தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN -Association of Southeast Asian Nations) முன்னெடுப்பில் ‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான’ (RCEP – Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் நவம்பர் மாதம் 15 ஆம் நாள் உறுப்பு நாடுகளால் வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 10
தெற்காசிய நாடுகளும்- ப்ரூனைய், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம்- ஆகிய இந்நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ள ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த RCEP ஒப்பந்தம் இதுவரை உலகம் கண்டிராத மீப்பெரும் பிராந்தியரீதியான வர்த்தக ஏற்பாடு. இந்த ஒப்பந்தத்திற்கானப் பேச்சு வார்த்தை 2012 ஆம் ஆண்டு ஆசியன் அமைப்பு நாடுகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இந்தியாவும் பேச்சுவார்தையில் பங்கேற்றது. ஆனால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேச்சு வார்த்தையிலிருந்து விலகிக் கொண்டது.
பேச்சுவார்த்தைகளின் போது தான் எழுப்பிய பிரச்னை களுக்கு தீர்வு கிடைக்காததால் விலகிக் கொள்வதாகக் கூறியது. ஆனால் இந்தியா எப்பொழுது வேண்டுமானாலும் RECP-யில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்றும், கூட்டங்களில் பார்வையாளராகக் கலந்து கொள்ளலாம் என்றும் கூட்டமைமப்பின் உறுப்பு நாடுகள் முடிவெடுத்துள்ளன.
இந்த ஒப்பந்தம் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ள மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. இது உலக அளவில் பொருளாதாரத்தில் மட்டுமின்றி, அரசியலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இது கொரோனா பெரும் தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் புதிய உலக ஒழுங்கைக் கட்டமைப்பதற்கான முன்னெடுப்பு. வட அமெரிக்காவின் ஒற்றைத் துருவ அதிகார மேலாண்மை வீழ்ச்சியடைந்துள்ளதன் வெளிப்பாடே இந்த ஒப்பந்தம். இதன் சந்தை 220 கோடி மக்களை- உலகின் 30 விழுக்காடு மக்களை – உள்ளடக்கியது. RCEP உறுப்பு நாடுகளின் நிகர உள்நாட்டு உற்பத்தி 26.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உலகின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காடாகும். 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி உலகின் மொத்த வர்த்தகத்தில் 28 விழுக்காடு இந்த அமைப்பின் கீழ் வரும்.
இது வளர்ந்த, வளர்ந்து வருகிற, இன்னமும் வளர்ச்சியடையாத எனப் பல்வேறுபட்டப் பிராந்தியப் பொருளாதாரங்களை உள்ளடக்கியது.இந்த ஒப்பந்தம் உலக வர்த்தகம், மற்றும் முதலீட்டிற்கான சரியான -முறையான- வழிமுறைகளை உருவாக்குவதில் முதன்மையான பங்கு வகிக்கும் என்று நாங்கள்
நம்புகிறோம்’ என உறுப்புநாடுகள் தங்கள் கூட்டறிக்கையில்
கூறியுள்ளன. ‘ இருள் கவ்விய சர்வதேச சூழலில் இந்த ஒப்பந்தம் மக்களுக்கு நம்பிக்கையையும், வெளிச்சத்தையும் தந்துள்ளது. இனி பன்முகத்தன்மையும், தடையற்ற வர்த்தகமுமே உலகப் பொருளாதாரத்திற்கும், மனிதகுல வளர்ச்சிக்கும் சரியான திசைவழியாக இருக்கும் ‘ என்று. சீனாவின் முதன்மை அமைச்சர் கூறினார். இந்தியா இந்த ஒப்பந்த்திலிருந்து விலகியதால், சீனாவின் ஆதிக்க மேலாண்மை மேலும் வலுப்படும். இற்க்குமதிக்கான வரிகள் குறைக்கப்பட்டு, தடைகள் தளர்த்தப்படுவதால், சீனா தன் உற்பத்திப் பொருட்களுக்கான மிகப் பெரிய சந்தையைப் பெற்றுள்ளது.
500 ஆண்டுகளுக்கும் மேலாக வட அமெரிக்காவின் புழக்கடை என்று கருதப்பட்ட தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த இடதுசாரி அரசுகளால், வட அமெரிக்கா தன் அதிகார மேலாண்மையை இழந்துள்ளது. கியூபா,வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் சீனா அரசியல், பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. பல
நாடுகளில் சீனா விவசாய நிலங்களை வாங்கியுள்ளது. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ளது.
இந்தியா, இக்கூட்டமைப்பிலிருந்து விலகியதற்குப் பொருளாதாரக் காரணங்களே சொல்லப்பட்டாலும், அரசியல் காரணங்களும் இருக்கவே செய்கின்றன. மோடி அரசு வட அமெரிக்காவுடன் இராணுவ ரீதியாக நெருக்கமான உறவில் உள்ளது. தெற்காசிய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த
1992 ஆம் ஆண்டு முதலே வட அமெரிக்கா இராணுவ ரீதியான கூட்டுச் செயல்பாடுகளைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பில், வட அமெரிக்க இராணுவத்திற்குத் தளமமைத்துக் கொடுத்தது. 1992 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட கூட்டுப் போர்ப்பயிற்சி ‘மலபார் கூட்டுப் பயிற்சி’ என்று அழைக்கப் பட்டது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி காத்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய ‘குவாட்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து மலபார் என்ற கூட்டு
இராணுவப் பயிற்சியை இந்தமாதம் அரபிக் கடலிலும், வங்கக் கடலிலும் நடத்தியுள்ளன. குவாட் ஒப்பந்தத்தை ‘ஆசிய நேட்டோ ‘ என்று சீனா விமர்சித்துள்ளது. கல்வான் பள்ளதாக்கில் சீனாவுடனான எல்லைத் தகராறும் இந்தியா RCEP அமைப்பில் சேராமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளது. தீர்க்கப்படாத அரசியல் பிரச்னைகள், பொருளாதார, வர்த்தகக் கூட்டுச் செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளன. உண்மையில் கூட்டுப் பொருளாதார, வர்த்தக அமைப்புகளில் சேர்ந்து இயங்குவது, அரசியல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் வழிவகுக்கும். குவாட்
அமைப்பிலுள்ள ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் இராணுவ
ரீதியாக சீனாவிற்கு எதிராக இருந்தாலும், RCEP அமைப்பில் சீனாவுடன் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. வடஅமெரிக்காவில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தால், சீனா குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால், இந்தியாவும் RCEP -யில் இணையக்கூடும்.
