Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

மீண்டு(ம்) வருவேன்..

கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்று
படுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட
7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜா
அண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்த
எனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம்
மிகவும் பெரிதாக இருந்தது. நான் பிழைத்தெழுந்து
மீண்டும் வாழப் போகிறேனா என்பதைத் தீர்மானிக்கப்
போகின்ற இடம். இங்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள்
ஆகிவிட்டது. வேளாவேளைக்கு சுடுசோறும் குடிப்பதற்குப்
பழச்சாறுகளும் கிடைக்கின்றன.

மனித முகங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள்
பார்க்காமல் இருப்பது இதுதான் என் வாழ்க்கையில் முதல்
முறை. அவ்வப்போது முழு உடலையும் மறைக்கும்
வகையில் ஒருவர் வருகிறார். விண்வெளி வீரரைப் போலக்
காட்சி அளித்தார். தொளதொளவென்று தொங்கும் பிபிஈ
உடையினால் உடல் அமைப்பைப் பற்றித் தெரிந்து
கொள்ள வாய்ப்பில்லை. கண்கள், குறிப்பாய் செதுக்கப்பட்ட
புருவங்களும் ஐ லைனரும் பெண் என்று சுட்டிக்
காட்டியது. எதுவும் பேசமாட்டார். நானும் எதுவும் பேச
மாட்டேன். படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும்
கருவிகளைச் சரி பார்ப்பார். ட்ரிப்ஸ் பாட்டிலை மாற்றுவார்.
என் படுக்கை அருகே நெருங்கி வர மாட்டார். நானும்
பேச முயற்சி எடுத்ததில்லை.

தினம் ஒரு முறை, காலையா மாலையா என்று
தெரியாது. இரண்டு பேர் சேர்ந்து வருவார்கள். அவர்கள்
டாக்டர்களாக இருக்கலாம். ஒரே வாக்கியத்தைத் திரும்பத்
திரும்ப சொல்வார்கள்.

“யு வில் பி ஆல்ரைட்”

எனக்கு ஏன் இப்படி? எச்சரிக்கையாகத் தானே
இருந்தேன். எங்க எப்ப தப்பு நடந்தது?

டிரைவர்களை ஏப்ரல் மாசத்திலிருந்து நிறுத்திட்டோமே.
வீட்ல வேலை செய்யறவங்க? அவங்க வீட்டிலேயேதானே
தங்கி இருக்காங்க,

யாரு? யாரு?

வேற யாருக்கெல்லாம் பாசிட்டிவா இருந்திருக்கும்?

டாக்டர்கள் சீரியஸாக ஏதோ பேசிக்கொண்டார்கள்.
மீண்டு(ம்) வருவேன்…
என்ன ஆச்சு என்று கேட்டேன்.
“பீ சியர் ஃபுல். யூ வில் பி ஆல்ரைட்.”
“என்ன டாக்டர் ஆச்சு? எதிர்ப்புச் சக்தியை
மீறிப்போகக்கூடாத இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டு
இருக்கிறதா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க நல்லா தான்
இருக்கீங்க. உங்ககிட்ட ஸ்ட்ராங்கா வில் பவர் இருக்கு”.
ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வெளியே செல்கிறார்.
அடுத்த முறை அந்த நர்ஸ் உள்ளே வந்தபோது
“உன் பெயர் என்ன” என்று கேட்டேன்
ஒரு நொடி திடுக்கிட்ட அவர்
“சுஜிதா”
மலையாள வாசனை.
“கேரளத்தில நிங்களோட ஊரு எவ்விடயானு?”
“திருசூரு”.
“எனிக்கி எப்பவானும் சுகம் லபிக்கும்?”
என்னுடைய அரைகுறை மலையாளத்தை கேட்டுச்
சிரிப்பதைக் கண்கள் காட்டிவிட்டது.
“நிங்களுக்கு ஒன்னும் இல்ல. யூ வில் பி ஆல்ரைட்”.
“எரிச்சல் வந்தது. திரும்பத் திரும்ப இதையே தான்
மூணு நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன். ப்ளீஸ் வேற
ஏதாவது சொல்லு”.
“நோ. சமிக்ஙனும்.ஞான் சொல்லக்கூடாது”.
சரக் சரக்கென்று நடந்து சென்றாள்.
என்னவாக இருக்கும். உடம்பை பார்த்தேன். வெளிர்
நீல நிறத்தில் ஆஸ்பத்திரி உடை தரித்து இருந்தேன்.
வீட்டில் நூற்றுக்கணக்கான துணிகள். இருந்தும் இப்போது
எனக்கு இதுதான் பாதுகாப்பு.
என்னவாகியிருக்கும்? எப்படி வந்திருக்கும் ?
முதன்முறையாக அச்சம் தலை காட்டியது.
மீண்டும் சுஜிதா.
“ஞான் சொன்னதா யாரோடும் பறைய வேண்டா”

