முதலாளித்துவப் பொருளாதாரமும் அதன்
இலாப வேட்டை அமைப்புமுறையும் தப்பிப்
பிழைத்திருப்பதற்கான உயிரிவாயுவாக எதேச்சாதிகார
அரசியல் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின்
முதலாளித்துவப் படை ஜனநாயகத்தையும், ஜனநாயக
நெறிமுறைகளையும், ஜனநாயக நிறுவனங்களையும்
புதிய தாராளவாத எதேச்சாதிகாரங்கள் மலரக்கூடிய
தற்காலிகக் கல்லறைக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது.
இனிமேலும் ஒரு நாட்டைப் பொருத்ததாக இது
இல்லை. ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்க, ஆசிய,
ஆப்பிரிக்க மற்றும் ஓசியானியா வரை எதேச்சாதிகாரம்
எழுச்சிமுகமாக இருப்பதையும் அவை ஜனநாயகத்தின்
மீது தாக்குதல் தொடுப்பதையும் காணமுடிகிறது.
அரசாங்கங்கள் பெரும்பான்மை வாதத்தைப்
பயன்படுத்தி, தாராளமயத்தை ஒழிக்கவும் ஜனநாயகமற்ற
நடைமுறைகளைப் பின்பற்றவும் முயற்சிகள் செய்து
வருகின்றன. ஜனநாயகப் போலிகள் இவ்வாறு
வலதுசாரிக்கு மாறுவது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.
மக்கள் மீதும் மூலவளங்கள் மீதும் தங்குதடையற்ற
கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கு எதேச்சாதிகார
மற்றும் ஜனநாயக விரோத சக்திகள் எப்போதும்
ஜனநாயகத்தைக் கீழறுக்க முயற்சி செய்துவருகின்றன
வலிமையான தலைமையும் நிலையான அரசியலும் அமைதிக்கும்
வளமைக்கும் இன்றியமையாதவை என்று வாதிடப்படுகிறது. வாழ்வின் பல்வேறு களங்களில் தங்களுடைய மேலாதிக்கத்தைத் தொடர்வதற்குப் பிற்போக்கு சக்திகள் அத்தகைய ஒரு கட்டுக்கதையைப் பரப்புகின்றன.
ஜனநாயக இயக்கங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் வரலாற்றில்
ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன, ஆனால் புரட்சிகர
இயக்கங்கள் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கலாச்சாரங்களைப்
பரப்புவதில் ஒருபோதும் தோல்வியடைந்ததில்லை. அதற்கு மாறாக,
கொடுங்கோன்மை, பிற்போக்கு, வலதுசாரி சக்திகள் எப்போதும் தமது தற்காலிக வெற்றிக்குப் பிறகு தோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றன.
ஜனநாயகமற்ற, எதேச்சாதிகார அரசுகளும் அரசாங்கங்களும் தவறான தகவல்களையும் பொய்ச் செய்திகளையும் பரப்புகின்றன, அதன்மூலம் மக்கள் தங்கள் வாழ்வில் சுதந்திரமான தேர்வைச் செய்துகொள்ளும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து அவர்களை இருளில் ஆழ்த்துகின்றன. ஆளும் வர்க்கங்களின் தோல்வியை மறைக்கவும் அவற்றின் தோல்வியை அரசு, அரசாங்கம், மற்றும் ஜனநாயகத்தின் தோல்வியாகப் பரப்புவதற்கு திசைதிருப்பும் செயலுத்தி உதவுகிறது. பலவீனமான அரசுகள், கீழ்ப்படிகிற அல்லது பலமான, சக்திவாய்ந்த அரசுகள் ஆகிய இரண்டுமே செயலற்ற ஜனநாயக அமைப்புக்களில் மூலதனத்தின் விரிவாக்கத்துக்கு உதவிகரமாக
இருக்கின்றன . பிற்போக்கு அரசியல் ஆட்சிகள் முதலாளித்துவ
வர்க்கங்களின் கூட்டாளிகளாக இருக்கின்றன. இந்தச் சக்திகள்,
எதிர்க்கட்சிகள் ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தவும், நம்பிக்கையிழக்கச் செய்யவும், அவற்றின் சட்டபூர்வத் தன்மையைப் பறிக்கவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மேடையையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் சித்தாந்தமாக அரசியலை ஆக்கும் அரசியல் சூழலை உருவாக்கி வருகின்றன.
