பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பிற்கால வாசகர்களுக்கு எளிதாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்திய பெருமை
உரையாசிரியர்களையே சாரும் . கி.மு இரண்டாம்
நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை ஏட்டுச் சுவடிகளிலேயே வாழ்ந்து வந்த இலக்கியங்களுக்கு மாணவர்களின்
நினைவாற்றலில் இடத்தைப் பெற்றுத் தந்த உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் மிக முக்கியமானவர்.
நச்சினார்க்கினியர் 14ஆம் நுற்றாண்டில் தோன்றியவர். அதிக எண்ணிக்கையில் நூல்களுக்கு உரை வரைந்தவர் என்ற பெருமைக்குரியவர். மதிநுட்பமும் கூர்த்த பார்வையும் உடையவர்.
தமது பரந்துபட்ட இலக்கிய அறிவினால் மூலநூல்களுக்குப் புதுப்புதுக் கோணங்களில் உரை விளக்கம் கூறியவர். பிற்காலப் புலவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர் . இவரைப் பற்றி ,
“தம் காலத்தை ஒட்டிய கருத்துக்களை மட்டுமல்லாமல் தாம் சார்ந்த சமய , சமூகக் கருத்துக்களையும் தம்முடைய உரைகளில் ஏற்றிச்
சொல்வது இவருடைய திறன்களில் ஒன்று. மூலங்களில் அவற்றிற்குரிய தேவை இல்லாவிட்டாலும் தமது கருத்தை உட்கலப்பதில் அவர் வல்லவர் “என்று திறனாய்வாளர்கள்
கூறுவதுண்டு (சிற்பி பாலசுப்ரமணியன் , நீல. பத்மநாபன் 2013. ப.455).
பத்துப்பாட்டு முழுவதற்கும் நச்சினார்க்கினியர் உரை வரைந்திருக்கிறார். இவருடைய உரைக் கருத்துக்களைப் பெருமளவு ஏற்றும் சிற்சில இடங்களில் வேறு பட்டும் பிற்கால உரையாசிரியர்கள் உரை வரைந்திருக்கின்றனர். பத்துப்பாட்டில் பொருநராற்றுப்படையில் கரிகாலன் கலைஞர்களைக் கண்டதும் இனிய சொற்களைக் கூறி வரவேற்கிறான். இதனை முடத்தமக்கண்ணியர் “ வேளாண் வாயில் வேட்பக் கூறி” என்று குறிக்கிறார். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை விளக்கம் பற்றியே இக்கட்டுரை ஆய்கிறது.
பரிசில் பெற்ற பொருநன், தனக்குக் கரிகாலனின்
அரண்மனையில் கிடைத்த அன்பான விருந்தோம்பல் பற்றிக் கூறும்போது,
“கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி …”
என்று குறிப்பிடுகிறான். இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர், “தான் உபகரித்தற்கு வழியாகிய இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களைக் கூறி…” என்று விளக்கம் கூறுகிறார்
(உ.வே.சாமிநாதையர், 2017. ப 129) . கரிகாலன் இரவலர்களை வரவேற்கும்போது கூறிய இனிய சொற்களால் உளம் மகிழ்ந்த பொருநன் , கரிகாலனின் அன்பில் திளைக்க வேண்டித் தான்
எப்போதும் இரப்பதற்கு விரும்பினான் என்று இதனைச் சிறிது விளக்கமாகப் புரிந்து கொள்ளலாம் .
பத்துப்பாட்டைப் பதிப்பித்த மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதையர் நச்சினார்க்கினியரின் கருத்தினை ஏற்றுக்
கொண்டு அதற்கு ஆதரவாக பின்வரும் மூன்று குறட்பாக்களை எடுத்துக்காட்டுகிறார்.