“ம்”. லப்டப் அதிகரித்தது.
“தாங்களூட லங்ஸ்ல இன்ஃபெக்சன் ஆ ய் .
பயப்படவேண்டிதில்லா”.
போய்விட்டார். உறைந்து போனேன்.
.நுரையீரல் இருக்கும் அந்தப் பகுதியில் கைகளை
வைத்துப் பார்த்தேன். முழுவதுமாக அரித்து எடுக்க
எவ்வளவு நாளாகும்? அதற்குள் மருந்து கண்டுபிடித்து
விடுவார்களா?
வேண்டாம் இதைப்பற்றி யோசிக்க வேண்டாம். நான்
போராட வேண்டும். போராடி ஜெயிக்க வேண்டும். வா
ராஜா வா. என் உடம்புக்குள்ள வந்துட்ட. உன்ன விட
மாட்டேன்.

அப்ப 10 வயசு. மாமா வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு
மாசத்துக்கு முன்ன அப்பா இறந்தபோது வந்துட்டு
போனவரு. இப்ப திரும்ப வந்திருக்காரு.
“உனக்கு சம்மதம்னா இவன நான் மெட்ராஸ்க்கு
கூட்டிட்டு போறேன்”.
அம்மா பதில் சொல்லாம மாமாவை பார்த்திட்டு
இருந்தாங்க.
“சொல்லு செவந்தி. நீ எப்படி ஆசைப்படறயோ
அப்படியே வளர்க்கறேன். படிக்க வைக்கிறேன். லீவு நாள்ல
என் கூட கடையில இருக்கட்டும். மாசா மாசம் பணம்
அனுப்புறேன். உனக்கும் உதவியா இருக்கும்”

நான், கூடப்பிறந்த அக்கா, அண்ணா, அப்பா அம்மா
எல்லோரும் சந்தோஷமா இருந்தோம். திருச்சி- தஞ்சாவூர்
மெயின் ரோட்டில் செங்கிப்பட்டின்னு ஒரு ஊரு. ஏழு
கிலோமீட்டர் தெற்க போனா சின்ன புதூர்ன்னு ஒரு
கிராமம். அந்த கிராமத்துல மொத்தமே 25 வீடுங்கதான்.
எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட கூரை வீடுங்க தான்.
எங்களது மட்டுமே ஓட்டு வீடு. எங்க அப்பா ரோடு
கான்ட்ராக்ட்டர் ஒருத்தர்கிட்ட மேஸ்திரியா இருந்தாரு.
எந்த கஷ்டமும் இல்லாம எங்க வாழ்கை நகர்ந்துகிட்டு
இருந்தது. நான் எங்க ஊர்ல ஒரு பஞ்சாயத்து
பள்ளிக்கூடத்துல அஞ்சாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன்.
பள்ளிக்கூடம்னா ஒரு பெரிய ஹால். ஒன்னு, ரெண்டு,
மூணு, நாலு, அஞ்சுன்னு எல்லா கிளாஸ்களும் குரூப்
குரூப்பா உட்கார்ந்திருப்போம். ஒரே வாத்தியார்தான் மாத்தி
மாத்தி பாடம் எடுப்பாரு. பழைய பில்டிங். சுண்ணச்சாந்து
பெயர்ந்து இருக்கும். ஓட்டுக் கட்டிடம். மழை காலத்துல
ஒழுகும். லீவு விட்டுடுவாங்க. ஆறாம் வகுப்பு படிக்கனும்னா
செங்கிப்பட்டி பக்கத்தில மனையேறிப்பட்டி போகனும்.
அங்கதான் ஹை ஸ்கூல் இருந்தது.
10 வயசு வரைக்கும் செங்கிப்பட்டி தாண்டி போனது
இல்லை. அப்பாவோட டிவிஎஸ் 50லதான் போவேன்.
அந்த வண்டி மேல எனக்கு அவ்வளவு இஷ்டம். ஆனா
அந்த வண்டியில் போகும்போது தான் அப்பாக்கு
ஆக்சிடென்ட் ஆச்சுங்கறதனால அந்த வண்டி மேல
பிரியம் போயிடுச்சு. பல வருஷம் டிவிஎஸ் பிஃப்டிய
ரோட்டில பார்த்தா முகத்தை திருப்பிக்குவேன்.
“எனக்கு உங்களையும் அண்ணியையும் விட்டா வேற
யாரு இருக்காங்க. நீங்க எது செஞ்சாலும் நல்லதுதான்
செய்வீங்க. என்ன இந்த கடை குட்டி மேல அவ்வளவு
பாசம். விட்டுட்டு இருக்க முடியுமான்னு யோசிக்கிறேன்”

புறப்படற நாளன்று அழுகை அழுகையா வந்தது ஆனா அடக்கிக்கிட்டேன். ஏன்ன நான் அழுதா அம்மாவும்
அழுவாங்க.

