காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தொன்று தொட்டு வாழும் மக்களே பழங்குடிகள் என்ற பொதுப் புரிதல் இங்கு இருக்கிறது. அது தவறு. தங்கள் வாழிடமும், தொழிலும், பண்பாடும், கலாச்சாரமும் மாறாமல் இன்றும் கடலோரங்களில் வாழும் மக்களும் பழங்குடிகளே. கடந்த காலத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட மண்டல் கமிஷனும் இதையே உறுதி செய்தது. பழமையான தனித்துவப் பண்புகளோடு, பூகோள ரீதியாய் தனித்துவப்பட்டு, பிற சமவெளிச் சமூகங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் தயக்கம் காட்டும் மக்களே
பழங்குடிகள்.காலங்காலமாக கடலில் வேட்டைத் தொழிலும், பாசி விவசாயமும் செய்யும் மீனவர்கள், சுயமரியாதை மிக்கவர்கள். தொழிலில் அவர்களிடம் கூலி என்பதே இல்லை. பழங்குடியினரின்
தனித்துவமான குணம் இது. வேட்டையில் , கரைக்கடல் விவசாயத்தில் கிடைப்பதை தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்.
உள்ளார்ந்த பழங்குடிக் குணத்தால், அதிகார வர்க்கத்தோடு பெரும்பாலும் தொடர்பற்ற நிலையிலேயே தொடர்கிறது இவர்களது வாழ்க்கை. எடுத்துக்காட்டாக, கடலோரங்களில் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டங்களும் மீனவர்களைக் கலந்தாலோசித்து தீட்டப்படுவதில்லை. அதிகார வர்க்கத்தின்
மேட்டிமையான எண்ணத்தால் தொடர்ந்து விளையும் விபரீதம் இது. கடலோர வாழ்வின் உண்மையான தேவை புரியாமல் திட்டங்களைச் செயலாக்கத்திற்கு கொண்டுவரும் அதிகார வர்க்கமோ, திட்டங்களை மீனவர்கள் எதிர்க்கிறார்கள் என்றே தொடர்ந்து குறை கூறுகிறது. இன்றைய நிலையில் அதே பழங்குடிகள் மண்சார்ந்து , தட்ப வெப்ப சூழல் சார்ந்து கருத்துகள்
சொல்கிறார்கள் ஆனால் அவை ஏற்கப்படுவதேயில்லை. அதிகார வர்க்கத்தின் இந்த மனநிலை ஆய்வுக்குட்படுத்தப் படவேண்டும்.
தங்கள் வாழ்வின் மூலமாகவே நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் பாரம்பரிய மீனவரின் வாழ்வு, தேசிய அளவில் தேவையான புரிதலை ஏற்படுத்தி முக்கியத்துவப் படுத்தப்படாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். மத்திய, மாநில அரசுகளோ,
தனியார் நிறுவனங்களோ, சர்வதேசத் தொடர்புள்ள தொண்டு நிறுவனங்களோ யாராய் இருந்தாலும் திட்டங்கள் தீட்டப்படும் போது, யாருக்காக அது நடைமுறைக்கு வருகிறதோ அவர்களை
ஆலோசிப்பதோ அல்லது அவர்களைப் பங்குகொள்ளச் செய்வதோ இல்லை. திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மட்டுமே, மக்கள் அதன் நேரடித் தொடர்பில் வருகிறார்கள். ஒரு திட்டம்
தங்களைப் பாதிக்கும் என அறிந்த உடன் பழங்குடியான அவர்கள் கிளர்ந்தெழுகிறார்கள், தங்களைப் பாதிக்கும் எந்த ஒரு திணிப்பையும் எதிர்த்துப் போராடுவது அவர்களது இயல்பு. ஏன்
இவ்வாறு நடக்கிறது என்ற சமூக ஆய்வு கூட இதுகாறும் தேசிய அளவில் நடத்தப்படவில்லை.
குடிமக்கள் சுதந்திரமாய் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதோடு, ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்துக்கான சூழலையும் உருவாக்குவதே சிறந்த ஆட்சிமுறை. சமூக முன்னேற்றம் என்பது இலவசங்கள் வழங்கி, வறுமையைத் தற்காலிகமாய் நீக்குவது என்பதோடு நின்றுவிடுவது அல்ல.