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர் பழி தம்பழி அன்று
-குறள், 1051
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார்
இரப்பும் ஓர் ஏர் உடைத்த
-குறள்,1053
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மட்ட
-குறள்,1054
இம்மூன்று குறட்பாக்களையும் மேற்கோள் காட்டி உ.வே.சா.அவர்கள் “தகுதியுடையவர்களிடம் இரத்தல் தவறில்லை” என்ற கருத்தை வலுப்படுத்துகிறார். உ.வே. சா. மேற்கோள்
காட்டுகிற குறட்பாக்கள் அனைத்தும் திருக்குறளில் “இரவு “ என்ற அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன ; இவ்வதிகாரம் ஒருவரிடம் சென்று இரத்தலில் பெருந்தவறு எதுமில்லை என்று கூறுகிறது ; இது பற்றிப் பின்னர் கருதிப் பார்க்கலாம் . இப்போது நச்சினார்க்கினியரின் உரையின் பொருத்தம், பொருத்தமின்மைகளைப்பற்றி மட்டும் காணலாம்.
நச்சினார்க்கினியரின் உரையை அவருக்குப்பின் வந்த உரையாசிரியர்கள் பலரும் ஏற்றுக்கொண்டு உரை வரைந்திருக்கின்றனர். வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், “தான் உபகரித்தற்கு வழியாகிய யாசகத் தொழிலை யான்
எப்பொழுதும் விரும்பும்படி உபசார மொழிகளைச் சொல்லி…”என்று உரை எழுதுகிறார் (வை.மு. கோ பாலகிருஷ்ணமாச்சாரியார்,1961.ப.15). பெருமழைப்
புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரையில் ,” தான் வேளாண்மை செய்தற்கு வாயிலாக இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்புமாறு முகமன் மொழிந்து ..” என்று
உரைவிளக்கம் கூறுகிறார் (1971,ப.26). பேராசிரியர் இரா.மோகன் , “இனிய முகமன் உரைகள் பல கூறினான்” என்று கூறிவிடுகிறார் (2004.ப103) பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் ,”எங்களைப்
பார்த்து அரசன் தான் விருந்தோம்பலுக்குத் தக
நாங்கள் விரும்பியதைப் பேசி …” என்று உரை கூறுகிறார் (2003. ப .141) . இந்த உரை நச்சினார்க்கினியரின் உரையிலிருந்து சிறிது
வேறுபடுகிறது; எனினும் தெளிவாக இல்லை. மேற்காட்டப்பட்ட நான்கு உரைகளுள் மூன்று உரைகள் நச்சினார்க்கினியரைத் தழுவி
அமைந்திருக்கின்றன.
பண்டைய இலக்கியங்களுக்கு இன்று எழுதப்படும் உரைகளில் பழைய உரைகளின் செல்வாக்கு இயல்பாக இடம்பெற்று விடுவதுண்டு. எனவே பழைய உரைகளை நடுநிலையுடன்
மதிப்பிடுவது இன்றியமையாத தேவையாகும் ; இதனால் பண்டைய உரையாசிரியர்களுக்கு எவ்விதமான மதிப்புக் குறைவும் ஏற்படாது ;
மாறாகப் பண்டைய உரைகளே நம்மைச் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றன என்ற உண்மை அறிவுலகத்தில் நிலைபெறும் .
‘இரத்தலை யான் எப்போதும் விரும்புமாறு கரிகாலன் இனிய பேசினான் ‘ என்ற நச்சினார்க்கினியரின் பொருளை ஏற்பதில் சில
தடைகள் இருக்கின்றன. சங்கப் புலவர்கள் மிகுந்த தன்மதிப்பு உணர்வு (Self Esteem) உடையவர்கள். கண்டீரக்
கோப்பெருநற்கிள்ளி என்னும் மன்னனை
வன்பரணர் பாடிய ஒரு பாடலில் ,
பீடின்மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றெம் சிறு செந்நாவே
-புறநானூறு ,பா.148
இதைப் போன்ற பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் அமைந்திருக்கின்றன. இவற்றை மீண்டும் பட்டியலிட்டுக் காட்டுவது இங்கு நோக்கமல்ல. சங்க இலக்கியங்களில் மிக அரிதாகச்
சில இடங்களில் மட்டும் புலவர்கள் தங்கள் வறுமையை வெளிப்படையாகச் சுட்டும் பாடல்கள் வருகின்றன. பொதுவாகச் சங்க இலக்கியங்களில் புலவர்கள் , கலைஞர்களின் தன்மதிப்பு உணர்வு போற்றத்தக்கதாக இருப்பது கண்கூடு . இத்தகைய சான்றுகள் நச்சினார்க்கினியரின் உரையை ஏற்றுக்கொள்ளத்
தடையாக இருக்கின்றன .