முதன்முறையா தஞ்சாவூரூ. பஸ், காரு, கலர் கலர்
லைட்ல கடைக்கு. ஒரே இரைச்சல். திருவிழா மாதிரி
இருந்தது. அந்த பிரமிப்பு அடங்கறதுக்குள்ள ரெயில்வே
ஸ்டேஷன். இவ்வளவு நீளமான ரயில எப்படி வளச்சி
வளச்சி ஓட்டுவாங்க? நிறைய கேள்விகள் நொடிக்கு
நொடி எனக்குள் எழுந்தது. என்ன உட்கார வச்சுட்டு மாமா
பிஸ்கட் பால் வாங்க போனாங்க. கொஞ்ச நேரம்
ஆனவுடன பயம் வந்துருச்சு. சன்னல் வழியா எட்டிப்
பார்த்தேன். எங்க பாத்தாலும் ஆளுங்க. மாமா கண்ணில்
படவே இல்லை. இதுக்கு நடுவுல விசில் ஊதுற சத்தம்.
“ஃபுவாங்ங்ங்”, சத்தமா ஹாரன் அடிச்சுக்கிட்டு தடக்குன்னு
குலுக்களோடு விருட்டென வண்டி கிளம்பியது. ஐயோ
மாமா என்று அடித்தொண்டையில் இருந்து கத்த
ஆரம்பிக்க, மாமா கை நிறையப் பழங்கள் பால்
எடுத்துக்கிட்டு வந்தார். நான் இரவெல்லாம் தூங்கவில்லை.
ஒவ்வொரு ஸ்டேஷனுக்குள் நுழையும்போது
உற்சாகத்தோடும் அதன் பெயரை மனதில் நினைத்துக்
கொண்டேன். டீ, காபி, இட்டிலி, பூரிக்கிழங்கு, புளி சாதம்,
தயிர் சாதம் என வகை வகையா கூவி வித்தாங்க. .
.பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை,வைதீஸ்வரன் கோயில் , சீர்காழி, சிதம்பரம், கடலூர்…..
எப்ப தூங்கினேன் என்று தெரியாது காலையில மாமா
எழுப்பி இறக்கியபோது மாம்பலம்னு மஞ்சள் போர்டுல
கருப்புல எழுதி இருந்ததை படிச்சேன். மாம்பழம்தான்
மாம்பலம்ன்னு தப்பா எழுதி இருக்காங்கன்னு முதல்ல
நினைச்சேன்.

மாமாவுக்கு இரண்டு ‌மக. பெரியவங்க வெண்ணிலா
10ஆம் வகுப்பு. சின்னவங்க குமுதா 8ஆம் வகுப்பு. அந்த
அக்காவை வென்னீ வென்னீன்னு கூப்பிடும்போது
எனக்கு வந்த புதுசுல குழப்பமா இருந்தது.
உங்கள ஏன்க்கா வென்னீன்னு கூப்பிடுறாங்க? நீங்க
என்ன சுடுதண்ணியான்னு” கேட்டேன்.
என்ன தப்பா கேட்டேனு தெரியல. எல்லாரும் அப்படி
சிரிச்சாங்க.
அக்காங்க ரெண்டு பேரும் பேசிக்கும் போது சொய்ங்
கொய்ங்னு இங்கிலீஷ்ல பேசிப்பாங்க. அதுவும் அவங்க
சண்டை போடும்போது பா ர்க்கணு ம் . எ து க் கு
என்னத்துக்குன்னு தெரியாது. ஏதோ வரப்புத் தகராறு
மாதிரி ஹஷ் ஹுஷ்ன்னு கத்திக்குவாங்க.. எல்லாம்