நிலப்பரப்பு சார்ந்து குடிமக்களுக்கான நீதியையும், உரிமையையும் நிலைநாட்டி, வாழ்வாதாரங்களையும் பேணிப் பாதுகாப்பதே அரசின் கடமை. சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிமுறையில்
கடலோரங்களும், அங்குள்ள மக்களின் வாழ்வும் தொடர்ந்து புறகணிக்கப்பட்டே வந்திருக்கிறது என்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாய் இருக்கிறது. காரணம், ஆட்சிமுறையிலும் கடலோர மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாய் மறுக்கப்பட்டிருக்கிறது என்பது நாம் கண்கூடாகக் கண்ட உண்மை. இந்தியா போன்ற மிக நீள கடற்கரை எல்லைகளையுடைய ஒரு நாட்டில் கடலோர பழங்குடி மக்களின்வாழ்வு தொடர்ச்சியாய் புறக்கணிக்கப்படுவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஏற்புடையது அல்ல.
உதாரணமாக, இராமேஸ்வரம் தீவுப் பகுதியின் தென்பகுதியில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டத்தைச் சொல்லலாம். வனத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காலத்தில், கரைக்கடல் பகுதியிலிருக்கும் இத்தீவு இப்பகுதி, பாரம்பரிய மீனவரின் சொர்க்க
பூமியாக, வாழ்வாதாரமாக செழுமையாக இருந்தது. குடும்பத்தோடு தீவுகளில் தங்கி தொழில் செய்தார்கள். இன்றோ, கரைக்கடல் மற்றும் அண்மைக் கடல் மீனவர்கள், புயல் மழை காலங்களில் கூட
தென்பகுதியில் இயற்கை அரணாய் அமைந்திருக்கும் தீவுகள் அருகே நெருங்க முடிவதில்லை. இதனால் கவனிப்பாரில்லாமல், நீராதாரங்கள் வறண்டு, பாலை நிலம்போல் காட்சியளிக்கின்றன தீவுகள். பாதுகாப்பதாகச் சொல்லும் அதிகார நிர்வாக அமைப்புகளின் பிராந் திய அலுவலர்கள் கொள்ளையர்களோடு கைகோர்த்துச் சுற்றுச் சூழல் கேடுகளை விளைவித்து, அந்தப் பழியை பாவப்பட்ட பாரம்பரிய மீனவர்கள் மீது அபாண்டமாய்ச்
சுமத்துகிறார்கள். நடைமுறைக்கு ஒவ்வாத வறட்டுச் சட்டங்களால் ஏற்பட்ட விளைவு இது. நட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுவே தொடர்கதை. கடந்த காலங்களில் பாரம்பரிய கரைக்கடல்
மீனவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசி வளர்ப்புத் தொழிலில் ஏகப்பட்ட குளறுபடிகள். நிர்வாக நடைமுறையால் அரசின் துறைகளே ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு பாசிவளர்ப்புத்
தொழிலையே இல்லாமல் ஆக்கியிருக்கிறார்கள். தொழில்தான் இல்லையென்று ஆகிவிட்டது காப்பீடாவது கிடைத்து செய்த முதலீடுகள் திரும்பக் கிடைக்குமென்று பார்த்தால், காப்பீடு வழங்கிய அரசின் காப்பீட்டு நிறுவனங்களே ஏழை, எளிய
மக்களுக்கான இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடிக்கிறார்களாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இராமேஸ்வரம் தீவுக்குள் காற்றின், கடலின் தன்மை புரியாமல் ஏற்படுத்தப்பட்ட கரைக்கடல் கட்டுமானங்கள் பெரும்பாலும் பயன்பாடற்றுப் போனதோடு,
கடலரிப்பின் முக்கிய காரணிகளாகவும் மாறியிருக்கின்றன. கட்டுமானத்திற்காக வரும் ஒப்பந்தக்காரர்களுக்கு இதுபற்றி அக்கறை இருக்காது என்பது நாம் அறிந்தது. ஆனால், திட்டத்தை
மக்கள்நலன் சார்ந்து முன்னெடுப்பதாய்ச் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு தவறான திட்டம், அவர்கள் வருங்கால இருப்பையே கேள்விக்குறியாக்கும் என்பதும் தெரியவில்லை . ஜெயலலிதா அம்மையாரின் இறுதிக் காலத்தில் கானொளி மூலம்
தங்கச்சிமடம், மாந்தோப்பு பகுதியிலும், தென்கடலில் முகுந்தராயர் சத்திரத்திலும் ஜெட்டிகள் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளாய் எந்தப் பயன்பாடுமின்றி கடலுக்குள் துருத்திக் கொண்டு நிற்கின்றன இவை.