அது ஆளும் நிறுவனங்களை எதிர்க்கும் அரசியல் எதிர்ப்பைக் குற்றச் செயலாக மாற்றுவதற்கு நீதித்துறையைப் பயன்படுத்துகிறது. இந்த மோசடிச் செயலுத்திகள், பிற்போக்கு அரசியல் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலை
மறைப்பதற்கு முடமாக்கப்பட்ட ஜனநாயகத்தை வெறும் ஒரு
சுவரொட்டியாக உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.
ஜனநாயகம் என்பது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார
மாற்றத்திற்கான ஒரு கருவியாகும். அரைகுறை ஜனநாயகம் அல்லது ஜனநாயக நெருக்கடி முற்போக்கான எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. ஒரு முற்போக்குப் பாதையில் ஜனநாயக மாற்றங்களை புதுப்பிக்கவும், மீட்கவும், பலப்படுத்தவும் ஒரு புரட்சிகரமான மக்கள்திரள்
இயக்கத்தை அணிதிரட்ட வேண்டிய அவசரத்தை உலகம் தழுவிக்கொள்ள வேண்டும். அதில் அரசியல் எதிர்ப்புக் கலாச்சாரத்தின் கழுத்து நெறிக்கப்பட்டுவிடக் கூடாது. எதிர்ப்பு அரசியல் ஜனநாயகப் பாரம்பரியங்களை உயர்த்துகிறது, முடிவு எடுக்கும் செயல்முறையை கூர்மைப்படுத்துகிறது. அரசியல் எதிர்க்கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக
ஆகிகொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போலத் தெரிகிறது. செயலற்ற எதிர்க்கட்சி அல்லது எதிர்ப்பு இல்லாமை ஜனநாயக வழக்கங்களைக் குன்றச் செய்கிறது.
நம்பிக்கைகள் அடிப்படையில் அமைந்த வெகுமக்கள் கருத்துக்கள்
எப்போதுமே நியாயமானவையாக, புறவயமாக, அறிவியல்பூர்வமாக இருப்பதில்லை. ஆகவே, முற்போக்கு மற்றும் அறிவியல் உளப்பண்புகள் அடிப்படையிலான சிறுபான்மைக் குரல்களை மதிப்பது பெரும்பான்மைக்கு
முக்கியமானதாகும். அது ஒரு ஜனநாயக அமைப்பிற்குள் சரிபார்த்துக் கொள்வதற்கான முக்கியமான கருவியாகும். ஜனநாயகத்தின் தோல்விக்கு மாற்று ஜனநாயகம் இன்னும் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதே.
எதேச்சாதிகார ஆட்சிகள் ஜனநாயகத்திற்கும் ஒரு முற்போக்கான
மாற்றத்தை நோக்கிய அதன் திறன்களுக்கும் ஒருபோதும் மாற்றாக இருக்க முடியாது. பொது நன்மைக்கான ஜனநாயகப் பழக்கங்கள் ஜனநாயகத்தின் சாரம்சவாத, விடுதலைத் தர்க்கமும் அதன் விமர்சனஙகளும் அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கு மையமானவையாக இருக்கின்றன. மக்களின்
தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அமைந்த
எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களும் ஆளும் பொறியமைவுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு இன்றியமையாதவையாகும். அப்படிப்பட்ட ஒரு ஜனநாயகப் பாரம்பரியமும் அரசியல் கலாச்சாரமும், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள்
மற்றும் சுரண்டலின் பல்வேறு வடிவங்களிலிருந்து மக்களை விடுவிக்கும் மிகப்பெரிய குறிகோளுக்கான பன்மைக் குரல்களுக்கும் மாறுபட்ட உளக்காட்சிகளின் பரிமாற்றத்திற்கும் அனுமதிக்கின்றன. தனிநபர் விடுதலை, சமத்துவம், நீதி மற்றும் சுதந்திரம் என்ற இலட்சியங்கள் ஜனநாயக இயக்கங்களின் பரிசுகளாகும்.