இங்கிலீஷ்ல தான். கடைசியில பார்த்தா சின்னவங்க
அக்காவோட ஏதாவது பொருள யூஸ் பண்ணியிருப்பாங்க.
அது தலைமுடி கிளிப்பா இருக்கலாம் இல்லைனா
ரெனால்ட்ஸ் பேனாவா இருக்கலாம். எல்லா சண்டையுமே
கொஞ்ச நேரம்தான். மத்தபடி ரெண்டு பேரும் நெருக்கமான
தோழிங்க மாதிரி. நிறைய படிப்பாங்க. பெரிய பெரிய
நாவல்ங்க கதைங்க படிப்பாங்க.
மாமா வீட்டுல புத்தக அலமாரி இருக்கும். அதுல
நிறையப் புத்தகங்கள் அடுக்கி வச்சுருப்பாங்க. பெரியாரு,
அண்ணா‌ இவங்க புக்ஸ் நிறைய இருக்கும். மாமா சாமி
கும்பிட மாட்டாங்க. ஆனா மாமி ஒரு கப்ஃபோர்டல
முருகர் படம் வச்சிருந்தாங்க. வெள்ளிக்கிழமையானா
விளக்கேற்றி கும்பிடுவாங்க. அவரு ஒன்னும் சொல்ல
மாட்டாரு. மாமா எப்போவுமே அதிர்ந்து பேசி பார்த்ததே
இல்லை. கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த
மாட்டாரு. வேல ஆளுங்கள வாடா போடான்னு
பேசமாட்டாரு. மாமி அதே மாதிரிதான். ரொம்ப குறைவா
மென்மையா பேசுவாங்க. மாமா மாமி ரெண்டு பேருக்கும்
சேர்த்து, வெண்ணி அக்காவும் குமுதாக்காவும் பேசுவாங்க.
ரெண்டு பேரும் என்னைய நல்லா ஓட்டுவாங்க.

மாமா வீட்டுக்கு பலதரப்பட்ட ஆளுங்க வருவாங்க.
அவர்களுக்கெல்லாம் கட்டாயம் காபி உண்டு. சில
பேருக்குப் பலகாரமும்.
இநத ரெண்டு அக்காங்களும் கொஞ்சம்
அளும்புங்கதான். முக்கியமான ஆளுங்க வந்தா காஃபின்னு
சொல்லுவாங்க. அப்படின்னா புதுசா தூள் போட்டு உறுக்கி
ஸ்டிராங்கா போடனம்னு அர்த்தம். சாதாரண ஆளுங்க
யாராச்சும் வந்தா, காபின்னு வாங்க‌. அப்ப பழைய
டிக்காஷன்ல கலக்கிட்டு வரது. அதனால எனக்கு யாராவது
வீட்டுக்கு வந்தாங்கனா அவங்களுக்கு காஃபியா காபியா
அப்படின்னு கண்டுபிடிக்கிறது ஒரு பொழுதுபோக்கான
விஷயமாக இருந்தது.

மாமா வீட்டில் அமுதான்னு (செல்லம்மா அம்மு)லேபர
டாக் இருந்தது. முதலில் அதன் உருவத்தைப் பார்த்துப்
பயந்து விட்டேன். போகப்போகத்தான் புரிந்துகொண்டேன்.
அந்த வகை நாய்கள் இந்த உலகத்தில் அவதரித்து
இருப்பது மனிதர்களுக்கு அன்பையும் பாசத்தையும்
கொடுப்பதற்காக மட்டுமே என்று. அம்முதான் ஆரம்பத்துல
மாமா வீட்டில எனக்கு வேர் பிடிக்கிற வரை பற்றுதலாக
இருந்தது. நானும் மாமாவும் ஹால்ல படுத்துக்குவோம்.
அக்காங்க, மாமி ரூம்ல படுத்துக்குவாங்க. அம்முக்காக
ஹால்ல ஒரு மூலையில் சாக்கு மடிச்சு படுக்கை மாதிரி
போட்டு இருக்கும். பத்துமணி ஆச்சுன்னா படுக்கையில்
போய் படுத்துக்கும். தன்னோட முன்னங்கால்கள் மேலே
தலைய வெச்சுக் கிட்டு தூங்கும். ஆக்சுவலா தூங்குற
மாதிரி நடிக்கும். விளக்கு அணைச்சிட்டு நாங்க படுத்த
உடனே சத்தம் போடாம என் பக்கத்தில வந்து தன்னோட
பெரிய உடம்ப இடிச்சுகிட்டு படுத்துக்கும். நான் கைய
எடுத்து அது மேல போடுவேன். தன்னோட பெரிய
சொரசொரப்பான நாக்க நீட்டி நக்கும். தேங்க்ஸ்ன்னு
சொல்ற மாதிரி இருக்கும்.