பொருநன், இரத்தல் தொழிலை விரும்பினான் என்று நச்சினார்க்கினியர் கூறும் உரையை ஏற்க பொருநராற்றுப்படையின் அகச்சான்றுகள்
தடையாக இருக்கின்றன.
1 .பொருநராற்றுப்படையின் தொடக்க
வரிகளில் பொருநனை அறிமுகப்படுத்தும் போத
“அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர்ச்
சாறு கழி வழிநாட் சோறு நசையுறாது
வேறுபுலம் புலம் முன்னிய விரகறி பொருந..”
என்றவாறு அறிமுகப்படுத்தப்படுகிறான்; இவ்வடிகளுக்குத் “திருவிழா முடிந்த பின்னரும் அவ்வூரில் கிடைக்கும் உணவினை விரும்பாது திருவிழா நடக்கும் வேறு புதிய ஊர்களை
நோக்கிப் பயணப்படும் பொருநன் “ என்பது பொருள். செயலாற்றாமல் கிடைக்கும் உணவை விரும்பாத பொருநன் எவ்வாறு இரத்தல் தொழிலை எப்போதும் விரும்புவான் என்ற வினா
எழுகிறது.
- பொருநன் வறுமையில் இருந்தாலும் பெருமிதம் உடையவன். கரிகாலனைச் சந்தித்ததும் அவன் வழங்கிய நல்ல உடைகள், பசியைப் போக்கும் உணவுப் பொருள்கள் முதலியவற்றை
நுகர்ந்து பெருமிதத்துடன் நின்றான் என்பதைப் பின்வரும் பாடலடிகள் காட்டுகின்றன.
“போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆரவுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை”
என்ற இவ்வடிகளில் பொருநனின் பெருமித உணர்வு மேலோங்கி நிற்பது தெரிகிறது . இத்தகைய தன்மதிப்பு மிக்க ஆளுமை உணர்வு
உடையவன் எப்போதும் இரத்தலை விரும்புவான் என்பது ஏற்குமாறில்ல.
3.கரிகாலனின் சிறந்த விருந்தோம்பலை நுகர்ந்த போதும் பொருநன் வசதிகளை அனுபவித்துக் கொண்டு அங்கேயே தங்கி விட எண்ணவில்லை ; அவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பவே
விரும்பினான்.
“சேருமென் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தனமாக ….”
என்ற அடிகளில் பொருநன் ஊருக்குத் திரும்பிச் செல்வதையே விரும்பினான் என்ற செய்தி பெறப்படுகிறது. இத்தகைய பொருநன்
எவ்வாறு இரத்தலை விரும்பி அங்கேயே தங்க எண்ணியிருப்பான் என்ற வினா எழுகிறது.
நச்சினார்க்கினியரின் கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் மகாமகோபாத்தியாய ஐயரவ ர்கள் எடுத்துக் காட்டும் மூன்று
குறட்பாக்களும் “ இரவு” என்ற அதிகாரத்தில் உள்ளவை. இரவு அதிகாரத்தை அடுத்து “இரவச்சம்” என்ற அதிகாரம் உள்ளது ;
அவ்வதிகாரத்தின் அனைத்துக் குறட்பாக்களிலும் ஒருவரிடம் சென்று இரப்பதை இழிவாகக் கூறி, அதனைக் கைவிட்டு ஒழித்தல் வேண்டும் என்ற கருத்தை வள்ளுவப் பேராசன் வற்புறுத்துகிறார்.
