிக்கையின் முப்பாட்டனான “குலக் கல்வியை”
எதிர்கொண்டு அதை சாய்த்த அனுபவமும் தமிழகத்தை கூடுதலான எச்சரிக்கையோடு இந்த அறிக்கையை அணுக வைத்திருக்கிறது.
17.05.1954 அன்று சென்னை மாகாண சட்டசபைகூடுகிறது. அவை தொடங்குவதற்கு முன்னதாகவே அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராசரும் அவைத் தலைவரும் அவைக்கு வந்துவிட்டனர்.
ஒரே ஒரு அமைச்சரைத் தவிர மற்ற அமைச்சர்கள் வந்துவிட்டனர். ஆனால் அன்றைக்கு நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு செய்தியை அறிவிக்க வேண்டிய அமைச்சர் திரு. சி.சுப்பிரமணியம்
அவர்கள் வெகு தாமதமாக ‘கேள்வி நேரம்’ முடிகிற தருவாயில் அவைக்கு வருகிறார்.
அவர் எழுந்ததும் அனைவரது கண்களும் அவரை உற்றுநோக்கத் தொடங்கின.
“நாட்டில் புதிய கல்விக் கொள்கையின்மீது (குலக் கல்விக் கொள்கையையும் அப்போது புதியக் கல்விக் கொள்கை என்றுதான் கூறினார்கள்) மாறுபாடான கருத்துக்கள் நிலவுகின்றன. சர்க்கார் கட்சியிலும்கூட ஆதரவு நிலையும் எதிர்நிலையும் உள்ளன. ஆதரவு
போதிய அளவு இல்லை. எனவே இதைத் திரும்பப் பெறவேண்டிய நிலையில் நிற்கிறேன். ஒரு நல்ல கல்விக் கொள்கை. தேவை இல்லாத எதிர்ப்பால் திரும்பப் பெறவேண்டிய சூழநிலை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இரண்டு நாட்களாகத்
தூக்கமே இல்லை. ராஜினாமா செய்துவிடலாமா என்றுகூட யோசித்தேன். இது கட்சி முடிவு. ஆகவே இதை செய்யத் துணிந்தேன்” என்று முடித்தார்.
ஆனால் அவர் கூறிய மாதிரி அந்தக் கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிலை அந்தக் காலத்தில் இல்லை. மிகமிகக் குறைவான அளவிலான ஆதரவேகூட அப்போது இல்லை. அந்த அளவிற்கு
இடதுசாரிகளும், தந்தை பெரியாரும் களமாடி இருந்தனர். திரு சி.சுப்பிரமணியம் ராஜாஜியைப் போலவே ஆபத்தானவர் என்பதை அன்றைய தினமே நமக்கு உணர்த்தினார்.
அதேநாளில் மேலவையிலும் அவர் இந்தத் திட்டம் அன்றைக்கு அதன் சூதினை சரியாகப் புரிந்துகொண்ட பெரியார், “இந்தக் கல்வித்திட்டம் இருக்கும்வரை சாதி கெட்டிப்பட்டுக் கொண்டே
இருக்கும். சாதியை ஒழிப்பதும் இந்தக் கல்வித் திட்ட த்தை ஒழிப்பதும் ஒன்றே ” என்று தெளிவுபடுத்தினார். இன்றைய கல்வித் திட்டம் சாதியைக் கெட்டிப்படுத்தும் என்பதையும் இந்தத்
திட்டத்தை எதிர்ப்பதும் சாதியை எதிர்ப்பதும் ஒன்றுதான் . மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதால்தான் தமிழகம் இவ்வளவு
கடுமையான எதிர்வினையாற்றுகிறது.
‘பிறப்பொக்கும்’ என்பது தமிழின் ஞான மரபு. இதற்கு எதிரான நால்வருண அடிப்படைவாதிகளின் ஆவணம் இன்றையக் கல்விக் கொள்கை என்ற வகையில் ‘பிறப்பொக்கும்’ என்பவர்களுக்கும் அதை மறுப்பவர்களுக்கும் இடையிலான போராட்டம்
இன்றையப் போராட்டம். தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ ஐந்துகோடி குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவும் சிறு சிறு கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை செய்து முடிக்கவும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கவலைப்படுகிறது இந்தத் திட்டம். நியாயம்தானே?
இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் தோன்றும். இதை முற்றாக மாற்ற வேண்டும். எப்பாடு பட்டேனும் 2025 ஆம் ஆண்டிற்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிறது இந்தத் திட்டம்.
இதைத் தாண்டியும் சிந்திக்கிறது இந்தத் திட்டம் இதை சாதிக்க வேண்டுமானால் அதிக அளவில் பள்ளிகளைத் துவக்க வேண்டும். அதிக அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதிகபட்சமாக
இருபத்தி ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும்.