நான் காலையில் அய்ந்து மணிக்கெல்லாம்
எழுந்துடுவேன் ஏன்னாமாமா வெள்ளன எந்திரிச்சுடுவாங்க.
வாசல்லபைல இருக்குற பால் பாக்கெட்டை கொண்டுவந்து
கொடுப்பேன். தினம் காலையில காப்பி போடறது மாமா.
திக்கா டிக்காஷன் போட்டு கமகமன்னு கலக்கி குடிக்கிறத
பார்க்கவே எனக்கு அலாதி பிரியம். எப்பவாவதுதான் நான்

சாப்பிடுவேன். ஏன்னா எனக்கு காப்பி அவ்வளவா
பிடிக்காது. அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை மாமாதான்
சமையல். பிரியாணி மீன் குழம்பு குருமா ஏதாவது ஒன்னு
பண்ணுவாங்க. நான் கூட நின்னு ஹெல்ப் பண்ணுவேன்.
எப்பவாது மாமிக்கும் செய்வேன். எப்பவ ாச்சும்
அக்காங்களும் பண்ணுவாங்க ஆனா நான் போகமாட்டேன்
ஒரே ரகளையா இருக்கும்.

மாமா மாம்பலத்தில ரங்கநாதன் தெருவுல புத்தகக்
கடை வச்சிருந்தாங்க. ஜூன் மாசம் தான் ஸ்கூலு. மாமா
கூட கடைக்கு போயிருவேன். கடை திறந்த உடனே
ரேக்ல இருக்கிற புக்ஸ்லாம் எடுத்து டஸ்ட் தட்டி திரும்ப
அடுக்கி வைப்பேன். யாராவது ஏதாவது கேட்டா தேடி
எடுத்துக் கொடுப்பேன். ஒருமணிக்கு கடையில வேலை
செய்ற மணி அண்ணாவோட வீட்டுக்கு வந்து
சாப்பிட்டுவிட்டு மாமாக்கு எடுத்துட்டுப் போவோம்..
மாமா என்னை இராமகிருஷ்ணா மெயின் ஸ்கூல்ல
ஆறாவது சேர்த்து விட்டாங்க. அதுவரைக்கும் நான் பார்த்த
பள்ளிக்கூட த்துக்கும் இ தை பார்க்குறதுக்கும்
பிரம்மாண்டமாக இருந்தது இரண்டு மாடி, பின்னால
விளையாடறதுக்கு பெரிய ஓபன் ஸ்பேஸ். அங்கயும்
கட்டடங்கள். இதுபோக கொஞ்ச தூரத்தில் இன்னொரு
இடத்தில பெரிய மைதானம். மாலையில புத்தகக்
கடைக்கு போய் கூட மாட உதவுவேன்.
நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் மாமா
மாமி மட்டுமல்ல இரண்டு அக்காக்களும் சிரத்தை
எடுத்துக் கொண்டனர்.

ச னிக்கிழமை கிருஷ்ணவேணி தியேட்டர்ல
சினிமாவுக்கு போவோம். மாமா கூட்டிட்டு போற படம்
எல்லாம் போர் அடிக்கும். எனக்கு தூக்கம் தூக்கமா வரும்.
நெஞ்சத்தை கிள்ளாதேன்னு ஒரு படம் போணோம்.
ரெண்டு பேரு ஓடி கிட்டே இருந்தாங்க. அப்புறம்
இன்னொரு படம் உதிரிப்பூக்கள்ன்னு. எனக்குப்
பிடிக்கவே இல்லை. அழுகையாக வந்தது. மாமி, ரஜினி
கமல் படம் கூட்டிட்டு போவங்க. எனக்கு ரஜினின்னா
ரொம்ப இஷ்டம்.

மீண்டும் சரக் சரக் சத்தம். நினைவுகளைக் கலைத்தது.
“சுஜிதா”
எந்தா சார்?
“என்னப் பார்க்கிறதுக்கு வெளியில யாராவது
இருக்காங்களா?”
“ஓ தாராளம்.நிறைய”.
“நா அவங்கள பாக்க முடியுமா?”
“இல்ல. பாக்க அனுமதி இல்ல”.
“அப்ப நான் யாரையுமே பார்க்க முடியாதா?”
“உங்க வைஃப் வந்து நிங்கள கண்டு”.
“எப்ப?”
“மார்னிங்”.
“நான் பாக்கவே இல்லையே?”
“அப்ப நீங்கள் உறங்கிட்டு இருந்தீங்க”.
“ஓ.”
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா?”
“வாட்?”

“உன்னோட செல்போன்ல எனக்காக வெளிய
நிக்கறவங்கள போட்டோ எடுத்துட்டு வர முடியுமா?
எனக்கு பாக்கணும்னு ஆசையா இருக்கு, ப்ளீஸ்?”
“ஓ. ஷ்யூர்”.
எனக்கு ஏன் இந்த நிலைமை? யார்கிட்ட இருந்து
எனக்கு வந்திருக்கும்? வலித்தது.