“இரவு “ அதிகாரத்தில் தகுதியானவரிடம் இரத்தல் தவறில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் வள்ளுவர். இவை இரண்டும் முரண்பாடாகத் தோன்றுகின்றன ; எனினும் பரிமேலழகர்
உள்ளிட்ட பல உரையாசிரியர்கள் ஒருவாறு அமைதி கூறுகின்றனர் . அது குறித்துத் தனியே ஆராய வேண்டும்.
இரவு அதிகாரத்திற்கு முந்தையதாக “நல்குரவு” என்னும் அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர் ; அதற்கும் முந்தியதாக “உழவு ” அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது . இந்த அதிகார வைப்புமுறையில் மிக நுட்பமான பொருளமைதி உட்கிடையாக அமைந்திருப்பதை நுண்ணிய பார்வையால் மட்டுமே அறிய முடியும். அதனைச்
சற்று விளக்குவாம் . ஒரு நாடு சிறப்புற்றிருக்க வேண்டுமானால் அது பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் ; அதற்கு வேளாண்மை இன்றியமையாதது ; எனவே “உழவு” அதிகாரத்தைக் கூறினார். வேளாண்மை செழித்து வளராவிட்டால் நாட்டில் வறுமை நிலவும் ; எனவே “நல்குரவு” அதிகாரத்தை அடுத்து
வைத்தார் வள்ளுவர். நல்குரவு ஏற்பட்டால் குடிகள் மற்றவர்களிடம் இரந்து நிற்பது தவிர்க்கவி யலாதது ; அதனால் “இரவு ” அதிகாரத்தை அடுத்து வைத்தார். “இரவு” அதிகாரம் இரப்பவரைக் குறித்து அமையவில்லை;
இரப்பார்க்குக் கொடுப்பவரைக் குறித்து அமைந்தது. ஒன்றைக் கேட்கும் முன்னரே மறைக்காமல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் இவ்வதிகாரத்தில் கூறுவதை நன்கு உணர முடியும் ; இது ஓர் அறச்செயல்பாடு(charitable activity ) என்பது கருத்து. “ இரவு” அதிகாரத்தில் வரும் பின்வரும் அடிகளைக் காண்க;
1.இரத்தக்கார்க் காணின்
2.கரப்பிலா நெஞ்சினர்
3.கரத்தல் கனவிலும் தேற்றாதார்
4.கரப்பிலார்
5.கரப்பிடும்பை இல்லார்
- இகழ்ந்து எள்ளாது ஈவார
இவை போன்ற பல சான்றுகள் இவ்வதிகாரத்தில் பல உள்ளன . இதிலிருந்து “இரவு” அதிகாரம் இரத்தலை நியாயப்படுத்தும்
அதிகாரமல்ல ; இரக்கும் நிலையில் உள்ளவர்க்குக் கொடுக்கும் அறச் செயல்பாட்டினை (charitable activities) வற்புறுத்தும் அதிகாரம். எனவே இவ்வதிகாரம் இரவலர்க்கு உரியதல்ல . மகாம கோபாத்தியாய ஐயரவர்கள் எடுத்துக்காட்டும் மூன்று குறட்பாக்களும் சிறப்பான கருத்துக்களைப் புலப்படுத்துவன
என்றாலும் நச்சினார்க்கினியரின் உரைக் கருத்தை அவை வலுப்படுத்தா என்பது திண்ணம்.