இந்தப் பிராந்தியத்திலேயே அதிகமான விசைப்படகு உரிமையாளர்களாக இருக்கும் தங்கச்சிமடம் மீனவர்களின் தேவையோ, தூண்டில வளைவோடு கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம். இந்த வசதி இல்லாத காரணத்தாலேயே,
இங்குள்ள விசைப்படகுகள், இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கோட்டைப்பட்டிணம், சோழியாக்குடி, ஏர்வாடி என பல்வேறு இடங்களில் தங்கித் தொழில் செய்ய நேர்கிறது. தொடர்ச்சியாக
பெரும் சிரமத்துக்குள்ளானதால்தான் மீன்பிடி துறைமுகத்தை தங்கள் கரையிலேயே கேட்டார்கள். ஆனால், அமைக்கப்பட்டதோ கடலுக்குள் தென் வடக்காக நீண்டு நிற்கும் ஜெட்டி. இயற்கையை மீறி கடலுக்குள் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்கள், பிராந்திய மீனவர்களின் அனுபவ அறிவோடு சரியாக முழுமையாக அமைக்கப் படாவிட்டால் அவை பயனற்றுப் போவதோடு அபாயகரமான சக்தியாகவும் மாறிவிடும். அமைதியான கச்சன்
காலத்திலும், ஆர்ப்பரிக்கும் வாடை காலத்திலும் ஜெட்டியால் எந்தப் பயன்பாடுமில்லை என்பது ஒருபுறமிருக்க, குடியிருப்புகளில் ஏற்படும் கடலரிப்புக்கும் காரணமாக மாறியிருக்கிறது. இந்த
ஜெட்டி, இதே நிலையில் தொடருமானால் சில ஆண்டுகளில், தங்கச்சிமடம் மாந்தோப்பிலிருந்து தொடங்கி, அக்காள்மடம், பாம்பன் வரை வட கற்கரை முழுமையாகவே கடலுக்குள் போய்விடும். கரையை ஒட்டிய பகுதியில் நடைபெறும் மல்லிகைத் தோட்ட விவசாயமும் இல்லாமல் ஆகிவிடும்.
முகுந்தராயர் சத்திரத்தின் ஜெட்டியிலோ யாரும் நெருங்கமுடியாத ஆபத்தான பகுதி என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். பின் யாருக்காக அந்த ஜெட்டி என்ற கேள்வி எழுகிறதா இல்லையா! சமீபத்தில், பாம்பன் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விபத்துகூட பிராந்திய பாரம்பரிய அறிவை புறந்தள்ளியதால் நடந்தது. அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய மிக
முக்கியமான பிரச்சனைகள் இவை.
நில எல்லைகளைப் போலவே, கடலோர எல்லைகளும் நாட்டின்பாதுகாப்பில் முக்கியமானதே. இனிவரும் காலங்களில் நிலவப்போகும் சர்வதேச பொருளாதார, சமூக, அரசியல் சூழல்கள், கடலோரப் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை உறுதிசெய்யும். காலனீய ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் ஒருபோதும் இன்றைய பரபரப்பான வாழ்வில் துணைநிற்கப் போவதேயில்லை. எனவே, கடந்த காலங்களில்
ஆட்சியிலிருந்த அரசுகளைப்போல இந்த அரசும் கடலோரங்களைப் புறக்கணித்த ஆட்சிமுறையில் இனி தொடர முடியாது. காரணம், தற்போதைய கடலோரங்கள் மீன்பிடித் தளங்கள் மட்டுமல்ல,
அவை ஆற்றல்மிகு மனிதவளச் சுரங்கங்கள், நேரடி, மறைமுக, வணிக, வேலைவாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் பெரும் பொருளாதார மண்டலங்கள்.