அப்படியே நினைவுகளுக்குள் மீண்டும் புதையத்
தொடங்கினேன். அது ஒன்று தான் இப்போது எனக்கு
ஆறுதலாக இருந்தது
வருடங்கள் உருண்டோடி விட்டன. பன்னிரெண்டாம்
வகுப்பு முடிச்ச உடனே மீனம்பாக்கம் ஜெயின் காலேஜ்ல
எகனாமிக்ஸ் படிச்சேன். காலேஜ் இல்லாத சமயத்திலேயும்
லீவு நாட்களிலும் புத்தகக்கடையே வாசமாக இருந்தேன்.
வேலைக்கு வேலை ஆச்சு. கூடவே புத்தகங்களோடு
சகவாசமும் ஆச்சு.
இது தவிர இன்னொரு காரணமும் இருந்தது. எங்கப்
புத்தகக் கடைக்கு பக்கத்துக் கடை ரியல் எஸ்டேட் ஆபீஸ்.
அந்த கடையோட ஓனர் பொண்ணு செல்வி அங்க
வருவாங்க. என்னமாதிரி காலேஜ் முடிச்சுட்டு சாயந்திரத்தில
கணக்கு எழுத வரும். மீனாட்சி காலேஜ்ல கெமிஸ்ட்ரி.
முதல் முதல்ல என்கிட்ட பேசுனது ஆர்கானிக்
கெமிஸ்ட்ரில புக் வந்துச்சானு கேட்டாங்க. நான்
பரபரப்பாய் எல்லா செல்ஃபுகளிலும் தேடி புக்கு
இல்லன்னு சொன்னேன்.
“இன்னைக்கு சாயந்திரம் வந்துடும்னு அங்கிள்
சொன்னாரே?”
“மாமா இன்னும் வரல. மணியும் மாமாவும் அதுக்குதான்
பாரிசுக்கு போயிருக்காங்க”.
“அவர் உங்க மாமாவா?”
“ம். நீங்க பக்கத்துல புதுசா வேலைக்கு
வந்திருக்கீங்களா?”
“இல்ல. எங்க அப்பாதான் ஓனர்”. கண்களில் ஒரு
பெருமிதம்.
இப்படித் தொடங்கிய அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக
நட்பாக மாறி ஏதோ ஒருநாள் பக்கத்துல இருக்கிற
பழக்கடையில திராட்சை சாறு குடிக்கும் போது,
உள்ளுணர்வு ஏதோ சொல்ல திடீர்னு நிமிர்ந்து பார்க்க
அதுவரை என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவள்
திடுக்கிட்டாள். வசமாய் மாட்டிக் கொண்டாயா என்று என்
விழிகள் கேட்க, அவளுடையவை தாழ்ந்தன. அந்த
கணத்தில் தான் எங்களுக்குள் காதல் அரும்பியிருக்கும்
என நம்புகிறேன்.

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமைல
நிலம் வாங்க விழைவோரை நிலம் பார்க்க அழைத்துச்
செல்வார்கள். ஒரு ஞாயிறு, வழக்கமாய் அழைத்துச்
செல்பவர் கடைசி நேரத்தில வரமுடியாத காரணத்தால்,
செல்வியின் அப்பா என்னை அனுப்ப முடியுமா என்று
மாமாவிடம் வேண்டினார்.

“போறீயாப்பா?”
“சரிங்க மாமா”
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை செல்வி வருவார்
என்று. திருப்புமுனை நாளாக ஆனது. . செல்வியிடம்
மனதளவில் நெருங்குவதற்கு ஒருபக்கம் வாய்ப்பு என்றால்
இன்னொருபுறம் இன்றைக்கு ஆலமரமாய்
பரந்து விரிந்திருக்கும் எங்கள் ரியல்
எஸ்டேட் நிறுவனத்திற்கு விதைக்கப்பட்ட
நாளென்றும் சொல்லலாம்.

செல்வியும் நானும் நயமாகப் பேசி
அன்றைக்கு அழைத்துச் சென்ற ஏழு
நபர்களையும் ‌மனைகள் வாங்க வைத்தோம்.
அவங்க அப்பா என்னை பாராட்டி
பத்தாயிரம் ரூபாய் தந்தா ர் . ந ான்
மறுத்தலித்தும் பிடிவாதமாக கொடுத்து
விட்டார்.மாமாவிடம் கொண்டு போய்
கொடுக்க, அவர் நீ விரும்பிற மாதிரி
செலவு பண்ணிக்க என்று கண்டிப்பாகச்
சொல்லி விட்டார்.

அய்யாயிரம் ரூபாய் அம்மாவுக்கு
அனுப்பிட்டு மிச்சத்தை மாமா, மாமி
அக்காங்களுக்கு டிரஸ் எடுத்தேன்.
அதற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தோறும் நான்
செல்வியோடு செல்வது வாடிக்கையாகிவிட்டது. சில
சமயங்களில் அவங்க அப்பாவும் வந்தார்.