மாணவர்கள் விரும்புகிற படிப்பைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். தேர்விற்காகப் படிக்கிற நிலையை மாற்றி புரிந்து
கொள்வதற்கான கல்வியைத் தரவேண்டும் . என்றெல்லாம்கூட அக்கறைப் படுகிறது இந்த கல்வித் திட்டம். போகிற போக்கில் வாசிக்கிறபோது இதெல்லாம் சரிதானே என்றுகூட தோன்றும்.
ஆனால் இவற்றை எப்படி நடைமுறைப் படுத்தப் போகிறார்கள் என்பதை கவனமாகப் படித்தால்தான் இந்தத் திட்ட்த்தின் ஆபத்து புரியும்.
இப்போதிருக்கிற பள்ளிகளின் எண்ணிக்கை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் இல்லை. எனவே நிறைய பள்ளிகளைத் தொடங்க வேண்டும். இந்தக் காரியத்தை அரசாங்கங்களும் தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டும்.
இப்படியான காரியத்திற்கு எந்தவிதமான முட்டுக் கட்டைகளும் போடாமல் உடனடியாக அனுமதியை வழங்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.
1. அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும்
2. எந்தவிதமான முட்டுக்கட்டைகளும்
போடாமல் போன்றவற்றை அடிக்கோடிட்டு வாசிக்க
வேண்டுகிறேன்.
இருக்கிற பள்ளிகளையே ஒவ்வொன்றாக மூடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன அரசுகள். எந்த அரசாங்கமும் புதிதாகப்
பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை. பிறகு யார் திறப்பதாம் பள்ளிகளை? அடுத்த வாய்ப்பு தொண்டு நிறுவனங்களுக்குப் போகிறது.
எந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு இவர்கள் அனுமதியை வழங்குவார்கள் என்பதில்தான் அரசியலே இருக்கிறது. நிச்சயமாக RSS மற்றும் அதன் துணை, இணை அமைப்புகளுக்கே அந்த வாய்ப்புகள் போகும், 1948 ஆம் ஆண்டு அப்போதைய மாநில அரசு
புதிதாகப் பள்ளிகளைத் துவங்குவதற்கு, “பள்ளிகளில் அனைத்துப் பிரிவு மாணவர்களையும் சமமாக, ஒன்றாக அமர வைத்து பாடங்களை நடத்துவதற்கு உத்திரவாதமளித்தால் மட்டுமே அனுமதி
வழங்கப்படும்” என்ற நிபந்தனையை விதித்தது. அப்போதும் அதற்கு எதிராக திருச்சியில் இருந்து மணுக்கள் போயின. எல்லோருக்கும்
வேண்டுமானால் படிப்பைத் தருகிறோம். அந்த ’ஒன்றாய்’ என்ற நிபந்தனையை அருள்கூர்ந்து தளர்த்தி விடுங்கள் என்று அந்த மணுக்கள் மன்றாடின. அதை அன்றைய அரசாங்கம் நிராகரித்தது.
இன்றைக்கு இவ்வளவு சாதிவெறியோடு உள்ளவர்கள் ஆரம்பிக்கும் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளும் சமமாக அமர்ந்து படிக்க இயலுமா?
அது மட்டும் அல்ல, உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவன ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள், பணிஓய்வு பெற்ற நல்ல உள்ளங்களைக் கொண்டு ஆசிரியர்களை நியமிப்பார்களாம். ஆக, பள்ளிகளை அவர்கள் துவங்குவார்கள் அவர்களே ஆசிரியர்களாக வருவார்கள். இவ்வளவு போதும் இவர்களது திட்டத்தை அம்பலப்படுத்த.
அத்தனை எதிர்ப்புகளையும் மீறி “NEET” என்ற வஞ்சகத்தைக் கொண்டு வந்தவர்கள் குழந்தைகள் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு திருமணம் நடந்து மூன்று மாதங்களே ஆன ஒரு பெண் நீட் எழுத வந்திருக்கிறாள். அவளது தாலிக் கொடியைக் கழற்றி வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் கூறுகிற உடை, அருணாக்கயிறு தவிர ஏதும் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தவர்கள் பூநூலை மட்டும் எங்கும் கழற்றி வாங்கவில்லை என்கிற செய்தி ஏன் இந்தத் திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பதை உணர்த்தும்.
“அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை”
என்கிறான் வள்ளுவன்.
பிறரது வலியை , ரணத்தை , துயரை
தன்னுடையதுபோல் நினைப்பது அவர்களைப்
பொறுத்தவரை கருணை. நமக்கு அதுதான் அறிவு
அவர்களது கல்வி நம்பச் சொல்லும் தமிழகம்
எதையும் கேள்வி கேட்கும்.