செல்வமுடையவர் அவற்றைத் தாமே முன்வந்து ஈய வேண்டும் என்ற கருத்தையே வள்ளுவரும் வற்புறுத்துகிறார். சங்க இலக்கியங்களில் புகழ்ந்து பாராட்டப்படும் வள்ளல்களும் இதனையே செய்கின்றனர். பொருநராற்றுப்படை உள்ளிட்ட
பல ஆற்றுப்படை நூல்களிலும் கலைஞர்களைக் கண்டதும் அவர்கள் எதுவும் கூறாமலேயே நல்ல உடைகளையும் களைப்பு நீக்கும் உணவுப் பொருள்களையும் மன்னர்கள் வழங்கி விடுகின்றனர் என்பதைக் காண முடிகிறது. திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள அறச்
செயல்களுடன் மன்னர்களின் செயல்கள் ஒத்துப்போவதை அறிய முடிகிறது . இதுகாறும் “வேளாண்வாயில் வேட்பக் கூறி “ என்ற
தொடருக்கு நச்சினார்க்கினியரின் உரையும் உ.வே..சா.வின் மேற்கோள்களும் பொருத்தமாக இல்லை என்பது உணர்த்தப்பட்டது. இனி இப்பகுதிக்குரிய சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதைக் காண முயற்சி செய்யலாம்.
வேளாண்மை என்ற சொல்லுக்கு ஐந்து பொருள்களைச் சாந்தி சாதனாவின் வரலாற்றுமுறைத் தமிழிலக்கியப் பேரகராதி
குறிப்பிடுகிறது. இவ்வைந்து பொருள்களுள் ”உபகாரம்” என்ற பொருளும் ஒன்று . இதற்கு “விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு” என்ற குறட்பாவின் அடியையும் அவ்வகராதி
சான்று காட்டுகிறது ( வரலாற்றுமுறைத் தமிழ்
இலக்கியப் பேரகராதி ,ப.2347).
வாயில் என்ற சொல்லிற்கு வரலாற்றுமுறைத் தமிழிலக்கியப் பேரகராதி 37பொருள்களைப் பட்டியலிடுகிறது ; இவற்றுள் உபாயம் என்ற பொருளும் கூறப்படுகின்றது (சாந்தி சாதனா ,மு.நூ.,ப.2209). உபாயம் என்ற சொல்லிற்கு வழிமுறை, உத்தி என்ற பொருள்கள் உண்டு . எனவே
வேளாண் வாயில் என்பதற்கு விருந்தோம்பலின் வழிமுறை , உத்தி என்ற பொருள்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இனி “வேட்ப” என்ற சொல்லுக்குப் பொருள் “விரும்பி” அல்லது “விரும்ப” என்ற பொருள்கள் உண்டு. எனவே “வேளாண் வாயில் வேட்பக் கூறி” என்ற அடிக்கு, “விருந்தோம்பலின் வழிமுறைப்படி
விரும்பத்தக்க சொற்களைக் கூறி ” என்ற பொருளைக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும்.
“விரும்பத்தக்க சொல்லி “என்பதில் மேலும் தெளிவு ஏற்பட அத்தொ
டரை மேலும் விளக்கலாம்
1.இரவலர்கள் விரும்பத்தக்கனவற்றைக் கூறி
- கரிகாலன் தனக்கு விருப்பமான சொற்களைக் கூறி
என்றவாறு இரண்டு வகையாகவும் பொருள் கொள்ளலாம் .
நிறைவாக, “வேளாண் வாயில் வேட்பக்கூறி” என்பதற்குப் பெரும்புலமைக் கடலான நச்சினார்க்கினியரின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதை விட, நேர் பொருளான
“விருந்தோம்பலின் ஒரு கூறாக வழிமுறையாக
இரவலன் விரும்பக்கூடிய இனிய சொற்களைக்
கூறி விருந்தோம்பல் செய்தான்” என்று கொள்வதே
பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. இவ்வாறு
கொள்வதன் மூலம் பண்டை த்தமிழ்க் கலைஞர்களின் பெருமிதமும்
தன்மதிப்புணர்வும் பேணிக் காக்கப்படுகிறது; கரிகாலனின்
விருந்தோம்பலின் பெருமையும் பேணிக்கொள்ளப்படுகிறது.