புதுச்சேரியின் பிரஞ்சு ஆட்சியாளர்களுக்கு
துபாஸாக பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை,
தான் வாழ்ந்த காலத்தில் 1735 முதல் 1761 வரையிலான
26 ஆண்டுகளின் தினப்படி சேதிக் குறிப்புகளைப்
பதிவு செய்துள்ளார். நாம் வாழும் காலத்தின் மிக
அண்மையிலான பதிவுகள் இவை. அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், நான் பிரமித்த முக்கியமான விடயம் கரையோரக் கப்பலோட்டம். கப்பலோட்டம் பற்றிய குறிப்புகள் இல்லாத நாட்குறிப்பே இல்லை. அப்படியான முக்கியத்துவமான கடல்வழி வணிகச் சூழலில் இருந்துதான் இன்றைய சூழலை நாம் ஒப்பீட்டாக வேண்டும். அரசியல் சூழல்கள் மாறி, தொழில்நுட்ப உதவியால் உற்பத்தியும் பெருகிவிட்ட
நிலையிலும், நாம் நமது ஏற்றுமதிக்காகவும் , இறக்குமதிக்காகவும் அயல்நாட்டு கப்பல் உரிமையாளர்களையே நம்பியிருக்கிறோம். நம்மிடம் கரைக்கடல், அண்மைக்கடல் மற்றும் ஆழ்கடல் ஓட்டத்துக்கான போதுமான கப்பல்கள் இல்லை. காரணம், பழங்குடிகளைப் புறந்தள்ளும் காலணிய மனப்பான்மையில் கடலோடிகளிடம் வரமாக இருந்த அனுபவ அறிவை இழந்திருக்கிறோம். கடலோடிகளை மீனவர்கள் என்று குறுகி நோக்கிக் கடல்வழி வாணிபத்தில் அவர்களுக்கு இருந்த ஆளுமையைச் சிதைத்து, இன்று விதேசி கப்பல் உரிமையாளர்களிடம் கைகட்டி நிற்கிறோம்.
இந்தியத் தீபகற்பத்தின் 8118 கி.மீ. நீளக் கடற்கரையில் வாழும் பாரம்பரிய மீனவர்கள், கடலோர எல்லைகளின் காவலர்கள் என்பதை வரலாற்றுக் காலத்தில் கிழக்குக் கடற்கரையின்
சொழர்களும் மேற்குக் கடற்கரையின் மராட்டிய மன்னர்களும் உணர்ந்திருந்தார்கள். கிழக்குக் கடற்கரையின் பாரம்பரிய மீனவர்கள் தாங்கள், கௌரவம் மிக்க பெரும் கடலோடிகள் மரபில்
வந்தவர்கள் என்பதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள். மேற்குக் கடற்கரையில், சத்ரபதி சிவாஜியினுடைய கப்பற்படையின் பிரதான தளபதியான கனோஜி ஆங்ரே, பாரம்பரிய மீனவர்களைத் தங்களது கப்பற்படை உருவாக்கத்தில்
பயன்படுத்தித்தான் மேற்குக் கடற்கரையில் ஐரோப்பியத் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாத வரலாற்றுச் சான்று.
துரதிரதிஷ்டவசமாக முந்தைய காலனீய ஆட்சியாளர்களின் அரசாங்கம், கடலோடிகளை ஆட்சியதிகாரத்திலிருந்து திட்டமிட்டு
தனிமைப்படுத்தி புறந்தள்ளியிருக்கிறது. அதே ஆட்சிமுறையை, சுதந்திரத்திற்குப் பின்னான சுதேசி ஆட்சியாளர்களும் கைக்கொண்டதுதான் கடலோர மக்களின் வாழ்வு முக்கியத்துவம் பெறாததற்கான காரணம். மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற
பெயரில், பழம் பெரும் ஆளுமைகளின் பெயர்களை
திட்டங்களுக்குச் சூட்டி புளகாங்கிதம் அடைகிறார்கள் ஆட்சியாளர்கள். இது பெரிய ஏமாற்று வேலை.