அக்காங்க எப்படியோ கண்டு பிடிச்சிட்டாங்க
வெண்ணி அக்கா ஒருநாள்,
“என்ன முத்து கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்ல”
“ஏன் ? ஒன்னுமில்லேயேக்கா”.
“ஒன்னும் இல்லன்ன, ஏன் பதர்ற?” கொஞ்ச நாளா
பார்க்கறேன். அந்த முடிய எத்தனை வாட்டி சீப்ப போட்டு
வாரி பிச்சி எடுக்குற. சும்மா சும்மா கண்ணாடியை
பார்க்கிற”. மிரட்டுவது போல் இருந்தாலும் அன்பொழுக
கேட்டார்.
“என்னக்கா ?” சின்னக்காவும் சம்மன் இல்லாமலே
ஆஜரானாங்க.
“இல்ல, கொஞ்ச நாளா சார் போக்கே சரி இல்ல. சும்மா
கண்ணாடியை பாக்குறாரு சின்ன மீசைய பிடிச்சு
முறுக்கறாரு. எல்லாத்துக்கும் மேல பௌடர் எல்லாம்
போட ஆரம்பிச்சிட்டாரு. ஏதோ ரொமேன்ஸ் மாதிரி
தெரியுது. அதான் என்ன சமாச்சாரம்னு கேட்டுக்கிட்ட இருந்தேன்”.

“ஆமாம். ஆமாம். நானும் கவனிச்சுக்கிட்டு வரேன்.
ஞாயிறுன்னா அய்யா ஸைட் பாக்க கிளம்பிடறாரு”.
“எனக்கு காலேஜ்க்கு லேட் ஆகுதுங்க”.
“சரி சரி இப்ப போ. ஆனா சாயந்திரம் என்கொயரி
கன்டினியூ ஆகும். ஒழுங்கா வந்துடு” சிரித்த முகத்தோடு
மிரட்டல் தொனியில் சொன்னார்கள்.
நல்லா சிக்கிட்டோம் என எண்ணிக்கொண்டே
காலேஜ்க்கு கிளம்பினேன். கிளாஸ்ல கவனமே இல்ல.
சாயந்திரம் என்ன கேட்பாங்கங்கற சிந்தனையே இருந்தது.
மாமா மாமிக்கு தெரிஞ்சால் என்னாகும்? கொஞ்சம் பயமும்
கூடிடுச்சு
நல்லவேளையாக அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல.
என்னை நன்றாக கலாய்த்தார்கள்.

எப்பொழுது விழித்தேன் என்று தெரியவில்லை.
மீண்டும் சுஜிதா.
அவர் கையில் பிரின்ட் போட்ட புகைப்படங்கள்.
தன் கையிலேயே அதை உயர்த்திப் பிடித்தார்.
முதல் ஃபோட்டோல செல்வியும் என் மகனும் மகளும்.
இன்னொன்னுல மாமா, மாமி, எங்க அம்மா.
அடுத்ததுல வெண்ணி அக்கா, எங்க அண்ணன்
அப்புறம் குமுதாக்கா.
இன்னொரு போட்டோல எல்லாரும் நிக்கறமதிரி
கூட்டமா ஒன்னு.
போட்டோகள பக்கத் துல வச்சுட்டு சுஜிதா
போயிட்டாங்க.

செல்வி படத்தை எடுத்து பார்த்தேன். அய்ம்பது
வயசுக்கு மேல் ஆகியும் இன்னும் அதே இளமை.
முகத்துல இன்னும் கம்பீரம்.
‘எங்க அப்பா தான் ஓனர்’ங்கிற பெருமிதம் நினைவுக்கு
வந்தது.

ரியல் எஸ்டேட் தொழிலின் நுணுக்கங்களை தெரிந்து
கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. செல்வியின்
தந்தை தாராளமாக சொல்லிக் கொடுத்தார்.
நான் பட்டப் படிப்பு முடித்தவுடன் இத்தொழிலில்
இறங்குவதற்கு முடிவு செய்தேன். மாமா முதலீட்டிற்கு
உதவி செய்தார்.
90களில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில்,
ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்ட அபரிதமான வளர்ச்சி
எங்களை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆறே
மாதத்தில் மாமாவிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்
கொடுக்கற நிலைக்கு வந்துவிட்டேன்.