RCEP -யில் இணையாதிருப்பதற்கு இந்திய அரசு கூறும் பொருளாதாரக் காரணங்கள் ஓரளவிற்கு ஏற்கத்தக்கவை. இறக்குமதிக்கான வரிகளைக் குறைப்பதால் , இறக்குமதி அதிகமாகி உள்ளூர் உற்பத்தி – தற்சார்பு- பாதிக்கப்படும் என்பது உண்மை. மேலும், RCEPயில் உள்ள 11 நாடுகளுடன் இந்தியாவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இதனால் தடையற்ற வர்த்தக
ஒப்பந்தம் உடைய நாடுகளுக்கும் இந்தியாவால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை என்பதும் உண்மை. ஆனால் தற்சார்பு குறித்து அக்கறையுள்ள அரசு சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை குறைந்த விலைக்கு தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏன்? வேளாண் இறையாண்மையையே அழிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? கார்பரேட்டுகள், வங்கிகள் தொடங்க
அனுமதியளிப்பது தற்சார்பா? என்கிற கேள்விகள் எழுகின்றன.
இந்திய ஆளும் வர்க்கமும், வட அமெரிக்காவும் தெற்காசியப் பகுதியில் சீனா ஆதிக்கம் செய்வதை விரும்பவில்லை. ஆரம்பம் முதலே. சீனாவின் முத்துமாலைத் திட்டம், ஒருவட்டம்- ஒரு சாலைத் திட்டங்களை எதிர்த்து வருகிறது. இதற்கு மாற்றாக சீனா, பாக்கிஸ்தான் நாடுகளைத் தவிர்த்த ஏனைய தெற்காசிய நாடுகளை இணைத்து ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை இந்திய அரசு
ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கடல் வழி வர்த்தகத்தை வளர்ப்பதற்க்காக ‘ சாகர்மாலா’ திட்டத்தைத்
தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி உ ள்ளே துறைமுகங்களை மேம்படுத்தி, புதிய துறைமுகங்களை உருவாக்கி, அவற்றை தனியாருக்குத் தாரை வார்க்கப் போகிறார்கள். வட அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து, இப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தெற்கு இலங்கையில் அம்பந்தோட்டாவில் மிகப் பெரிய சரக்கு முனையமாக துறைமுகத்தைச் சீனா கட்டிவருகிறது.இந்தியாவும் வட அமெரிக்காவும் இயற்கைத் துறைமுகமான திரிகோணமலையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன.
‘இலங்கையில் நிலவும் இன முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, இறுதியில் தலையிட்டுத் திரிகோணமலைத் துறைமுகத்தை ஆக்கிரமிப்பதே அவர்களின் திட்டம்’ என்பதை மேதகு பிரபாகரன் நன்கறிந்திருந்தார் என்கிறார் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக முப்பதாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும், நாடுகடத்தப்பட்ட
சிங்களவரான விராஜ் மெண்டிஸ். ‘இறுதிக் கட்டப் போரில்
வட அமெரிக்காவின் பேரத்திற்கு விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனை அவர்கள் மறுத்து விட்டனர். அமெரிக்கர்களை திரிகோணமலைக்குள் அனுமதிப்பதை விட இறுதிவரை போராடி மாய்வதே மேல் என்று நினைத்தனர். தங்கள் இறுதி மூச்சிலும் கூட இலங்கைத் தீவின் இறையாண்மையைப் புலிகள் பாதுகாத்தனர். இந்தியாவோ இக்கட்டான சூழலில்
தமிழர்களுக்கு ஆதரவு அளிக்காமல் சீனாவை எதிர்க்கும்
நோக்கில் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தது. இதுதான்
அமெரிக்காவின் பலம். எல்லா விளையாட்டுகளையும் ,
விளையாடித் தனக்குச் சாதகமானவற்றைச் சாதித்துக்
கொள்ளும்’ என்கிறார் விராஜ் மெண்டிஸ்.
இந்த நிலையில், தெற்காசிய நாடுகளில் வடஅமெரிக்க
வல்லாதிக்கத்திற்கு எதிரான சீனாவின் பொருளாதார அரசியல் – முன்னெடுப்புத்தான் RCEP என்கிற கருத்து வலிமை பெற்று வருகிறது.
‘பிரபாகரனின் சமாதான பிராந்தியம், போர் பிராந்தியமாக
மாறி வருகிறது. பிரபாகரனின் போராட்டத்தை வல்லரசுகள்
அழித்திருக்கலாம். ஆனால் பிரபாகரன் பிரகடனப்படுத்திய
“சமாதான பிராந்திய அரசியலே” இந்திய துணைக்கண்ட,
இலங்கைத் தீவு மற்றும் தென்- கிழக்கு ஆசிய நாடுகளில்
வாழும் தமிழர்கள், மீண்டுமொரு முறை அரசியல்
பலியாடுகளாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தும்’.