காலனீய ஆட்சிமுறையின் நிர்வாக அமைப்பை உள்வாங்கிய நமது ஆட்சியாளர்கள், அதே மனநிலையில் இன்னும் செயல்ப்படுவதில்
வியப்பேதுமில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், பூர்வீக பழங்குடி மக்களின் வாழ்வுக்கு எதிரான மனநிலையிலுள்ளவர்கள். காடுகளில் பூர்வீகமான பழங்குடிகளை எப்படி வெளியேற்றி வளங்களைச் சூறையாடினார்களோ, அதுபோலவே கடலோர
மக்கள் வாழ்வையும் புறக்கணித்தார்கள். மொத்தத்தில் பூர்வீகக் குடிமக்கள் வாழவே கூடாது என்பது தான் அவர்களது கொள்கை. அதே மனநிலையை உள்வாங்கியுள்ள இன்றைய ஆட்சிப்பணி அமைப்பு எப்படி வேறுபட்டதாக இருக்க முடியும்!
கடலோர மக்கள் இந்த நாட்டின் பூரண குடியுரிமை பெற்ற மக்கள். மற்ற நிலங்களைப் போலல்லாது கடலோர வாழ்க்கை முற்றிலும்
வேறானது. கடலோர வாழ்க்கை நிலையாமை என்ற அடிச்சரடில் இருக்கிறது. அவர்களது தேவை எல்லாம் சமவெளிச் சமூகங்களும், சமவெளிச் சமூகங்களிடமிருந்தே உருவாகியிருக்கும் அதிகார
வர்க்கமும், அவர்களுடைய வாழ்வை திறந்த மனதோடு புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இன்றைய நிலையில் இது மிகப் பெரிய சவால். கடலோரச் சமூகங்களின் இன்றைய
தலைமுறையினரிடமே, தங்களை பழங்குடிகள்
என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. இந்த எண்ணம் அவர்கள் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஒருசேரக் காவுவாங்கும் சமூகப் புற்றுநோய், என்பதை அவர்களே உணர
வேண்டும். ஒவ்வொரு கடலோரச் சமூகங்களின் மகனுக்கும், மகளுக்கும் தான் ஒரு ஆதிப் பழங்குடி, இந்த நிலப் பரப்பின் முதன்மைக் குடிமகன், குடிமகள் என்ற பெருமிதம் வேண்டும். பழங்குடி என்பது பொருளாதாரக் காரணங்களுக்காக அரசை
யாசித்துப் பெறும் அந்தஸ்து அல்ல. மாறாக, பாரம்பரியமாக பிறப்பால் பெற்றிருக்கும் உரிமை, அந்த உரிமையைப்பேணிக் காத்து தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டும் என்பது இந்தத் தலைமுறையின் தலையாய கடமை.
இந்த மக்களின் வாழ்வு தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதற்கான மறுக்க முடியாத மற்றொரு காரணம், அவர்களைக் கண்காணிக்க இந்தியப் பேரரசில் அவர்களுக்கென தனி அமைச்சகம் இல்லாததே. அரசும், பழங்குடி வாழ்வை காலனியாதிக்க மனநிலையோடு புறக்கணிப்பதைத் தவிர்த்து இயற்கை, மனிதவள ஆய்வுகளை முன்னெடுத்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பாரம்பரியமான
அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட ஆவன செய்ய வேண்டும். கடலோரங்களில் மீன்பிடித்தல் மட்டுமல்லாது, கரைக்கடல் விவசாயம் [பாசி வளர்த்தல், மீன் வளர்த்தல்], கரைக்கடல்
கப்பலோட்டம், சுற்றுலா என எத்தனையோ தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன . கடலோடிகளுக்கென தனியான அமைச்சு ஒன்றிய
அரசில் அமைந்து, அக்கறையான சூழல் அமையும் போதுதான் கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் சார்ந்த சட்ட திட்டங்கள் உருவாகி மீனவப் பழங்குடிகளின் வாழிடம், வாழ்வாதாரம்
பாதுகாக்கப்பட்டு கடலோரச் சமூகங்களின் மனிதவளம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கும், வரமான கடல்சார் இயற்கைவளம் பொருளாதார முன்னேற்றத்துக்கும் முறையாய்
பயன்படும்.
இதுவே வளமான, வலிமையான நாட்டை
உருவாக்கும் உண்மையான நீலப்புரட்சி.