ஏதெனிய ஜனநாயகத்தின் சோலோனிய, கிளீஸ்தேனிசிய ,
எஃபியல்டீசியன் பாரம்பரியத்திலிருந்து, வெஸ்ட்மினிஸ்டர் பாணி
பாராளுமன்ற ஜனநாயகங்களின் சார்ட்டியப் பண்பு வரை அனைத்தும், ஆளும்வர்க்க எதேச்சாதிகாரத்துக்கும் சுரண்டலுக்கும் எதிரான தொழிலாளர் வர்க்க எழுச்சிகளின் உற்பத்திப்பொருட்களாகும்.
காவல்துறைக் கொடூரமும் நியாயமற்ற நீதித்துறைகளும் ஆளும்
வர்க்கங்களையும் அவற்றின் ஜனநாயகவிரோத ஆட்சிகளையும்
கண்டுகொள்ளத் தவறிவிட்டன. மக்கள்திரளின் நலன்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக அரசியலை நிறுவுவதற்கான
சாமானிய மக்களின் அர்ப்பணிப்புக்கும் போராட்டங்களுக்கும்,
மான்செஸ்டரில் பீட்டர்லூ படுகொலையிலிருந்து, ஆசியா, ஆப்பிரிக்க, ஓசியானியாவில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் வரை சாட்சியங்களாக இருக்கின்றன. பகிர்ந்தளிக்கும் நீதி, சுதந்திரம், மற்றும் சமத்துவம் ஆகியவை ஜனநாயகத்துக்கான இந்தத் தொழிலாளர்வர்க்கப் போராட்டங்களின் அடிப்படையான மற்றும் நிர்வகிக்கும் கோட்பாடுகளாகும்.
வரலாற்றுரீதியாக, ஜனநாயகப் போராட்டங்கள் “சீர்திருத்தத்தையும்” “புரட்சியையும்” சமூகப் பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தின் இரட்டை ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றன. சீர்திருத்தங்கள் இதற்கு மேலும் பயனளிப்பவையாக இல்லை. ஜனநாயக நெறிமுறைகள்
மற்றும் கோட்பாடுகள் அச்சுறுத்தலில் உள்ளன. ஜனநாயக அரசும்
அரசாங்கங்களும் மக்கள்திரளின் தேவைகள், விருப்பங்கள், நலன்கள், அபிலாசைகள் ஆகியவற்றை இதற்கு மேலும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டா. அரசுகளும் அரசாங்கங்களும் உலகளாவிய, பிராந்திய, தேசிய முதலாளித்துவ வர்க்கங்களை ஆதரித்து அவற்றின் நலன்களை
உயர்த்திப்பிடிக்கின்றன.
மக்கள்திரளினர் பட்டினி, வீடின்மை,
ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அன்னியமாதலின் பற்பல வடிவங்கள்
ஆகியவற்றால் துன்புற்றுவருகின்றனர். இது குறிப்பிட்ட ஆட்சிப்பகுதியுடன், மக்கள்தொகையுடன் அடங்கியிராமல், உலகளாவிய போக்காக இருக்கிறது. மனித வாழ்வு, குடியுரிமைகள், கண்ணியம், உலகில் அமைதி ஆகியவை பிழைத்திருக்க வேண்டுமானால், இந்த உலகளாவிய போக்கின்
முன்னோக்கிய பாய்ச்சல் தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இதற்கு உள்ளூர் நடவடிக்கைகள், பிராந்திய ஒருமைப்பாட்டு வலைப்பின்னல்களுடன் கூடிய ஒரு சர்வதேச அணுகுமுறை தேவைப்படுகிறது. மக்களின் தேவைகள் அடிப்படையில் பிராந்தியத் தேவைகளைத் தனித்துவமாகப் புரிந்துகொள்வதை அங்கீகரித்து உலக அளவில் கடந்து செல்ல வேண்டும்.
முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த ஐரோப்பிய மையப் புரிதலால்
உயர்த்திப்பிடிக்கப்படும் உலகுதழுவிய மேலாதிக்கப் போக்கினிடத்தில், பெரும்பான்மை அல்லது சிறுபான்மையின் அனுபவவாத தேர்தல் சட்டகத்துக்கு அப்பால் பன்மைமயயாக்க ஜனநாயக நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.