மூன்றே ஆண்டுகளில் நாங்கள் பெரிய வீட்டுக்கு குடி
பெயர்ந்தோம். அதை நான் மாமாவின் பெயரில்
வாங்கினேன். நெகிழ்ந்து அப்படியே கரைந்து போனார்.
ஏம்பா இப்படி? ஏம்பா இப்படி? என்று புலம்பினார்.
“நிராதரவாய் நின்ற எங்களுக்கு ஆதரவு கொடுத்து
என்னை படிக்க வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்த
உங்களுக்கு என்னால் செய்ய முடிந்த சிறிய உதவி”
மாமி அழுதே விட்டார்.

தொழில் மட்டுமல்லாமல் செல்வியின் காதலும்
சேர்ந்தே வளர்ந்தது.
வெண்ணி அக்காதான் மாமா கிட்ட பக்குவமாக
சொல்லி செல்விய கட்டறதற்கு வழி செஞ்சாங்க.
எங்க அம்மா,
“அவனுக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு தெரியும்
அண்ணா” என்கிற வகையில் எளிதாக்கி விட்டார்
வெண்ணி அ க்கா என்னோட அண்ணன
கட்டிக்கிட்டாங்க.
அண்ணா கரந்தை காலேஜ்ல ஃப்ரோபசர் ஆகிட்டாங்க.
அக்காவும் ( அண்ணி ஆன பிறகு கூட நான் அக்கானு
தான் கூப்பிட்டேன்) வல்லத்தில பெரியார் மணியம்மை
இன்ஜினியரிங் காலேஜில டீச்சிங் சைட்ல போயிட்டாங்க.

குமுதா யுபிஎஸ்ஸி பாஸ் பண்ணி கலெக்டர் ஆனாங்க.
பல ஊர்ல வேலை செஞ்சாங்க. அவர்களுடைய சர்வீஸ்ல
கடைசி கட்டத்துக்கு வந்துட்டாங்க. இன்னும் ஓரிரு
வருஷத்துல ரிட்டயர் ஆகிடுவாங்க. அவங்க திருமணமே
பண்ணிக்கல. ஏன்ங்கிற காரணம் எனக்கு தெரியாது. நான்
சின்ன வயசா இருக்கும்போது மாமி சில நேரங்களில் .
“நீ மட்டும் அவளவிட பெரியவனா இருந்தா உனக்கு
கட்டி கொடுத்திருப்பேன்” ன்னு பொருமுவாங்க.

எப்பொழுது தூங்குகிறேன் எப்பொழுது எழுந்து
கொள்கிறேன் என்றே தெரியவில்லை. ஒருவேளை
மயக்கத்தில் வீழ்கிறேனோ? ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும்
இப்போ மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தது
அரை நினைவில் இருக்கும் போது ஏதோ புதிய
கருவிகளைபொருத்துகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள
முடிந்தது. அவர்கள் பேசியதிலிருந்து ஈஸிஎம்ஒ
பொருத்துகிறார்கள் என தெரிந்தது.. என்னுடைய
இதயமும் நுரையீரலும் ஓய்வு எடுத்துக்கொள்ளப்
போகின்றன. எவ்வளவு நேரத்துக்கு, நாளைக்கு அப்படின்னு
எனக்குத் தெரியாது. பக்கத்திலிருந்த அந்த பிரம்மாண்டமான
மிஷின் என் உடலிலிருந்து இரத்தத்தை எடுத்து கார்பன்
டை ஆக்சைடை நீக்கி, ஆக்சிஜன் ஏற்றி மீண்டும்
உடலுக்குள் பம்பு செய்வதற்கு தயாராக நின்று
கொண்டிருந்தது.
என்னால் உணர முடிந்தது எனக்குள்ளே அது ஊர்ந்து
சென்று கொண் டிரு க் கி ற து . ப கு தி ப கு தி ய ா க
விழுங்கிக்கொண்டே போகிறது.
உங்களுக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துருக்கறோம்.
கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க.
அம்பத்து அஞ்சு வயசுல என் ஆயுளை முடிச்சுக்க
விரும்பல. நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய
இருக்கு. விடமாட்டேன். எனக்குள்ள அத்துமீறி நுழைஞ்ச
உன்னை விட மாட்டேன். பார்க்கலாம் யார் ஜெயிக்க
போறதுன்னு. விழிகளின் ஒரம் கண்ணீர் முட்டியது.
டோன்ட் வொரி. யு வில் பீ ஆல்ரைட்.
“தேங்க்ஸ்” என்றேன்.காற்று மட்டும் வந்தது.
மெதுவாக தூக்கத்திற்குள் சென்றேன்.
மீண்டு வருவேன். எனக்காக மட்டுமல்ல. வெளியே
காத்திருக்கும் அவர்களுக்காக.
அய் வில் பி ஆல் ர

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!